Wednesday, August 06, 2014

தமிழ் சினிமா 2000 க்குப்பின் வீழ்ச்சியா?

இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான வேலைஇல்லா பட்டதாரி திரைப்படம், திரையரங்கங்களுக்கு மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்து முதல் மூன்று நாட்களிலேயே 13 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தகவல்கள் வந்தன (முதல் வார வசூல்: ரூ. 20 கோடி).

படத்தைப் பற்றிய நல்ல செய்திகள் படம் வெளிவந்த பின்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கும் முன்பே முதல் மூன்று நாட்களும் அட்வான்ஸ் புக்கிங் ஃபுல் ஆனதற்குக் காரணம் என்ன? முன்னணி நடிகர் தனுஷ்தான் முக்கியக் காரணம்.

அது போலவே, ஜில்லா, வீரம், நிமிர்ந்து நில், மான் கராத்தே, கோச்சடையான், அரிமா நம்பி ஆகிய படங்களுக்கும் முதல் மூன்று நாட்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டு வந்து பார்த்தார்கள். இந்தத் தகவல் சொல்வதென்ன? ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு, படம் வெளிவரும் முன்பே ஓர் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் சினிமாமீது ஆவலாக இருக்கும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கிறார்கள். படம் பலருக்கும் பிடித்திருந்தால் அடுத்த கட்ட சினிமா ரசிகர்களும் பார்த்துப் படத்தை வெற்றியடையச் செய்கிறார்கள்.

திரையரங்குகள் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக வசூலை அள்ள, முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளிவருவது அவசியம். 2014-ல், முதல் 7 மாதங்களில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் 10 மட்டுமே வெளிவந்துள்ளன.

அதுவே, இந்த வருடம் தமிழ் சினிமாவின் குறைவான வசூலுக்கு முக்கியக் காரணம். முதல் 29 வாரங்களில் 10 படங்கள் மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்ததால், மீதம் உள்ள 19 வாரங்கள், அரங்கங்கள் குறைவான வசூலைப் பெற்றுள்ளன. ஒரு சிறிய பட்ஜெட் படம் அல்லது, அதிக எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் 100-க்கும் மேல் வந்திருந்தாலும், அவற்றின் வசூல், முன்னணி நடிகர்களின் படங்களின் தாக்கத்திற்கு என்றுமே இணையாக முடியாது.

கடந்த காலத்தில் இது எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம். தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 1960 முதல் 1969 வரை வெளியான படங்கள், அவற்றில், முன்னணி நடிகர்கள் நடித்த படங்களைப் பற்றிய ஒரு கணக்கு இதோ:

இந்த காலக்கட்டத்தில் ஏழு முன்னணி நடிகர்கள் கோலோச்சினார்கள் (எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்).

இந்த 10 வருடங்களில், சிவாஜி 75 படங்களிலும், எம்.ஜி.ஆர் 59 படங்களிலும் நடித்துள்ளார்கள். ஜெமினி கணேசன் 44, 1965-ல் அறிமுகமான ஜெய்சங்கர் 5 வருடங்களில் 41. இரு வாரங்களுக்கு ஒரு முன்னணி நடிகரின் படம் வெளியானது.

வெளியான படங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் 40 முதல் 85 சதவீதம். அதனால் மக்கள் கூட்டம் எப்போதும் அரங்கங்களில் இருந்தது. பல படங்கள் 100 நாட்களும், 175 நாட்களும் ஓடின.

தமிழ் சினிமாவின் அடுத்த ஒரு நல்ல காலம், 1980 முதல் 1989 வரை என்று சொல்லலாம். இந்தக் காலகட்டத்தில் ஒன்பது முன்னணி நடிகர்கள் (சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன்).

படங்களின் எண்ணிக்கை அதிகமாக, முன்னணி நடிகர்களின் பட சதவீதம் குறைந்துகொண்டே வர ஆரம்பித்தது. ஆனாலும், 1982 முதல் 1988 வரை அதிக அளவில் அவர்களின் படங்கள் வெளியாயின. இந்த ஒன்பது நடிகர்களின் 50 படங்கள் இந்த 10 ஆண்டுகளில் வெளியாயின, அதாவது, ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஆண்டுக்கு 5 படங்கள். சூப்பர் ஸ்டாராக உருவான ரஜினியின் 47 படங்கள் இந்தக் காலத்தில் வெளியாயின. இது போல் திரையரங்கங்களில் மக்கள் கொண்டாடிய காலம் திரும்பி வருமா என்று தெரியவில்லை.

தமிழ் சினிமாவின் சோதனையான காலகட்டம் 2000 ஆண்டு முதல் உருவானது.

முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் சூழ்நிலை இந்தக் காலக் கட்டத்தில் ஏற்பட ஆரம்பித்து, இன்று இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்ற அளவில் வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது.

2004-ல், 10 முன்னணி நடிகர்களின் 26 படங்கள் வெளிவந்துள்ளன (1984—ல் 54 படங்கள்!). ஆனால் இன்று 15 முன்னணி நடிகர்கள் (முதல் மூன்று நாட்கள் நல்ல ஓபனிங் கொடுக்கக் கூடியவர்கள்) இருந்தும், 2013-ல் 23 படங்கள் மட்டுமே வந்துள்ளன. குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முன்னணி நடிகர் ஒருவர் நடித்த படம் வெளிவர வேண்டும், அதாவது, வருடத்திற்கு 26 முதல் 36 படங்கள். அப்படி வந்தால் வார இறுதி நாட்களிலாவது திரையரங்குகளில் கூட்டம் இருக்கும்.

முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமல்லாது ஏதாவது ஒரு காரணத்தால் தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்தையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றுடன் சேர்த்து, குறைந்தது 26 முதல் 36 படங்கள் வருடத்திற்கு வெளிவந்தால், சிறப்பான நிலைமை உண்டாகும். அதற்கு, முன்னணி 15 நடிகர்களின் படங்கள், வருடத்திற்குக் குறைந்தது இரண்டு வெளியாக வேண்டும். அவற்றுடன், எதிர்பார்க்கப்படும் இயக்குநர்களின் படங்களும், வேகமாக முன்னேறி வரும் நடிகர்களின் படங்களும் சேரும்போது, சுலபமாக 36 படங்கள் வருடத்திற்கு வெளியாகி, ஒவ்வொரு வாரமும் மக்கள் ஆதரவு திரையரங்குகளுக்கு இருக்கும். தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், முன்னணி நடிகர்களின் படங்களை 6 மாதங்களில் முடித்தால்தான் இது சாத்தியப்படும்.

மாபெரும் வெற்றி பெறும் ஒரு படமும், அதிகபட்சம் 4 வாரங்கள் மட்டுமே வசூலைப் பெற்றுவரும் தற்போதைய சூழ்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளியானால்தான், வசூல் நன்றாக இருக்கும். இந்தி சினிமா உலகம் இன்று அதிக வியாபார வளர்ச்சியை எட்டியுள்ளதற்கு முக்கியக் காரணம், ஏதோ ஒரு வகையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 30 முதல் 36 படங்கள் ஆண்டுதோறும் வெளிவந்து வசூல் சாதனை செய்வதே.

தமிழ் சினிமாவின் வியாபாரம் உயர, அதிக அளவில் பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படும் படங்கள் தேவை. அப்படிப்பட்ட படங்கள் ஒரே வாரத்தில் இரண்டு வெளியாகாமல் (உதாரணம்: பொங்கலுக்கு ஜில்லா, வீரம்) சிறிய இடைவெளி விட்டு வந்தால், எதிர்பார்க்கப்படும் அனைத்துப் படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைய வாய்ப்புள்ளது.

தொடர்புக்கு: [email protected] 

நன்றி - த இந்து  

0 comments: