Tuesday, June 17, 2014

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - எஸ்.ஷங்கரநாராயணன் - சமுகநீதி மொழிபெயர்ப்பு

வாடகைக்காரில் இருந்து இறங்கிக் கொண்டேன். லேசாய்த் தூறிக் கொண்டிருந்தது. இரைச்சலுடன் காற்றில் என்னைச் சுற்றி சுழற்றியடிக்கும் மழை. மங்கலான தெரு விளக்குகள். வெளிறி மங்கிய ஆளரவமற்ற வெளியில் ரயில் நிலையத்தின் பெரு நிழல் தலைநீட்டிக் கிடந்தது. தெருவோரத்தில் வரிசையான மரங்கள். அவற்றின் கிளைகள் பெருமூச்சு விட்டபடி குலுங்கி மயிர்க்கால்களாய் ஆடின. திடுதிப்பென்று நான் நினைத்துக் கொண்டேன் ଭ சந்தேகமேயில்லை. இதெல்லாம் என் அவஸ்தையை சகிக்க முடியாத அளவு அதிகப்படுத்தத்தான். இலையுதிர் காலத்தை முன்கூட்டிக் காட்டினாப் போல. அட கண்றாவியே. வயிற்றில் சற்றுமுன் அருந்திய ஒயினின் தொந்தரவு.
நான் நினைக்கிறேன் ଭ ஈரத்திலும் குளிரும் தனித்துக் கிளம்புவதைவிட, அழகான கதகதப்பான நாள் நல்லது. பொழுது சாய கிளம்புகிறதுக்கு, அதிகாலை தேவலை. ஒரு பிரிவையும் இன்னொரு பிரிவையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியுமா? முடியாதுதான். இதோ இப்போது என் பிரிவு இன்னும் முழுசாய் நிகழ்ந்துவிட வில்லைதான். என்றாலும் இப்போதும் நிச்சயமாக நான் நம்புகிறேன், சிரமத்தில் எல்லாம் ஒரே தினுசுதான் ஃபுஷெள நகருக்கு நீராவிப்படகு பன்னிரண்டு மணிக்கு. சந்தடி அடங்க கிளம்புதல் தவிர வேறு வழியில்லை… இலையுதிர் காலம் இப்படி முந்தி வருகிறதும், காற்றின் பாய்ச்சலும், இதைப் போல மழையின் வீச்சும், இந்த வானிலை… எல்லாமே ஆறு நாள் முன்னமே தெரிந்தவைதானே? வெடவெடக்கிற ஈரமான தனித்த பிரிவு என்பது யூகிக்கக் கூடியதே.
>>>
எதையும் எடுத்துப் புரட்டுவதற்கு இல்லை. புத்தகக் குவியல், பாதி எழுதிய காகிதங்கள். மை, பேனாஸ்டாண்டுகள் சீரற்றுக் குவிந்து கிடத்தல்… எல்லாம் அப்படி அப்படியே இயல்புப்படி இருக்கட்டும். கொஞ்சங்கூட எதையும் மாற்றக் கூடாது. எழுந்துகொள் ஆறு மணிக்கு. நாஷ்தா. கொஞ்சம் எழுத்துவேலை. சரியான நேரம் அலுவலகம் கிளம்புதல். மாலை வீடு திரும்புதல். கொஞ்சம் அரட்டை. பிள்ளைங்களுடன் விளையாட்டு… எல்லாமே வழக்கமான நியதிகள்தாம். பிரிதல் பற்றிய அடையாளம் கிஞ்சித்தும் கிடையாது. எதுபற்றியும் ஒரு அவசரமுமில்லை. பிரிவா, வர்றபோது வரட்டும்… என்ற நிலை.
பிங்போ போன வருடம் வெளிநாடு போனது ஞாபகம் வருகிறது. விடுதியில் நாங்கள். பிரிவு என்கிற கத்தி எங்களைத் துண்டாடிக் கத்தரிக்க இன்னும் ஒருமணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது, எங்களுக்குத் தெரியும். என்னுடைய ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு அசைவிலும் எனக்குத் தெரிகிறது, கண்ணுக்குத் தெரியாத கட்டுகள் என்னை இழுக்கின்றன. என்னை, என் முழு உடலை அவை கட்டிப் போடுகின்றன. என் நெஞ்சே சூம்பிவிட்டது. தாளவேமுடியவில்லை. என் நாற்காலியில் பின் சாய்கிறாப் போல அந்தக் கட்டைத் தளர்த்த முயல்கிறேன். ஒரு வாய்த் தேநீர் அருந்துகிறாப் போல என் கைகளை மேல்தூக்கிப் பார்க்கிறேன். என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறேன்… ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாம் சகஜமாய் இருக்கிறாப் போல நளின பாவனைதான். முன்னைவிட அதிகமாக இழுபடவும், கட்டுப்படவும், அமுக்கப்படவும்தான் ஆகிறது. நான் நினைக்கிறேன், பிரிதலின் சூழல் ஏற்கனவே எங்களைச் சுற்றி பிடி போட்டிருக்கிறது. அதை உதற நினைக்கக் கூடாது, அதுதான் தன்னைப்போல உடைந்து நாங்கள் விடுபட வேண்டும்.
இந்தத் தடவை அந்தமாதிரி இறுகிப் போக விடமாட்டேன். அந்த நெஞ்சு பாரம். கட்டுப்படுதல். இழுபடுதல்… எல்லாமும் தவிர்க்கலாம். எனக்கு இப்படி ஒரு ஆசை. பயண நேரம் வரும்போது, நல்ல தூக்கத்தில் இருந்து எழுந்து, நினைவுகள் சுதாரிக்குமுன் புறப்பட்டு விடலாம்… என்றாலும் மனம் விழித்துக் கொள்ளும். தனிக் கப்பலில் தனியொரு பயணி… சுற்றிலும் பெரும் சமுத்திரம். மகாத் தனிமை அது. அதை உதற முடியாது. ஆனால் பிரிதலின் ஆகக் கடினமான கணம் விருட்டென்று கடந்திருக்கும். காக்கா ஓஷ்! நிலைமை மாறி யிருக்கும் அல்லவா?
>>>
இருந்தும் சூழல் இறுகி உறைந்துதான் போனது. வீட்டுக்குள் நுழைகிறேன். புதிதாய்த் துவைத்த, செப்பனிட்டு சீராக்கிய துணிகள், படுக்கை விரிப்புகள், சட்டைகள், சாராய்கள், மேலங்கிகள்… எல்லாம் மேஜையில் குவிந்து கிடக்கின்றன. இதில் கேட்க ஏதுமில்லை ଭ இவையே என் பயணத் துணைகள். ‘எல்லாமே முன்னாடி முடிவு பண்ணின சமாச்சாரம்தானே? முன்கூட்டியே எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? ஏன் கடைசிப் பொழுதுக்கு என்று இத்தனை வேலைகளை வைத்திருக்க வேண்டும்?’ கொஞ்சம் சங்கடத்துடன் இப்படி நினைத்துக் கொள்கிறேன்… எல்லாமே முன்தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள்தாம், இவற்றையெல்லாம் கூடக் கொண்டு போகிறேன்தான், எப்போதோ நான் கிளம்பத் தயாராக இருந்திருக்கலாம்… சரிதான். ஆனால் இப்படித் தள்ளிப் போட்டதற்கு என்னை எப்படிக் குறை சொல்லக் கூடும். முடிந்தவரை பயணத்தை அதன் வழிப்பட்ட பிரிவைத் தள்ளிப் போட, அந்த நினைப்புகளைத் தள்ளிப் போட நான் நினைக்கிறேன், என்பதில், என்னைக் குறைகாட்ட அல்ல, நல்ல விஷயமாகவே அதைச் சொல்ல வேண்டும்.
இருந்தும் அந்தச் சூழல், அதை விட்டு நான் வெளி வருகிறேன். போன வருடம் விடுதியில் நான் அனுபவித்தேனே அதே திணறல் தாக்குகிறது. ஆ அப்போதைய அடர்த்தி இப்போது இல்லை! மெல்ல மெல்ல இதுவும் இறுகும்… மேற்கு ஊரணியின் மாலைப் பனி போல. என்மேல் பெரும் சுமையாய் இறங்கும். என்னைத் துளையிடும். ஆளைக் குப்புறத் தள்ளி ஏறியமரும். சகஜமாய்க் கிளம்ப விடாமல் படுத்தும்…
வழக்கம்போல நான் வார்த்தையாடுகிறேன். எழுதுகிறேன். சாப்பிடுகிறேன். பிரம்பு நாற்காலியில் சாய்கிறேன். என்றாலும் எல்லாமே கொஞ்சம் மாறினாப் போல, கொஞ்சம் செயற்கையாய்…
>>>
இராத்திரி ஒரு கனவு. ரயில் நிலையத்தின் பிளாட்பாரம். மின்னல் போல வருகிறது ரயில். சட்டென்று என் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொள்கிறேன். துள்ளி நான் ஏறிக்கொள்ள துரிதமாய்க் கிளம்புகிறது ரயில். ஆ எதையோ பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிறேனா? சரிபார்த்தால்… சாமான்களை அல்ல… ஆ மனுசாளை விட்டுவிட்டுக் கிளம்பிவிட்டேன்! விநோதமான விஷயம். அவர்களுக்கு ஒரு ‘போய்வருகிறேன்’ முகமன் கூட நான் தெரிவிக்கவில்லை. கை கொடுக்கவும் இல்லை. மாத்திரமல்ல, ரயில் ஏறுகிற தக்கணத்தில், ஆ நான் அவர்களை மறந்தே போனேன்! ச், வருத்தமாய் இருக்கிறது. எதுவுமே பேசாமல், கை குலுக்கிக் கொள்ளக் கூடச் செய்யாமல்!… கை குலுக்குதல், எவ்வளவு நேரம் குலுக்குகிறீர்களோ அவ்வளவுக்கு விசேஷம், அது ஒரு விடைபெறுதலை முழுமைப் படுத்துகிறது என்பார்கள். ‘ஆ திரும்பி நான் போகிறேனே, என் தவறைச் சரி செய்து விடுகிறேனே1′ ரயில் என்னைக் கண்டுக்கவே இல்லை. முழு நீராவி மூச்சுடன் வேகமெடுத்துப் போகிறது அது.
ரயில் நிலையத்தில் சகாக்களை மறந்து விட்டு சட்டென்று ரயிலேறுதல் என்கிற கனவு… இது நட்ட நடு ராத்திரியில் ஆனந்த உறக்கத்தில் எழுந்து கிளம்பிச் செல்லும் விசித்திரத்துக்கு உல்டா. அந்தக் கனவு சொல்கிறது ଭ அப்படி யாருமறியாமல் கிளம்பிப் போவது சரி கிடையாது. அது மனசில் துயரத்தையே கிளர்த்தும். நேரில் விடைபெறுவதை விட அது எவ்வகையிலும் மேலானது அல்ல. ஆக அப்படியெல்லாம் நான் யோசிக்கக் கூடாது. அப்படியே இருந்தாலும், பிரிதலின் போது முழு பிரக்ஞையுடன் அதைச் சமாளிப்பது சுலபமான செயலா என்ன? ஒரு வார்த்தை, ஒரு கைகுலுக்கல் என்று அது முடிந்து விடுமா?

”நிறைய சமாச்சாரங்களுடன் நிறைய நிறையக் கடுதாசி எழுத வேண்டும் நீ. ஒரு கப்பலுக்கும் அடுத்த கப்பலின் வரவுக்கும் மூணு முதல் அஞ்சு நாள் இடைவெளி. தனியான ஒரு பயணி நீ. உன் பொதியில் இருந்து கட்டாய்க் கடிதங்களை நான் உருவுவது, எழுதிய உனக்கு சந்தோஷமாகவும் சுகமாகவுமே இருக்கும்.”
”நிறையக் கடிதமும், அதிக விவரக் குறிப்புகளுமாய் என்னால் எழுத முடியாது. கொஞ்ச நாளாய் எனக்கு அதில் ஆர்வம் விட்டுப் போய்விட்டது. சின்னதும் பெரிசுமாய், தண்டியும் ஒல்லியுமாய் எத்தனையோ சமாச்சாரத்தில் நான் நொறுங்கிக் கிடக்கிறேன். அதையெல்லாம் ஒண்ணொண்ணா சமாளிச்சாக வேண்டும். எழுத உட்காரவும், பேனாவைப் பிடிக்கவும் எத்தனை நேரம் எனக்கு வாய்க்குமோ யாருக்குத் தெரியும்?”
கிளம்புதல் என்பது உப்புக்கரிப்பதாகச் சொன்னால், பிரிவோ முடை நாற்றம்!
Before leaving/Ye Shengtao
in English/Alison Bailey
இவரது மற்றொரு கதை ‘எருது’ இத்தொகுப்பில் இருக்கிறது. ஷெங்தாவ் மனித உணர்வுகளை ரசம் போலப் பிழிந்து காட்டுகிறார். ஆங்கிலத்தில் இத்தனை சத்தாய் உள்ளிறக்கம் காண்கிறது, தாழ்வாரத்து மழை போல, சீன மொழியில் படிக்க ஆசையாய் இருந்தது. நாம் பிரிவை இத்தனை உணர்கிறோமா? இல்லை என்கிறவர்கள், கேள்வியை இப்படிப் படியுங்கள் ଭ நாம் சகாக்களிடம் இத்தனை அன்பு பேணுகிறோமா?
இவர் நண்பனைப் பிரிவது, என ஒரு கட்டம். நண்பர்களை இவர் பிரிவது என்பது இன்னொரு பகுதி. ரெண்டையும் காட்சிப் படுத்தி யிருக்கிறார் அல்லவா?

எல்லாவிதமான பிரிவுகளையும் ஒரே மாதிரி இவர் கவனிக்கச் சொல்கிறார். யாரைப் பிரிகிறோம், பிரியும் போதான மனநிலை, சிறு பிரிவு, திரும்பிக் காண முடியாத பிரிவு ଭ என எல்லாமே ஒண்ணு என்று எப்படிச் சொல்வது? அப்புறம் முக்கியமாக, பிரிவு ஒவ்வொரு வயசிலும் ஒவ்வொரு விதமான பாதிப்பு வீர்யம் கொண்டதாய் இருக்கிறது. இந்தக் கதை அவரது இளம் பருவத்துக் கதையாய்க் கூட இருக்கலாம். வேறொரு பருவத்தில் இதே கதை சத்து குறைவாய் அவரே நினைக்கவும் வைத்துவிடும்… இன்னொரு வேடிக்கையும். இப்பத்தைய வாழ்க்கையை வெறுத்துக் கிடந்து, உருப்படியான ஒரு சமாச்சாரத்துக்காகப் பிரிந்தால்? யார் இப்படி அல்லல்படுவா?
ஒரு தனிப்பட்ட பிரிவு அனுபவத்தை விவரித்திருந்தால் அதிகம் மனசை ஊடாடக் கூடியதாய் அமைந்திருக்கக் கூடும். பொதுமைப் படுத்தும் உள்க் கணக்கில், கதை அந்தரங்கத்தன்மையை பிடி நழுவ விட்டுகிறது.
இந்தக் கதை எழுதப் பட்டது 1913ல். இப்போது பிரிவாவது? செல்ஃபோன்கள் வந்து விட்டன. முகம் பார்த்தபடி இன்டர்நெட்டில் பேசுகிறார்கள்.
அருமையான மனிதனின் எளிமையான மனத்தைக் கதை படம் பிடிக்கிறது. அந்தக் காலத்தை உணர்த்த வல்லதாய் இருக்கிறது.
நாம் ஷேங்தாவுடைய கைகளைப் பற்றி நன்றாகக் குலுக்கி வைப்போம். பிரிதலை அது முழுமைப் படுத்தும்.
- ஜூன் 2007 

thanx - sirukathaikal.com

0 comments: