வெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால்
உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும்
குழப்பமாகவும் இருந்தது. அவளா இப்படி? ஏன்? நான் பார்த்தது உண்மையாகவே அது
தானா? அதெப்படி பொய்யாக இருக்க முடியும்? நான் தான் பார்த்தேனே. பக்கத்து
தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா
நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு
தெரியாமல்…
ஜெயந்த் மூர்த்தியின் நண்பன். இன்னும் திருமணமாகவில்லை.
மூர்த்திதான் ஜெயந்த் அருகிலேயே இருக்கட்டும் என்று தன் வீட்டிற்கு
பின்னாலேயே வீடு பார்த்துக் கொடுத்தான். தனி வீடு. ஜெயந்த்
தனியாகத்தான் வசிக்கிறான். அவ்வப்போது அவன் பெற்றோர் வந்து
பார்த்துவிட்டு செல்வர். வார முடிவுகளில் ஜெயந்த் மூர்த்தி வீட்டில்
தான் இருப்பான்.
கமலாவின் தோழி மாலா மட்டும் கமலாவின் செல்ஃபோனுக்கு கால்
செய்திராவிட்டால், இந்த விஷயம் தனக்கு தெரியவே வந்திருக்காது. மார்க்கெட்
செல்வதாக சொல்லி வெளியேறினாள் கமலா. சிறிது நேரத்தில் மாலாவின் அழைப்பு
கமலாவின் சென்ஃபோனுக்கு. மறந்து வைத்து விட்டு வெளியேறி விட்ட கமலாவிடம்
நேரிலேயே கொடுத்து விடலாம் என மூர்த்தி செல்ஃபோனை எடுத்துக் கொண்டு
பின்னாலேயே தெருவில் இறங்க, கமலா ஓட்டமும் நடையுமாய் பூனையிடம் சிக்காமல்
ஓடும் எலி போல சென்றதைப் பார்த்ததும் துணுக்குற்றான். ஏன் இத்தனை பதட்டமாய்
போகிறாள் என்று. சற்றே மறைவாய் பின் தொடர்ந்த போது, அவள் பக்கத்து
தெருவில் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்க்குள் நுழைவது தெரிந்தது.
பக்கத்து தெருவானாலும் வலது வரிசையில் ஜெயந்தின் வீடு, மூர்த்தி
வீட்டின் பின்புறம் தான் வரும். கொள்ளையிலிருந்து பார்த்தால் ஜெயந்த் வீடு
தெளிவாகத் தெரியும். தோலுக்கு சற்று மேல் வரை நீண்ட மதில்சுவர் தான்
இடையில். துப்பறியும் நோக்கில் அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மூர்த்தி
மறைந்திருந்து ஜெயந்தின் வீட்டைப் பார்க்க, ஜெயந்தின் வீட்டு கொல்லைக்
கதவு, சன்னல் என எல்லாமும் மூடப்பட்டிருந்தது. எப்போதும் மூடாத கதவுகள்
அவை.
மூர்த்திக்குத் தான் நின்றிருக்கும் தரையில் பாதங்கள் சேராமல்
வழுக்குவது போலிருந்தது. தன் காதல் மனைவியை அப்படி நினைத்துப் பார்க்க
முடியவில்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை. அவனுள் பல கேள்விகள். ஒன்றிற்கும்
விடை இல்லை. இடிந்து போய் உட்கார்ந்திருந்தான். 2 மணிக்கு திரும்ப
வந்தாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. மார்க்கெட்டில் கூட்டமாய்
இருந்ததாய் சலித்துக் கொண்டாள். ‘பொய் சொல்கிறாளே, இவளை…’ மனதிற்குள்
கருவிக் கொண்டே அமைதி காத்தான் மூர்த்தி. அன்றிரவு மெல்ல மனைவியை
அணைத்தான். வேண்டாமென்று தள்ளிப் படுத்துக் கொண்டே சோர்வாக இருப்பதாக
காண்பித்துக் கொண்டாள். மூர்த்தி சுருங்கிய புருவத்தை சீராக்கினான்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது. முதலில் நடப்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.
மறு நாளும் அதே 12 மணிக்கு மார்க்கெட் செல்வதாக சொல்லிவிட்டு
வெளியேறினாள். மூர்த்தி ஜெயந்தின் வீட்டை கவனித்தான். ஒருக்கலித்து
மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி
அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. 2 மணி வாக்கில் கமலா வீட்டிற்கு சோர்வாய்
வந்தாள் சில மளிகை சாமான்களுடன். அன்றும் மார்க்கெட்டில் கூட்டமாய்
இருந்ததாய் சலித்தாள். அன்றிரவு மூர்த்தியின் அணைப்பிற்கும் அதே சோர்வைக்
காரணம் காட்டிப் புரண்டு படுத்தாள்.
மூர்த்தி முடிவு செய்து கொண்டான். நாளை கையும் களவுமாக பிடிக்க
வேண்டும், முச்சந்தியில் நிற்க வைத்து நாறடிக்க வேண்டும். எத்தனை
பெரிய துரோகி இந்த ஜெயந்த். அவன் முகத்திரையை கிழிக்க வேண்டும்.
மறு
நாளும் 12 மணிக்கு கமலா மார்க்கெட் செல்வதாய் சொல்லிவிட்டு
வெளியேறினாள். ஜெயந்த் வீட்டை பார்த்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல்
மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ
சாத்துவது தெரிந்தது. மூர்த்தி சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.
சரியாக 5 நிமிட இடைவெளி விட்டு அவளை மறைவாக பின் தொடர்ந்தான். அவள்
ஜெயந்த் விட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே சென்று சில மணித்துளிகள் கடந்ததும் பின்னாலேயே
மூர்த்தி பூனை போல வீட்டு வாசலுக்கு வந்தான். வாசலில் கதவு
விசாலமாய் திறந்திருந்தது. ‘கொல்லைக் கதவை சாத்தி விட்டு முன் கதவை
சாத்த மறந்து விட்டார்களா இன்று? இருக்கட்டும். என்னதான்
நடக்கிறது பார்ப்போமே’ என்று கருவியபடியே மெல்ல உள்ளே
எட்டிப்பார்த்தான்.
கமலா, கிச்சனில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க, ஜெயந்த் சில இனிப்பு
வகைகளை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். தான் எதையோ
நினைத்திருக்க வேறு ஏதோ நடக்கிறதே என்று எச்சரிக்கையான மூர்த்தி
கதவிடுக்கில் ஒளிய, கமலா பேசும் ஓசை கேட்டது ‘அவருக்கு சர்க்கரை
பாகு, கேசரி, அல்வானா ரொம்ப புடிக்கும். நாளைக்கு இந்நேரம்லாம் மேரேஜ்
ஆகி எங்களுக்கு அஞ்சாவது வருஷம். அதான் அவருக்கு சர்ப்ரைஸா
இருக்கட்டுமேன்னு உங்க வீட்ல செஞ்சேன். நாளைக்கு விடிகாலைல 7 மணிக்கு
கொல்லைப்புறமா இதையெல்லாம் குடுத்துடுங்க ஜெயந்த். அப்படியே நீங்களும்
8 மணிக்கு வீட்டுக்கு வந்திடுங்க எங்க அனிவர்சரிக்கு. உங்களுக்குதான்
சிரமம் கொடுத்திட்டேன்’ என்றவளிடம், ’அதனால என்ன அண்ணி
பரவாயில்ல’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெயந்த்.
மூர்த்தி தான் வந்த சுவடே கள்ளங்கபடமில்லாத இந்த இருவருக்கும் தெரிந்து விடக்கூடாது என பதட்டமானான்.
வாசகர் கருத்து
But
எதார்த்தம் என்ன
தன்னந்தனியே ஒரு ஆணும் பெண்ணும் வீட்டுக்குள்ள இருப்பதன்பது அவ்வளவு ஆரோக்கியமான விடயமல்ல
பின் விளைவுகள் ஆபத்தாக அமையலாம்.
ஆண்களுக்கு ‘சந்தேகம் தீராத வியாதி,
அது வந்தாலே தடுமாறும் அறிவென்னும் ஜோதி’ என்றே பாடலுண்டு.
நன்றி - சிறுகதைகள்.காம்