பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செட்டிநாடே திருவிழாக் கோலம் காண நடந்தது
அந்த வைபவம். ஊருக்கெல்லாம் விருந்து வைத்து, ஒக்கூர் சேக்கப்பச்
செட்டியார் மகன் ஐயப்பனை முத்தையாவாக்கி சுவீகாரம் எடுத்துக்கொண்டார்
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார். அப்படி சுவீகாரம் கொண்ட மகனே
இப்போது வளர்ப்புத் தந்தைக்கு எதிராக வரிந்து கட்டுவதாக சர்ச்சை
எழுந்துள்ளது.
எம்.ஏ.எம்.ராமசாமியின் கொள்ளுத் தாத்தா முத்தையா செட்டியார் பிரிட்டிஷ்
அரசாங்கத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை தக்க வைத்திருந்தார். தங்களுக்கு
அனுசரணையாக நடந்துகொண்ட அவருக்கு ‘ராஜா சர்’ பட்டத்தை வழங்கியது பிரிட்டிஷ்
அரசு. அதுமுதல் அந்தக் குடும்பத்தை ‘ராஜா வீடு’ என்று அழைத்தே பழகிப்போனது
செட்டிநாட்டுச் சீமை.
செட்டிநாட்டில் சென்னை - ராமேசுவரம் ரயில் பாதையை ஒட்டி செட்டிநாட்டு
அரசரின் விருந்தினர் மாளிகை உள்ளது. இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களும்
இந்த மாளிகை வாசலில் தவறாமல் நின்று செல்லும். அரச குடும்பத்தினர்
மாளிகையிலிருந்து புறப்பட்டு வந்து ரயில் ஏறிய பிறகுதான் புறப்படும்.
இப்போது மாளிகையில் யாருமில்லை என்றாலும் இப்போதும் அங்கு ரயில்கள்
நிற்காமல் போவதில்லை. பிரிட்டிஷ் ஆட்சியில் இந்த அளவுக்கு செல்வாக்காக
இருந்தது ராஜா சர் முத்தையா செட்டியார் குடும்பம்.
வாரிசுகள்
முத்தையா செட்டியாரின் மகன் அண்ணாமலை செட்டியார். இவருக்கு முத்தையா
செட்டியார், சிதம்பரம் செட்டியார், ராமநாதன் செட்டியார் (முன்னாள் எம்.பி.)
என மூன்று மகன்கள்; லெட்சுமி ஆச்சி என்ற ஒரு மகள் (இவர்தான் முன்னாள்
நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார்). சிதம்பரம் செட்டியாரின் மகன்தான்
ஏ.சி.முத்தையா. (அதாவது எம்.ஏ.எம். ராமசாமியின் சித்தப்பா மகன்) அண்ணாமலை
செட்டியார், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவரது மகன்
முத்தையா செட்டியார் செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
சுவீகாரம் எடுத்ததில் சர்ச்சை
முத்தையா செட்டியாருக்கு எம்.ஏ.எம்.ராமசாமி, எம்.ஏ.எம். குமாரராஜா முத்தையா
என்ற இரு மகன்கள். இதில் இளையவர் எம்.ஏ.எம்.ராமசாமி. இருவருக்குமே குழந்தை
இல்லை. இருவருமே சுவீகாரம் எடுத்துக்கொண்டனர். எம்.ஏ.எம்.ராமசாமி
சுவீகாரம் எடுத்த விதம் குறித்து அப்போதே சர்ச்சை வெடித்தது.
சுவீகாரம் எடுப்பவர்கள் ஒரே கோயிலில் வரும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்களை
மட்டுமே சுவீகாரம் எடுக்க முடியும். எம்.ஏ.எம்.ராமசாமி இளையாற்றங்குடி
கோயிலில் பட்டின சாமியார் பிரிவைச் சேர்ந்தவர். இவர் சுவீகாரம் எடுத்த
ஐயப்பன் அதே கோயிலில் கழனி வாசற்குடியார் பிரிவைச் சேர்ந்தவர். மாப்பிள்ளை
உறவுப் பையனை மகனாக சுவீகாரம் எடுப்பது தவறு என கழனிவாசற்குடியார் பிரிவைச்
சேர்ந்தவர்கள் அப்போதே தீர்மானம் போட்டு எம்.ஏ.எம்.முக்கு அனுப்பினர்.
