Friday, March 14, 2014

மக்கள் வரிப்பணத்தில் எம்.பி.,க்கள் அனுபவிக்கும் 'அடேங்கப்பா...' சலுகைகள்!

பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும், லோக்சபா, எம்.பி.,க்கள், அவர்கள் பதவி காலத்திலும், அதன் பிறகும், அனுபவிக்கும் சலுகைகளைப் பார்க்கும் போது, ஏழைகள் நிறைந்த நம் நாட்டின், மக்கள் பிரதிநிதிகள், எத்தகைய ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர் என்பது தெரிய வருகிறது.


எம்.பி.,க்களுக்கு, மாத சம்பளம், 16 ஆயிரம் ரூபாய்; தினப்படி, 1,000 ரூபாய்; பென்ஷன், குறைந்தபட்சம், 8,000 ரூபாய், தொகுதி நிதி, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இது போக, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், இலவசமாக, 'ஏசி' முதல் வகுப்பு ரயில் பயணம். குடும்பத்தினருக்கும், இலவச விமான பயணம், மருத்துவ செலவு, வெளிநாடுகளில் மருத்துவ சிகிச்சை, டில்லியில் சொகுசு பங்களா, ஆண்டுக்கு, ஒன்றரை லட்சம் இலவச போன் அழைப்புகள், 25 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இதர வசதிகள் அவர்களுக்கு கிடைக்கிறது. பார்லிமென்ட் நடக்கும் போது, எம்.பி.,க்கு, தினப்படியாக, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பார்லிமென்ட் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குள் மீண்டும் கூடினால், சபை நடக்காத, இடைப்பட்ட, மூன்று நாட்களுக்கும், அவர்களுக்கு படி வழங்கப்படும்.


அலுவலகம்:
முன்னாள் உறுப்பினர்கள், எவ்வளவு காலம் உறுப்பினராக இருந்தாலும், குறைந்த பட்சம், மாதம், 8,000 ரூபாய், ஓய்வூதியமாக பெற தகுதி பெறுகின்றனர். மேலும், ஐந்து ஆண்டுக்கு மேல் உறுப்பினராக இருந்திருந்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் கூடுதலாக, 800 ரூபாய் வழங்கப்படும். 9 மாதத்திற்கு மேல் கூடுதலாக இருந்தால், அது ஓராண்டு என கணக்கிடப்பட்டு, மேலும், 800 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். எம்.பி.,யாக இருந்தவர் இறந்து விட்டால், அவருக்கு கிடைக்கக் கூடிய ஓய்வூதியத்தில், 50 சதவீத் தொகை, அவர் மனைவி அல்லது கணவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.

லோக்சபா, எம்.பி., அலுவலகம் வைத்துக் கொள்ள, மாதம், 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 4,000 ரூபாயை அலுவலகப் பொருட்கள் வாங்கவும், கடிதப்போக்குவரத்துக்கு, 2,000 ரூபாயும், உதவியாளர் நியமனத்திற்கு, 14 ஆயிரம் ரூபாயும் செலவழிக்கலாம்.


தொலைபேசி பயண சலுகைகள்:

பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், குழு கூட்டங்களில் பங்கேற்கவும் பயணப்படி வழங்கப்படுகிறது. உறுப்பினர் வழக்கமாக வசிக்கும் இடத்திலிருந்து, பார்லிமென்ட் அல்லது சபைக்குழு கூட்டம் நடைபெறும் இடம் வரை சென்று திரும்ப, இந்த பயணப்படி வழங்கப்படும். ரயில் பயணம் என்றால், ஒரு முதல் வகுப்பிற்கான கட்டணமும், ஒரு இரண்டாம் வகுப்பிற்கான கட்டணமும் வழங்கப்படும். விமானம் மூலமும் பயணம் செய்யலாம். சாலை வழியாக பயணம் செய்தால், கி.மீ.,க்கு, 13 ரூபாய் வழங்கப்படும். உறுப்பினர் வசிக்கும் இடத்திற்கும், பார்லிமென்ட் அல்லது குழுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, நேரடியாக செல்ல, விமான சேவை கிடைக்காத பட்சத்தில், ஒரே நாளில், தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் வகையில், எந்த வகை பயணத்தையும் உறுப்பினர் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் மனைவி அல்லது கணவர், பார்லிமென்ட் சாதாரண கூட்டத்தொடர் நடைபெறும்போது, ஒரு முறையும், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது, இரு முறையும், ஆண்டுக்கு, எட்டு தடவைக்கு மிகாமல், உறுப்பினர் வசிக்கும் இடத்திலிருந்து டில்லிக்கு விமானம் அல்லது ரயில் அல்லது சாலை வழியாக வந்து திரும்பலாம்.


