இந்தியாவில் அறிவுஜீவியாகப் பிறக்கக் கூடாது! - இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேட்டி
‘பாரதி’, ‘பெரியார்’ ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்களை இயக்கிக்
கவனம் பெற்றவர் ஞான. ராஜசேகரன் இ.ஆ.ப. தற்போது கணித மேதை ராமானுஜத்தின்
வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமொன்றை ‘ராமானுஜன்’ என்ற தலைப்பிலேயே
இயக்கி முடித்திருக்கிறார். சுயசரிதைப் படங்கள், ராமானுஜத்தின் வாழ்க்கை
வரலாறு, தமிழ்த் திரையுலகம் போன்ற பல விஷயங்கள் குறித்து அவரிடம்
உரையாடியதிலிருந்து...
ராமானுஜன் வாழ்க்கையைப் படமாக்க என்ன காரணம்?
குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன்.
அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன
பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு
நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப் பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு
நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப் பத்தி ஹாலிவுட்ல
வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு.
அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு.
ராமானுஜன் கண்டுபிடித்த ‘ஈக்குவேஷன்’ல (Equation) இன்னும் ஒரு 30%
கண்டுபிடிக்கப்படாம இருக்கு. முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அப்படிப்பட்ட
ராமானுஜனைப் பற்றி நம்மோட பாடப் புத்தகத்தில் இருக்கா? நாம யாராவது அவரைப்
படிச்சிருக்கோமா? அவரை இளைய தலைமுறை தெரிஞ்சுக்கணும்ங்கிற நோக்கத்துக்காகப்
பண்ணியிருக்க படம் ‘ராமானுஜன்'
.
ராமானுஜத்தோட வாழ்க்கையைப் படிச்சப்போ உங்கள் பார்வையில எதெல்லாம் புதுசா பட்டுது?
ஒருத்தரோட வாழ்க்கைச் சரிதத்தை நினைச்ச உடனே படமா எடுக்க முடியாது. அதுல
ஒரு சினிமா இருக்கணும். அவரைப் பற்றிப் படிக்க ஆரம்பிச்சப்போ நிறைய
விஷயங்கள் புதுமையாவும், புதுசாவும் இருந்தது. ராமானுஜன் வெளிநாட்டுல 5
வருஷம் இருந்தாரு. அங்கே அவரை காச நோய் தாக்கிடுச்சு. இங்க வந்து 32 வயசுல
இறந்துட்டாரு. அவரோட மருத்துவக் குறிப்புகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே
ஆங்கிலத்துல இருக்கு. ராமானுஜன் எப்படிச் செத்தார், அது காச நோய்தானா, அவரு
சாப்பிட்ட மருந்துகள் என்ன... இப்படி நிறைய விஷயங்கள் அந்தப் புத்தகத்துல
இருக்கு.
அப்புறம் இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச்
சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க
குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு
ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க
மாட்டேங்குறன்னு சொல்றாங்க
. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே
பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி
வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல
கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த
நிலைமைதான். கொஞ்ச நாளே வாழ்ந்த அந்த அறிஞன் வாழ்க்கையைப் பத்திப் பேச
இப்படி நிறைய இருக்கு.
இந்தப் படத்தில் ராமானுஜன் வாழ்க்கையை எவ்வளவு எதிர்பார்க்கலாம்?
பாரதியார், பெரியார் வாழ்க்கை எல்லாம் நம்ம ஜனங்களுக்குத் தெரியும். இவரோட
வாழ்க்கையைப் பற்றி யாருக்குமே தெரியாது. கதையில் அத விட்டுட்டீங்களே, இத
விட்டுட்டீங்களேன்னு யாரும் சொல்ல மாட்டாங்க.
சமூக அளவிலும், அரசியல் அளவிலும் பாரதி, பெரியார் இருவரும் இருந்ததனால்
அவங்க சந்தித்த பிரச்சினை எதையும் ராமானுஜன் சந்திக்கல. இவர் சந்தித்த
பிரச்சினை என்பதே வேறு. வீட்டுல இருக்கிற மனைவி, அம்மா இவர்களோட
பிரச்சினைதான். இவரை ஆதரிச்சவங்க, ஆதரிக்காதவங்க இப்படித்தான் இவரோட
வாழ்க்கைப் பிரச்சினை எல்லாமே இருக்கும். 1920-ம் ஆண்டோட படம்
முடிஞ்சுடும். அப்போ இருந்த சமூகம், இப்போ இருக்கிற மாதிரி கிடையாது.
இங்கிலீஷ்காரனை நாம ஒப்புக்கொண்ட ஒரு காலகட்டம். காந்தியோட வருகைக்கு
பிறகுதான் இந்த அரசியல் மாற்றங்கள் எல்லாம் வருது. 1920தான் ராமானுஜத்தோட
கடைசி காலகட்டம். அந்தக் காலகட்டத்தில, ஒரு இந்தியனை இங்கிலீஷ்காரன்
அங்கீகரிச்சான் இல்லையா?
அதுதான் படத்தோட சிறப்பம்சம். ராமானுஜனுக்குத்
திறமை இருக்குன்னு நாம கண்டுபிடிக்கல. ஜி.ஹெச். ஹார்டி என்ற ஆங்கிலக் கணித
மேதைதான் கண்டுபிடிச்சார். இதுல ராமானுஜன் வாழ்க்கை முழுமையா இருக்கு.
அதுக்கு என்னால உறுதிதர முடியும்.
ராமானுஜன் வேடத்துல நடிச்சவரை எப்படித் தேர்ந்தெடுத்தீங்க?
பாரதியார், பெரியார் இரண்டு பேருமே பாப்புலரான முகங்கள். ஆனால்,
ராமானுஜத்தை யாரும் பார்த்தது கிடையாது. ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான்
இருந்தது. நான் இயக்கிய சுயசரிதைப் படங்கள் அனைத்துக்குமே முகங்கள்
ஒற்றுமையாக இருக்கணும்னு தெளிவா இருப்பேன்.
ஏன்னா, அந்தப் பாத்திரம் வந்த
உடனே யாரு இதுன்னு கேட்டாங்கன்னா படமே போச்சு. இந்தியாவுக்கு வெளியே
ராமானுஜத்தோட முகம் ரொம்பவே பாப்புலர். ராமானுஜத்தோட முகத்துல மூக்குதான்
பிரதானமா தெரியும். அதை வெச்சு தான் தேடினேன். ஒரு தெலுங்குப் படத்தோட
புகைப்படத்தைப் பார்த்தேன். அதுல ஒரு இளம் நடிகர் ஏறக்குறைய ராமானுஜன்
மாதிரியே இருந்தார். உடனே அவரைத் தேடிப் பிடிச்சு, மேக்கப் டெஸ்ட் எல்லாம்
பண்ணி ஒப்பந்தம் பண்ணினேன். அவரு பேரு அபினய். அவரை ஒப்பந்தம் பண்ணின
பிறகுதான் தெரிஞ்சது அவர் நடிகையர் திலகம் சாவித்திரியோட பேரன்னு!
வரிசையாக சுயசரிதைப் படங்கள் எடுப்பது உங்களைக் களைப்படையச் செய்யலையா?
பாரதி வாழ்க்கைய படமா எடுக்கப்போய் சுயசரிதை டைரக்டர், அவார்டு
டைரக்டர்ங்கிற பெயரெல்லாம் என்மீது திணிக்கப்பட்டதுதான். பல ஜாதித்
தலைவர்களோட ஆட்கள் என்கிட்ட சுயசரிதை எடுக்கச் சொல்லி கேட்கிறாங்க.
எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு கிடையாது. ‘ராமானுஜன்' கதையைத் தயாரிக்க
முன்வந்ததுக்கு இந்தத் தயாரிப்பாளர்களுக்குதான் நன்றி சொல்லணும். சாதனையா,
வரலாறா வாழ்ந்த ஒரு மனுஷனோட வாழ்க்கையில நாம மறுபடியும் ஒரு பயணம் போயிட்டு
வர்ற மாதிரியான உணர்வு சுயசரிதைப் படங்களை இயக்கும்போதுதான் கிடைக்குது.
இதுல களைப்புங்கிற வார்த்தைக்கே இடமில்ல. ஏன்னா இது கலை.
நன்றி - த ஹிந்து
- narayanan Narayanan at port of chennai from Plainsboro
சுமார் 7 வருடங்கள் முன்பாக ராமானுஜன் மற்றும் ஹார்டி இடம் பெற்ற ஒரு முழு நாடகம் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு பெரிய அரங்கத்தில் நடை பெற்றதாக நினைவு.யாராவது அதை பார்க்க நேரிருந்தால் எழுதவும்about 17 hours ago · (0) · (0) · reply (0) - பொன்.முத்துக்குமார் Ponnambalam
இன்னொன்று, குறிப்பாக தமிழகத்தில்தான் மேதைகளுக்கு மரியாதையே இல்லை. சி.வி.ராமன் ஒளிச்சிதறலின்போது ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்து நோபல் பரிசு வாங்கினபோது, அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்ட கும்பல் நமது கும்பல். இங்கு எல்லாம் கட் அவுட் மனிதர்களுக்குத்தான் மரியாதை. மேதைகளோ, கலைஞர்களோ, எழுத்தாளர்களோ உதாசீனப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் இன்னமும். நடிகைக்கு கோயில் கட்டுகிறோம், நடிகனின் கட்டவுட்டுக்கு பாலும் பீரும் அபிஷேகம் பண்ணுகிறோம். நடிகை என்ற ஒரே தகுதிகொண்டிருப்பதற்காக, எட்டாம் வகுப்பே தாண்டிய பதினாறு வயது பெண்ணை பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்கிறோம். நினைக்க நினைக்க கசந்துபோகிறது.about 20 hours ago · (1) · (0) · reply (0) - பொன்.முத்துக்குமார் Ponnambalam
பாராட்டுக்குரிய முயற்சி. நிச்சயமாக ராமானுஜனது கணித சாதனைகள் இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருப்பதாக சொல்கிறார்கள். அதென்னவோ தமிழகத்தில் மட்டும் மேதைகள் இளம் வயதிலேயே மறைந்துவிடுகிறார்கள். இன்னும் ஒரு பத்து அல்லது இருபதாண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இயற்பியலில் ஐன்ஸ்டைன் அடைந்த புகழுக்கிணையாக கணிதத்தில் ராமானுஜனும் அடைந்திருக்கலாமோ என்னவோ.about 21 hours ago · (0) · (0) · reply (0) - Chandan Raj at Government of Tamil Nadu from Madurai
யார் அறிவு ஜீவி? பெரியார் படம் தொழில் நுட்ப ரீதியில் தரமற்ற படம்.about 21 hours ago · (0) · (2) · reply (0) - Veenaiponavan Nallavan from Hyderabad
சினிமாவை அறவே ஒழிக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கும் நான் உங்கள் சேவையை விருப்பு வெறுப்புகளை தாண்டி பாராட்டுகிறேன். உலகின் கணிதத்துறை கண்ட அதிமேதாவிகளில்(prodigy) ராமனுஜம் ஒருவர் என்று தமிழக மக்கள் அறிய ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.a day ago · (11) · (0) · reply (0) - SELVAKUMAR Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research from New Delhi
நல்ல விஜயம், தமிழ் சினிமாவில் ஒரு இந்திய நிர்வாக பனி தேர்வில் தேர்வு பெற்றவர் படம் எடுக்க வந்து இது மாதிரியான தகவல்கலை கொடுபதே நல்லதுa day ago · (1) · (0) · reply (1)
0 comments:
Post a Comment