எதையும் அதிரடியாய் செய்து பழகிப்போன அவர், இதை ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்ளவில்லை.
இதை கடுமையாக ஆட்சேபித்த பர்மா முதலீட்டாளர்கள் குழுவின் தலைவர்
பேராசிரியர் ஆறு.அழகப்பன் நம்மிடம் கூறுகையில், “எம்.ஏ.எம். ஐயப்ப பக்தர்.
சேக்கப்பச் செட்டியார் மகன் ஐயப்பனை எம்.ஏ.எம்-முக்கு வாரி சாக்க
துடித்தவர்கள், சிங்கப்பூரில் ஐயப்பனின் சி.டி.யை போட்டுக் காட்டியதாக
கூறுகின்றனர். பையன் பெயர் ஐயப்பன் என்றதுமே செண்டிமென்டாக மடங்கிப்
போனவர், அதன்பிறகு அமெரிக்காவில் ஐயப்பனை நேரில் பார்த்துப் பேசி அவரையே
சுவீகாரம் எடுக்க முடிவெடுத்துவிட்டார். (பின்னர் ஐயப்பன், முத்தையா என
பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.)
இப்படியொரு முயற்சி நடப்பது தெரிந்து நாங்கள் தொடக்கத்தி லேயே எதிர்த்தோம்.
ஆனால், பணத்துக்கும் அதிகார பலத்துக்கும் இடையில் எங்களது எதிர்ப்பு
எடுபடவில்லை. எம்.ஏ.எம்.மின் பங்காளிகளும் இதை பெரிதுபடுத்தாமல் இருந்து
விட்டனர். செட்டியார்களின் 800 ஆண்டு சரித்திரத்தில் யாருமே செய்யத்
துணியாத தவறை அன்றைக்கு எம்.ஏ.எம். செய்து விட்டார். எங்கள் குலமுறை நியா
யப்படி இந்த சுவீகாரம் செல்லாது.
முறைதவறி சுவீகாரம் எடுத்திருந்தால் மூதாதையர் சொத்துகளுக்கு சுவீகார
புதல்வன் சொந்தம் கொண்டாட முடியாது. யார் அவரை சுவீகாரம் எடுத்தாரோ அவர்
சம்பாதித்த சொத்துகள் மட்டுமே அவருக்கு சொந்தமாகும். இன்றைக்கு
எம்.ஏ.எம்.முக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை நகரத்தார் சமூகத்து
மக்களிடையே அவர் மீது அனுதாபத்தை உண்டாக்கி உள்ளது. இது முத்தையாவுக்கு
நல்லதல்ல’’ என்று சொன்னார்.
தொடக்கத்தில் எம்.ஏ.எம்-முக்கும் அவரது சுவீகாரப் புதல்வர்
முத்தையாவுக்கும் உறவுமுறை சீராகவே இருந்துள்ளது. அதுவும் எம்.ஏ.எம்-மின்
மனைவி சிகப்பி ஆச்சி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் முத்தையா. இதன்
காரணமாக பெரும்பாலான சொத்துகளை முத்தையாவின் பெயருக்கு மாற்ற சிகப்பி ஆச்சி
உறுதுணையாக இருந்ததாக கூறுகின்றனர். மதுரையிலுள்ள ராஜா முத்தையா
மன்றத்தையும் தென் பகுதியில் உள்ள சொத்துகளையும் பராமரிக்கும் பொறுப்பை
தன்னைப் பெற்ற தந்தை சேக்கப்பச் செட்டியாரிடம் முத்தையா ஒப்படைத்ததாகக்
கூறுகின்றனர்.
விரிசலுக்கான காரணம் என்ன?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஏ.எம்.மின் சதாபிஷேகத்தை (80 வயது
பூர்த்தி) விமரிசையாக நடத்திப் பார்த்தார் முத்தையா. அப்படி இருந்தும்
திடீரென இப்படி இருவருக்கும் இடையில் விரிசல் விழக் காரணம் என்ன? செட்டி
நாட்டு அரண்மனை வட்டாரங்களை அறிந்தவர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்:
“முத்தையா பொறுப்புக்கு வந்த பிறகு சொத்துகளை பல மடங்காக்குவதில் அதிக
அக்கறை எடுத்துக் கொண்டார். இதற்காக, இதுவரை எம்.ஏ.எம்-முக்கு
அருகிலிருந்து கொண்டு தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலரை ஓரங்கட்ட
ஆரம்பித்தார். குதிரை பந்தய வெற்றியில் கின்னஸ் சாதனை படைத்த எம்.ஏ.எம்.
