Saturday, October 04, 2014

இந்திய ராணுவத்துக்கு எதிரான படமா 'ஹைதர்'?- ட்விட்டரில் கொந்தளிப்பும் வரவேற்பும்

ஷாஹித் கபூரின் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஹைதர்' என்ற இந்தி திரைப்படம், இந்திய ராணுவ வீரர்களை இழிவுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லெட்' எனும் நாடகத்தைத் தழுவி காஷ்மீரின் பன்னணியில் எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் 'ஹைதர்'. ஹாம்லெட்டில் வரும் இளவரசர் ஹாம்லெட் அமைதியை விரும்பும் இயல்புடையவர். ஆனால், தனது தந்தையின் இறப்புக்கு வேறொரு மர்மமான காரணம் உண்டு என்று அசரீரியால் அவருக்குத் தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவரது இயல்பிலும் கதையிலும் முக்கியத் திருப்பங்கள் ஏற்படுகிறது. அதே அம்சங்களுடன் காஷ்மீரை கதைக்களமாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் தான் 'ஹைதர்'.
'ஹைதர்' படத்தை விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ளார். காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து பல ஆண்டு காலமாக களத்தில் இருந்து செய்தி சேகரித்தது வந்த பிரபல பத்திரிகையாளர் பஷ்ரீத் பீர் இப்படத்தின் கதை, திரைக்கதை ஆசிரியர். கதையில் வரும் பின்னணி காஷ்மீரில் நடந்தவை என்று இவர் கூறுகிறார்.
'ஹைதர்' படத்தில் ஷாஹித் கபூர் அமைதியான இயல்புடையவர். மருத்துவரான அவரது தந்தை நரேந்திர ஜா இந்திய ராணுவத்தால் திடீரென கைது செய்யப்படுகிறார். இலக்கியம் படிக்க அலீகர் சென்ற ஷாஹித் கபூர் காஷ்மீர் திரும்புகிறார். ஷரத்தா கபூர் இந்து குடும்ப பெண்ணாக வருகிறார்.
நீண்டு நாட்களாக கைது செய்யப்பட்ட தனது தந்தையின் விவரம் எதுவும் தெரியாமலே இருக்கும் நிலையில், அவர் காணாமல் போனதற்கு தனது தாய் தபு மற்றும் மாமா நரேந்திர ஜா தான் காரணம் என்று ஷாஹிதுக்கு ஒரு சமயத்தில் தெரிய வருகிறது. 1995-ல் இந்திய ராணுவம் காஷ்மீரில் செயல்பட்ட விதத்தின் உண்மை நிலை குறித்து இந்தத் திரைப்படம் முழுக்க முழக்க எடுக்கப்பட்டுள்ளது. தந்தைக்கு நேர்ந்த நிலை குறித்து அறிந்த ஷாஹித் கபூர், எப்படி தனது இயல்பு நிலையில் இருந்து மாறுகிறார் என்பதுதான் கதையின் அடுத்த கட்டம்.
ஆனால், 'ஹைதர்' திரைப்படம் இந்திய ராணுவத்தை முழுக்க முழுக்க இழிவுப்படுத்தும் நோக்கத்தோடும், தவறான பார்வையிலும் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் தாக்கம் ட்விட்டரில் பிரதிபலித்துள்ளது. 'ஹைதர்' திரைப்படத்துக்கு வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து ட்விட்டரில் பதிவுகள் குவிந்து வருகிறன.
இதனால் #BoycottHaider என்ற ஹேஷ்டேக்கில் எதிர்ப்புப் பதிவுகளும், #HaiderTrueCinema என்கிற ஹேஷ்டேக்கில் வரவேற்புப் பதிவுகளும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. 'ஹைதர்'. படத்துக்கு எதிர்த்து #BoycottHaider என்ற ஹேஷ்டேகிலும், ஆதரவாக #HaiderTrueCinema என்ற ஹேஷ்டேகிலும் ட்விட்டர்வாசிகள் தங்களது ட்வீட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த ட்வீட்டுகளில் சில:
அனுமான் சிங் ராஜ்புத் (@HanumanSRajput): 'ஹைதர்' படத்துக்கு தடை வேண்டும். இந்தப் படம் இந்திய ராணுவத்துக்கும் தேசபக்தர்களுக்கு எதிரானது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் படம்.
ஷாஹித் ரசிகன் (‏@ShahidsSuperFan): ஷாஹித் கபூர் பாராட்டுக்குரியவர் என்று நிரூபிக்க மற்றொரு சந்தர்ப்பம். தபு தன்னை சிறந்த நடிகை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறார்.
மகாராணி பத்மாவதி (‏@royally_fiery): 'ஹைதர்' நல்ல திரைப்படம் என்றால் இந்திரா காந்தி படுகொலை குறித்து திரைப்படம் எடுங்கள். இந்திய ராணுவம் தான் கிடைத்ததா? பேச்சு / கருத்து வெளிப்பாட்டு இது தானா?
ஸியா (‏@siya_tara): 1192-1858 காலக்கட்டத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்களின் நிலை 'ஹைதர்' படத்தில் உள்ளதைவிட மோசமானது.
ஜோதி ஜோ (@Shahidzcrzygirl): 'ஹைதர்' படத்தில் காஷ்மீரிகளுக்கும் இந்திய ராணூவத்துக்கு எதிராக ஒன்றுமே இல்லை. இந்த படத்துக்கு எதிர்ப்பு தேவை இல்லாதது.
ஃபவூத் ஃபரூக் (@fouadfarooq): உங்களது ட்வீட்கள் படத்தை பார்க்க தூண்டுகிறது. முதலில் படத்தை பார்க்க வேண்டும்.
அஷ்வானி கவுல்(‏@ashwanikoulamk): நமது ராணுவத்தை மதிப்பவர்கள் இந்தப் படத்தை புறக்கணியுங்கள். ஷரத்தா கபூர் இந்து பெண்ணாகவும், ராணுவத்தினரை வில்லனாகவும் காட்டி உள்ளனர். கல் எரிபவன் படத்தின் நாயகனா?
ஷாஹித் கபூர் அணி (‏@TeamShahidK): தற்போது உள்ள காஷ்மீருக்கும் முன் இருந்த காஷ்மீருக்கு வித்யாசம் உண்டு. இப்படி ஒரு படத்தை எடுக்க மன தைரியம் தேவை.
இப்படி படத்துக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் பதிவாகி உள்ள நிலையில், இது குறித்து படக்குழுவினர் கூறும்போது, "தற்போது காஷ்மீரில் நிலவும் சூழலை பார்க்கும் தலைமுறையினர், 'ஹைதர்' படத்தை பார்த்து வியப்படைய வேண்டாம். 1995-ல் நடந்த சம்பவங்களை கொண்டதுதான் இந்தப் படம். ஆனால் இதன் மூலம் இந்தப் படம் இந்தியத்துக்கும், ராணுவத்துக்கும் எதிரானது என்று யாரும் கூறிவிட முடியாது.
நமது ராணுவம் திறமையாக செயல்படுகிறது. காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் அவர்களது பணி சிறப்பானது. ஆனால், 'ஹைதர்' கடந்து வந்த பாதையைத்தான் சொல்கிறது. காஷ்மீரிகளுக்கு நடந்தவற்றை நியாயப்படுத்திவிட முடியாது. அங்குள்ள காஷ்மீரி இந்து பண்டிட்டுகளும் இதனை ஒப்புக்கொள்வார்கள்.
அற்புதமான நடிப்பையும் தீவிரம் கொண்ட திரைக்கதையும் விரும்புவர்கள் இந்தப் படத்தை பாருங்கள். 'ஹே ராம்' படத்தில் கமல் ஹாசன், 'பம்பாய்' படத்தில் மணி ரத்னம், 'ஹைதர்' படத்தில் விஷால் பரத்வாஜ் போன்ற தைரியம் கொண்ட சிலரால் மட்டும்தான் இப்படிப்பட்ட படத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இயக்குனர் விஷால் பரத்வாஜ் இதற்கு முன், ஷேக்ஸ்பியரின் 'மேக்பெத்' கதை ஆக்கத்தில் 'மக்பூல்' என்ற பாம்பே நிழல் உலக தாதா பற்றிய படத்தையும், 'ஒத்தெல்லோ' கதை ஆக்கத்தில் 'ஓம்காரா' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதில் அஜய் தேவ்கன் நடித்த 'ஓம்காரா' திரைப்படம் சர்வதேச விருதுகளை பெற்று, நல்ல திரைப்படம் என்ற பெயரை பெற்றது. 



thanx - the hindu

0 comments: