சார்,சார்’
மெல்ல திரும்பிப் பார்த்தேன்.
”இந்த பர்ஸ் உங்களுதா?”
“இல்லை,நான் பர்ஸ் வைத்துக் கொள்வதில்லை”
”நல்லா பாருங்க சார்,உங்களுது இல்லையா”
அவன் கேட்டதும் என்னையும் அறியாமல் மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது.
”என்னுது இல்லைப்பா,தவிர அது ஜெண்ட்ஸ் யூஸ் பண்ற பர்ஸ் மாதிரி இல்லை,லேடீஸ் பர்ஸ் மாதிரி இருக்கு”
”அப்ப உங்க வீட்டுக்காரங்களுதா இருக்குமோ?”
‘டேய் லூசு’என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
ஊட்டிக் குளிரில் மெல்ல வெட வெடத்துக் கொண்டு இருந்த அவன் லூஸு இல்லை என்பது தெளிவாய் தெரிந்தது.
ஊட்டி நகரச் சுற்றுலாவுக்கு அழைத்து வந்த வேன் ஆசாமிகள் இறக்கி விடும்
போதே,”ஊட்டி லேக்,தண்ணி நல்லா இல்லை சார்,போட்டிங் போகணும்ன்னு ஆசைப்
படறவங்க பைக்காரவில போகலாம்,தண்ணி நல்லா இருக்கு,சும்மா சுற்றிப்
பார்க்கறவங்க.வேடிக்கைப் பார்க்கறவங்க பார்த்துட்டு வாங்க,வேன் சரியாய்
இருபது நிமிஷம் நிக்கும்,வண்டி நம்பரைப் பார்த்துக்கங்க,நவீன்
ட்ராவல்ஸ்”என்று சொல்லிய படியே இறக்கி விட்டார்.
வேனில் வந்திருந்த காதல் ஜோடிகள்,புது மணத் தம்பதிகள்,சில முதியவர்கள் எல்லோரும் இறங்க நான் கடைசியில் இறங்கினேன்.
பஞ்சு மிட்டாய்,கேரட் வியாபாரிகளை கடந்து போது தான் அவன் வந்து கேட்டான்.
நான் தெளிவாய் அவனிடம் சொன்னேன்.
அவன் நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பர்ஸை என் கையில் திணித்து விட்டு ஒட்டம் பிடித்தான்.
லேக் முன்புறம் டூரிஸ்ட் வாகனங்கள் இந்த ஆஃப் சீசனிலும் குவிந்து இருந்தன.
அவன் என் கையில் திணித்த பர்சை திறந்தேன்.
உள்ளே அவளின் படம் இருந்தது.
எனக்கு கொஞ்சம் ‘திக்’கென்று இருந்தது.
நான் இத்தனை வருடங்கள் கழித்து இதைப் பார்ப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
பர்ஸில் இருந்த புகைப் படத்திலிருந்தது பத்து வருடங்கள் முன் ரசிகர்களின் தூக்கத்தை சிதற அடித்த கனவுக் கன்னி சுமா.
உள்ளே ஒரு மருந்து சீட்டு இருந்தது.
அதில் அவள் பெயர்தான்.
சிபா ஜி.மற்றும் சில மருந்துகள்.
நான் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன்.
நான் வந்த வேன் கிளம்புவதற்கு தயாராகி விட்டது.
கைடு அங்கிருந்து என்னைப் பார்த்து விட்டான்.
அங்கிருந்து கையசைத்து என்னை அழைத்தான்.
நான் ‘போங்கள்’என்று கையசைத்து காட்டினேன்.
அவன் ‘வரலையா?’என்பது போல் கையை ஆட்டிக் கேட்டான்.
நான் மீண்டும் கையை ஆட்ட அவன் கதவை மூடிக் கொண்டு சென்றான்.
வண்டி நகர்ந்தது.
அவன் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான்.
ஒட்டல்களில் பிக்கப் முடித்து முதல் இடம் வந்ததுமே ஒர் பார்ட்டி வழியில்
இறங்கி விடும் என்று அவன் கொஞ்சமும் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டான்.
”போட்டோ எடுக்கறீங்களா சார்?’
நான் குரல் கேட்டு திரும்பினேன்.
”போட்டோ சார் போட்டோ,நீங்க போட்ல இருக்கறா மாதிரி,ஏழு நிமிஷத்துல
தந்துடுவேன்,ஜஸ்ட் நாற்பது ரூபாய்”என்றவன் அப்பொழுதுதான் என் கையில் இருந்த
பர்ஸைப் பார்த்தான்.
”இது…என்..எப்படி உங்க கையிலே”பேசிக் கொண்டே தன் பேண்டின் பின் பக்க பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
நான் விவரத்தை சொன்னேன்.
”என்னோட பர்ஸ்தான்”அவன் திறந்து உள்ளேப் பார்த்தான்.
“பணத்தை எடுத்துட்டுப் போயிட்டாங்க,நல்ல வேளை மருந்து சீட்டை தூக்கிப் போடாம இருந்தானே?”
”யாருக்குப்பா மருந்து?”நான் கேட்டதும் என்னை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தான்.
”இப்ப எங்க இருக்காங்க?”
”தலைகுந்தாவில சின்ன வீடு எடுத்திருக்கோம்,இவங்களை உங்களுக்குத் தெரியுமா?”
”தெரியும்,நான் அவங்களைப் பார்க்கணும்”
”அங்க அவங்க முன்னாள் நடிகைன்னே யாருக்கும் தெரியாது,அப்படித் தான்
தெரியாமத்தான் ஒரு மறைவு வாழ்க்கை,தன்னோட பழைய வாழ்க்கையில இருந்தவங்களை
சம்பந்தப் பட்டவங்களை யாரையும் அவங்க சந்திக்க விரும்பலை,போன மாசம் அவங்க
இங்க வந்த ஒரு பழைய கன்னட நடிகர் எப்படியோ தேடிப் பிடிச்சிட்டு
வந்துட்டாரு,உள்ளே அனுமதிக்கலை,வாசலோட திருப்பி அனுப்பிட்டாங்க,பேசக் கூட
இல்லை”
”நான் வர்றேன்,நிச்சயம் பார்ப்பாங்க,முதன் முதல்ல அவங்களுக்கு ஸ்கீரீன் டெஸ்டுக்கு போட்டோ எடுத்தது நான் தான்.”
”ஸ்டில்ஸ் சிவா?’
”ஆமாம்”
”அவன் கண்களில் ஒரு மின்னல் அடித்தது.
”அவங்க இப்ப எல்லாம் பேசறதே இல்லை,ஆனா எப்ப வாயைத் திறந்தாலும் உங்களைப்
பத்தி பேசாம இருக்க மாட்டாங்க,தான் சாகறத்துக்குள்ளே உங்களை ஒரு தடவை
பார்த்துடணும்ன்னு சொல்லிட்டே இருப்பாங்க”
”இப்ப போகலாமா?”
”கொஞ்சம் வெயிட் பண்ணுங்க,ஒரு இரு நூறு ரூபாய்க்கு போட்டோ எடுத்துட்டு வந்துடறேன்?”
”அது என்னப்பா இரு நூறு ரூபாய் கணக்கு?”
“ஒரு வாரத்துக்கு அம்மாக்கு மாத்திரை வாங்கணும்,கொஞ்சம் பணம் கொண்டு
வந்தேன்,திரும்பிப் போகும் போது வாங்கிக்கலாம்ன்னு பார்த்தேன்,அதுக்குள்ள
எவனோ பர்ஸை அடிச்சிட்டான்.”
”தம்பி நீ தப்பா நினைக்கலைன்னா நானே அந்தப் பணத்தை தர்றேன்”
அவன் சடுதியில் மறுத்தான்.
”ஒரு போட்டோ எடுக்க எவ்வளவு?”
”நாற்பத்து ஐந்து ரூபாய்?”
”ஓ.கே என்னை இந்த போட் ஏரி பின்னணியிலே பத்து போட்டோ எடுங்க”
இடம் இடமாய் இழுத்துச் சென்று போட்டோ எடுத்தான்.
எடுத்த பத்தாவது நிமிடம் என் கைகளில் ப்ரிண்டை திணித்தான்.
நானூறு ரூபாயை எடுத்து தந்து,”இப்பொழுது போகலாமா?”என்று கேட்டேன்.
”ம்”என்று சிரித்தபடியே சொன்னவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பிரிண்டர்,பேக் அப் எல்லாம் எடுத்துக் கொண்டான்.
”போகலாமா சார்?”
”ம்”என்றேன்.
அவன் பழைய ராஜ்தூத் ஒன்று வைத்து இருந்தான்.
அதன் பின்னால் தொற்றிக் கொண்டேன்.
என் நினைவுகள் பின்னோக்கி பறந்தன.
முதல் போட்டோ ஷூட் ஸ்கீரின் டெஸ்ட் எடுத்து ஃபோட்டோக்களை கழுவிய உடனேயே
தெரிந்து விட்டது.அடுத்த பத்து வருடங்களுக்கு இவள்தான் தமிழர்களின்
நெஞ்சத்தை உலுக்கப் போகும் கதா நாயகி என்று.
முதல் படமே சில்வர் ஜூப்ளி.ரசிகர்கள் பைத்தியம் பிடித்தார் போல் திரும்ப
திரும்ப அவள் படத்தைப் பார்த்தார்கள்.தொடர்ந்து அத்தனை படங்களும் சூப்பர்
டூப்பர் ஹிட்.
அவள் பிடிவாதமாக என்னை அவள் படங்களுக்கு எல்லாம் ஸ்டில் போட்டோ கிராபராக
பணி புரிய வைத்தாள்.நன்றாகப் போய் கொண்டிருந்த நேரத்தில் தான் அவளுக்கு
எனக்கும் பற்றிக் கொண்டது காதல்.அவள் என்னுடன் வாழ ஆசைப் பட்டாள்.இரண்டு
பேரும் சேர்ந்தே வாழ்ந்தோம்.இந்த நேர்த்தில் தான் அவளை ஒரு டைரக்டர் கதை
சொல்கிறேன் பேர்வழி என்று சந்தித்து கதையை சொல்லி அவளுக்குள் தயாரிப்பாளர்
ஆசையை விதைத்து விட்டான்.
அவன் போனதும் அவள் என்னிடம்,”நல்ல கதை,இந்தப் படத்தை நாமே செய்யலாமே”என்றாள்.
ஆசை யாரை விட்டது.
படம் பூஜை மறு நாளே ஒரு பிரபல தினசரி சுமா இனி வெளிப் படங்களில் நடிக்க
மாட்டாரம் என்று ஒரு கிசு கிசு வெளியிட்டது.நான் அவளிடம் மறுப்பு வாங்கி
வெளியிடச் சொல்லி விட்டு ஒரு காயை நகர்த்தினேன்.
”சுமா நீ இதில் நடிக்க வேண்டாம்,நல்ல கதை யார் நடித்தாலும்
ஓடும்,கதாநாயகியை மையமாக கொண்ட கதை,இப்பொழுது உனக்கு போட்டியாக இருக்கும்
சுஜாவை நாயகியாக போட்டுப் படத்தினை எடுக்கலாம்”என்றேன்.
”ஏன்?”என்றாள்.
”நீ மற்ற படங்களில் உன் கவனத்தை செலுத்து,அவள் பெயருக்கும் படம்
விற்கும்,உன்னுடைய இந்த முடிவை பெருந்தன்மை என்று சொல்வார்கள்,அதுவே நல்ல
பப்ளிசிட்டி,தனக்கு வந்த நல்ல பாத்திரத்தை எதிரிக்கு கொடுத்தாளே என்று
பாராட்டுவார்கள்”என்றேன்.
‘ம்’என் தலையாட்டினாள்.
படம் ஆரம்பித்ததும் நான் பாதி நாட்கள் அவுட்டோரிலேயே.
சுஜா என்னிடம் அட்டைப் போல் ஒட்டிக் கொண்டாள்.
அவுட்டோரில் எனக்கு எதிர் அறை பக்கத்து அறை என்று தங்கியவள் பாதி
டாக்கிப் போர்ஷன் முடியும் முன்னேயே என் அறையில் தங்க ஆரம்பித்தாள்.தீ
பற்றிக் கொண்டு எரிந்து புகை பத்திரிகை அலுவுலகங்களில் தெரிய ஆரம்பித்தது.
அங்கே இங்கே ஓரிரெண்டு இடத்தில் கிசுகிசுக்கள் வர முதலில் கவலைப் படாத
சுமா சுஜா படம் முடியும் போது “நானும் சிவாவும் திருமணம் செய்து கொள்ளப்
போகிறோம்”என்று அறிக்கை விட்டாள்.நான் ஆடிப் போனேன்.அவள் சாமார்த்தியமாக
என்னுடன் இருந்த புகைப் படங்களை தன்னிடம் வைத்து இருந்தாள்.நான் அவளை பிரஸ்
மீட்டில் அறைய பத்திரிகைகள் இரண்டு மாதம் பொழைப்பை நடத்தின.
சுமாவுடன் ஆன ஐந்து வருட வாழ்க்கை முடிந்தது.சுமாவுடன் மோதியதில் பாடல் காட்சிகள்,க்ளைமாக்ஸ் அனைத்திற்கும் வர மறுத்தாள்.
சுருக்கமாக சொல்லப் போனால் சம்பாத்தித்த அனைத்தையும் இழந்த சுமா
கடைசியில் பெரிய சொந்த வீட்டையும் ஃபைனான்சியருக்கு அழ வேண்டி வந்தது.
அன்று இரவு -
வீடு திரும்பிய எனக்கு வீட்டு வாசலில் கிடந்த என் பெட்டி கிடந்தது.
பனி கொட்டிய அந்த இரவில் நான் செய்வதறியாது ரோட்டில் நின்றேன்.
நான் செய்த பெரிய தவறு என்னை ஒருவள் நேசித்து தன்னை பூரணமாக ஒப்படைத்தப் பின் இன்னொருத்தி பின்னால் ஓடியது.
பல முறை அவளை வெளியில் சந்திக்கப்போன போதெல்லாம் அவள் பார்க்க மறுத்து விட்டாள்.
பின் ஒரு நாள் அவள் சூட்டிங்கில் மயங்கி விழுந்ததையும் அவள் கர்ப்பமாய்
இருப்பதையும் மேக்கப் பெண்மணி மூலம் அறிந்தேன்.சரியாய் அந்த செய்தி
பத்திரிக்கையில் வந்த நாலாம் நாள் அவள் காணாமல் போனாள்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அதன் பின் அவள் போட்டோவை தான் இப்பொழுது ஒரு ஃபோட்டோ கிராபர் பர்ஸில் பார்க்கிறேன்.
நான் பழைய விஷயங்களை மனதிற்க்குள் அசைப் போட்ட முடித்த வேளையில்
அவன்,”ரொம்ப நாளா அம்மாவுக்கு சளிப் ப்ராப்ளம்,எக்ஸ் ட்ரீம்
கோல்ட்,டி.பி.முத்தினப் பிறகுதான் மருந்து எடுக்க ஆரம்பிச்சாங்க,நான் ஊட்டி
வேண்டாம்ன்னு எவ்வளவு சொல்லியும் கேட்களை அவங்களோட முதலும் கடைசியுமான
காதலை இந்த ஊர்ல்ல தான் அப்பாகிட்ட சொன்னாங்களாம்,இங்கேயே செத்தாலும்
பராவாயில்லைன்னு சொல்லிட்டாங்க”
”உங்கப்பா..”நான் முடிக்கும் முன்னரே சொன்னான்,”நான் என்ன
வற்புறுத்தியும் அப்பா யார்ன்னு சொல்லவேயில்லை..ஆனா உங்களைப் பத்தி அதிகம்
சொல்வாங்க,உங்களோட போட்டோகிராபித் திறமையைப் பத்தி சொல்வாங்க,என்ன கஷ்டப்
பட்டுதான் இங்க படிக்க வச்சாங்க,ஒரு ஆர்ஃபனேஜ்ல்ல கூட வேலை செஞ்சதா
சொன்னாங்க,யார்கிட்டயும் தான் முன்னாள் நடிகைன்னு சொல்லவேயில்லை”
”இன்னும் எவ்வளவு தூரம்?”
இதோ வந்தாச்சு”என்றவன் ஒரு திருப்பத்தில் பக்கவாட்டி சரிவில் இறங்கினான்.
பனி மூட்டத்திற்க்கு நடுவே சின்னதாய் ஒரு வீடு.மேலே புகைப் போக்கியில் புகை வந்து கொண்டிருந்தது.
வெளியில் பைக்கை நிறுத்தியவன் தன் பையில் இருந்து சாவியை எடுத்தான்.
”ஏம்பா பூட்டி வச்சுட்டா வந்தே?”
”என்ன பண்றது,அவங்க சொல்றதை தானே நான் செய்ய முடியும்”
மெல்ல கதவைத் திறந்தவன்,”அம்மா நான் வந்துட்டேன்”என்று குரல் கொடுத்தான்.
சின்ன ஹால்.படு நீட்டாக இருந்தது.
டேபிள் மேல் கேரட் சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில்.அவளுக்கு கேரட் ரொம்ப பிடிக்கும்.
”இனிமேதான் சமைக்கணுமா?”
”பத்து நிமிஷத்துல சமைச்சுடுவேன்”
”ஒட்டல நம்ம மூணு பேருக்கும் வாங்கிட்டு வந்திருக்கலாமே?”
”அவங்களுக்கு ஓட்டல் புஃட் பிடிக்காது,அவங்க சொல்றதைதானே நான் கேட்க முடியும்”
”அம்மா எங்க இருக்காங்க?”
அறையின் மூலையில் இருந்த படிகளை காட்டினான்.
”கீழே போகுது பாருங்க,கணப்பு அடுப்பு கீழே தான் இருக்கு,போங்க ,உங்களைப்
பார்த்ததும் அவங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாய் இருக்கும்,நான் குக்கர்
வச்சுட்டு வந்துடறேன்”அவன் படியை காண்பித்து விட்டு கிச்சனுக்குள்
நுழைந்தான்.
நான் அவன் டேபிள் மீது வைத்திருந்த மாத்திரைப் பாக்கெட்டை என் கையில் எடுத்துக் கொண்டேன்.
படியில் இறங்கி கீழே போனேன்.
கணப்பைப் பார்த்து அவள் நாற்காலி தான் போல்.தலையில் கொண்டியில் போட்டிருந்த ஊசி தெரிந்தது.
கணப்பு தக தக வென்று எரிந்து கொண்டு இருந்தது.
ஓரமாய் ஒரு கட்டில்.
அதன் பக்கத்தில் ஒரு சின்ன மேஜையில் நானும் அவளும் தொட்டப்பேட்டாவில்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து எடுத்துக் கொண்ட முதல் போட்டோ ஃப்ரேம் செய்து.
பக்கத்தில் நிறைய மாத்திரை கவர்கள்.
எல்லாம் பிரிக்கப் படாமலேயே இருந்தன.
நான் கையில் இருந்த கவரில் பார்மசி பெயர் பார்த்தேன்.
அங்கே இருந்த அத்தனை கவர்களிலும் அதே பெயர்.
நான் திடுக்கிட்டு நாற்காலிக்கு முன்னால் செல்ல அங்கே எலும்புக் கூடு.
மேலே ‘தங்’கென்று சப்தம்.
படியின் மேல் இருந்த கதவு மூடப் படும் சப்தம்.
கொஞ்ச நேரத்தில் ‘டுர்’என்று பழைய ராஜ்தூத் அவள் முதன் முதலில் எனக்கு
வாங்கித் தந்த பைக் ஓடும் சப்தம் கேட்டு நகர்ந்து தொலைவில் மறைந்தது.
- 25.12.2013
நன்றி - சிறுகதைகள்.காம்
0 comments:
Post a Comment