Tuesday, April 08, 2014

கவுண்டமணி - ஒரு காமெடி சகாப்தம்

தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் வசூலை வாரிக் குவித்த படங்கள் கரகாட்டக்காரனும் சின்ன தம்பியும். இரண்டிலும் இசையும் நகைச்சுவையும் முக்கியப் பங்கு வகித்தன. இரண்டுமே கவுண்டமணி நடித்த படங்கள். 75 வயது நிறையும் கவுண்டமணி 700க்கும் மேற்பட்ட படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தவர். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் யுடியூபிலும் தொலைக் காட்சி சேனல்களிலும் அதிகம் பார்க்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளின் நாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.



கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடித்த ஒரு நாடகத்தில் கவுண்டர் என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதனால் 16 வயதினிலே படத்தில் இவரை அறிமுகப்படுத்தியபோது இயக்குநர் பாரதிராஜா சுப்பிரமணியைக் கவுண்டமணி ஆக்கிவிட்டார்.


கதாநாயகர்களுடன் மட்டுமே அடையாளம் காணப்படும் முத்திரை வசனங்களைக் கவுண்டமணி தன் பாணியில் காமெடி ரசத்துடன் பேசித் திரையரங்குகளை அதிரவைத்தார். அறிமுகப் படத்திலேயே ‘பத்த வச்சிட்டயே பரட்ட’ என்னும் பஞ்ச் வசனம் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ‘பெட்ரோ மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, சூரியன் படத்தின் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ போன்ற வசனங்கள் பல்வேறு தருணங்களில் அன்றாட வாழ்வில் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.


கவுண்டமணி செந்தில் ஜோடியினர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர் சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களும் ரசிகர்களைச் சிரிக்கவைத்தன. நடிகன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, தாய்மாமன், மாமன் மகள் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் பெரும் சிரிப்பை எழுப்ப வல்லவை.


ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய படங்களாலான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் போன்றவற்றில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுத்ததில்லை. மன்னன், உழைப்பாளி ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் செல்வார் கவுண்டமணி. விஜயசாந்தி முன்பு திரையரங்க மேடையில் ரஜினிகாந்த் உடைந்த கண்ணாடியுடன் தோன்றும் காட்சியில் ரஜினியைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.


இயக்குநர் மணிரத்னத்தின் பகல் நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களிலும் ஷங்கரின் ஜெண்டில்மேன் படத்திலும் கவுண்டமணிதான் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டர் மன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாகவும் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். உதயகீதம் படத்தில், செந்தில் “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணேன்” என்பார். பதிலாக கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என்பார்.


இயக்குநர் மணிவண்ணன் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியதும் கவுண்டமணியின் நகைச்சுவைப் படங்கள் குறையத் தொடங்கியதும் ஒருசேர நடந்தன. கவுண்டமணி சக்கை போடு போட்ட காலத்தில் சக நடிகர்களை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் நாகரிகமற்றுக் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் கவுண்டமணியின் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை.


நகைச்சுவைப் பாத்திரங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் தனது பங்களிப்பை முழுமையாகச் செலுத்திவருகிறார் கவுண்டமணி. இடையில் சில வருட ஓய்வுக்குப் பின்பு மீண்டும் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார். இதில் 49 ஓ படத்தின் கதாநாயகனே கவுண்ட மணிதான். ஏற்கனவே பணம் பத்தும் செய்யும், ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்ட மணி கதாநாயகனாக நடித்துள்ளார்.


கவுண்டமணி தான் ஒரு திரைப்பட நடிகர் என்பதில் தெளிவாக இருக்கிறார். தன்னைப் பார்க்க வேண்டுமானால் ரசிகர்கள் திரையரங்கிற்குத்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அநாவசியமாகப் பிற ஊடகங்களில் அவர் தலைகாட்டுவதில்லை. தொலைக்காட்சிகளிலோ கலை நிகழ்ச்சிகளிலோ கவுண்டமணியைப் பார்க்க முடியாது. நகைச்சுவையைப் போலவே இதிலும் அவரது பாணி தனிப் பாணிதான்.

நன்றி - த இந்து

0 comments: