“
நட்சத்திரங்களுடன் என் வானம்: சிவகுமார் - வளர்த்தவர்களை நினைத்துப் பார்க்க
இந்த அளவுக்குதானே ஃப்ரேம் வெச்சிருக்கே?” என்றபடி லேசாகக் குனிந்து நின்றார் சிவகுமார். அவர் வீட்டு மொட்டை மாடியில் உடைந்த இரும்பு நாற்காலியில் ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து இன்னொரு காலைத் தரையில் ஊன்றி நின்றுகொண்டிருந்தார். கைகளைக் கால் மீது மடக்கி வைத்திருந்த விதத்தைத் தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சிரிப்பாக இருந்தது.
“பின்னால் இருக்கற மரத்தை அவுட் ஃபோகஸ் பண்ணிட்டே இல்லே…” என்று போட்டோகிராபருக்குத் தொடர் குறிப்புகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்தப் பின்னணியைத் தேர்வு செய்தவர் அவர்தான். இப்படி ஃப்ரேம் வை… இந்த அளவுக்கு லைட் கிடைக்கும் என்றெல்லாம் கணக்கு சொல்லி அங்கே கொண்டுபோய் நிறுத்தியிருந்தார். அந்த பெர்ஃபெக் ஷன்தான் சிவகுமார்.
கேண்டிட் கேமரா என்று சொல்லப்படும் ஜாலி நிகழ்வுகளை குறும்பு டீம் என்ற பெயரில் பத்திரிகையில் செய்துவந்த காலம். அப்போது ஜீன்ஸ் படத்தின் ரிலீஸை ஒட்டி ஒரு விஷயத்தைச் செய்து அதை சினிமாக்காரர்களுக்குப் படமாகப் போட்டுக் காட்டலாம் என்று திட்டம். அதாவது ‘மேக்கிங் ஆஃப் ஜீன்ஸ்’ என்ற பெயரில் ஒரு அழைப்பிதழ் அச்சடித்து அதைத் திரைப் பிரபலங்களுக்குக் கொடுத்து ஒரு நிகழ்ச்சி நடத்திப் பிரபலங்களின் ரியாக் ஷனைக் கட்டுரையாக்குவதுதான் திட்டம். ஏப்ரல் ஒன்றாம் தேதி நிகழ்வு அது.
அந்த நிகழ்வுக்கு முதல் ஆளாகத் தங்கை பிருந்தாவுடன் வந்து நின்றார் சூர்யா. “காலங்கார்த்தால அப்பா எழுப்பி விட்டுட்டாரு. இன்னிக்கு அவருக்கு ஷூட்டிங்… அதனால எங்களை அனுப்பிட்டாரு. ஏப்ரல் ஒண்ணு… யாராச்சும் ஏமாத்து வேலை பண்ணப் போறாங்கனு சொன்னப்பகூட நம்மள மதிச்சு அழைப்பு வெச்சிருக்காங்க… போகணுமா வேண்டாமானு என்ன கேள்வின்னு சொல்லி அனுப்பிட்டாரு… நாங்க மொக்கை வாங்கிட்டு நிக்கறோம்” என்றார் வெட்கச் சிரிப்போடு.
‘மேக்கிங் ஆஃப் ஜீன்ஸ்’ என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கப்படும் விதம் பற்றி டாகுமெண்டரி உருவாக்கித் திரையிட்டுவிட்டுப் பிரபலங்களின் கருத்துக் கேட்டபோது சூர்யா புலம்பலாகச் சொன்ன வார்த்தைகள் இவை. போய்த்தான் ஆக வேண்டும் என்று சிவகுமார் சொன்னது அவருடைய கமிட்மெண்ட்!
சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அவரைச் சொல்லலாம். எந்தத் தகவல் பற்றியும் அவரிடம் கருத்துக் கேட்கலாம். அடிப்படையில் ஓவியக் கல்லூரியில் படித்தவர் என்பதால் அவர் பார்வையில் எல்லாமே படமாகவே விரியும். அவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டு அவர் சொல்லும் விஷயத்தை நாம் சித்திரமாகவே வரைந்துவிட முடியும்.
பேட்டியின் பின்னணி எதுவாக இருந்தாலும் அந்த வேலை பத்தே பத்து நிமிடங்களில் முடிந்துவிடும்.
நினைவாற்றல் சிவகுமாரின் பிரத்யேக குணம். சென்னையில் அவர் தன் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக் குழுவில் இருந்தார். மேஜர் சுந்தர்ராஜன் மறைந்த நாளில் அவரைப் பற்றி சிவகுமாரிடம் கேட்டுக் கட்டுரை எழுதலாம் என்ற எண்ணத்தோடு சிவகுமாரைத் தொடர்புகொண்டபோது பீச்சில் உடற்பயிற்சி முடித்து வந்துகொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதழ் அச்சுக்கு அனுப்ப வேண்டிய தினம் என்பதால் காலையிலேயே அவர் வீட்டுக்குப் போய்ப் பேட்டியை முடித்துவிடலாம் என்று திட்டம்.
சிவகுமார் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். “வாப்பா… இதுல எந்த போட்டோ வேணும்னு சொல்லு…” என்றார். அவர் கையில் கத்தையாக படங்கள் இருந்தன. அதில் சிவகுமாரும் மேஜர் சுந்தர்ராஜனும் மேடையில் ஒன்றாக நடிப்பது போன்ற படங்கள் கொஞ்சம் இருந்தன. இன்னும் கொஞ்சம் படங்களில் நாடக மேடையில் நடந்த பாராட்டு விழாக்கள் பதிவாகியிருந்தன. அடுத்த செட், இருவரும் கேஷுவலாக விழாக்களில் கலந்துகொண்ட படங்கள். இருவருக்குமான நெருக்கம் பற்றி என்ன கேட்கப் போகிறோம் என்ற குழப்பத்தோடு போனவனுக்குப் புதையல் போல விஷயங்களைப் புகைப்படங்களாகக் காட்டினார்.
“படங்களை எல்லாம் எடுத்துக்கறேன். எந்த படம் லே அவுட்டுக்கு அழகா இருக்குமோ அதை யூஸ் பண்ணிட்டு ரிட்டர்ன் பண்ணிடுறேன்” என்றதும், “பத்திரிகைகாரங்க கைக்குப் படம் போனா திரும்ப வாங்கறது கஷ்டம். இதுல எந்த போட்டோ வேணுமோ செலக்ட் பண்ணி எடுத்துக்கோ” என்றவர், தேர்வு செய்த புகைப்படத்தின் பின்னணி பற்றியும் மேஜர் சுந்தர்ராஜன் தனக்கு கொடுத்த வாய்ப்புகள் பற்றியும் விளக்கமாகப் பேசினார்.
பேச்சின் முடிவில், “இந்தக் கட்டுரையை இப்படியே எழுதினா ரெண்டு பக்கம் வரும்… இஷ்யூ டெட்லைன்ல இதுக்கு மேல இடம் இருக்காது. இது கரெக்டா இருக்கும்ல…” என்றார். ஒரு பத்திரிகைக்கு எவ்வளவு தகவல் வேண்டும் என்று உணர்ந்து பேசும் அவருடைய மொழி ஆச்சரியமான விஷயம்.
அந்தக் கட்டுரை வெளியான பிறகு ஒரு சந்திப்பின்போது, “நல்லாயிருந்துச்சுப்பா உன் கட்டுரை… நன்றி!” என்றார். “உங்க தகவல்களுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்” என்றால், “இல்லப்பா… மேஜர் பத்தி நினைக்கிறப்ப கூடவே என் நினைவும் வரணும்ல… அந்த நினைப்பு வந்ததுக்கு நன்றி… வெறுமனே சினிமா பத்தி மட்டும் செய்தி வந்துகிட்டிருந்தா நாம நம்மள வளர்த்தவங்கள எப்பதான் நினைச்சு பார்க்கறது…” என்றார்.
செய்திகள், படங்கள் மட்டுமல்ல, இப்படிப்பட்ட பாடங்களையும் தருவதுதான் சிவகுமாரின் சிறப்பு.
தொடர்புக்கு [email protected]
THANX - THE HINDU
0 comments:
Post a Comment