அரசியல் புள்ளிகளின் நிழல் உலகம்
மக்கள் நலனுக்காகச் சட்ட விதிகளை இயற்ற வேண்டியவர்கள் பதவி சுகங்களுக்காக அவற்றைக் காற்றில் பறக்கவிடுபவர்களாகவும் இருக்கிறார்கள். எதிர்காலம் பற்றிய தெளிவு இல்லாத மொக்குகளின் இனிய கனவுகள் நிறைந்த இரவுகளைப் பாழடிக்கிறோமே என்ற பிரக்ஞையின்றி உருண்டுபுரண்டு கிடக்கும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தியுள்ளது கால்கேர்ள் (2012) என்னும் ஸ்வீடிஷ் படம்.
அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் அந்தரங்க வாழ்வில் ஈடுபடும் அருவருப்பான செயல்களை அம்பலப்படுத்தும் இந்தப் படத்தை எதிர்த்து ஸ்வீடனில் பலத்த புயல் வீசிக்கொண்டிருக்கிறது. படத்தில் ஒரு கேரக்டர் தன் தந்தையைத்தான் குறிக்கிறது எனக் கூறி முன்னாள் பிரதமர் மகன் தடைகேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறார் சீர்த்திருத்தப் பள்ளி எனப்படும் ஜுவனைல் இல்லத்தில் தங்கியிருக்கும் ஐரீஸ் என்ற 14 வயதுப் பெண்ணைச் சுற்றித்தான் படம் நகர்கிறது. அரசியல்வாதியின் காமப்பசிக்காக அவள் துரத்தப்படுகிறாள்.
தன் தோழியோடு தினம் தினம் இரவில் சுவரேறிக் குதித்து, நகருக்குள் சென்று ஊர் சுற்றிவிட்டுத் திரும்புகிறாள் ஐரீஸ். ஏற்கனவே தடம்புரண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கை மேலும் எக்கச்சக்கமாக மாட்டிக்கொள்ளும் நிலைக்கு இந்த இரவுப் பயணம் அமைந்துவிடுகிறது. பெண்களை உயர்மட்டப் பேர்வழிகளுக்கு வாடகைக்கு விடும் நள்ளிரவுக் கழுகுதான் டாக்மர் கிளான்ஸ். அவளின் கண்களுக்கு இந்த அழகான ஏழைப்பெண்கள் சிக்க, கதையே மாறுகிறது. அவர்களது வாழ்க்கையும்தான்.
படத்திற்கு வேண்டிய தரவுகளைத் திரட்டுவது, மெரிட்டா வோன் - எனும் எழுத்தாளரிடம் தகுந்த திரைக்கதையை எழுதி வாங்குவது, துப்பறியும் காட்சிகளில் மெல்லிய ஹார்ட் பீட்களை மாட்டியாஸ் பார்ஜெடு என்ற இசையமைப்பாளரிடம் கேட்டுப் பெறுவது ஒளிப்பதிவாளர் ஹாய்ட்வான் ஹாய்ட்மாவின் உதவியோடு சலிக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிகளை எடுத்துக்கொண்டு அதைச் சின்னஞ்சிறு நறுக்குகளாக எடிட் செய்துகொள்வது என இயக்குநர் மிக்கெயில் மார்சியானின் 5 வருட உழைப்பு படத்தில் அங்குலம் அங்குலமாகத் தெரிகிறது.
ஐரீசையும் சொன்ஜாவையும் இரவில் பல்வேறு இன்டர்கான்டினென்டல் ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் படத்தின் முன்பாதியில் நிறைந்து வழிகின்றன. ஒரு ஓட்டலிலிருந்து இன்னொரு ஓட்டலுக்குக் காரில் செல்கையில், “எனக்கு டயர்டா இருக்கு” என ஐரீஸ் கூற “உன்னைத்தான் அவங்களுக்கு பிடிச்சிருக்கு, முரண்டு பிடிக்காதே” என்று அவளது கன்னத்தில் அறையும் காட்சியில் மட்டுமல்ல, இறுதிப் பகுதியில் சிபிஐயின் விசாரணையில் சிக்கினாலும் சலனமின்றி இருப்பதும், கடைசியில் இளம் புலனாய்வு அதிகாரி காரில் அடிபட்டு இறக்கும்போது கண் குளிரச் சற்றே சிரிப்பதும் அற்புதம். டாக்மர் கிளான்ஸ் பாத்திரம் ஏற்ற பெர்னிலா ஆகஸ்ட் நடிப்பும் ஐரீஸாக நடித்த சோபியா காரமிர் எனும் இளம் நட்சத்திரமும் படத்திற்கு முக்கிய பலம்.
தவிர, இளம் துணைநிலை போலீஸ் புலனாய்வு அதிகாரி சான்ட்பெர்க்காக நடித்த சைமன் ஜே. பெர்க்கரின் நடிப்பு படத்திற்கு எரிபொருள். சுழலும் ஆடியோ டேப் ரோல்களில் டெலிபோன் பேச்சுக்களைப் புலனாய்வு அலுவலகத்தின் ரகசிய அறைகளில் பெண் டெக்னிஷியன்கள் பதிவு செய்வது, லக்சூரி சூட்களில் நுழையும் குற்றவாளிகளை காருக்குள்ளிருந்தே போட்டோ எடுப்பது, தயாரித்த அறிக்கையைச் செயலக அதிகாரிகள், நீதித்துறை அமைச்சர், பிரதமர்வரை கொண்டு செல்லும்போது தேர்தல் நேரத்தில் பிரச்சினையைக் கிளப்ப வேண்டாம் என்று கூறியவர்களை மீறிச் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிக்கையையும் ஆதாரங்களையும் வெளியிடுவது, பின்னிரவில் வீடு திரும்பும்போது, நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் பாய்ந்து வந்து மோதிச் சாகடித்துவிட்டுச் செல்வது என அனைத்திலுமே நம்பகத்தன்மை வலுவாகக் கூடியுள்ளது.
மக்கள் திரளும் தேர்தல் பிரச்சாரங்களில் தோன்றி, “பெண்கள் கல்வி, சமவாய்ப்பு, முன்னேற்றம் பெற எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று படத்தில் பல காட்சிகளில் முழக்கமிடும் அரசியல் புள்ளிகள் நிழல் உலகத்திலோ, பெண் குழந்தைகளின் வாழ்வைச் சுரண்டுகிறார்கள்.
அரசியல் கூட்டுச் சதியைப் பருந்துப் பார்வையோடு வெளிப்படுத்தியுள்ள இந்தப் படத்தின் இயக்குநருக்கு, டொரான்டோ 2012 உலகப் பட விழாவில் சிறந்த இளம் இயக்குநருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நன்றி- த இந்து
0 comments:
Post a Comment