மோர்க் களியும் ஒரு ரயில் பயணமும்!
எழுத்தாளர் அனுராதா ரமணன் எங்களுடன் பந்தா எதுவுமின்றி நட்பாகப் பழகுவார்.
தன் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை உணர்ச்சிகரமாக எங்களுடன் அவர்
பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும், ‘சர்க்கரைக்
கம்மியா… ஒரு ஸ்ட்ராங் காபி’ என்று ஆர்டர் செய்யாமலே ஆசையுடன் கொண்டுவந்து
காபி கொடுப்பார்.
ஒருமுறை தான் செய்திருந்த மோர்க் களியைப் பரிமாறினார். வறுத்த மோர்
மிளகாய், கடுகு, சீரகம் எல்லாம் தாளிக்கப்பட்டு மோர்க் களி அருமையான
ருசியுடன் இருந்தது. நாங்கள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
அவருக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை எங்களிடம் விவரித்தார்.
அவரது வார்த்தைகளிலேயே சொல்வதென்றால்...
‘‘போன திங்கக்கெழமை நானும் பத்மாவும் (அனுராதா ரமணனின் தங்கை) மயிலாப்பூர்ல
என் ஓர்ப்படியோட தங்கை நாத்தனாரைப் பாக்கப் போயிருந்தோம். (அனும்மா
குறிப்பிடும் உறவுகள் பெரும்பாலும் சிக்கலாக இருக்கும். புரியாது.) பழைய
தேக்கு ஊஞ்சல்ல உக்காந்து ஜாலியா ஆடினோம். கிச்சன்லேர்ந்து கும்முன்னு ஒரு
வாசனை வந்தது.
‘வாசனைத் தூக்குதே மாமி!’ன்னு சொன்னேன்.
‘மோர்க் களி கிண்டினேன். இரு எடுத்துட்டு வர்றேன்’ என்று பரபரன்னு உள்ளே
போன மாமி, ரெண்டு தட்டுல மோர்க் களியை அள்ளிட்டு வந்து நீட்டினா.
‘ஹை! மோர்க் களியா? எனக்கு ரொம்பப் புடிக்குமே’ன்னா பத்மா.
‘சாப்பிடுங்கோ... சாமிக்கு வெளக் கேத்திட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, மாமி உள்ளே போயிட்டா.
ஆசை, ஆசையா ஒரு வாய் மோர்க் களியை எடுத்து வாயில போட்டேன். அவ்வளவுதான்.
மேலண்ணத்துல அப்படியே ஒட்டிக்கிச்சி. ருசியாவாவது இருந்து தொலைச்சிருக்கக்
கூடாதா? பத்மாவைத் திரும்பிப் பார்த்தா… அவளும் வாயில போட்டுட்டு ரெண்டு
கண்ணையும் அகல விரிச்சிட்டு, பேய் முழி முழிக்கறா. ரெண்டு பேராலயும் வாயைத்
தொறக்கவே முடியலை.
மாமி வர்றதுக்குள்ள, வாசலுக்குப் போய் தட்டுல இருந்ததையெல்லாம்
பிளாட்பாரத்துல வழிச்சிப் போட்டோம். வாயில விரலைவிட்டு மிச்சமிருந்ததையும்
எடுத்துப் போட்டோம். அப்போபாத்து ஒரு தெரு நாய் வாலை ஆட்டிட்டே ஓடி வந்தது.
மோர்க் களியைப் பாத்துட்டு எங்களை ஒரு தரம் பாத்தது. வால் ஆடுறது
மாத்திரம் நிக்கவே இல்ல. வாயில்லா ஜீவனாச்சே, பாவம் அவஸ்தைப் படப்
போவுதேன்னு ‘ச்சூ… ச்சூ...'ன்னு விரட்டினேன். வாயில மோர்க் களி கொஞ்சம்
ஒட்டிட்டிருந்ததால எனக்கு வார்த்தையே வரலை. ‘ஷூ... ஷூ…’ன்னு வெறும்
காத்துதான் வந்தது.
நான் கொஞ்சறேன்னு நெனைச்சிட்டு, அந்த நாய் மோர்க் களியை வாயால் கவ்வி
எடுத்தது. அவ்வளவுதான். தலையைத் தூக்கி என்னைப் பரிதாபமாப் பாத்தது.
‘க்யீங்... க்யீங்’ன்னு மொனகற மாதிரியே ஒரு சத்தம்!
‘அடிப்பாவி! என்னைக் கொல்றதுக்காகவாடி இதைக் கொண்டாந்துப் போட்டே’ன்னு
கேக்கற மாதிரி என்னைப் பாத்து ஒரு மொறை மொறைச்சுது. ஆட்டிக்கிட்டிருந்த
வாலைப் பின்னங்கால் ரெண்டுக்கும் நடுவுல செருகிட்டு ‘க்யீங்...
க்யீங்…’ன்னு கத்திட்டே ஒரு ஓட்டம் எடுத்தது பாரு...
அந்த நாய்க்கு யாரோடயும் ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. ஓடிப் போய்ட்டு. நாங்க
அப்படி ஓடிப் போவ முடியுமா? வீட்டுக்குள்ள திரும்பி வந்து காலித் தட்டோட,
மூஞ்சைத் தேமேன்னு வெச்சிட்டு ஊஞ்சல்ல உக்காந்தோம்.
வெளக்கேத்திட்டு, மாமி சொம்புல தண்ணி எடுத்துட்டு வந்தா. ரெண்டு பேர்
தட்டும் காலியா இருக்கறதைப் பாத்தா. மாமி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்!
‘நிமிஷமா காலி பண்ணிட்டேளே. மோர்க் களி அவ்ளோ நல்லா இருந்திச்சா?’ன்னு
கேட்டுட்டே, சந்தோஷமா உள்ளே போய் சட்டியோட மோர்க் களியைக் கொண்டாந்து
ரெண்டு பேர் தட்டுலேயும் அப்படியே கவுத்துட்டா. இத்தனைக்கும் நாங்க
‘வேணாம்… வேணாம்’ன்னு தட்டு மேலயே கவுந்துப் படுக்காத கொறைதான்
அதுக்குப் பரிகாரமா இன்னிக்கி என் கையால மோர்க்களி பண்ணிப் போடறேன்னு பத்மாவை வரச் சொல்லியிருக்கேன்…”
‘வேலாயுதம்’ திரைப்படத்தில் கதாநாயகன் வேலாயுதம் (விஜய்), தான்
மிகவும் நேசிக்கும் தங்கை காவேரி (சரண்யா மோகன்) மற்றும் நண்பர்களோடு
ரயிலில் சென்னைக்குப் போவது போல் ஒரு காட்சி.
சாப்பாட்டு நேரம். தன் தங்கை எவ்வளவு சூப்பராக சமைப்பாள் என்று
ஏகத்துக்கும் பில்ட்- அப் கொடுத்துவிட்டு, அவள் செய்து எடுத்து
வந்திருக்கும் புளியோதரையை நண்பர்களுக்கு வேலாயுதம் பரிமாறுவான்.
அதை வாயில் வைத்தவுடனேயே, ஒவ்வொருத்தர் முகமும் அஷ்ட கோணலாகிப் போகும்.
தங்கையின் சமையலைப் பற்றி எக்குத்தப்பாக ஏதாவது விமர்சித்துவிட்டால்,
அண்ணன் விஜய் நரசிம்ம அவதாரமே எடுத்துவிடுவான். நண்பர்கள் தவியாய்த்
தவித்துக் கொண்டிருக்கும்போது, ரயிலில் பிச்சை எடுத்துக்கொண்டு ஒருவன் வர,
ஒவ்வொரு நண்பனும் கொடைவள்ளலாக, தன் தட்டில் உள்ளதை திருட்டுத்தனமாக
அவனுக்குப் போட்டுவிட்டு, அமுக்கமாக வந்து உட்கார்ந்துவிட...
விழி பிதுங்கினாலும், தங்கையின் மனம் கோணக்கூடாது என்று விஜய் ‘சூப்பர்
டேஸ்ட்டு…’ என்று பொய் ஏப்பம் விட்டுக் காட்டுவார். தங்கை முகத்தில்
பெருமிதம் கூத்தாடும்.
சற்று நேரத்தில் பிச்சை வாங்கிப் போனவன் ஆத்திரத்துடன் அங்கே திரும்பி வருவான்.
நண்பர்களில் ஒருவனது சட்டையை ஆவேசத்துடன் பற்றி, ‘‘ஏண்டா… மனுஷனைக்
கொல்றதுக்கு எவ்ளோ வழியிருக்கு? ஒரு கத்தியை எடுத்து ‘சர்க்’ன்னு வயித்துல
எறக்கிட்டுப் போறதுதானேடா. சாப்பாட்டைப் போட்டுக் கொல்லப்
பாக்கறீங்களே...’’ என்று கூச்சல் போடுவான்.
இந்தக் காட்சி திரையில் வந்தபோது தியேட்டரே சிரிப்பில் குலுங்கும். அனுராதா
ரமணனுக்கு நேர்ந்த அனுபவம்தான், இந்தக் காட்சிக்கு அடிப்படை என்று
சொல்லவும் வேண்டுமா?
thanx -the hindu
0 comments:
Post a Comment