Wednesday, May 28, 2014

பக்கத்து வீடு -வெ.இறையன்பு- சிறுகதை @ ஆனந்த விகடன்

முன்குறிப்பு: இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் காலியாக ஒருக்களித்துப் படுத்திருக்கும் நிலங்களையும் சுற்றி வளைத்துப்போடுகிறவர்கள் இல்லாத காலத்தில் நடந்தது.
“இதுதான் நாம வாங்கப்போற நிலம்’ என்று திருவேங்கடம் காண்பித்த நிலத்தைப் பார்த்ததும் சரோஜாவுக்கு திக்கென்று இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அகலமாக விரிந்து ஈ, காக்காகூடத் தெரியாத வெட்டவெளி யில் கோவணத்தைப் போல ஒரு துண்டு நிலம். சரோஜா எதுவுமே பேசவில்லை.
”நம்மகிட்ட இருக்கிற பணத்துக்கு இதுதான் வாங்க முடியும் சரோ…”
”……………………”
”என்ன யோசிக்கறே?”
”அக்கம்பக்கத்துல ஒரு வீடுகூட இல்லையே. ஆத்திர அவசரத்துக்குக் குரல் குடுத்தாக்கூட யாரும் வர மாட்டாங்களே. நண்டும்சிண்டுமா குழந்தைகளை வெச்சிக்கிட்டு என்ன பண்ணு வேன்னு யோசிக்கிறேன்” என்ற அவளுடைய குரலில் ஏதோ தயக்கம்.
”கவலைப்படாத சரோ… இப்ப அப்படித்தான் இருக்கும். இப்ப நாம இருக்குற தர்ம நகர் பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு தெரியுமா? எங்க பார்த்தாலும் ஒரே வயக்காடு. ஆனா, இன்னிக்கு எப்புடி இருக்கு? ஒரு கிரவுண்டுபத்தாயிரம் ரூபாய்க்குப் போவுது. ஒருத்தர் கட்டினா மடமடனு எல்லாரும் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க.”
திரும்பி வரும்போது அவள் எதுவும் பேச வில்லை. அவளுக்குள் எதிர்காலம்பற்றிய குழப் பம். ஏழ்மை எப்படி எல்லாம் கையை விரித்து விடுகிறது என்று யோசித்தாள். கண்களில் அரும் பிய நீரைக் கணவனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டாள். வரும்போது இருந்ததைவிட, வீட்டுக்குப் போகும் வழி திரும்பும்போது நீண்டுகொண்டு இருப்பதைப் போல அவளுக்குத் தோன்றியது.
இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ஒரு வகையில் திருவேங்கடம் சொல்வது சரி என்றே அவளுக்குப் பட்டது.
பக்கத்து வீடுஇவ்வளவு அவசரமாக வீடு கட்டுகிற நெருக் கடி அவளுக்கு ஏற்பட்டதற்கும் காரணம் இருக் கிறது. அவள்தான் தன் பள்ளியில் பணியாற்றும் இன்னோர் ஆசிரியை வீடு தேடச் சிரமப்பட்ட போது, ”என் பக்கத்து வீடு காலியா இருக்கு. உங்களுக்கு வேணும்னா வந்து பாருங்களேன்” என்று அழைத்துவந்தாள்.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அந்த டீச்சர் பெயர் லட்சுமி. அவர்கள் சுத்த சைவம். சரோஜாவின் குடும்பம் வாரத்துக்கு ஒரு முறை வசதிக்கு ஏற்ற படி மாமிசம் சாப்பிடுகிறவர்கள். லட்சுமி வீட்டில் இரண்டு பெண்கள். சரோஜாவுக்கு மாமியார் இருந்ததால் சௌகரியம். எனவே, பள்ளி முடிந்ததும் சரோ வீட்டில்தான் ஆட்டம் பாட்டம் எல்லாம். ஒரு நாள் சரோஜாவின் மாமியார் கோழிக் குழம்பு வைக்கும்போது, லட்சுமியின் பெண், ”இது என்ன? எனக்கும் வேணும்…” என்று கேட்டிருக்கிறாள். மாமியார் அந்தக் காலத்து மனுஷி. சூட்சுமம் எல்லாம் அவருக்குத் தெரியாது. ஒரு துண்டை எடுத்து அவளிடம் சாப்பிடக் கொடுத்தாள். கிளம்பியது பூதம். அதற்குப் பிறகு இரண்டு வீட்டுக்கும் மனஸ்தாபம். சரோஜா ரொம்ப சென்சிட்டிவ். ஜாடைமாடையாக லட்சுமி கொடுத்த பிரச்னை களை சரோஜாவால் சமாளிக்கவே முடியவில்லை. வேறு வீடு பார்க்கலாம் என்றால் லேசில் கிடைக்கவில்லை.
”எங்கே போனாலும் இது மாதிரிப் பிரச்னை வந்துதான் தீரும். பேசாம வீடு கட்டிக்கிட்டுப் போயிடலாம்” என்பது திருவேங்கடம் யோசனை.
”இந்த நரகத்தில் இருந்து விடுதலை கெடைச்சாப் போதும். பாம்பு, பல்லி யோடக்கூடக் குடித்தனம் நடத்தலாம்!” என்றுதான் சரோஜா மனமும் நினைத்தது.
எவ்வளவு சிரமப்பட்டு சேகரித்த பணம். பள்ளிக்கூடம் சொர்ணபுரி யில். தினமும் சரோஜா தர்ம நகரில் இருந்து நடந்தே சென்று, பேருந்துக் கட்டணத்தை ஓர் உண்டியலில் போட்டுவைப்பாள். திருவேங்கடம் மதியச் சாப்பாட்டைத் தியாகம்செய்து அந்தப் பணத்தைத் தனியாகச் சேமித்துவைத்தார். ஒரு வருக்குத் தெரியாமல் ஒருவர் சேமித்த பணம். நிலம் வாங்குவது என்று முடிவானதும், ‘இது என் பங்கு சேமிப்பு’ என்று மனைவி தந்த பணம் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சொற்ப வருமானத்தையும் தன்னிடம் ஒப்படைக்கும் மனைவி எப்படிச் சேமிக்க முடியும்? அவள் சொன்ன நிஜம் அவனுக்கு வலித்தது. தினமும் மாலை மூத்த மகளை அவள் கால் பிடித்துவிடச் சொன்னதற்கான காரணம் அப்போதுதான் புரிந்தது. ஆனால், அவளிடம் அவர் சேமித்த விதத்தை மூச்சுவிடவில்லை.
வீட்டுக் கட்டுமானம் தொடங்கியது. திருவேங் கடம் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி னார். என்னென்ன கடன் வாங்க முடியுமோ அத்தனையையும் போட்டு, ஒரு பத்தாயிரம் ரூபாய் திரட்டினார். சரோஜாவுக்கு இருபது பவுன் நகை இருந்தது. அதை வங்கியில் வைத்து ஒரு மூவாயிரம் தேறியது. எல்லாவற்றையும் போட்டு வீடு கட்டத் தொடங்கினார். முடிந்த அளவுக்குச் சிக்கனம் பிடித்தார். அப்போதெல் லாம் வேலைக்கு ஆள் கிடைக்காத நிலைமை இல்லை. எனவே, மளமளவென்று வீடு மூன்று மாதத்தில் முடிந்தது. ஓட்டு வீடு. முன்பக்கம் நீண்ட வராண்டா. சுற்றி மூங்கில் வேலி.

திருவேங்கடத்துக்கும் சரோஜாவுக்கும் வைராக்கியமும் தன்மானமும் அதிகம். சொந்த பந்தங்கள் யாரிடமும் ஒரு பைசா கை நீட்டி வாங்கக் கூடாது என்பதில் திடமாக இருந்தனர். வீட்டுக்குக் குடிபோகும்போது பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை. பால் காய்ச்சி அவர்கள் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுக் குடிபெயர்ந்து விட்டனர். ‘நம்முடைய சொந்த வீடு இது. இது நமக்கே உரிமையானது’ என்கிற மகிழ்ச்சியில் எந்தக் குறையும் அவர்களுக்குத் தென்படவில்லை.
மின்சார வசதி இல்லை. லாந்தர் விளக்குடன் இருளில் போராட வேண்டும். தெருவிளக்கு என்று சிறிது வெளிச்சம் கூட இல்லாத பிரதேசம். மூத்த மகள் பூங்குழலி நான்காம் வகுப்பு. இரண்டாவது பெண் இய லிசை இரண்டாம் வகுப்பு. மூன்றாவது ஆண் குழந்தைக்கு இரண்டு வயது. சில நேரங்களில் பூங்குழலிக்கும் இயலிசைக்கும் ‘யாருக்கு சிம்னி விளக்கு?’ என்று சண்டை வரும். மற்றவள் பக்கம்தான் வெளிச்சம் தெரியுது எனப் புகார் செய்வார் கள். ஒருவருக்கு ஒருவர் விளக்கை இழுக்கும் அவசரத்தில், சிம்னி சமயத்தில் உடைந்துவிடும். மாலையில் அதை மாட்டுவதற்கு பூங்குழலியும் இயலிசையும் கடைவீதிக்கு எடுத்துச் செல்வார் கள். அவர்கள் சிம்னி மாற்ற வந்திருப்பதை கூடப் படிக்கும் வசதியான மாணவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பதுங்கிப் பதுங்கிச் செல்வார்கள்.
”கவலைப்படாதே இயல்! நாம படிச்சி பெரிய ஆளா ஆனா, எல்லா வசதியும் நமக்குக் கிடைச்சிடும். இன்னும் கொஞ்ச நாள்ல எலெக்ட்ரிசிட்டி வந்துடும். அப்ப இந்த மாதிரி சிம்னி மாத்தற வேலை இருக்காது” என்று பூங்குழலி ஆறுதல் சொல்வாள். மூங்கில் வேலி இருந்த தால் ஓரத்தில் வாதநாராயணன் கொம்புகளைக் கொண்டுவந்து நட்டார் திருவேங்கடம். அறு பட்ட முனையில் சாணம்வைத்து தண்ணீர்ஊற்றி யதில் விரைவாக வேர் பிடித்து செழுசெழுவென வளர்ந்தன. கொய்யா மரங்களையும், பூஞ்செடி களையும், வேப்பங்கன்றுகளையும் கொண்டுவந்து நட்டார். பல் துலக்குகிற நீரைக்கூட வீணாக்கா மல் அவற்றுக்காகச் செலவழித்து குடும்பமே வளர்த்தது. மக்கள் குடியேறாத பகுதி என்பதால் அடிக்கடி பாம்புகள் நடமாட்டம் இருக்கும். சில நாட்களில் அந்த இடம் நிழல் பிரதேசமாக மாறியது.
”சரோ! நான் எலெக்ட்ரிசிட்டி போர்டுல விசாரிச்சேன். கம்பத்துக்கு நாம பணம் கட்டினா, கரன்ட் வந்துருமாம். உன்னோட நகையை மீட்ட பிறகு பாத்துக்கலாம்.”
மாலை வேளையில் பெண்கள் இருவரும் வீடு திரும்பியதும் விளையாட ஆள் கிடைக்காமல் திண்டாடுவார்கள். இயல் விவரம் தெரியாத பெண். பூங்குழலி கொஞ்சம் சாமர்த்தியம்.
”கிளாஸ்ல எல்லோரும் பக்கத்து வீடு… பக்கத்து வீடுங்கறாங்களே, நமக்கு மாத்திரம் ஏன் அது இல்லே?” என்று இயல் வெள்ளந்தியாகக் கேட்பாள். சரோவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது. உறவினர்கள் யாராவது வந்தால் வீடே மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். பூங்குழலியும் இயலிசையும் அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு, ”ஊருக்குப் போகாதீங்க இங்கேயே இருங்க…” என்று அடம்பிடிப்பார்கள். அவர்கள் கிளம்பும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அவர்கள் பள்ளிக்குச் சென்றதும் உறவினர்கள் நைஸாக நழுவுவார்கள்.
ஊடகங்களோ, பெரிய அளவில் பொழுது போக்கு அம்சங்களோ இல்லாத காலம். பிள்ளைகளை வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட அழைத்துச் செல்லும் நடுத்தரவர்க்கத்தின் இன்றைய பழக்கம் புழக்கத்தில் வராத நாட்கள். சேலத்தில் பேருந்து நிலையத்தில் இருக்கும் ஒரே ஒரு ஐஸ்க்ரீம் கடைதான் பரிச்சயம். நகரத்துக்குப் போவதே ஊருக்குப்போவது மாதிரி. குழந்தை களைத் தனிமை வாட்டுவது பெற்றோர்களுக் குப் புரிந்தது. திருவேங்கடம் இரவு ஒன்பது, பத்து மணிக்குத்தான் திரும்புவார். சரோ குழந்தை களுக்கு எல்லாம் சாப்பாடு போட்டு, தூங்க வைத்துவிட்டு அவள் சாப்பிடாமல் கணவனுக்காகக் காத்திருப்பாள். சிம்னி விளக்கில் பல முறை படித்திருந்தாலும் சிவகாமியின் சபதத்தையோ, பொன்னியின் செல்வனையோ புரட்டிக்கொண்டு இருப்பாள். வாழ்க்கையில் ஜெயித் தாக வேண்டும் என்கிற வேட்கை அவளைச் சுறுசுறுப்புடன் இயங்க வைத்தது. மாமியார் அவ்வப்போது பேச்சுத் துணைக்கு இருப்பதே பெரிய ஆறுதல்.
குழந்தைகளின் தனிமையைப் புரிந்துகொண்டு திருவேங் கடம் ஒரு நாய்க்குட்டி எடுத்துவந்தார். சாதி நாயெல்லாம் இல்லை. நாட்டு நாய்தான். ஆனால், 22 நகம். அதிக நகம் இருந்தால் ரோஷமாக இருக்குமாம். ‘மணி’ என்று அதற்குப் பெயரிட்டார்கள். மூன்று குழந்தைகளுக்கும் அந்தக் குட்டியோடுதான் விளையாட்டு. அது வளரும் வரை அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. ஆனால், விலங்குகள் குட்டியாக இருக்கும்போதுதான் விளையாடு கின்றன. மனிதன் மட்டும்தான் வளர்ந்த பிறகும் வெவ்வேறு விதமாக விளையாடுகிறான். மணி வளர்ந்ததும் மறுபடியும் குழந்தைகளைத் தனிமை சுற்றிக்கொண்டது. இப்போது மூன்றாவது குழந்தை சுடரும் நர்சரி பள்ளி செல்ல வேண்டிய வயது வந்துவிட்டது. இருட்டில் திருவேங்கடத் தின் தாயாருக்கும் சமயத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
நிறையப் பேர் அருகில் இருக்கும் நிலங்களை வாங்குவதற்காகப் பார்க்க வருவார்கள். அப்போது எல்லாம் திருவேங்கடமும் சரோவும் ‘யாராவது குடிவந்துவிடுவார்கள்’ என்று ஆசையாக எதிர் பார்ப்பார்கள். ஆனால், மின் வசதிகூட இல்லை என்பது தெரிந்ததும் அவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டுவார்கள். வீட்டுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. அந்தப் பரந்த பொட்டல்காட்டில் அவர்கள் வீடு மாத்திரம் மினுக்மினுக் என எரியும் சிம்னி விளக்குடன் இரவில் ஒற்றைக்கால் கொக்காக இருந்தது.
எப்படியோ சிரமப்பட்டு பணம் சேர்த்து ஈ.பி. ஆபீஸில் மின் கம்பத்துக்கான பணத்தை திருவேங்கடம் கட்டிவிட்டார். அதற்காக ஓராண்டு அதிகமான விற்பனையைச் செய்து ஊக்கத்தொகையை அவர் ஈட்டவேண்டியதாக இருந்தது. கட்டிய பிறகு நடையாக நடந்து கம்பத்தைக் கொண்டுவந்தார். ஒரு கட்டத்தில் அவர் முகத்தைத் தினமும் பார்த்து அலுத்துப்போனதால், அவசர அவசரமாகக் கம்பம் நடப்பட்டது. இப்போது மின்சாரத்தில் இயங்கும் வானொலி, வாசலில் விளக்குகள் என வீட்டுச் சூழல் ஒளிமயமானது. கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது.
ஒருநாள் மாலை ஒரு தம்பதியினர் புரோக்கரோடு பக்கத்து நிலத்தைப் பார்க்க ஆஜரானார்கள். நடுத்தரக் குடும்பம். கணவன், மனைவிக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசை. நிலத்தைப் பார்த்தவர்கள் நேராக திருவேங்கடம் வீட்டுக்கு வந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், திருவேங்கடம்
வீட்டில் இருந்தார். அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். அவர் பெயர் வாசுதேவன். அந்த அம்மா பெயர் பார்வதி. திருவேங்கடம் வீட்டில் இருந்த இரண்டு இரும்பு நாற்காலிகளை யும் இழுத்துப்போட்டு அவர்களை அமரவைத் தார். அவர் மர ஸ்டூலில் இடுக்கிக்கொண்டு உட்கார்ந்தார்.
”நாங்க பக்கத்துல இருக்கிற நிலத்த வாங்க லாம்னு இருக்கிறோம். உடனடியா வீடு கட்டப்போறோம்” என்று அவர்கள் சொன்னதும் சரோஜாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
”கொஞ்சம் குடிக்கத் தண்ணி தர்றீங்களா?” என்று பார்வதி கேட்டாள். உள்ளே ஓடி அவசர அவசரமாகத் தண்ணீரைச் சொம்பில் கொண்டு வந்து கொடுத்தாள் சரோ. வற்புறுத்தி இருவ ருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். பூங்குழலிக்கும் இயலுக்கும் ஆனந்தம் தாங்க முடிய வில்லை.
”நமக்கும் பக்கத்து வீடு வரப்போகிறது. அவங்களோட வெளையாடலாம். பல்லாங்குழி, பாண்டி, தாயம்னு எத்தனை நாளு நமக்குள்ளேயே வெளையாடிக்கிட்டு இருக்கறது” என்று பூரிப்படைந்தார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து நிலத்தை வாங்கிவிட்ட செய்தியுடன் அவர்கள் வந்தார்கள். விரைவிலேயே வீடு கட்டப்போவதாகச் சொன்னார்கள்.
”முதல்ல கிணறு தோண்டிருங்க. அப்பதான் கட்டுமான வசதிக்குச் சரியா இருக்கும்” என்று திருவேங்கடம் ஆலோசனை சொன்னார். அவர் கிணறு தோண்டிய அனுபவத்தில் அவரே நல்ல நாள் பார்த்து, நிலத்தை மார்க் செய்து கிணறு தோண்டும் பணியாளர்களையும் ஏற்பாடு செய்தார். கிணறு தோண்டும் பெருமாளும் மொழுக்கனும் குடிக்கத் தண்ணீர் முதல் களிக் குத் தொட்டுக்கப் பச்ச மிளகாய், வெங்காயம் வரை திருவேங்கடத்தின் வீட்டில்தான் வாங்கு வார்கள். ஏதோ தங்களுக்காகக் கிணறு வெட்டு வதைப் போல அந்தப் பணியைத் தவறாமல் திருவேங்கடமும் சரோஜாவும் மேற்பார்வை பார்த்துவந்தார்கள். ஒருநாள் வேட்டுவைக்கும்போது பறந்து வந்த கல் பெருமாளின் நெற்றியில் காயம் ஏற்படுத்த, அவன் ஒழுகும் ரத்தத்துடன் கையைவைத்து அழுத்திப் பிடித்துக்கொண்டே ஓடிவந்தான். நல்ல வேளை அன்று உள்ளூர் தினம் என்பதால் திருவேங்கடம் வெளியூருக்கு விற்பனைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார். பதறிப்போய் வீட்டில் இருக்கும் மருந்தை எடுத்துவந்து பெருமாளின் காயத்தை டெட்டால் போட்டுக் கழுவி மருந்து போட்டார்.
வாசுதேவனும் பார்வதியும் அடிக்கடி வருவார்கள். கிணற்றில் தண்ணீர் வந்ததும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வந்து இறக்கினார்கள். நிலத்தின் மூலை யில் ஒரு சின்னக் குடிசை போட்டு கட்டு மானப் பணியை மேற்கொள்ளவும், தங்கிப் பார்த்துக்கொள்ளவும் ஒரு தம்பதியினரைக் குடியமர்த்தினார்கள். கதவுக்குத் தேவையான மரங்கள், சிமென்ட் மூட்டைகள் போன்ற முக்கிய மான பொருட்களை எங்கே வைப்பது என்று யோசித்தார்கள். திருவேங்கடம் தானே முன்வந்து, ”எங்க நிலத்துல வெச்சிக்கங்க. வேலி இருக்கு. யாரும் எடுக்க மாட்டாங்க” என்று கூற… தூசியும் தும்புமாக அந்த வீட்டுத் தோட்டம் ஆகிப்போனது.
சில நாட்கள் திருவேங்கடம் இல்லாத போதும் வாசுதேவன் வருவார். மதிய வேளையில் சாப்பிடாமல் வந்தால் பழங்களைக் கொடுத்தும், தேநீர் தயாரித்துக்கொடுத்தும், சமயத்தில் போண்டா போட்டும் சரோஜாவின் மாமியார் உபசாரம் செய்வார்கள். நிறையப் பேர் கட்டு மானத்தில் வேலை செய்தார்கள். அவர்கள் உடை மாற்றிக்கொள்வது, முகம் கழுவிக்கொள்வது, குடிநீர் அருந்துவது எல்லாம் இவர்கள் வீட்டில் தான். பக்கத்து வீடு வரப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் கொஞ்சம்கூட மனம் கோணாமல் அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அந்தக் குடும்பம் செய்தது. வாசுதேவன் தம்பதிக்கு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும் சரோவின் உற்சாக மும் சகிப்புத்தன்மையும் அதிகரித்தன. பூங்குழலி யும் இயலும் பள்ளியில் உள்ள தோழர்களிடம் ‘எங்க வீட்டுல இப்ப கரன்ட் வந்திருச்சி. எங்க துணியெல்லாம் சலவைசெஞ்சிதான் போட்டுக் குறோம்!” என்றும் ”எங்களுக்கும் பக்கத்து வீடு வரப்போவுது” என்றும் ஜம்பம் அடித்துக்கொண்டார்கள்.
ஒருநாள் பார்வதி மட்டும் நிலத்தைப் பார்வையிட மாலை வேளையில் வர… மழை பிடித்துக்கொண்டது. இரண்டு, மூன்று மணி நேரம் கடுமையான மழை. அப்போதுதான் ஒரு பக்கத்து சுவரைப் பூசியிருந்தார்கள். திருவேங்கடம் வீட்டில் இருந்த தார்ப்பாயைக் கொடுத்தனுப்பினார். பூசிய பகுதி பாதிக்கப்படாமல் தார்ப்பாய் போர்த்தப்பட்டது. மழையில் மின்தட்டும் ஏற்பட்டது. பார்வதி அந்த இரவில் தனித்துப்போவது என்பது சிரமம். அவர்கள் வீடு அம்மாபேட்டையில் இருந்தது. பாட்டி அவசர அவசரமாக உப்புமா கிண்ட, சரோஜா வற்புறுத்தி பார்வதியைச் சாப்பிடவைத்தாள். ”எங்களுக்கும் உப்புமா” என்று அடம்பிடித்த பிள்ளைகளை அடக்கிவிட்டு பார்வதிக்குப் பரிமாறினாள். கடுமையான பசி இருந்திருக்க வேண்டும். பார்வதி ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாள். கணவன் வராவிட்டால் அங்கேயே தங்குமாறு சரோ வற்புறுத்தினாள். ஒன்பதரை மணிவாக்கில் வாசுதேவன் வர… குடையைக் கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.
வாசுதேவனும் பார்வதியும் விவரம் தெரிந்த வர்களாக இருந்ததால் ஒட்டு வீட்டுக்குத் திட்ட மிட்டு இருந்தனர். பூங்குழலி அம்மாவிடம், ‘அம்மா… அவங்க வீடு மாடி வீடாமா? நாம ஏம்மா மாடி வீடு கட்டல?” என்று விவரம் புரியாமல் நச்சரிப்பாள். ‘நாமளும் சீக்கிரம் கட்டிடலாம் கண்ணு!” என்று சரோ சமாதானப் படுத்துவாள்.
வீடு முடியும் கட்டத்தை நெருங்கியது. ஏற் கெனவே திருவேங்கடம் மின்கம்பத்தை நட்டு இருந்ததால், எளிதில் மின்வசதியை வாசுதேவனால் பெற முடிந்தது. எனவே, இருட்டில் தடுமாறும் இக்கட்டு அவர்களுக்கு ஏற்படவில்லை. மாலை வேளையில் மிச்சசொச்ச வேலைகளைக் கண் காணிக்க வந்த வாசுதேவன், ‘வீடு முடியப் போவுது. ஒரு நல்ல நாளாப் பாத்து கிரகப் பிரவேசம் வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக் கோம்!” என்று சொன்னார்.
‘பக்கத்து வீட்டில் கிரகப்பிரவேசம் என்றால், எந்தப் பாவாடை சட்டையை அணிந்துகொள்வது’ என்றுகூட பூங்குழலியும் இயலிசையும் முடிவு செய்திருந்தார்கள். இருப்பதிலேயே பளிச்சென்று உள்ளதை எடுத்துவைத்திருந்தார்கள். சரோவும் கல்யாணப் பட்டுப் புடைவையைச் சலவை செய்து வைத்துக்கொண்டாள். அந்தப் புடைவை அவளுக்கு சென்டிமென்டாக நல்ல புடைவை. அது கட்டினால் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புவாள்.
திடீரென ஒருநாள் மாலை பக்கத்து வீட்டுக்கு இரண்டு வாழை மரங்கள் குலையுடன் வந்து இறங்கின. அவற்றை ஆட்கள் கட்டிக்கொண்டு இருந்தார்கள். வாசுதேவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டு இருந்தார். முகப்பில் வண்ண சீரியல் விளக்குகளை மாட்டினார்கள். சரோவுக்கும் திருவேங்கடத்துக்கும் அதிர்ச்சி.
‘நம்மகிட்ட சொல்லாம கிரகப்பிரவேசம் வெச்சிட்டாங்களோ?’ என்று அவர்களுக்குத் துக்கம். ”இருக்காது… சொல்லிட்டோம்னு நினைச்சி மறந்திருப்பாங்க. காலையில வந்து கூப்புடுவாங்க!” என்று அப்போதும் சமாதானப்படுத்திக்கொண்டனர். யாராவது வந்து கூப்பிடுவார்கள் என்று பத்து மணி வரை எதிர்பார்த்தார்கள். ஆனால், யாரும் வரவில்லை.
விடியும்போது பக்கத்து வீட்டில் பூஜைக்கான மந்திரங்கள் ஒலிப்பது காதில் விழுந்தன. நல்ல கூட்டம். நிறையப் பேர் அன்பளிப்புகளோடு வந்தவண்ணம் இருந்தனர். பூங்குழலிக்கும் இயலிசைக்கும் பெருத்த ஏமாற்றம். ‘ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு கலர் பாவாடையோடு ஜாலியாக இருந்திருக்கலாமே… ஏதேனும் இனிப்பு சாப்பிட்டு இருக்கலாமே’ என்றெல்லாம் ஏக்கம்.
திருவேங்கடமும் சரோவும் பக்கத்து வீட்டினர் நம்மை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை என்பதை நேரம் செல்லச் செல்ல புரிந்துகொண் டனர். திருவேங்கடம் அன்று சற்று தாமதமாகத் தான் அலுவலகம் கிளம்பினார். அவ்வளவு சோர்வு. மனைவியிடம், ”குழந்தைகளைச் சமா தானப்படுத்து. ரொம்ப எதிர்பார்ப்பை வளர்த்துக் கிச்சிங்க. நான் வரும்போது அதுங்களுக்கு ஸ்வீட் வாங்கியார்றேன்” என்று சொல்லியவாறு மிதிவண்டியில் ஏறினார். சரோவுக்கு அடிவயிறு எரிந்தது. அவள் மதியம் உணவருந்த வீட்டுக்குத் திரும்பினாள். பள்ளியும் வீடும் அருகருகே இருப்பதால் மதியச் சாப்பாடு வீட்டில்தான். பக்கத்து வீட்டைக் கடந்துதான் வர வேண்டும். யாரும் பார்த்துவிடக் கூடாது என்று தலையைக் குனிந்தவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. ‘ஏழெட்டு மாசம் எப்படியெல்லாம் உபசரிச்சோம்’ என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் வேலிப்படலைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்தபோது, பக்கத்து வீட்டில் மதிய விருந்து முடிந்து வீசியெறியப்பட்ட எச்சில் இலைகள் நான்கைந்து தங்கள் வீட்டின் முன் கிடப்பதைப் பார்த்தாள்!


thanx - vikatan, sirukathaiga.com

0 comments: