பரபரப்பான சினிமா வாழ்க்கையில் ஆறு மாதங்கள் போனதே தெரியவில்லை. இந்த ஆறு
மாதங்களில் தமிழ் சினிமாவில் நடந்தது என்ன? கடந்த வருடம் முதல் ஆறு
மாதங்களில் 88 புதுப் படங்கள் வெளியாகியிருந்தன. இந்த வருடம், 103 படங்கள்
வெளியாகியுள்ளன (தகவல் உதவி: பிலிம் நியூஸ் ஆனந்தன்).
இந்த வேகத்தில் சென்றால், 2014-ல் குறைந்தது 200 முதல் 210 புதுப் படங்கள்
வெளியாகும் (2013-ல் 164 படங்கள்) . அதாவது வாரத்திற்கு 4 படங்கள்.
வெளியான 103 படங்களில், ரூபாய் 10 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில்
தயாரிக்கப்பட்டவை 10 படங்கள் (கோச்சடையான், ஜில்லா, வீரம், மான் கராத்தே,
தெனாலிராமன், நான் சிகப்பு மனிதன், இது கதிர்வேலனின் காதல், பிரம்மன்,
நிமிர்ந்து நில், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்). இந்தப் படங்களின்
வியாபாரம் பல தளங்களில் உள்ளதால், அவற்றின் வணிக வெற்றியைப் பற்றி ஆராய்வது
கடினம்.
ரூபாய் 5 முதல் 10 கோடிக்குள் தயாரானவை 6 படங்கள் (ஆஹா கல்யாணம், என்னமோ
ஏதோ, மஞ்சப்பை, வல்லினம், வடகறி, சைவம்). இவற்றில் மிகப் பெரிய வெற்றி
பெற்ற படம் மஞ்சப்பை. மூன்று (இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட) மொழிகளில்
இப்படம் மறு ஆக்கம் செய்யப்படுவது, இப்படத்தின் வெற்றிக்குச் சான்று.
பாராட்டுகளைப் பெற்றுவரும் சைவம், சில தினங்களுக்கு முன்புதான்
வெ
ளியானதால், அதன் வசூல் பற்றி முழுமையான தகவல்கள் இல்லை.
ரூபாய் 3 முதல் 5 கோடிக்குள் தயாரானவை 15 படங்கள். இதில் யாமிருக்கப் பயமே,
குக்கூ, முண்டாசுப்பட்டி ஆகியவை வெற்றிப் படங்கள் என்கிறார்கள்
விநியோகஸ்தர்கள்.
ரூபாய் 3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரானவை 72 படங்கள். இவற்றில்
மூன்று படங்கள் - கோலிசோடா, தெகிடி, என்னமோ நடக்குது வெற்றி பெற்றன என்றும்
சொல்லப்படுகிறது. நடுத்தர, சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெற்றிகண்ட
படங்களில் 6 படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
மஞ்சப்பை:
இப்படத்தின் தரத்தைப் பற்றிச் சில விமர்சனங்கள் இருந்தாலும், அனைத்துத்
தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பெரும் வெற்றி பெற்ற படம். இதன்
வெற்றி பற்றித் தயாரிப்பாளர் - இயக்குநர் லிங்குசாமி சொன்னது: ஒரு நல்ல
படத்திற்கான அடிப்படைத் தகுதிகளுடன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவைத்
திரையரங்கில் வந்து பார்க்காத பார்வையாளர்கள் (குடும்பங்களும்,
பெரியவர்களும்) வந்து பார்த்த படம் இது. ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும்
உள்ள அழுத்தமான உறவை அழகாகவும், ஆழமாகவும் சொன்னதால் வயதானவர்களுக்கும்
பிடித்த படமானது. தற்கால சினிமா இளைஞர்களுக்கானது மட்டுமே என்ற பரவலான
எண்ணத்தை உடைத்த படம் இது.
யாமிருக்க பயமே:
இரண்டு வாரங்கள் தள்ளி வர வேண்டிய இப்படம், கோச்சடையான் வெளியாகும் தேதி
தள்ளிப் போனதால், விளம்பரங்கள் அதிகம் இல்லாமல் தடாலடியாக வெளியாகிப்
பெரும் வெற்றிபெற்றது. படம் வெளி வரும் முன், அதிக விளம்பரங்கள் இருந்தால்
மட்டுமே ஒரு படம் வசூல் வெற்றி பெற முடியும் என்ற சமீபகால எண்ணத்தை
உடைத்து, ஒரு படத்தில், மக்களுக்குப் பிடித்த விஷயம் இருந்தால், குறைந்த
விளம்பரம் இருந்தாலும் அது வெற்றிபெற முடியும் என நிரூபித்தது.
சந்திரமுகியும், காஞ்சனாவும், நகைச்சுவையுடன் ஆரம்பித்து, திகிலில்
முடியும். இப்படம், திகிலுடன் ஆரம்பித்து, நகைச்சுவையாக முடிந்தது.
படத்தின் கச்சிதமான திரைக்கதையும், திகிலையும் நகைச்சுவையையும் சரியான
முறையில் கலந்து கொடுத்ததும்தான் வெற்றிக்குக் காரணம் என்று இப்படத்தின்
தயாரிப்பாளர் எல்ரெட் குமார் குறிப்பிடுகிறார்.
கோலிசோடா:
இந்தக் காலத்திலும் 100 நாட்கள் ஓடிச் சாதனை படைத்த, சிறிய பட்ஜெட்டில்
உருவான ஒரு படம். ‘பசங்க’ படத்தின் 4 சிறுவர்கள், 5 வருடங்களுக்குப் பின்
மீண்டும் இணைந்து நடித்து, அதனாலேயே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிய படம்.
இயக்குநர் விஜய் மில்டன், சிறுவர்களை வைத்தும் வெகுஜனப் படத்தைக் கொடுக்க
முடியும் என்று நிரூபித்தார். இப்படத்தின் வெற்றி பற்றித் தயாரிப்பாளர்
லிங்குசாமி சொன்னது இது: எம்.ஜி.ஆர்., ரஜினி படங்களின் சூத்திரத்தில்
சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம். எனவே வெற்றி சாத்தியமானது. ஒரு
தரமான படத்திற்கான அனைத்து விஷயங்களும் இணைந்து இருந்ததால், பெரிய வெற்றி
கிடைத்தது.
குக்கூ:
படம் வெளிவரும் முன்பே பாடல்கள் வெற்றி அடைந்ததால் ஓர் எதிர்பார்ப்பு
உருவானது. சொன்ன விதத்தில் மாறுபட்டிருந்ததால் வசூல் வெற்றியடைந்தது.
“அழுத்தமான திரைக்கதையாலும், ஒரு நல்ல காதல் கதையுடன், சமகால வாழ்க்கையின்
பிரச்சினைகளை அங்கதத்துடன் சொன்ன விதத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தது.
காதலர்கள் பார்வை அற்றவர்கள் என்ற புதுமை, நகைச்சுவையும் உணர்ச்சி
பெருக்கும் கொண்ட திரைக்கதை ஆகியவற்றால் கவர்ந்தது” என இப்படத்தின்
தயாரிப்பாளர் சண்முகம் குறிப்பிட்டிருக்கிறார்.
முண்டாசுப்பட்டி:
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி பற்றி அதன்
தயாரிப்பாளர் சி.வி. குமார் சொல்வதைக் கேளுங்கள்: “எங்கள் நிறுவனம்
புத்திசாலித்தனமான பார்வையாளர்களைக் குறிவைத்து மட்டுமே படங்களை எடுக்கிறது
என்ற எண்ணத்தை உடைக்க எடுத்த ஒரு வெகுஜனப் படம். இப்படத்தை வெகுஜன மக்கள்
ரசிப்பார்கள் என்று எடுத்தோம். முயற்சியில் வெற்றி கண்டோம்”.
தெகிடி:
மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட புத்திசாலித்தனமான படம்.
வெளிவரும் முன்பே தயாரிப்பாளருக்கு வியாபார வெற்றியைத் தந்த படம்.
“பரபரப்பான புலனாய்வுப் படங்கள் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேலானதால்,
புத்திசாலித்தனமான புலனாய்வுப் படத்தை நகரப் பார்வையாளர்களைக் குறி வைத்து,
சிறு பட்ஜெட்டில் எடுத்தோம். படம் நகரம் மட்டுமில்லாமல், சிறு
நகரங்களிலும் வெற்றி கண்டது” என்று இதன் தயாரிப்பாளர் சி.வி. குமார்
சொல்கிறார்.
ஆறு படங்கள் சொல்லும் ஆறு செய்திகள்
1. படத்தில் ஏதேனும் ஒரு புதுமை இருக்க வேண்டியது அவசியம். மேலே சொன்ன ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமை இருந்தது.
2. ஆகிவந்த சூத்திரங்களை உடைத்துப் படம் எடுப்பதும் ஒரு சூத்திரம்தான்.
இளைஞர்கள் மட்டுமே அரங்குக்கு வருவதால், அவர்களைக் குறிவைத்து
எடுத்தால்தான் படம் ஓடும் என்பதை மஞ்சப்பை உடைத்தது.
3. படம் வெளிவரும் முன் ஒரு மேஜிக் எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். இந்த
மேஜிக் பாடல்கள் அல்லது முன்னோட்டம், படத்தின் மையக்கருத்து அல்லது
புதுமையான விளம்பரம் என ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட வேண்டும்.
4. வெளிவரும் முன் மேஜிக் ஏற்படுத்த முடியாமல் போனாலும், படத்தில் மேஜிக்
இருந்தால், படத்தைப் பற்றிப் பார்வையாளர்களின் நல்ல வார்த்தைகளே படத்தை
வெற்றி பெறச் செய்யும். யாமிருக்க பயமே இதற்கு உதாரணம்.
5. படத்தின் வெளியீட்டுத் தேதி வெற்றிக்குப் பலம் சேர்க்கிறது. சரியான
தேதியில் வந்த படங்கள் (அதாவது ஒரு நல்ல இடைவெளியில்), வெளியான சில
நாட்களில் / இரண்டாவது வாரம்கூட வேகம் எடுத்து ஓடியுள்ளன.
6. இந்த ஆறு படங்களும், சரியான பட்ஜெட்டில், தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த
தயாரிப்பாளர்களால் எடுக்கப்பட்டு, சரியான முறையில் வெளியிடப்பட்டவை. எனவே
அவற்றின் வணிக வெற்றி எளிதானது. தயாரிப்பில் அனுபவம் மற்றும்
கட்டுப்பாடுகள் இப்படங்களின் வெற்றிக்கு உதவின.
2014 வருடம் முடிய மீதம் உள்ள ஆறு மாதங்களில், அதிகப் படங்களை விட, அதிக
வெற்றிப் படங்கள் வர வேண்டும் என்பதே தமிழ் சினிமாவில் இருக்கும் அனைவரின்
எதிர்பார்ப்பு.
நன்றி - த இந்து
தொடர்புக்கு: [email protected]
0 comments:
Post a Comment