400 குதிரைகளை வைத்துத் தீனி போட்டுக் கொண்டிருக்கிறார். இது தேவையில்லை
என்பது முத்தையா வின் வாதம். அண்ணாமலை பல்கலைக்கழகம் நிர்வாகச்
சீர்கேடுகளில் சிக்கித் தவித்தபோது, செட்டிநாடு குழுமத்தின் வேறு சில
நிறுவனங்களில் உள்ள நிதியை திருப்பி பல்கலைக்கழகத்தை தக்க வைக்க எம்.ஏ.எம்.
தரப்பில் யோசனை வைக்கப்பட்டது. இதற்கு முத்தையா உடன்படவில்லை.
இதுபோல், நிதி சம்பந்தப்பட்ட இன்னும் சில விஷயங்களில் இரு வருக்கும் இடையே
முரண்பாடு ஏற்பட்டது. நிதிப் பொறுப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்துக் கொண்ட முத்தையா, எம்.ஏ.எம்-மின் தேவைகளுக்காக மாதம் ஒரு
குறிப்பிட்ட தொகையை தந்தார். இதற்கிடையில்தான் சென்னையில் உள்ள அரண்மனை
வளாகத்தில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தினார் முத்தையா. இதை
ஏற்கமுடியாத எம்.ஏ.எம். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை
தனிமைப்படுத்தி கண்காணிக்க சதி நடப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார்.
ஒருவார காலம் தனது வீட்டில் தங்காமல் தனது அண்ணன் வீட்டு மாடியில் அவர்
தங்கி இருந்த தாகவும் ஒரு தகவல் உள்ளது. இதனிடையே, மறைமுகமாக தன்னை
குறிவைத்தே எம்.ஏ.எம். போலீஸில் புகார் அளித்துள்ளார் என்பதை ஊகித்த
முத்தையா ஆத்திரப்பட்டார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ’எங்களது
நிறுவனங்கள் அனைத்திலும் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி இருக்கிறோம்.
அதன்படிதான் அரண்மனையிலும் அப்பாவின் பாதுகாப்புக்காக கேமராக்களை
பொருத்தினோம்” என்று விளக்கம் கொடுத்தார்.
அதேசமயம், செட்டிநாட்டு குழுமத்தின் தலைமையகத்தை சென்னையிலிருந்து
மும்பைக்கு மாற்றிவிட்டு சிங்கப்பூரில் செட்டி லாக முடிவெடுத்த முத்தையா,
குழுமத்தின் தலைவர் பதவியி லிருந்து எம்.ஏ.எம்-மை தூக்கிவிட்டு, தானே
தலைவராக வருவதற்கும் ஆலோசனை நடத்தினார். இந்த விஷயம் எம்.ஏ.எம்-முக்கு
போனதும் அவர், இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக கம்பெனிகளுக்கான
பதிவாளர் மனுநீதி சோழனை அணுகி பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. அரண்மனையில்
உள்ள முத்தையாவின் உளவாளிகள் இந்த விஷயத்தை கண்டுபிடித்து சொல்ல வேண்டிய
இடத்தில் சொல்லியுள்ளனர்.
ஏற்கெனவே, பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும் பகுதி யினர் முத்தையாவுக்கு
சாதகமாக திரும்பிவிட்டாலும் எம்.ஏ.எம்-மை தலைவர் பதவியிலிருந்து நீக்கு
வதற்கு வலுவான காரணம் இல்லாமல் இருந்தது. இப்போது, அதிகாரிக்கு லஞ்சம்
கொடுத்த வழக்கு பதிவாகி இருப்பதால் அதையே காரணம் காட்டி எம்.ஏ.எம்-மை
தலைவர் பதவியி லிருந்து தூக்கிவிட்டு, அவரை கவுரவத் தலைவராக்கி விட்டனர்.
கூடிய விரைவில் செட்டிநாடு குழுமத்துக்கு முத்தையா தலைவ ராக
வந்துவிடுவார்.’’ இப்படிச் சொல்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தை
அறிந்தவர்கள்.
thanx - the hindu
0 comments:
Post a Comment