குறைந்த பொருட்செலவில், வெறுமனே 15 நாட்களில் ராம்கோபால் வர்மா தெலுங்கில்
எடுத்திருக்கும் ‘ஐஸ்கிரீம்’ இன்று ஆந்திராவில் வெளியாகிறது. இப்படத்தின்
டிரைலரைப் பார்க்கும்போதே காட்சிகளும் ஒலிகளும் படத்தின் பெயருக்கு
ஏற்றாற்போலச் சில்லிட வைக்கின்றன. இப்படத்தின் நாயகியாக
அறிமுகமாகியிருக்கும் தேஜஸ்வி மடிவாடா ஒரு ஆடம்பரமான நவீன பங்களாவில்
தனிமையில் இருக்கிறார்.
வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. படிகள்
வழியாக இறங்கிக் கதவைத் திறந்தால் யாருமில்லை. மீண்டும் கதவு தடதடவென்று
தட்டப்படுகிறது. மீண்டும் வந்து கதவைத் திறக்கும் போது காதலன் நவ்தீப்
உள்ளே வருகிறார். காதலன் நவ்தீப்புடன் கொஞ்சியபடியே நாயகி முதல் மாடிக்கு
ஓடித் தன் அறையின் படுக்கையில் விழுகிறார். காதலனின் சிருங்காரத்தைக் கண்ணை
மூடி ரசிக்கும்போதுதான் நமக்குத் தெரிகிறது. தேஜஸ்விக்கும் தெரிகிறது.
அந்த அறையில் காதலனே இல்லை என்று. இதயம் அதிரத் தொடங்குகிறது.
‘ஐஸ்கிரீம்’ படத்துக்கு ‘ப்ளோ காம்’ என்னும் புதிய ஒளிப்பதிவுத்
தொழில்நுட்பத்தை ராம் கோபால் வர்மா இந்திய சினிமாவில் முதல்முறையாக
அறிமுகப்படுத்தியுள்ளார். ஒளிப்பதிவு தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை
ஏற்படுத்திய ‘ஸ்டடிகேம்’ சாதனத்தை முதலில் வர்மாதான் ‘சிவா’ (தமிழில்
‘உதயம்’) படத்தில் பயன்படுத்தினார்.
‘ஐஸ்க்ரீம்’ படத்தின் ஒளிப்பதிவுப் பொறுப்பை ஏற்றிருப்பவர் அஞ்சி டோப்.
படத்தின் கதை முழுக்க ஒரு வீட்டிலேயே நடக்கிறது. இந்தப் படத்தின்
தயாரிப்புச் செலவு வெறும் 75 லட்சம்தான். ராம் கோபால் வர்மாவின் சம்பளம்
ஒன்றரைக் கோடி. தெலுங்கிலும் இந்தியிலும் ராம் கோபால் வர்மாவின்
பெயருக்கென்று ஒரு வியாபாரம் இருக்கவே செய்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு
உரிமை மூலம் வரும் வருவாயையும் சேர்த்தால் படத்தின் தயாரிப்பாளருக்குப்
படம் வெளியாவதற்கு முன்பே லாபம்தான் என்கிறார்கள்.
ராம் கோபால் வர்மா ‘ராத்ரி’, ‘பூத்’ போன்ற திகில் படங்களை ஏற்கெனவே
இயக்கியிருக்கிறார். ஆனால் ஐஸ்க்ரீம் இந்தப் படங்களிலிருந்து வித்தியாசமான
அனுபவத்தைத் தரும் என்கிறார் வர்மா.
இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக ப்ளோ காம் தொழில்நுட்பம் பேசப்பட்டாலும்,
ஒரு காட்சி அளிக்கும் உணர்வை மேம்படுத்துவதற்கே தொழில்நுட்பம் உபயோகப்படும்
என்கிறார் வர்மா. “ ஒரு படத்தின் திரைக்கதை சரியாக அமைந்து தொழில்நுட்பச்
சிறப்பும் சேர்ந்தால்தான் படம் நன்றாக இருக்கும். இந்தப் படத்திற்கும் அது
பொருந்தும். அதே நேரம் ஐஸ்க்ரீம் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குப்
புதிய அனுபவத்தை இத்தொழில்நுட்பம் கொடுக்கும். ஒரு காட்சி
பார்வையாளருக்குக் கொடுக்கும் உணர்வைப் பெரிதும் தீர்மானிப்பது
ஒளிப்பதிவுக் கருவிதான். ஒரு துரத்தல் காட்சியை ப்ளோ காம் கேமராவால்
படாமாக்கும்போது, எந்த நடுக்கமும் தடங்கலும் இருக்காது. இது காட்சிகளின்
உணர்வை மேம்படுத்தக் கூடியது” என்கிறார்.
வன்முறையை மட்டும் அல்ல காமம், குரோதம், அச்சம் ஆகிய உணர்வுகளையும்
அப்பட்டமாகச் சித்திரிப்பவர் ராம் கோபால் வர்மா. நாயகி தேஜஸ்வியின்
இளமையின் மேல் சில்லிடும் திரில் கதை ஒன்றை ஐஸ்க்ரீம் படத்தில் வர்மாவின்
ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வர்மாவின் முந்தைய கண்டுபிடிப்புகள் போலவே தேஜஸ்வி மதிவதாவும் தென்னிந்தியத் திரையின் முன்னணி நாயகி ஆகிவிடக் கூடும்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment