Sunday, October 19, 2014

புரட்சித்தலைவியின் முதல் அறிக்கை

ஜெயலலிதா | கோப்புப் படம்
ஜெயலலிதா | கோப்புப் படம்
தனது துயரங்களைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர்விட்ட 193 பேரின் குடும்பங்களுக்கு, அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 



இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து நன்கு உணர்ந்திருக்கிறேன். 

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்" என்று என்னிடம் எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்தப் பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும். 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. 



இந்தத் துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான். 



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்தத் தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.


எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். தொண்டர்களின் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை; மனம் தளரப்போவதில்லை. 


தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல், என் மீது மிகுந்த பேரன்பு கொண்டுள்ள தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; குறிப்பாக, என் இதயத்தின் ஆழத்தில் வேர் விட்டிருக்கும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்ற துயரச் செய்தி கேட்டும்; மேலும் தங்கள் இன்னு யிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் தாங்கொணா வேதனை அடைகிறேன். இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மன வலியைத் தருகிறது. 


எனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த 193 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு; மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன். தன்னையே மாய்த்துக் கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 



என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தாய்மார்களும், பொதுமக்களும், ஆதரவாளர்களும், தோழமைக் கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக திருக்கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்திக் கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன். 


என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார். 



thanx- the  hindu

0 comments: