தினமலர் விமர்சனம்
இந்த
ஆண்டில் இதுவரை எண்ணற்ற புதுமுகங்கள் நடித்த, சிறிய படங்கள்
வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே நிறைவாக அமைந்து
ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. அதிலும் ஒரு சில படங்கள் வியாபார ரீதியாக
பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட
கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிடுகின்றன. இன்று
அவர்கள் புகழ் பெறவில்லை என்றாலும் முயற்சி செய்தால் ஒரு நாள் அவர்களும்
பேசப்படுவார்கள்.
சினிமா என்பதே கதை சொல்லுதல்
தான். எந்த இயக்குனர் அவர் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகச் சொல்கிறாரோ, அவர்
பாதி கிணற்றைத் தாண்டிவிட்டார் என்றுதான் அர்த்தம். அடுத்து
நட்சத்திரங்களிடமிருந்து நடிப்பை வாங்குவதிலும், இசையமைப்பாளரிடமிருந்து
நல்ல பாடல்களை வாங்குவதிலும், மற்ற கலைஞர்களின் திறமையை தன்னுடைய படத்தில்
முழுமையாகக் கொண்டு வருவதிலும் மீதி கிணற்றைத் தாண்டி விட்டால் போதும்.
இந்தப்
படத்தைப் பொறுத்தவரையில் அறிமுக இயக்குனர் சோழ தேவன், புதுமுகங்களை நடிக்க
வைத்து முக்கால் கிணற்றைத் தாண்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, காரைக்குடி, நெல்லை வட்டாரத்தைச் சுற்றிய
கதைகள்தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. மற்ற வட்டாரக் கதைகள்
எப்போதாவது ஒரு முறைதான் வருகின்றன. இந்த படத்தின் ஆரம்பத்திலேயே மேட்டூர்
அணை பற்றிய சிறு விளக்கப் படத்திலேயே இயக்குனர் எதையோ வித்தியாசமாக சொல்ல
வருகிறார் என்பது புரிகிறது. மிகப் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும்
தஞ்சாவூர் வட்டாரக் கதையை ஒரு யதார்த்த வாழ்வியலாக சித்தரித்து ரசிக்க
வைத்திருக்கிறார் இயக்குனர்.
அம்மாபேட்டை
கிராமத்தில் அறுபது வயதைக் கடந்த இரண்டு நெருங்கிய நண்பர்களின் மகன்களாக
ஜெகன், நாயகம் இருவருக்கும் இடையே பஞ்சாயத்து சேர்மன் பதவியால் எப்போதுமே
பகை உண்டு. ஊர் சேர்மனாக பதவி வகித்து வரும் நாயகத்தை எதிர்த்து அரசியல்
செய்து அந்த பதவியைக் கைப்பற்றத் துடிக்கிறார் ஜெகன். இதற்காக பல
போராட்டங்கள், அரசியல், காதல் வேலைகளைச் செய்து நாயகத்தை ராஜினாமா செய்ய
வைத்து பின்னர் நடக்கும் தேர்தலில் ஜெகன் சேர்மன் ஆகிறார். அதன் பின்னும்
அவருடைய அரசியல் ஆசை மேலும் மேலும் அதிகமாகிறது. பதவிக்காக எதை
வேண்டுமானாலும் செய்யத் துடிப்பதால் பல எதிரிகளை சம்பாதிக்கிறார். அந்த
பதவி ஆசை அவரை எப்பேர்ப்பட்ட பதவியில் கொண்டு போய் விடுகிறது என்பதுதான்
படத்தின் மீதி கதை.
படத்தின் நாயகன் கனவுக்
காட்சிகளில் கூட கலர் கலர் டிரஸ் போட்டு டூயட் பாடாத ஒரே படம் இந்தப்
படமாகத்தானிருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் நாயகன்
வேட்டி, சட்டையிலேயே வருவது எவ்வளவு பெரிய விஷயம். அந்த அளவிற்கு இந்த
மண்ணை இயக்குனர் நேசிக்கிறார் என்பது இந்த கதாபாத்திரத்தின் மூலம்
மட்டுமல்ல, மற்ற கதாபாத்திரங்களின் மூலமும் வெளிப்படுகிறது. கிராமத்துப்
பக்கங்களில் எப்படியாவது அரசியலில் நுழைந்து, சிறு சிறு போராட்டங்களை
நடத்தி, வட்டம், ஒன்றியம், மாவட்டம் என தலைவர்களின் கவனத்தை அப்படியே
கோட்டையைப் பிடித்து விட வேண்டும் என பல கனவுகளுடன் வாழ்ந்து
கொண்டிருக்கும் 'பாண்டித்துரை' என்ற இளைஞன் கதாபாத்திரத்தை மிகவும்
யதார்த்தமாக அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் புதுமுகம்
ஜெகன். பெரியாரிஸம் பேசிக் கொண்டு ஊர் மக்களுக்காக பல போராட்டங்களை
முன்னின்று நடத்தியவரின் உள்ளூர இருக்கும் வில்லத்தனம் கடைசியில் தெரிய
வருவது மிகப் பெரிய அதிர்ச்சி. கதாநாயகனை ஆரம்பத்திலிருந்தே அவ்வளவு
நல்லவனாகக் காட்டிவிட்டு, கடைசியில் அவரும் பதவிக்காக செய்த அரசியல்
வேலைகளைப் பார்க்கும் நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஆனால், அந்த
அரசியலே அவருக்கு ஒரு உயர்ந்த 'பதவி'யைக் கொடுப்பதும் எதிர்பாராத
முடிவுதான்.
படத்தின் நாயகியான கயல் மேக்கப்
போட்டிருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. அப்படி மேக்கப்பே இல்லை
என்றால் சமீப காலத்தில் யதார்த்தமான முகமாக நம்மை ரசிக்க வைத்த நாயகியரின்
பட்டியலில் இவருக்கு முதலிடத்தைக் கொடுத்து விடலாம். எந்த இடத்திலும் தான்
ஒரு சினிமாவில் நடிக்கிறோம் என்ற உணர்வைக் காட்டிக் கொள்ளாமல் அப்படி ஒரு
யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஜெகனைப் பார்த்து ஒதுங்கிச்
சென்றாலும் ஒரு கட்டத்தில் அவருடைய காதல் வலையில் விழுந்து விடுகிறார்.
ஜெகன் விரித்தது காதல் வலை அல்ல, சதிவலை என்று தெரிந்த பின் ஒதுங்கினாலும்,
பாழாய்ப் போன காதல் அவரை விட்டு அகல மறுக்கிறது. காதலனைக் காப்பாற்ற இவர்
எடுக்கும் முடிவுகள், அப்படியே அப்பாவித்தனமான கிராமத்துப் பெண்ணை நம்
கண்முன் நிறுத்துகிறது. மீரா ஜாஸ்மினையெல்லாம் கொண்டாடிய நம் ரசிகர்கள்
கயலையும் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும். ஆனால் நடக்குமா ?
படத்தில்
மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்களின் தேர்விலும் தனிக் கவனம்
செலுத்தியிருக்கிறார் இயக்குனர். ஜெகனை எதிர்த்துக் கொண்டேயிருக்கும்
நாயகம் சரியான தேர்வு. சேர்மனாக இருந்தாலும் அப்பாவின் பேச்சுக்குக்
கட்டுப்பட்டு நடக்கும் பொறுப்பான மகனாக இருக்கிறார். சிங்கம் புலி
அவ்வப்போது கொஞ்சம் நகைச்சுவைத் தோரணங்களை அள்ளிவிட்டு அதன் பின் காணாமல்
போய் விடுகிறார். நாயகன் ஜெகனின் அப்பாவாக நடித்திருப்பவரும், வில்லன்
நாயகத்தின் அப்பாவாக நடித்திருக்கும் ரவியும் கூட அவர்களது கதாபாத்திரத்தை
அந்த அளவிற்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இந்தப்
படத்தைப் பொறுத்தவரையில் புதுமுகங்கள் நடிக்காமல் முன்னணி நடிகர்கள்
நடித்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட வாய்ப்புள்ளது. சில பல குறைகள்
இருந்தாலும், புதுமுகங்கள் நடிக்கும் சிறிய படங்கள் என்றாலே
திரையரங்குகளும் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களிடம் சென்று
சேர்வதற்குள் அந்தப் படங்கள் திரையரங்கில் இருப்பதில்லை. மற்ற பெரிய
படங்களுக்கு மத்தியில் இந்த சிறிய படம் ரசிகர்களைச் சென்று சேர்ந்தால்
அதுவே அவர்களுக்கு பெரிய வெற்றிதான்.
சண்டியர் - அரசியல் சதி வலை!
thanx - தினமலர்
- நடிகர் : , ஜெகன்
- நடிகை : , கயல்
- இயக்குனர் :சோழதேவன்
0 comments:
Post a Comment