இலவச ரயில் பயண அட்டை:

ஒவ்வொரு உறுப்பினரும், அவரோ அவருடைய கணவர் அல்லது மனைவியோ, இந்தியாவின் எந்த பகுதிக்கும் முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் பயணிக்கவும் அவருடைய உதவியாளர், 'ஏசி' இரட்டை படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கவும் வசதியாக, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.


விமான பயணம்:


ஒவ்வொரு, எம்.பி.,யும், அவரின் கணவர் அல்லது மனைவியுடனும் அல்லது உதவியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆண்டுக்கு, 34 முறை இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் விமான பயணம் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் கணவர் அல்லது மனைவி அல்லது உதவியாளர், உறுப்பினரைப் பார்ப்பதற்கென, எட்டு முறை விமானப் பயணம் மேற்கொள்ளலாம்.


மருத்துவ செலவு:


டில்லியில் உள்ள, மத்திய சிவில் சர்வீசை சேர்ந்த முதல் பிரிவு அதிகாரிக்கு கிடைக்கக்கூடிய மருத்துவச் செலவுக்கு, இணையான தொகை, உறுப்பினருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது; வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவதற்கும், உரிய பரிசீலனைக்குப் பிறகு அனுமதி தரப்படும். பாரிலிமென்டில் அமைக்கப் பட்டுள்ள, மருத்துவ மையத்தில் உறுப்பினர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்கப்படும்.


தங்கும் இடம்:

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருக்கு, உரிய இருப்பிடம் ஒதுக்கப்படும் வரை, தற்காலிகமாக, டில்லியில் உள்ள, மாநில விருந்தினர் மாளிகை அல்லது ஜன்பத் ஓட்டலில் தங்கலாம். எம்.பி.,க்களுக்கு, அவரவர் வகித்த பதவிக்கு ஏற்ப, உரிய சொகுசு பங்களாக்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு, எம்.பி.,யும், மூன்று தொலைபேசி இணைப்புகளை வைத்துக் கொள்ளலாம்; இதில், ஒன்று, இன்டர்நெட் இணைப்புடன் கூடியதாக இருக்கும். இரண்டு மொபைல் போன்களும் வைத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு இந்த இணைப்புகள் மூலம், 1.5 லட்சம் அழைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


முன்பண வசதி:


பொருட்கள் வாங்க, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகைப்படாமல், முன்பணம் வழங்கப்படும்; இதை உறுப்பினர், 60 மாதத் தவணையாக திருப்பிச் செலுத்தினால் போதும்.


கம்ப்யூட்டர்:


ராஜ்யசபா, எம்.பி.,க்களுக்கு, கம்ப்யூட்டர் வாங்க, 1.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


ஓய்வூதிய தொகை:

முன்னாள் உறுப்பினர்கள், எவ்வளவு காலம் உறுப்பினராக இருந்தாலும், குறைந்த பட்சம், மாதம், 8,000 ரூபாய், ஓய்வூதியமாக பெற தகுதி பெறுகின்றனர். மேலும், ஐந்து ஆண்டுக்கு மேல் உறுப்பினராக இருந்திருந்தால், ஒவ்வொரு மாதத்திற்கும் கூடுதலாக, 800 ரூபாய் வழங்கப்படும். 9 மாதத்திற்கு மேல் கூடுதலாக இருந்தால், அது ஓராண்டு என கணக்கிடப்பட்டு, மேலும், 800 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். எம்.பி.,யாக இருந்தவர் இறந்து விட்டால், அவருக்கு கிடைக்கக் கூடிய ஓய்வூதியத்தில், 50 சதவீத் தொகை, அவர் மனைவி அல்லது கணவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு வழங்கப்படும்.


நன்றி - தினமலர்

0 comments: