திரையுலகின் முன்னணிக் கதாநாயகியாக தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டே,
இந்தியிலும் தனது மறுபிரவேசத்தை அழுத்தமாக உறுதிசெய்திருக்கிறார் ஸ்ருதி.
ஏழாம் அறிவு படத்தில் தோன்றிய ஸ்ருதி ஹாசனா இது என்று ஆச்சரியப்படும்
பொலிவுடன் வலம் வர ஆரம்பித்திருக்கும் இவர் தற்போது தாய்மொழியான தமிழிலும்
தனிக் கவனத்துடன் படங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார். ஹரி
இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்து வரும் ‘பூஜை’ படத்தின் போட்டோ
ஷூட்டுக்காகச் சென்னை வந்திருந்த ஸ்ருதியுடன் பேசியதிலிருந்து.....
தெலுங்குத் வலுவான திரைப்படக் குடும்பப் பின்னணியில் இருந்து இன்று
முன்னணிக் கதாநாயகியாக வளர்ந்து நிற்கிறீர்கள். இந்த இடத்திலிருந்து
உங்களது திரைப்பயணத்தை எப்படி எடுத்துச் செல்லத் திட்டம்?
நான் கமல் ஹாசன், சரிகா பெண்ணாக வாய்ப்பு தேடியதில்லை. எனது திறமைக்காக
நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. எனது படங்களில் எனக்காக எனது அப்பா
அம்மா வந்து நடிக்கவில்லை. நான் நடிக்கும் படங்கள் ஆடியன்ஸூக்குப்
பிடித்தால் மட்டுமே நான் முன்னேறிப் போக முடியும். இந்தியில் ‘ஹை புரஃபைல்
லாஞ்ச்சிங் பேட்’ என்ற பரபரப்புடன்தான் நான் ‘லக்’ படத்தில் அறிமுகமானேன்.
ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. முதல் படத்திலேயே நான் தோல்வியை ருசித்தேன்.
அது மிகவும் கசப்பானது. அதிலிருந்துதான் என்னைப் பற்றியே நிறைய
கற்றுக்கொண்டேன். இன்னும் இருபது வருடங்கள் கழித்து நான் நடித்த படம்
எவ்வளவு வசூல் செய்தது என்பதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால் நான்
அதில் என்ன செய்திருக்கிறேன் என்பதை டிவி, டிவிடி எல்லாவற்றிலும்
பார்ப்பார்கள். அதனால் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் நான் யோசித்துக்
கொண்டிருக்காமல் என் பயணத்தை இயல்பாகக் கடக்க விரும்புகிறேன்.
உங்களது அறிமுகப் படத்தில் தொடங்கி கிளாமராக நடிக்க நீங்கள்
தயங்கியதில்லை. ஆனால் தெலுங்குப் படங்களில் கொஞ்சம் அதிகமான கிளாமரில்
நடிக்கிறீர்கள்? ரசிகர்கள் ஏன் இந்தப் பாகுபாடு என்று கேட்கிறார்கள்?
அது எனது கையில் இல்லை. நான் டைரக்டரின் ஆக்டர். டைரக்டர் இந்தக்
கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்போது அதை நான்
தட்டுவதில்லை. ஒரு கதாபாத்திரம் நமக்குப் பிடித்துப் போய்விட்டால், அதைச்
சிறப்பாகச் சித்திரித்துக் காட்ட இயக்குநர் விரும்பும் விதத்தில் நாம்
நடித்துக் கொடுக்க வேண்டும். இந்த கிளாமர் வேறுபாடு என்பது கதையும், என்
கதாபாத்திரமும் சம்பந்தப்பட்டது. ஏழாம் அறிவு படத்தில் வந்த சுபா
சீனிவாசனுக்கோ, ‘கப்பர் சிங்’ படத்தில் வந்த பாக்கியலட்சுமிக்கோ கிளாமர்
தேவைப்பட வில்லை. காரணம் அந்தக் கதாபாத்திரங்கள் அப்படி. ஆனால் ‘ரேஸ்
குரம்’ ஸ்பந்தனா கிளாமராக இருந்தால்தானே சரி.
தவிர நான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று ரசிகர்களைப் பிரித்துப் பார்க்க
விரும்பவில்லை. என்னளவில் அவர்கள் இந்திய ரசிகர்கள். ரசனையில் வடக்கிற்கும்
தெற்கிற்கும் மெல்லிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இமயமலை அளவுக்கு
இல்லை.
திரையில் அறிமுகமானபோது இருந்ததை விட இப்போது பேரழகுடன் இருப்பதாக டிவிட்டரில் உங்களது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களே?
அழகென்றில்லை; உடல், பணம், வீடு என எதுவாக இருந்தாலும், நமக்குக்
கிடைத்ததைக் கொண்டாடும் மனநிலை நமக்கு இருக்க வேண்டும். நான் அழகாக இருக்க
வேண்டும் என்று அதிலேயே கவனத்தைக் குவித்துக் கொண்டிருப்பதால் அழகு கூடவோ
குறையவோ செய்யாது. அழகு என்பதே இயல்புதான். கடவுள் கொடுத்திருப்பதைக்
கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் அழகாக இருக்க வேண்டும் என்று
பெரிதாக மெனக்கிடுவதில்லை. அழகான அம்மா, அப்பா, தங்கையுடன் வளர்ந்ததுகூட
எனது இந்த அணுகு முறைக்குக் காரணமாக இருக்கலாம்.
அழகைப் பராமரிப்பதற்காகப் பல கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பெண்களைப் பற்றி?
நிறைய பேர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணத்
தோன்றுகிறது. நம் மனதுக்குப் பிடித்த உணவு, நிம்மதியான உறக்கம் இரண்டுமே
உங்கள் அழகைப் பாதுகாத்துக்கொள்ள மிக முக்கியம். 4 மணிநேரம் தூங்கினாலும்
அது நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் எல்லோருக்கும்
வரலாம். ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்குமே தீர்வு உண்டு என்பதைப் பற்றி
நம்மில் பலரும் நினைப்பதில்லை. அப்படி நினைத்துவிட்டாலே பாதி குற்றங்கள்
குறைந்துவிடும்.
நீங்கள் சைவ உணவு விரும்பியா?\
இல்லை. நான்-வெஜிட்டேரியன் சாப்பிடுவேன். ஆனால் பீப் சாப்பிட மாட்டேன்.
தென்னிந்திய உணவு வகைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். பட்டினி
கிடப்பது, குறைவாகச் சாப்பிடுவது அப்படியெல்லாம் எந்தக் கட்டுப்பாடும்
என்னிடம் கிடையாது. எவ்வளவு அதிகமாகச் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்ப ‘ஒர்க்
அவுட்’ செய்துவிடுவேன்.
ஸ்ருதியின் சிங்கிள் இசை ஆல்பம் கடந்த ஆண்டே வெளியாகும் என்றார்களே?
இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்களில் நடிப்பதால் இசையமைப்பாளர் ஸ்ருதி
அவ்வப்போது பாடுவதோடு சரி. படப்பிடிப் பில் இசைக்கோப்பு செய்து,
மற்றவர்களின் நேரத்தை நான் திருட விரும்பவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள்
எனது சிங்கிள் வெளியாகும் என்று உறுதியாகச் சொல்வேன்.
திரையுலகில் உங்கள் தோழன் யார்?
இசைதான் என் தோழன். காலைமுதல் மாலைவரை அவன் என்னுடனே பயணிக்கிறான். என்
காதுகளுக்கு அருகிலேயே பாடிக்கொண்டிருக்கிறான். எனக்குத் திரைப்படங்களின்
பின்னணி இசைக் கோவையைக் கேட்பது மிகவும் பிடிக்கும். திரையிசைக்கு வெளியே
நிறைய புதுமுகங்கள் ஃபிரெஷ்ஷான திறமைகளுடன் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் அனிருத்தின் இசை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது.
யார் மீதும் காதல் வரவில்லையா?
இல்லை. காதல் சுயநலமற்றதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது நம்
வாழ்க்கையைக் கெடுத்து விடும். தற்போது நிஜ வாழ்க்கையில் காதலிப்பது
பற்றிச் சிந்திக்கச் சுத்தமாக நேரமில்லை.
தனியாக வசிப்பது பிடித்திருக்கிறதா?
தனியாக வசிப்பதில்தான் பொறுப்புகள் இன்னும் அதிகம் என்று சொல்வேன். அம்மா,
அப்பா இருவரது வீட்டின் கதவுகளும் திறந்தே இருக்கின்றன. ஆனால் நான்
வீட்டில் மாதம் ஐந்து நாள் தனியாக இருந்தாலே ஆச்சரியம். மற்ற எல்லா
நாட்களும் பல்வேறு நகரங்களின் படப்பிடிப்புகளில் இருக்கிறேன்.
உங்கள் அப்பா வணிக விளம்பரங்களில் நடிப்பதை அறவே தவிர்த்தவர். ஆனால் நீங்கள் விளம்பரத் தூதுவராக ஆர்வம் காட்டுகிறீர்களே?
அப்பாவின் முடிவு அவரது தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிட
விரும்பவில்லை. ஆனால் நான் தயாரிப்பின் தரத்தைப் பார்க்கிறேன். நான்
விளம்பரத் தூதுவராக ஒப்புக்கொள்ளும் தயாரிப்பை முதலில் நான்
பயன்படுத்துவேனா என்பதைப் பார்த்தே ஒப்புக்கொள்கிறேன். அழகு சாதன க்ரீம்
விளம்பரங்களை நான் அடியோடு தவிர்த்து வருகிறேன். பணத்தைக் கொட்டித்
தருகிறோம் என்றார்கள். நான் மறுத்து விட்டேன். சிவப்பு நிறமாக மாறுவதுதான்
அழகு என்று வரையறுப்பது எத்தனை முட்டாள்தனம்? நிறத்துக்கும் அழகாக
இருப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அடிப்படையே தவறாக இருக்கும்போது
எப்படி என்னால் ஒப்புக் கொள்ள முடியும்?
நன்றி - த தமிழ் இந்து
- N Kannan from Chennaiபல ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சி. மதுரைக்கு அருகே ஓர் கிராமத்தில் ஓர் இளம் வயது விவசாயி, அவரை உங்கள் ஒட்டு யாருக்கு எனக் கேட்டேன்.. அவர் அம்மாவுக்குத்தான் என்றார். எதனால் அப்படி என்றேன். அவர் நீ அம்மாவைப் பார்த்திருக்கியா என்ன ஒரு சிவப்பு தெரியுமா என்றார். இந்த எண்ணம் இருக்கும் வரை சுருதி ஹாசன் சொல்லுவது யார் காதிலும் விழப்போவதில்லை. ஆனாலும் நமது மக்களும் அழகு சாதன உற்பத்தியாளர்களும் உண்மையை உணரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.2 days ago · (0) · (0) · reply (0)
- skvநிறமிகளின் செயலே கருப்பு சிவப்பு அமைவது , இதெல்லாம் பலருக்கும் புரியறதே இல்லே அதான் கொடுமை சில க்ரீம்கலின் விளம்பாரப்பாக்கும்ப்போது சிரிப்பாக வரும் திராவிடர்களின் நிறம் கருப்புத்தான் அதற்காக வெறுப்பு வேண்டாமே , என் வீட்டிலேயே நானும் என் அக்காவும் கருப்புத்தான் மற்றவர்கள் நல்ல நிறம் என் தந்தையபோல ஒன்னும் குறைவே இல்லே ஜாம்ஜாம்னு ஜாலியாகவே இருக்கோம் உள்ளம் வெள்ளையாக இருக்கணும் தோலின் நிறம் கண்டுக்கவே கூடாது2 days ago · (0) · (0) · reply (0)
- N Kannan"சிவப்பு நிறமாக மாறுவதுதான் அழகு என்று வரையறுப்பது எத்தனை முட்டாள்தனம்? " இதைப் படித்த பிறகாவது நமது பெண்களும் பெண்களை ஏமாற்றும் அழகுசாதன உற்பத்தியாளர்களும் திருந்துவார்களா?
0 comments:
Post a Comment