Tuesday, May 13, 2014

ஃபைனான்சியரை விஷம் வெச்சு போட்டுத்தள்ளிய நடிகை! துப்பு துலங்கிய வழக்கு.கோடம்பாக்கம் அதிர்ச்சி

நடிகை சுருதி சந்திரலேகா
நடிகை சுருதி சந்திரலேகா 

நடிகர் கொலையில் பரபரப்பு பின்னணி.. நடிகையை பிடிக்க தனிப்படை விரைவு

சென்னையில் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் புதைக் கப்பட்ட நடிகரின் உடல் திங்கள்கிழமை பிரேத பரிசோ தனைக்காக தோண்டியெடுக்கப்படவுள்ளது. முக்கிய குற்றவாளியான நடிகை சுருதி சந்திரலேகா உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை சென்னை விரைந்துள்ளது. 


தொழில் நஷ்டம் 

 
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பரப்பாடி இளங்குளம் பகுதியைச் சேர்ந்த சூசைமரியான் மகன் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு படித்தவர். இவரது மனைவி சோனா. இவர்களுக்கு ஐபெல், ஆஸ்பெல் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். 


திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த பீட்டர் பிரின்ஸ், தொழிலில் நஷ்டம் ஏற்படவே கம்ப்யூட்டர் சென்டர்களை வேறுநபர்களிடம் கொடுத்துவிட்டு சென்னை சென்றார். 


திரைப்படங்களில் நடித்தார் 

 
மதுரவாயலில் வீடு எடுத்து தங்கிய அவர், ஆன்லைன் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டார். அவருடன் திருநெல்வேலியை சேர்ந்த நண்பர்கள் உமா சந்திரன், ஜான் பிரின்ஸ் ஆகியோரும் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 


ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகளவில் வருமானம் வந்ததால் திரைப்படங்களுக்கு பீட்டர் பிரின்ஸ் பைனான்ஸ் செய்தார். பின்னர் ‘கொக்கிரகுளம்- நெல்லை மாவட்டம்’, ‘காகிதபுரம்’ ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்தார். அத்திரைப்படங்கள் வெளிவரவில்லை. 



நடிகையுடன் பழக்கம் 

 
இவர் பைனான்ஸ் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை சுருதி சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக உருவெடுத்தது. இருவரும் மதுரவாயல் வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பீட்டர் பிரின்ஸை காணவில்லை என்று நடிகை சுருதி சந்திரலேகா கடந்த ஜனவரி 18-ம் தேதி மதுரவாயல் போலீஸில் புகார் செய்தார். இதுபற்றி அறிந்த பீட்டர் பிரின்ஸின் சகோதரர் ஜஸ்டின் சென்னை சென்று விசாரித்தார். அவருக்கு சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. இதனால் கடந்த 12.4.2014-ம் தேதி பாளையங்கோட்டை போலீஸில் பீட்டர் பிரின்ஸை காணவில்லை என்று புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிந்து பீட்டர் பிரின்ஸை தேடிவந்தனர். 


நண்பர்களின் திட்டம் 

 
இந்நிலையில் பீட்டர் பிரின்ஸ் 4 மாதங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை, பாளையங்கோட்டை போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது பல்வேறு விவரங்கள் தெரியவந்தன. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 


ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டபோது, தனக்குரிய இழப்பீட்டுத் தொகையை அளிக்குமாறு உமா சந்திரன், பீட்டர் பிரின்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின் பெங்களூரு சென்ற பீட்டர் பிரின்ஸ் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்திருக்கிறார். அப்பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருக்கிறார். 


இந்நிலையில் பீட்டர் பிரின்ஸ் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் மீது சந்திரலேகாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இதை அறிந்து பீட்டர் பிரின்ஸின் தொழில் கூட்டாளியான உமா சந்திரன் சந்திரலேகாவை சந்தித்தார். அப்போதுதான் பீட்டர் பிரின்ஸைக் கொலை செய்து அவரிடம் இருக்கும் சொத்துகளை அபகரிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரின் உதவியையும் அவர்கள் நாடியிருப்பது தெரியவந்துள்ளது. 


பாலில் விஷம் 

 
கடந்த ஜனவரி 18-ம் தேதி பீட்டர் பிரின்ஸ் தனது வீட்டில் இருந்தபோது ஜான் பிரின்ஸ் உள்ளிட்ட நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். சந்திரலேகா அனைவருக்கும் பால் பரிமாறியிருக்கிறார். அப்போது பீட்டர் பிரின்ஸுக்கு மட்டும் டம்ளரில் விஷம் கலந்து பால் கொடுக்கப்பட்டுள்ளது. அதை குடித்த பீட்டர் பிரின்ஸ் மயங்கி விழுந்துள்ளார். அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 


பின்னர் பீட்டர் பிரின்ஸிடம் இருந்த ரூ.75 லட்சம் ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த 14 சவரன் நகை, கையில் அணிந்திருந்த வைர மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். 


ஜான் பிரின்ஸ் கொடுத்த யோசனைப்படி உடலை காரில் சென்னையிலிருந்து பாளையங்கோட்டை எடுத்து வந்து நள்ளிரவில் ஆசீர்வாதம் நகரில் உள்ள ஓர் இடத்தில் 10 அடி ஆழத்துக்கு குழிதோண்டி புதைத்துள்ளனர். யாரும் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்று நடிகை சந்திரலேகா போலீஸில் புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது”. 


மூவரிடம் விசாரணை 

 
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் உமா சந்திரனின் கூட்டாளிகள் ஆனஸ்ட்ராஜ் (26), சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி நாதன் (32), ரபீக் உஸ்மான் (34) ஆகியோரை பிடித்துள்ளனர். 


அவர்கள் பீட்டர் பிரின்ஸ் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தை சனிக்கிழமை அடை யாளம் காட்டினர். 


இதையடுத்து உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தற்போது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். 


தனிப்படை விரைவு 

 
திங்கள்கிழமை காலை பீட்டர் பிரின்ஸின் உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது. உமா சந்திரன், நடிகை சந்திரலேகா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை சென்னை விரைந்துள்ளது. இவர்கள் பிடிபட்டால் இந்த கொலை வழக்கில் பல்வேறு விவரங்கள் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர். 


இந்த வழக்கை பாளையங் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான போலீஸார் விசாரிக்கின்றனர். 


நன்றி - தஹிந்து

0 comments: