கமல் சாரை விட நான் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று சொல்வதை கமல் சார் ரசிகர்கள் கேட்டால், செருப்பால் அடிப்பார்கள் என்கிறார் சித்தார்த்.
சித்தார்த் நடித்துள்ள புதிய படம் எனக்குள் ஒருவன். கன்னடத்தில் வெளியான லூசியா படத்தின் ரீமேக்கான இப்படத்தில் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் கமல். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை தீபா சன்னிதி நடித்துள்ள இப்படத்தை பிரசாத் ராமர் இயக்கியுள்ளார். சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சித்தார்த் பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு-
* லூசியா படத்திலிருந்து அதன் ரீமேக்கில் எந்த அளவுக்கு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறீர்கள்?
எனக்கு பிடித்த சில படங்களில் லூசியாவும் ஒன்று. இந்த படத்தை பார்த்தபோதே அந்த கதை என்னை இம்ப்ரஸ் பண்ணிவிட்டது. அதனால் இந்த படத்தின் தமிழ் ரைட்ஸை சி.வி.குமார் வாங்கியிருக்கிறார் என்றதும், நான் அவரை தொடர்பு கொண்டு நான்தான் நடிப்பேன் என்று சொன்னேன். மேலும், இந்த படத்தின் இயக்குனர் பிரசாத் ராமர், கன்னட ஒர்ஜினாலிட்டியில் இருந்து மாறுபட்டு தனது பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் கன்னட படத்திலிருந்து தமிழில் இன்னும் வித்தியாசமாக இருக்கும். அதேபோல் நானும் கன்னடத்தில் புதுமுக நடிகர் நடித்தது போல் இல்லாமல் எனது பாணியில் இன்னும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
* சற்று முன்பு பேசிய நடிகர் அஜய்ரத்னம், நீங்கள் கமலை விட சிறப்பாக நடித்திருப்பதாக கூறினாரே?
அஜய்ரத்னம் பேசினதைக்கேட்டு நானும் அதிர்ச்சியடைந்து விட்டேன். கமல் சாரின் தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருவன். நானெல்லாம் அவரது நடிப்பை ரசிக்கத்தான் முடியுமே ஒழிய அவருடனெல்லாம் போட்டி போட முடியாது. என்னைப்பொறுத்தவரை எனது நடிப்பு கடவுள் கமல் சார். அவரை விட நான் சிறப்பாக நடித்திருப்பதாக சொன்னதை கமல் சாரின் ரசிகர்கள் கேட்டால் செருப்பால் அடிப்பார்கள்.
* அப்படியென்றால் கமல் பட டைட்டீலை இந்த படத்துக்கு வைத்தது ஏன்?
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்தே பல டைட்டீல்களை பரிசீலனை செய்து வந்தனர். ஆனால் எதுவுமே கதைக்கு பொருத்தமானதாக இல்லை. அதையடுத்துதான், எனக்குள் ஒருவன் டைட்டீல் பொருத்தமாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதன்பிறகுதான் கமல் நடித்த அந்த படத்தை தயாரித்த கவிதாலயா நிறுவனத்திடம் பேசி இந்த டைட்டீலை வாங்கினோம். இந்த கதைக்கு இதை விட பொருத்தமான டைட்டீல் வேறு எதுவும் இருக்க முடியாது.
* இந்த படம் உங்களது ப்ளேபாய் இமேஜை முற்றிலுமாக மாற்றி விடுமா?
என் மீது விழுந்திருக்கும் சாக்லேட் பாய் இமேஜை துரத்தியடிக்க வேறு பக்கமாக ஓடிக்கொண்டேயிருக்கிறேன். முதலில் ஜிகர்தண்டாவில் நடித்தேன். இப்போது எனக்குள் ஒருவனில் நடித்துள்ளேன். இதற்கிடையே காவியத்தலைவனில் நடித்துள்ளேன். இந்த படங்களெல்லாம் எனது சாக்லேட் பாய் இமேஜை மாற்றக்கூடியவைதான். மேலும் 2014ல் நான் நடித்துள்ள இந்த படங்கள் எனக்கு ஓரளவு நடித்து விட்ட திருப்தியை தருகின்றன.
* ரீமேக் படங்களில் நடிப்பது எளிதா? இல்லை கடினமா?
பழைய ரீமேக் படங்களில் நடிப்பது கடினம்தான். அவர்கள் மாதிரி இப்போதைய நடிகர்களால் நடிக்க முடியாது. ஆனால், இப்போதைய ரீமேக் படங்களில் கஷ்டப்பட வேண்டியதில்லை. இன்றைய பாணியில் எளிதாக நடித்து விட முடியும். என்றாலும் இந்த லூசியா படத்தைப்பொறுத்தவரை அந்த ஒரிஜினல் படத்தின் சாயல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதோடு, இந்த கதை எனக்கு அதிகம் பிடித்து நடித்த படம் என்பதால் எனக்கு கஷ்டம் தெரியவில்லை.
மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே டைரக்டர், தயாரிப்பாளர் என அனைவருமே எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டனர். அதனால் இந்த கதாபாத்திரத்தில் இன்னும் எந்த மாதிரியாக பர்பாமென்ஸ் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு இறங்கி அடியுங்கள் என்று கூறி விட்டனர். அதனால் கதாபாத்திரத்திற்கு தேவையான மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறேன்.
* இந்த படத்தில் பிரபலமான என்றொரு பாடல பாடியிருக்கிறீர்களாமே?
அந்த பாடலை முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் பாடியிருந்தார். அதன்பிறகு கமர்சியல் கருதி என்னை பாட சொன்னார். அதனால் அந்த பாடலை மனப்பாடம் செய்து விட்டு பாடினேன். இது நான் சினிமாவில் இதுவரை பாடியதில் 15வது பாடலாகும். அவரது ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்றபோது, அவர் மனைவி கொடுத்த ஒரு பிளாக் காபியை குடித்து விட்டு இந்த பாடலை பாடினேன்.
மேலும், இதுவரை நான் 23 படங்களில் நடித்திருக்கிறேன். அதில் எந்த படத்திலும் என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லாத எனது அம்மா இந்த படத்தில்தான் நான் அழகாக இருப்பதாக சொன்னார். அதோடு இதுவரை நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தும் இந்த படத்தின் ஆடியோ விழாவுக்குத்தான் முதன்முதலாக வந்தார். எனது அம்மா என்னை புகழ்ந்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்றார் சித்தார்த்.
thanx - dinamalar
0 comments:
Post a Comment