காமெடிதான் இன்றைய டிரென்ட் என்று சொன்னாலும் பல படங்கள் ரசிகர்களை சிரிக்க
வைப்பதில்லை. ஆனால் காமெடிக்கு கேரன்டி தரும் சுந்தர்.சி போன்ற
இயக்குநர்கள் கோடம்பாக்கத்தில் மிகக் குறைவு. தற்போது மூன்று முன்னணிக்
கதாநாயகிகளை வைத்து ‘அரண்மனை' படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கும்
அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
அரண்மனை படத்தில் என்ன ஸ்பெஷல்?
நான் பண்ற முதல் பேய்ப் படம் இது. முன்னால் எல்லாம் பேய்ப் படங்கள்
அப்படின்னாலே பார்க்கவே மாட்டேன். திடீர் பார்த்தா இந்தப் பேய்ப்
படங்களுக்கு எல்லா இடத்துலயும் ரொம்ப வரவேற்பு. குடும்பத்தோடு படம்
பார்க்குறவங்களைச் சொல்லலாம். என்னோட குடும்பமே ஒரு உதாரணம். எல்லாரும்
ஒண்ணா இருக்கும்போது பேய்ப் படங்கள் டிவிடியில பிளே பண்ணிட்டு ஒவ்வொரு
செகண்டுக்கும் பயப்படுற மாதிரி உட்கார்ந்து ரசிப்போம். நானும் அவங்ககூட
உட்கார்ந்து பேய்ப் படங்கள் பார்த்து பார்த்து ரசிகனாகிட்டேன். அந்தப்
பாதிப்பில் உருவானதுதான் ‘அரண்மனை' படம். அரண்மனை வீட்ல இருக்குறவங்க
ஒருத்தர் உடம்புல பேய் இருக்கு. அந்தப் பேய் யாரு அப்படிங்கிறதுதான் கதையை
நகர்த்திக்கிட்டு போற சஸ்பென்ஸ்.
அப்போ உங்க பாணி காமெடி இதில் இருக்காதா?
முழுக்க பயமுறுத்தினா நல்லா இருக்காது. அதனால காமெடி, கலர்ஃபுல் பாடல்கள்
இப்படி எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படம்தான் ‘அரண்மனை'.
பூர்வீக அரண்மனை வீட்டை விற்பதற்காக வெவ்வேறு ஊர்கள்ல வாழுற ஒரே ஜமீன்
குடும்பத்தைச் சேர்ந்தவங்க, அரண்மனைக்கு வந்து தங்குறாங்க. அப்போ என்ன
நடக்குதுங்கிறதுதான் படம். குடும்பத்தோட வந்தாங்கன்னா சிரிக்கவும்,
பயப்படுவதற்கும் இதில நிறைய ஸ்கோப் இருக்கு.
ஒரு பேய்ப் படத்துக்கு ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய்னு எதுக்கு மூணு அழகான ஹீரோயின்ஸ்?
மூணு பேரோட கேரக்டருமே புதுசா இருக்கும். ஹன்சிகான்னாலே துறுதுறு, பப்லி
இப்படிதான் இருக்கும். இதுல அந்த மாதிரி இல்லாத ஒரு ஆச்சரியமான வில்லேஜ்
கேரக்டர். அதே மாதிரி ஆன்ட்ரியா இந்தப் படத்துக்கு கிடைச்ச ஒரு சர்ப்ரைஸ்
பேக்கேஜ். இதுல எல்லா கேரக்டருமே முக்கியம்தான். ஹன்சிகா, ஆன்ட்ரியா,
லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா இப்படி எல்லாருமே
முக்கியமான கேரக்டர்.
முதல்ல இயக்குநர், அப்புறம் ஹீரோ, இப்போ இயக்கி ஹீரோவா நடிச்சிருக்கீங்க. அடுத்து என்ன திட்டம்?
எனக்கு எந்தத் திட்டமும் கிடையாது. அடுத்த படம் என்ன அப்படின்னுதான்
யோசிப்பேன். ‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘கலகலப்பு' படங்கள்ல நான்
நடிக்கிற மாதிரி எந்த ஒரு பாத்திரமும் கிடையாது. ‘அரண்மனை' கதைல நான்
நடிக்கிற மாதிரி ஒரு கேரக்டர் இருந்துச்சு. நடிச்சேன். இந்த படத்தைப்
பொறுத்தவரை நான் ஹீரோ கிடையாது. எனக்கு லவ், டூயட் எதுவுமே கிடையாது.
அடுத்து நான் பண்ற ரெண்டு படங்களுமே வெறும் இயக்கம்தான்.
உங்க படங்கள்ல வர்ற காமெடி மட்டும் பெரிய வெற்றிபெற என்ன காரணம்?
30 படங்கள் இயக்கியிருக்கேன், முழுநீள காமெடி படங்கள்ன்னா 3 அல்லது 4
சொல்லலாம். என்னோட படங்கள்ல காமெடி ஏன் பேசப் படுதுன்னா, எனக்குப் படங்கள்ல
காமெடியைத் தனி டிராக்கா உபயோகப் படுத்துறதுல உடன்பாடு இல்ல. கதை
நகர்த்துவதற்கு நான் காமெடியை யூஸ் பண்ணிக்கிறேன். காமெடி பெரிய அளவிற்குப்
பேசப்படுறதுனால காமெடி படம்னு முத்திரை குத்துறாங்க. ஆனா நான் ‘அன்பே
சிவம்' பண்ணியிருக்கேன். ‘கிரி' மாதிரி கமர்ஷியல் படங்களும்
பண்ணியிருக்கேன். ‘வின்னர்' பார்த்தீங் கன்னா அது காமெடி படமே கிடையாது.
அது ஒரு பயங்கரமான மசாலா படம். சண்டைக் காட்சிகள் எல்லாம் அவ்வளவு
மெனக்கெட்டு பண்ணியிருப்போம். ஆனா அதுல வைச்ச காமெடி பெருசா பேசப்பட்டதுல
காமெடி படம் ஆயிடுச்சு.
உங்க பெண்ணை நாயகி ஆக்கிற திட்டம் ஏதும் வைச்சுருக்கீங்களா?
அதெல்லாம் கிடையாது. அவங்க விருப்பம்தான். தகப்பனா நல்ல படிப்பு
கொடுக்கணும், நல்ல வசதிகள் பண்ணிக் கொடுக்கணும். அது மட்டும்தான் என்னோட
கடமை.
நீங்களும் அரசியலுக்கு வர்ற திட்டம் இருக்கா?
வீட்டுக்கு ஒருத்தர் போதும்ன்னு நினைக்கிறேன்.
a
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment