தேனீயைப்போல படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், சித்தார்த்.
‘ஜிகர்தண்டா’ படம் ரிலீஸாகியுள்ள நிலையில் ‘காவியத்தலைவன்’, கன்னட ரீமேக்
படமான ‘லூசியா’ என்று அடுத்தடுத்து தமிழில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
‘‘தமிழில் நான் ஆசைப்பட்ட படங்கள் முதன்முறையாக எனக்கு கிடைக்கத்
தொடங்கியிருக்கிறது. என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு இது’’
என்றவாறு பேசத் தொடங்கினார்.
‘பீட்சா’ படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் மீது விழுந்த தனிக் கவனம்தான் அவருடன் ‘ஜிகர்தண்டா’வில் உங்களைச் சேர்த்து வைத்ததா?
‘பீட்சா’ என்னை ரொம்பவே பாதித்த படம். அந்தப் படத்தைப் பாராட்டி நான் சமூக
வலை தளத்தில் எழுதியிருந்தேன். பின்னர் ஒருமுறை அவருடன் இதுபற்றி
பேசிக்கொண்டிருந்த போதே, ‘இப்படி ஒரு இயக்குநர் நமக்கு கதை சொன்னால்
நல்லாயிருக்குமே’ என்று நான் யோசிக்கத் தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில்
அவரே, ‘ஒரு கதை இருக்கிறது கேக்குறீங்களா?’ என்றார்.
‘ஜிகர்தண்டா’ கதையை சொல்வதற்கு முன்பே அவருடன் படம் பண்ண வேண்டும் என்று
ஃபிக்ஸ் ஆகிட்டேன். அப்போதைக்கு கதை கொஞ்சம் பிடித்திருந்தால் போதும் என்ற
மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், கதை ரொம்பவே பிடித்துப்போனது. குறிப்பாக
என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. உடனே ஒப்புக்கொண்டேன்.
நீங்கள் ஒருபுறம் மணிரத்னம், ஷங்கர், அமீர்கான் போன்றவர்களோடு
பணிபுரிந்து வருகிறீர்கள். மறுபுறம் புது இயக்குநர் களோடும் குறும்பட
இயக்குநர்களோடும் பயணிக்கிறீர்கள். இது எப்படி சாத்திய மாகிறது?
புதுமுக இயக்குநர்களுடன் அதிகமாக வேலை பார்க்கும் நடிகர்களில் நானும்
ஒருவன். நான் புது இயக்குநர்களோடு கிட்டத்தட்ட 15 படங்கள்
செய்திருக்கிறேன். மணி சார், அமீர்கான் எல்லாம் ஜாம்பவான்கள். எல்லோரையுமே
கதைதான் பேச வைக்கிறது. இப்போது கார்த்திக்கின் பலமும் கதைதான். 10 நிமிட
குறும்படங்களிலேயே அசத்தும் குறும்பட இயக்குநர்கள் 2 மணி நேரம்
கிடைக்கும்போது இன்னும் வித்தியாசமாக அசத்திவிடுகிறார்கள். ‘காதலில்
சொதப்புவது எப்படி’, ‘ஜிகர்தண்டா’ படங்களில் எல்லாம் நான் ஒரு புதிய
அனுபவத்தை கற்றேன். இப்போது ‘காவியத்தலைவன்’ படத்தில் வசந்தபாலன்,
ஏ.ஆர்.ரஹ்மான், நீரவ்ஷா என்று பெரிய அணியே இருக்கிறது. கதை என்கிற ஒரு
விஷயம் எல்லாவற்றையும் கடந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை முன் நிறுத்தும்.
தெலுங்கில் நீங்கள் அதிக கவனம் செலுத்திய தால்தான் தமிழில் இடைவெளி ஏற்பட்டதா?
எந்த ஒரு விஷயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு. கடந்த 7, 8 ஆண்டுகளாக நான்
தெலுங்கில் ஓடிக்கொண்டே இருந்தேன். அங்கே நிறைய வெள்ளி விழா படங்களை
கொடுத்துவிட்டேன். அங்கே பிஸியாக இருந்தபோது தமிழில் வாய்ப்புகள் வந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகள் என் கவனம் தமிழ் படங்களில்தான் இருக்கும்.
நீங்கள் படங்களைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளீர்களே? இப்போதே அது தேவையா?
நான் படம் தயாரிப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உதவி
இயக்குநராக இருந்த காலம் முதலே சினிமாவின் முக்கிய தொழில்நுட்பங்கள் எனக்கு
தெரியும் என்பது. அடுத்ததாக ஒரு கதை நல்ல கதை என்று மனதில் பட்டால்தான்
நிச்சயமாக அதை தயாரிப்பேன். நான் பணம் பண்ணுவதற்காக தயாரிப்பாளராக
மாறவில்லை. நல்ல படங்களைக் கொடுக்கவே தயாரிப்பாளராக மாறுகிறேன்.
எனக்கு தெரிந்த நிறைய தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின்
திறமையை காத்திருப்பில் போட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறேன். வரும் ஜனவரி
தொடங்கி மூன்று தமிழ் படங்கள் தயாரிக்க உள்ளேன். அதில் ஒரு படத்தில் நான்
நடிக்கவும் செய்கிறேன்.
உங்கள் கனவு?
ஒரு கதையை இயக்குநரோ, கதாசிரியரோ எழுதும்போது இந்த கதாபாத்திரத்தை
சித்தார்த் செய்வான் என்று அவர்கள் மனதில் ஓட வேண்டும். அதுதான் என் கனவு.
அது எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் நான் கண்முன் வர வேண்டும்.
மணிரத்னத்திடம் நீங்கள் உதவி இயக்குந ராக இருந்துள்ளீர்கள். நீங்கள் எப்போது ஒரு படத்தை இயக்குவீர்கள்?
கண்டிப்பாக. அதுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது நடிப்பு,
தயாரிப்பு, பாடுவது, கதை எழுதுவது என்று பல வேலைகளைச் செய்கிறேன். ஆனால்
படம் இயக்கும்போது வேறு எதையும் செய்யக்கூடாது. குறைந்தது 2 ஆண்டுகள்
ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படத்தை இயக்குவேன்.
திருமணம்?
தெரியவில்லை…. இப்போதைக்கு இல்லை…. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டுமே.
thanx - the hindu
0 comments:
Post a Comment