எல்லாம் முடிந்துவிட்டது. வீடு கழுவப்பட்டு காரியம் முடித்து கறி சமைத்து சாப்பிட்டு, ஒரு ஆத்மாவின் முடிவு அறிவிக்கப் பட்டுவிட்டது. கௌசிக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. ஹரி ஏன் இப்படி? புரியவில்லை. உறவுகளெல்லாம் புறப்பட்டு விட்டது அம்மா மட்டும் உடனிருப்பதாக முடிவு செய்யப்பட்டது. தம்பி தன் மனைவியுடன் கிளம்பியவன் அருகில் வந்தான்.
“அக்கா கவலைப்படாதே, நாங்கள்லாம் இருக்கோம், உன்னையும், கார்த்தியையும் நல்ல பார்த்துக்குவோம். ஆனா, மாமா உங்களை பார்த்துகிட்டா மாதிரி, எங்க யாராலயும் பார்த்துக்க முடியாதுக்கா’ ஓ வென அழுதான்.
கௌசிக்கு சிரிப்பு வந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. அழுது கொண்டே சிரித்தாள்.
தம்பி கிளம்பிவிட்டான். இரவு கதவடைத்து மகனும், அவளும் பெட்ரூமில் படுத்துக் கொள்ள, அம்மா ஹாலில் படுத்துக் கொண்டாள்.
பதினைந்து வயது கார்த்தி அம்மாவின் மீது கை போட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான். கௌசிக்கு எதுவுமே புரியவில்லை. ஹரி ஏன் இப்படி?
சாவதற்கு ஒரு நாள் முன்பு கூட, “கௌசி, நீ இல்லாமல் என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுடி’ என்றானே. எப்படி முடிந்தது? எப்படி வார்த்தை தவறினான்?
காலையில் காபி போட்டு விட்டுத்தான் எழுப்புவான். வீட்டில் இருப்பவள்தானே என்ற அலட்சியம் கிடையாது. சம உரிமையோடு நடத்துவான். பார்க்கும் எல்லோருமே அவளைப் பார்த்து, ஊஹூம், அவர்களைப் பார்த்து பொறாமைப்படுவார்கள்.
அவளை யாரிடம் அறிமுகப் படுத்தும்போதும் அவளுடைய கல்வித் தகுதியோடு அறிமுகப்படுத்துவான். அவளைப் பற்றி பெருமையாகவே பேசுவான். மளிகைச் சாமான முதல் தோசை மாவு வாங்குவது வரை அனைத்துமே அவன்தான் செய்வான்.
இனி என்ன செய்யப் போகிறேன். காலை எழுந்ததும் காபி போட பால் வாங்க வேண்டும். இரண்டு மாடி இறங்கிச் செல்ல வேண்டும். இருக்கிற மளிகைச் சாமான் இரண்டு மாதத்திற்கு வரும். பிறகு…. மளிகைக் கடைக்குப் போக வேண்டுமே, எங்கே?
வெளியில் செல்லும்போது, “இந்த புடவை கட்டுடி, அழகாக இருக்கும்’ என்று சொல்ல ஹரி இல்லையே? எதைக் கட்டுவேன்? எது எனக்கு நன்றாக இருக்கும்? தெரியவில்லையே?
தலையே சுற்றியது. என்ன செய்யப் போகிறேன்? எழுந்து உட்கார்ந்தாள். ஏ.சி.யின் உறுமலைத் தவிர வேறெந்த சத்தமுமில்லை. கார்த்தி விழித்துப் புரண்டான். இவனை எப்படி வழி நடத்தப் போகிறேன். அவரளவுக்கு எனக்கு என்ன தெரியும்? ஒரு நல்ல முடிவெடுக்கத் தெரியுமா?
கார்த்தி விழித்து எழுந்து பாத்ரூம் சென்று வந்தான். கட்டிலில் அமர்ந்தான்.
“என்னம்மா’ என்றான்.
அவ்வளவுதான். கொளசி ஓ வென்று அழுதாள். “நாம என்ன செய்ய போகிறோம் கார்த்தி. எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. கரண்ட் பில் கட்ட, வீட்டு வரி கட்ட, என்ன? எங்க? எப்படின்னு ஒண்ணு கூட தெரியாதேப்பா. எல்லாமே அப்பாவே பாத்து, பாத்து செஞ்சு நாம கஷ்டப்படாமே பழகிட்டமே, இனி என்ன செய்யப் போறோம். ஒண்ணுமே புரியலைப்பா’ என்று அழுதாள்.
கார்த்தி அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னம்மா தெரியாது உனக்கு? அப்பா பாத்து, பாத்து ’ செஞ்சாருன்னு சொல்றியே, ஏம்மா நீ கத்துக்கலை? உனக்கென்ன படிப்பறிவு கம்மியா? இல்லம்மா, அப்பா உன்னை சுகமா வச்சுக்கிற மாதிரி அடிமையா வச்சுக்கிட்டார். அது தெரிஞ்சும், எல்லோரும் உன்னை பொறாமைப்பட்டதை பார்த்த சந்தோஷத்துல நீ அதை ஏத்துக்கிட்ட இது தான் உண்மை.
நல்லா யோசிச்சு பாரும்மா, என்னிக்காவது ஒரு நாள் உன்னோட இஷ்டத்துக்கு சாப்பாடு செஞ்சிருப்பியா? நாம நம்ம இஷ்டத்துக்கு சாப்பிடிருப்போமா? டிரெஸ் பண்ணியிருப்போமா? இவ்வாளவு ஏன் நாம குடிக்க வேண்டியது காபியா? டீயா? ன்னு நாமளா டிசைட் பண்ணினோம்? இல்லையேம்மா…
இனி÷ ம நீ ப்ரீயா இரும்மா. அழுது, அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காதம்மா/ வேலைக்கு போறதுன்னா போ, வேணாம். அப்பாவோட பென்ஷன் போதும்னு நினைச்சா, வீட்டுல இரு. கதைப் புத்தகம் படி. உனக்கு பிடிச்ச சேனல் பாரு. உன்னோடஇஷ்டப்படி இரும்மா. எல்லாமே உன்னால முடியும்மா. நான் இருக்கேம்மா. உனக்கு துணைக்கு நிம்மதியா படுத்து தூங்கும்மா. குட்நைட் முடித்து விட்டு படுத்து விட்டான்.
கௌசி யோசித்தாள். அவன் சொன்னது அத்தனையுமே நிஜம் தான். அவளுக்கு பிடித்த இஞ்சி டீ குடித்து வருடம் பதினாறாயிற்று. திருமணத்தின்போது அவளுக்கு பிடித்த லெவண்டர் நிறத்தில் வாங்கிய சுடிதார்,. புதுக்கருக்கு மாறாமல் பீரோவில் தூங்கியது. பிறந்த வீட்டிற்கு கார்த்தியை பிரசவித்தபோது, பின் தம்பியின் திருமணம் என்று இரண்டே முறை தான் சென்றாள். போய் பத்து நாள் தங்கியது கூட இல்லை. நிஜம் தான். பின் என்ன நான் சந்தோஷமாய் வாழ்தேன். பிறர் பொறாமைப்பட என்ன இருக்கிறது? முழுக்க. முழுக்க அடிமையாய் மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். சத்தமில்லாமல் சிரித்து கொண்டே அடிமையாய் நடத்தியிருக்கிறான். தெளிந்தாள், கண்மூடித் தூங்கினாள். காலையில் விழித்தபோது மணி ஏழு. பக்கத்தில் கார்த்தி இல்லை ஸ்டடி டேபிள்சேரில் படித்துகொண்டிருந்தான்.
அவள் கண்களுக்கு பிரணவத்துக்கு பொருளுரைத்த கந்தனாய்த் தெரிந்தான். வேகமாக எழுந்து பாத்ரூம் சென்று, முகம் கழுவி அடுக்களைக்கு சென்றாள். பால் இருந்தது. ஒரு நிமிடம் யோசித்தாள். வெளியே வந்து கார்த்தி, காபியா? டீயா என்றாள்.
புன்சிரிப்போடு பார்த்த மகன் சொன்னான்.
இஞ்சி டீம்மா.
- மே 2013
thanx - kumutham, sirukadhaikal.com
0 comments:
Post a Comment