அங்கீகாரம் என்று ஒருவர் எதை கருதுகிறாரோ அதைப்பொறுத்தது. சிலருக்கு விருதுகள் சிலருக்கு கைதட்டு. இவை இரண்டையும் விட யதார்த்தமே சரியான அங்கீகாரம் என்று நான் கருதுகிறேன். பாடலின் வெற்றி படத்தின் வெற்றியாகவும் கருதப்படும்போதே உரிய அங்கீகாரம் ஒரு பாடலாசிரியருக்கு கிடைக்கிறது என்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி இதோ...
* திரைப்பாடல்களில் ஒரு பாடலாசிரியரின் பங்கு எத்தனை சதவிகிதம் இருப்பதாக கருதுகிறீர்கள்?
ஒரு பாடலாசிரியரைப் பொறுத்தவரை நூறு சதவிகித பங்களிப்பை செலுத்தினால் ஒழிய நல்ல பாடல் வராது என்பது உங்களுக்கு தெரியாததா என்ன? எத்தனையோ பாடலாசிரியர்கள் கதையையும், கதாபாத்திரத்தையும் அப்படியே தங்கள் பாடல்கள் வழியே சமூகத்தைப் பிரதிபலித்திருக்கிறார்கள். பாபநாசம் சிவனில் இருந்து இன்றைக்கு பாடல் எழுத வந்திருக்கும் புதுகவிஞர்கள் வரை தங்களது பங்களிப்பில் குறை வைத்ததாக, வைப்பதாகச் சொல்வதற்கில்லை.
* திரைப்பாடல்கள் மூலம் நீங்கள் சமுதாயத்திற்கு மெசேஜ் சொன்ன பாடல்கள் என்னென்ன?
சாட்டை திரைப்படத்தின் வாயிலாக கல்வியின் முக்கியத்துவத்தையும், வரவிருக்கும் காடு படத்தின் வாயிலாக புரட்சிகர சிந்தனைகளையும் சொல்லியிருக்கிறேன்.
* ஒரு பாடலாசிரியரின் தரம் என்பது சொல்லப்படும் கருத்தில் உள்ளதா? இல்லை பாடல்களின் வெற்றியில் உள்ளதா?
சொல்லப்படும் கருத்தில்தான் உள்ளது. வெற்றி என்பதை கருத்தை மக்கள் ஆமோதிப்பதாகவே கருதுகிறேன்.
* உங்கள் திரைப்பயணத்தில் யாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதுண்டு?
எனக்கு முன்னாள் பாடல் எழுதிய அத்தனை கவிஞர்களும் எனக்கு முன் மாதிரிகளே. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் புலவர் புலமைப்பித்தனை சொல்லலாம். கருத்தாலும், வடிவ நேர்த்தியாலும் அவரே என்னை முழுமையாக ஆட்கொண்டவர்.
* அயிட்டம் பாடல்கள் சினிமாவுக்கு அவசியமானதா?
வியாபார சினிமா விரும்பிகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது.
* உங்களை நெகிழ வைத்த அம்மா பாடல் எது? அதோடு நீங்கள் எழுதிய செண்டிமென்ட் பாடல்களைப்பற்றியும் சொல்லுங்கள்?
அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று வாலி அவர்கள் எழுதிய பாடல் என்னையும் கவர்ந்த பாடல் என்றால் மிகையில்லை. நான் எழுதிய பாடல்களில் சமீபத்தில் வெளிவந்துள்ள சிகரம்தொடு படத்தில் அன்புள்ள அப்பா கே.ஜே.யேசுதாஸ் பாடியிருக்கும் பாங்கும், டி.இமானின் இசையும் அபாரம்.
* அம்மா என்று எழுதுவதைகூட மம்மி என்று சமீபகாலமாக எழுதுகிறார்களே இதை ஏற்கலாமா?
ஏற்க வேண்டும் எனச்சொல்ல நானென்ன லண்டன்காரனா?
* ஒரு பாடலாசியருக்கான அங்கீகாரத்தை தருவது ரசிகர்களின் கைதட்டல்களா? இல்லை விருதுகளா?
அங்கீகாரம் என்று ஒருவர் எதை கருதுகிறாரோ அதைப்பொறுத்தது சிலருக்கு விருதுகள் சிலருக்கு கைதட்டு. இவை இரண்டையும் விட யதார்த்தமே சரியான அங்கீகாரம் என்று நான் கருதுகிறேன். பாடலின் வெற்றி படத்தின் வெற்றியாகவும் கருதப்படும்போதே உரிய அங்கீகாரம் ஒரு பாடலாசிரியருக்கு கிடைக்கிறது.
* சமீபகாலமாக சங்கீத ஞானமே இல்லாத நடிகர்-நடிகைகள் பின்னணி பாடுவதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
சமீபகாலமாக நடிகர்களாக மாறிவரும் இசையமைப்பாளர்களை நீங்கள் வரவேற்கிறீர்கள் என்றால், இதையும் நீங்கள் வரவேற்று தான் ஆக வேண்டும்.
* உங்களது வெற்றிக்கூட்டணியான டி.இமானைப்பற்றி சில வரிகள் சொல்லுங்கள்?
இமான் என் ஆத்ம நண்பர். என்னையும், என் பாடல்களையும் தன் இசையை விட அதிகம் நேசிப்பவர். அவருடன் பணிபுரிந்த பல பாடல்கள் வெற்றியை சம்பவித்திருககின்றன. காரணம் அவரது ஆளுமை, எளிமையான இசைக்கோர்ப்பு முறை கதையை புரிந்த கதாபாத்திரத்தை உணர்ந்த லாவகம்.
* நீங்கள் எழுதிய ஹிட் பாடல்களில் உங்களுக்கு அதிகம் பிடித்த பாடல்கள் எவை?
இனிமேல் நான் எழுதி ஹிட்டாகப்போகும் பாடல்கள் என்று சொன்னால் ஏற்பீர்கள்தானே...?
இவ்வாறு அவர் கூறினார்.
thanx - dinmalar
0 comments:
Post a Comment