ஒங்க கையை இப்படி என் கை பக்கத்திலே வைங்கோ!” புது மனைவியின் விளையாட்டு வேடிக்கையாக இருந்தது மணிக்கு.
அவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல் அடுத்து வந்தது தாராவிடமிருந்து. “நம்ப ரெண்டு பேரில யாரு கறுப்பு, சொல்லுங்கோ!”
தயக்கமும் அவமானமும் போட்டிபோட, ஒரு முறை அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, பின் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டபடி, “நீதான்!” என்றான். குரலே எழும்பவில்லை.
அப்போது அவள் முகத்தில் தோன்றி மறைந்த பிரகாசத்தைக் கவனிக்கும் மனநிலை அவனை விட்டு விலகியிருந்தது.
தாரா! அறிவு கூர்மையைக் காட்டும் அந்த அகன்ற விழிகள், ஓட்டப் பந்தயக்காரிபோல் இடுப்புக்கு மேல் குட்டையாக, ஆனால் மிக நீண்டிருந்த கால்களும் அமைந்த மெல்லிய உருவம், எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டு கல்லூரிப் பட்டங்கள்! இவளைக் கல்யாணம் செய்துகொண்டது தன் பாக்கியம் என்று இறுமாந்திருந்தானே! அது முட்டாள்தனமோ?
“ஒங்களுக்கு முன்னாடி ஆறுபேர் என்னைப் பொண்பாத்துட்டுப் போனா!” யதேச்சையாக அவள் தெரிவித்தபோது, மணிக்கு ஆச்சரியமாக இருந்தது. “பொண்ணு `கறுப்பு’ன்னுட்டா. வந்தவன்ல எவனும் அப்படி எலுமிச்சம்பழக் கலரில்ல!”
மறுநாளும், இருவரின் கரங்களையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்தபோது, தன்னைத் தலைகுனிய வைக்கத்தான் அப்படிச் செய்கிறாள் என்பது சந்தேகமறப் புரிந்து போயிற்று மணிக்கு. பள்ளிப்பிராயத்தில், வகுப்பில் ஒரே பெயருடன் மூன்று பேர் இருக்க, இவனை `கறுப்பு மணி’ என்று நண்பர்கள் அழைத்தபோது வராத வருத்தம் இப்போது வந்தது.
`நீங்கள் எந்த விதத்திலும் எனக்கு ஈடு இல்லை!’ என்று எப்படிச் சொல்லாமல் சொல்கிறாள்!
“என்னடா, புது மாப்பிள்ளே! கல்யாணமாகி மூணு மாசம்தான் ஆகுது. தினமும் ஓவர்டைம் செய்யறியே! என்ன சமாசாரம்? தாக்குப் பிடிக்க முடியலியா?” என்று கேலி செய்த நண்பர்களின்மேல் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டான்.
கண்ணாடிமுன் நின்றிருந்த தாரா சற்று தாராளமாகவே ஃபேர் அண்டு லவ்லியை முகத்திலும் கழுத்திலும் பூசிக்கொண்டாள்.
என்னதான் ஒரு பெண் படித்து, பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும், சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் மதிப்பு என்னவோ, `இன்னாருடைய மனைவி’ என்பதில்தான் இருக்கிறது.
தான் கறுப்போ, குட்டையோ, படிக்காதவனோ, தனக்கு வரும் மனைவி மட்டும் அழகுபிம்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எல்லா ஆண்களின்மேலும் கோபம் பொங்கியது.
நல்லவேளை, மணி அவளை அப்படி ஒதுக்கவில்லை.
நன்றி சுரந்தபோதே, அதனுடன் சேர்ந்து பயமும் கிளர்ந்தது.
இப்போதெல்லாம் தாமதமாகவே வீடு திரும்புகிறாரே, ஏன்?
`உனக்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? போயும் போயும், இந்தக் கறுப்பிதானா உனக்கு வாய்த்தாள்!’ என்று நண்பர்கள் கேலி செய்திருப்பார்களோ?
சிவப்பாக இருக்கும் வேறு எவளையாவது பார்த்து மயங்கிவிட்டாரா?
அவளது மனப்போராட்டத்தை அறியாது, இரவு பதினோருமணிக்குமேல் வீடு வந்து சேர்ந்த மணி, முன் ஹாலிலேயே அமர்ந்திருந்தவளைப் பார்த்து “நீ இன்னுமா தூங்கலே? டி.விகூட போட்டுக்காம, என்ன பண்றே?” என்று அதிசயித்தான்.
அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள் தாரா.
“என்னை விட்டுட்டுப் போயிட மாட்டேளே? நீங்க இன்னொருத்திகிட்ட போயிட்டா, நான் நெஞ்சு வெடிச்சு செத்தே போயிடுவேன்!”
`இது என்னடா புது குழப்பம்!’ மலைத்து நின்றான் மணி.
அவள் மேலும் பெரிதாக அழ, அதற்கு மேலும் தாங்காது, அவளருகே சென்று அமர்ந்துகொண்டு, ஆதரவுடன் அணைத்தான்.
“அசடு! அசடு! எனக்கு அந்தமாதிரி யோசனையே கிடையாது!” செல்லமாகத் திட்டினான்.
அவள் சமாதானமடையாது, அவனையே பார்த்தாள், கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக்கூட பிரக்ஞை இழந்தவளாக.
“காலேஜில ரொம்ப வேலையா? அதான் குழம்பிப் போயிருக்கே! நிம்மதியா படுத்துண்டு தூங்கு, வா!” இடுப்பில் கைபோட்டு, மெல்ல உள்ளே நடத்திச் சென்றான்.
களைப்பும் பயமும் சேர, அவனை இறுகக் கட்டியபடி அவள் உடனே தூங்கிவிட, அவன்தான் விட்டத்தைப் பார்த்தபடி வெகுநேரம் விழித்திருந்தான்.
தாமதமாக வீடு போய்ச் சேர்ந்தால், தாரா மறுபடியும் அழுது அமர்க்களப்படுத்திவிடப் போகிறாளே என்று பயந்து, மறுநாள் மாலை ஐந்து மணிக்கே வீடு திரும்பியிருந்தான் மணி.அவளோ, அவனுக்கும் முன்னாலேயே வந்து, அலங்காரம் செய்துகொண்டு காத்திருந்தாள்.
“எங்கேயாவது பொறப்பட்டுண்டு இருக்கியா?”
“தனியா இல்ல. ஒங்களோடதான்!” கலீரென்று சிரித்தாள்.
என்ன பெண் இவள்! எதற்கு அழுகிறாள், எதற்கு சிரிக்கிறாள் என்பதே புரியவில்லையே!
போகும் வழியில், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். “ஒங்கமேல கோவம் எனக்கு!”
கலவரத்துடன் அவளை நோக்கித் திரும்பினான். அவள் கண்களில் சிரிப்பைப் பார்த்ததும்தான் அவனுக்கு உயிர் வந்தது.
“அதிசயமா ஒருநாள் சீக்கிரமா வந்திருக்கேள்! ஏதுடா, நம்பளுக்காக ஒருத்தி காத்துண்டு இருப்பாளே, ஒரு மொழம் மல்லீப்பூ வாங்கிண்டு போவோம்னு தோணித்தா ஒங்களுக்கு?”
ஒரு முழம் பூ!
இந்த அற்ப விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?
நிம்மதியையும் மீறி எரிச்சல் உண்டாயிற்று. ஆழ்ந்து யோசிக்காது, `கல்யாணம்’ என்ற புதைகுழியில் விழுந்துவிட்டோமா?
ஒரு பெண்ணை மணந்து, அவளுடன் இணைந்து வாழுவது ஒரு இனிமையான அனுபவம் என்று பலவாறாகத் தான் கனவு கண்டதென்ன, இப்போது நிதரிசனத்தில் காண்பதென்ன!
படிப்பில், அந்தஸ்தில், நிறத்தில் — எல்லாவிதத்திலும் தான் இவளைவிட மட்டு. ஜாதகம் பொருந்தியிருக்கிறது என்ற ஒரே காரணத்தால், இவளுடைய பெற்றோர்தாம் நெருக்கினார்கள் என்றால், எங்கே போயிற்று என் புத்தி!
`இவளை மணக்க எனக்குத் தகுதி இருக்கிறதா என்று முன்பே யோசிக்காமல் போனேனே!’
கடைத்தெருவுக்குச் செல்லும்வரை மணி வாயே திறக்கவில்லை. அந்தப் பெரிய துணிக்கடைக்குள் நுழையத் துணிவு இல்லாமல், யோசனையுடன் நின்றான்.
“என்ன, இங்கேயே நின்னுட்டேள்? உள்ள போலாம், வாங்கோ!”
“எங்கிட்ட அவ்வளவு பணமில்லியே!” மனக்குழப்பம் முகத்தில் தயக்கத்தையும், குரலில் லேசான கெஞ்சலையும் கொண்டுவந்தது.
“நான்தானே ஒங்களுக்கு வாங்கப்போறேன்! கவலைப்படாம வாங்கோ!” தாரா அவன் கையைப் பிடித்து இழுக்காத குறைதான்.
பக்கத்திலிருந்த ஓரிருவர் அவர்களைத் திரும்பிப் பார்க்க, அளவுக்கு மீறிய சத்தமாக, தன்னை அடக்குவதுபோல் அவள் பேசிவிட்டாளே என்று கூசியவனாய் அவள்பின் நடந்தான் மணி.
அரைமனதாக அவன் தேர்ந்தெடுத்த சட்டையைப் பார்த்து, “ஒங்க கலருக்கு இந்த வெளிர் மஞ்சளில ஷர்ட் போட்டா, கறுப்பு தூக்கலாக் காட்டாது?” என்று முகத்தைச் சுளுக்கினாள்.
கடைக்காரப் பையன் சிரித்தான். மணியின் முகம் சிறுத்துப் போயிற்று. அவளே ஒன்றை எடுத்து, “இது நன்னா இருக்கோன்னோ?” என்று கேட்டபோது, வேறு பக்கம் பார்த்தபடி தலையை ஆட்டிவைத்தான்.
மறுநாள் ஏதோ கருத்தரங்கில் கலந்துகொள்ளவென வெளிநாடு செல்லவிருந்தாள் தாரா. அந்த நினைப்பே சொர்க்கமாக இருந்தது. `அப்பாடா! பூ வாங்கிக்கொண்டு வரவில்லையா, ஸ்வீட் வாங்கவில்லையா என்று யாரும் தொணதொணக்க மாட்டா!’ என்ற நிம்மதி எழுந்தது.
ஒரு வாரம் சென்றது.
பூட்டிய கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்ததும், சூடாக ஒரு பானம் தயாரித்துக்கொண்டு வரவேற்க ஆளில்லாவிட்டால் போகிறது, அதற்காக பேச்சுக்குரல்கூடக் கேட்காமல் — `சே! என்ன வீடு இது’ என்று சலிப்புத் தட்டியது.
யாரோ தன்னை எதற்காகவோ தண்டிக்கிறார்கள் என்று தோன்ற, தினமும் சாயங்காலம் நேராக வீட்டுக்கு வந்து, முகத்தைத் தூக்கிக்கொண்டு உட்கார ஆரம்பித்தான்.
ஒரு நாள், வழக்கம்போல் படுக்காத குறையாக சோபாவில் உட்கார்ந்திருந்தபோது, சுவற்றில் பெரிதாக மாட்டியிருந்த கலர் போட்டோ கண்ணில் பட்டது. மாலையும் கழுத்துமாக அவர்களிருவரும் ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்டது.
அருகில் சென்று, தன் பக்கத்தில் நின்றிருந்தவளைப் பார்த்தான். தாராவின் சொக்க வைக்கும் கண்களில் கவர்ச்சியையும் மீறி, வேறு ஏதோ உணர்ச்சி தென்படுவதுபோல் இருந்தது.
சோகம்?
ஊகும். மற்ற சராசரிப் பெண்களைப்போலவா அவள்? அவளுக்குத்தான் எல்லாமே இருந்ததே!
பயமோ?
பயமாக இருக்கலாம் என்றுதான் தோன்றியது. இன்னும் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். பயமும் சோகமும் கலந்திருப்பதுபோல்தான் பட்டது.
“ஏம்மா?” அவனறியாது, உரக்க வந்தது குரல்.
சட்டென்று புலன் தட்டியது.
`என்னை விட்டுட்டுப் போயிட மாட்டேளே? நீங்க இன்னொருத்திகிட்ட போயிட்டா, நான் நெஞ்சு வெடிச்சு செத்தே போயிடுவேன்!’
அடிக்கடி தன்னிடம் அவள் மன்றாட காரணம் எதுவாக இருக்கும்?
அவளுக்கு ஏன் தன்மேல் அப்படி ஒரு அவநம்பிக்கை? தன்மீது மட்டும்தானா, இல்லை, பொதுவாக எல்லா ஆண்களின்மீதுமா?
யோசிக்க, யோசிக்க குழப்பம்தான் மிஞ்சியது. ஏதாவது புத்தகத்தையாவது புரட்டிப் பார்ப்போம் என்று புத்தக அலமாரியைக் குடைந்தான்.
“ஆண்கள் விரும்பும் பெண்கள் — ஆண்கள் விலக்கும் பெண்கள்”. தலைப்பே சுவையாக இருந்தது.
மனிதன் தன்னைச் சுற்றி நடப்பவைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, அவைகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அறிவைப் பெருக்கிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தன்னைப்பற்றிய உண்மைகளை அறிவதில்தான் அவனுக்கு பயம்! அதுதான் இப்படிப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்கில், பலமொழிகளில் பெயர்க்கப்பட்டு விற்கின்றன என்று நினைத்தபோது, மணிக்கு சிரிப்புதான் வந்தது.
`ஆண் ஒரு தவளையை ஒத்தவன்!’ ஆரம்பமே சுவாரசியமாக இருந்தது. படிப்பில் ஆழ்ந்துபோனான்.
குழந்தைப் பருவத்தில் தாயுடன் ஒன்றாக இருந்துவிட்டு, இரண்டு வயதாகும்போது, தான் அவளிடமிருந்து மாறுபட்டவன், தந்தைக்கும், தனக்கும்தான் ஒற்றுமை இருக்கிறது என்று உணர்கிறான் ஆண்.
இந்த உணர்வு அவனிடம் நிலைத்துப்போக, பெண்ணுடன் இணைவதும், விலகுவதுமாக மாறி மாறி நடந்து கொள்கிறான். பெண்ணுடன் இணைந்தபின், ஆணுக்குத் தனக்கென ஒரு தனிமை, அவளிடமிருந்து தற்காலிகமாக ஒரு விடுதலை, வேண்டியிருக்கிறது. அதனால்தான் தவளைமாதிரி கட்டிலிலிருந்து குதித்து விலகுகிறான். அப்படிச் செய்யாவிட்டால், தனது இயல்பிலேயே ஏதோ குழப்பமெழ, பிற ஆண் நண்பர்களை நாடிப் போகிறான்.
ஆனால், திருமணம் ஆகும்வரை தன் தாயுடன் நெருங்கியிருக்கும் பெண்ணோ, எப்போதும் அதே நெருக்கத்தைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிறாள்.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே இருந்த இந்த அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததால்தான் உறவுகள் பலவீனமடைகின்றன.
மணியின் மனம் தெளிவாகியது. தாராவின் போக்கிற்கான காரணங்கள் புரிவதுபோல் இருந்தது.
பல ஆண்கள், `தங்களுக்கு ஏற்றவளில்லை’ என்று அவளை ஒதுக்கிவிட, தன் வயதை ஒத்தவர்கள் எல்லாம் மணமாகி, பிள்ளைகுட்டி பெற்றுவிட்டார்களே, தான் மட்டும் காலமெல்லாம் துணையின்றியே கழிக்க வேண்டியிருக்குமோ என்ற பயம் அவளை ஆட்டுவித்திருக்கிறது! அந்தப் பயத்தில்தான் தன்னை அப்படி உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாள்!
`கறுப்பு!’ என்று பலர் அவளை வெறுத்து ஒதுக்கியதில், தன்னைப்பற்றியே அவள் மட்டமாக எடைபோட்டிருக்கிறாள்! அடிக்கடி அவர்கள் இருவரது கைகளையும் ஒப்பிட்டு, ஒரு அல்ப சந்தோஷம் அடைந்திருக்கிறாள், பாவம்!
அச்செய்கை தன்னை மட்டம் தட்டுவதற்கில்லை!
தூங்குகையில், இருள் தன்னைப் பயமுறுத்தாமலிருக்க பொம்மையை இறுக அணைத்துக்கொண்டு படுக்கும் குழந்தைக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்! அறிவு தெளிந்து, அனுதாபம் பிறந்தபோதே உள்ளத்தில் ஒரு நெகிழ்வு.
நாளை தாரா வந்துவிடுவாள். அவளிடம் அனுசரணையாக நடக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, தன் அன்பை எப்படி வெளிக்காட்டுவது, ஏதாவது புடவை வாங்கலாமா என்று யோசித்தான்.
`ஐயோ, வேண்டாம்பா! இது என்ன கலர்னு வாங்கிண்டு வந்தேள் என்று சண்டை பிடிப்பாள்!’ அந்த நினைவே ரம்மியமாக இருக்க, வாய்விட்டுச் சிரித்தான் மணி.
(மயில், 3-1-92)
THANX - SIRUKATHAIKAL.COM
0 comments:
Post a Comment