Thursday, March 06, 2014

வெளிச்சத்தின் நிழல்- பாலியல் சிறுகதை -கே.மதுபால்

மலையாள மூலம்: கே.மதுபால்
தமிழில்: குளச்சல் மு.யூசுப்

ஆண் விபச்சாரியின் மனோபாவம் யூகங்களுக்குட்படாத ஒன்று. புரிந்துகொள்ள
முயற்சிக்குந்தோறும் அது வேறு ஏதேதோ இடங்களுக்குக் கொண்டு செல்லும்
வழித்தடத்தின் வரைபடமாக இருந்தது. கணக்குப் புத்தகத்தின் கோடுகளிடப்படாத
காகிதங்களில் பெண்ணுடைய மார்பகங்களையும் முகத்தையும் வரையத் தொடங்கியது
நான்காம் வகுப்பில் படிக்கும்போதுதான். யாரையாவது கற்பனைசெய்து வரையத்
தோன்றியபோது’ ராஜேஷ் அலெக்ஸாண்டர், வகுப்பாசிரியையை மனத்தில்
நினைத்துக்கொண்டான். அலெக்ஸாண்டர் வரைந்தது, ஆசிரியையின்
முகத்தையல்ல.சேலையினூடே பாதியளவு வெளித் தெரியும் மதர்த்த மார்பையும்
அலையாக நெளியும் வெளுத்த வயிற்றையுந்தான் அவன் வரைந்து பார்த்தான்.
சித்திரங்களுக்கு மெல்ல உயிர்த் துடிப்பு கைவரப்பெற்றபோது, அவன் பாடப்
புத்தகங்களை மறந்தான்.

கிராமத்திலிருந்தும் அதன் சூழல்களிலிருந்தும் மெல்ல மெல்ல
நகரப் பிரதேசங்களுக்கு ராஜேஷ் அலெக்ஸாண்டர் எனும் காமுகனின் விஷயங்கள்
கசிந்து பரவியபோது, அவனைத் தெரிந்தவர்கள் அவன் சொல்வதை பின் புதிய
வலைகளைப் பின்னத் தொடங்கினார்கள்.
புதுவயல் புத்தன் வீட்டின் ஏலியாம்மா, ராஜேஷ் அலெக்ஸாண்டரைப்
பிரசவித்தபோது, பக்கத்து வீட்டு அக்கா ஒருத்தி சொன்னாள்: அந்த வீட்டில்
ஒரு காமாந்தகன் பிறந்திருக்கிறான். பக்கத்து வீட்டு அக்கா, ராஜேஷ்
அலெக்ஸாண்டரின் செயல்களை அறிவதற்கு முன்பே மண்ணின் அடியாழத்தை அறிந்து
தனது தீர்க்கமான முன்முடிவைப் பிரஸ்தாபித்தாள். அவளது தீர்க்கதரிசனத்தின்
சாத்திய யதார்த்தத்தை அவனது மரபணுக் கட்டத்திலேயே
அவள்புரிந்துகொண்டிருக்க வேண்டு மென்று ராஜேஷ் அலெக்ஸாண்டரின் பிந்தைய
காலச் செயல்பாடுகளைக் கேட்டறிந்தவர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண் விபச்சாரிகளின் சதா காலச் சிந்தனை, திறந்தோ திறக்கவிருக்கவோ
வாய்ப்புகள்கொண்ட பூட்டுகளைப் பற்றியதாகவோ முக்கியத்துவமில்லாத
வாசல்களைப் பற்றியதாகவோதான் இருக்கும். அவர்களது மனதில் சிந்தனையாக
உருக்கொள்வது இணைசேரும் உடல்கள் அல்ல. அனுமதிதான் பிரதானம். இயற்கையின்
சலனங்களிலிருந்தும் பருவகால மாற்றங்களிலிருந்தும் விபச்சாரர்களது உடல்
அகன்று நிற்கிறது. பேதமற்ற ஒரே தாளலயத்தில்தான் தங்களது செயல்பாடுகள்
அமைந்திருக்கிறதென்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். நித்தமும்
நித்தியமுமான ஒரு உடல் சேர்க்கைக்குப் பிரவேசிக்கப்பட்டதன் பின்னாலுள்ள
செயல்களில் ஒரு துரிதத்தன்மையை அவர்கள் உருவாக்கிக்
கொண்டிருந்தார்கள்.இது, அவர்களது இயல்புகளிலிருந்து முற்றிலும்
வேறுபட்டது.

ராஜேஷ் அலெக்ஸாண்டரின் மொபைல் ஃபோன் சங்கீதமிசைப்பது எப்போதுமே அந்திப்
பொழுதுகளில் மட்டும்தான். பகலின் அந்திமக் காலம்வரை அவனுடைய தொலைபேசி ஒரு
சவப்பெட்டிபோல் அமைதியாக இருக்கும். அப்போது அவன் தனது வீட்டின்
மூடப்பட்ட அறைக்குள் தியானத்திலிருப்பான். இதுவரை அவன் புலர்காலைச்
சூரியனைப் பார்த்ததில்லை. மத்தியான வேளைகளில் கண் விழிப்பது முதல் உடலைக்
குறித்த அக்கறைகள்தான். எழுந்த பிறகு பக்கத்திலிருக்கும் ஓட்டலிலிருந்து
பரோட்டாவும் மட்டன் குழம்பும் (இது அவ்வப்போது வேறுபட்ட மாமிசக்
குழம்புகளாகவும் மாறும்) டீத்தூள் குறைவாகவும் தண்ணீர் அதிகமாகவும் ஒரு
டீயும் குடித்துவிட்டு அருகிலிருக்கும் பவர் கிங் ஜிம்னாசியத்திற்குச்
சென்று உடலுக்கு ஒத்தாசையான சில பயிற்சிகளைச் செய்துவிட்டு வருவான்.

திரும்பவும் ஒரு மணி நேரம் தூங்கி, சாயங்காலம் எழுந்து, யோகாவும்
தியானமும் செய்துமுடித்த பிறகு தொலைபேசியைத் தயாராக வைத்துக்
காத்திருப்பான். அப்போது முதல் தொலைபேசியின் நாமசங்கீர்த்தனம் தொடங்கும்.
உடனே அவனுடைய மனது அன்றைய இரவைப் பகிர்ந்து கொள்ளவிருக்கும் வீடுகளைப்
பற்றிய திட்டமிடல்களுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கும்.

ஓயாசிஸ் பாரின் பிசியான அறையில் ராஜேஷ் அலெக்ஸாண்டர் வழக்கமான
மதுக்கோப்பையின் எதிரில் அமர்ந்திருந்தான். வோட்காவில் சிறிது லெமனேடைக்
கலந்து அதில் ஒரு எலுமிச்சம்பழத்தை முழுவதுமாகப் பிழிந்து சிறிது உப்பைத்
 தம்ளரின் வாய்ப் பகுதியில் தேய்த்து மிக மெதுவாக ஒரு சிப் வோட்காவை
உறிந்தெடுத்துவிட்டு நாவால் உதடுகளைத் துடைத்துக்கொண்டான். ராஜேஷ்
அலெக்ஸாண்டர் இருக்குமிடத்திலிருந்து பார்த்தால் பாரின் உட்பகுதி
முழுவதும் ஒரு வைட் ஆங்கிள் லென்ஸ் வழியான காட்சிபோல் தெரியும்.

வெயிட்டர்களும் பிற குடியர்களும் ஏதோ ஒரு அனுஷ்டான விதியை
நிறைவேற்றிக்கொண்டிருப்பதை அவன் நெடுநேரம் பார்த்தபடியே அமர்ந்திருந்து
ஒவ்வொரு மிடறாக அருந்திக்கொண்டிருந்தான். கூடவே, ஒரு ஃபிஷ்
ஃபிங்கருக்கும் ஆர்டர் செய்தான்.

உலகிலுள்ள எல்லாக் காமாந்தகர்களுடைய ஆராதனைக்கும் பாத்தியமானவர் இந்துப்
புராணத்தில் வரும் பராசர மகரிஷிதான். பகல் பொழுதில் பனி மலையை
உருவாக்கவும் அரூபமாகப் போகிக்கவும் இயன்ற அவரை எப்படி ஆராதிக்காமலிருக்க
முடியும்? ஆனால், அவருக்கென்று ஒரு வழிபாட்டு ஸ்தலம் இல்லையென்ற விஷயம்
விபச்சாரர்களை அவ்வப்போது வேதனைப்படுத்துவதுண்டு. அப்படி ஏதாவது
இருந்திருந்தால் ஒரு வணக்கமோ வழிபாடோ செய்து காரியசித்தி செய்துகொள்ள
முடிந்திருக்கும். விபச்சாரர்களது மனவேதனைக்கான காரணம் தங்களால் ஒரு
பனித்திரையைச் சிருஷ்டிக்க முடியாமல் போனதுதான் என்று ராஜேஷ்
அலெக்ஸாண்டருக்குத் தோன்றியது.

இந்நேரத்தில் திருவேகப்புரை புனித மேரியின் வழமுறை தேவாலயத்தின் மாத்யூ
மாதைக்கல் தந்தையின் மனைவி ஆக்னஸ், கூண்டிலடைபட்ட புனுகுப் பூனையின்
அவஸ்தையுடனிருந்தாள். ஆலயக் கொட்டாரத்தையடுத்திருந்த வீட்டின்
ஜன்னல்களையும் வாசல்களையும் அடைத்து மூடிவிட்டு அவள்
படுக்கையறையிலிருந்து அடிக்கடி எழுந்து வந்து நுழைவு வாசலின் பக்கத்தில்
வந்து நின்று பார்த்தாள். அழைப்பு மணியின் ஓசைக்காக அவள்
ஏங்கிக்கொண்டிருந்தாலும், காற்றின் மெல்லிய அசைவுகூட அவளைப்
பதற்றப்படுத்தியது. எல்லாக் கதவுகளையும் அடைத்து மூடி காற்றுக்கூட
எட்டிப் பார்த்துவிடக்கூடாதென்று மனத்திற்குள் சொல்லியபடி அவள்
தொலைபேசியின் அருகில்போய் நின்றுகொண்டாள். ஒரு கரும்பூனையின் கண்களுடன்
தொலைபேசி அவள்மீது பார்வையை நிறுத்தியது.

அவள் ஆலயப் பங்குத் தந்தையின் மனைவி ஆக்னஸ். சுருண்ட தலைமுடி. அகலம்
குறைவான நெற்றி. நெற்றியோரங்களிலிருக்கும் பூனை ரோமங்கள், தலைமுடிக்கு
அலங்காரம்போலிருந்தன. சீராக வெட்டியொதுக்கப்பட்ட புருவங்கள் (மாதமிருமுறை
திரெட் செய்யப்படுபவை). ஐலாஷ் வைத்தது போன்ற கண்ணிமைகள். கண்களில் மானின்
மருட்சி. கன்னத் துடிப்பில் இரத்தச் சிவப்பு (பழங்காலப் பேய்க்கதையின்
நாயகிபோல்). கூர்ந்து கவனிக்கும்போது மட்டுமே தெரியும் மூக்கின்
கீழிருக்கும் செம்பட்டு நிற ரோமங்கள். கீழுதட்டின் ஓரத்திலிருந்த சிறு
கறுத்த மச்சம் ஆக்னஸின் அழகை அதிகமாகக் காட்டியது (மலைவாசிப் பெண்ணின்
சிரிப்பு). கழுத்தில் மூன்று தங்கச் செயின்கள். அவை, அவளது நிறத்திற்குப்
பொலிவேற்றிக்கொண்டிருந்தன.

ஆகாயத்தில் மேகங்களுக்கிடையில் தெரியும் அரைவட்ட நிலவு. காற்று, மேகக்
கூட்டங்களைத் தொலைதூரத்திற்கு அள்ளிப் புணர்ந்தெடுத்துச்
சென்றுகொண்டிருந்தது. நிலவு, காமத்தின் குறியீடு. இரவுப் பறவைகளின் ஒலி
காமத்தை உசுப்பேற்றுகிறது. இது ஒரு சூழல் உருவாக்குதல். காதல் அதற்கேயான
இசைவான சுபவேளையை இதன் மூலம் காட்டுகிறது. ஆனால், ஆக்னஸால் இதையெல்லாம்
உணர முடியவில்லை. மூடப்பட்ட அறைக்குள் அமர்ந்து அவள் எதிர்பார்ப்பின்
பதற்றத்தை அனுபவித்துக்கொண்டிருந்தாள். எந்த நிமிடமும் அவன்
வந்துவிடலாம். இன்றிரவு அவனுக்காக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதுவும்
எதிர்பாராமல் உறுதிசெய்யப்பட்ட வாய்ப்பு. பங்குத் தந்தை, சாயங்காலம் ஆறு
மணிக்குத் தாமரைச் சேரிக்குப் புறப்பட்டார். போகும்போது நாளைக்குத்தான்
வருவேன் என்று சொன்னார். இரவுத் துணைக்குப் பக்கத்து வீட்டுச் சிறுமியை
அழைத்துப் படுக்க வைக்கும்படியும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். ஆக்னஸ்
எல்லாவற்றிற்கும் ‘உம்’ சொல்லிவிட்டு, தந்தை சென்றதும் அலெக்ஸாண்டருக்கு
ஃபோன் செய்தாள். ஆக்னஸுக்குத் தொலைபேசியில் பேசும்போதே மிகவும்
வியர்த்துப்போய்விட்டது. உடல் நடுங்கியது. வியர்வைத் துளிகள் மாலைபோல்
உதட்டோரத்தில் கோர்த்துத் துளிர்த்தன. ஓரத்திலிருந்த மச்சம் பதக்கம்போல்.
அலெக்ஸாண்டர் வந்ததும் அவனை ஆடைகளோடு சேர்த்துக்கட்டி அவனது மார்பின்மீது
தலைசாய்த்து ஒரு தடவை அழுதுவிட வேண்டுமென்று ஆக்னஸ் நினைத்திருந்தாள்.

ஒப்பந்தங்களுக்கு வெளியில் உறவு வைத்திருக்கும் பெண்களுக்குப் பொதுவாக
இது போன்ற உணர்வுகள் இருப்பதில்லை. அவர்கள் நோக்கங்களுக்குள் விரைவாகக்
கடந்து சென்று, நிமிடநேரச் சுகங்களை அனுபவித்துவிட்டு, குளிர்பானமோ பாலோ
கொடுத்து முடிந்த வரை சீக்கிரமாக அனுப்பிவிடவே நினைப்பார்கள். அக்கம்பக்க
வீடுகளின் ஒளிக் கண்களில்  பட்டுவிடாமல் இருட்டின் மறைவினூடே அவன்
போய்விட்டதை உறுதிசெய்துகொள்வதற்காக ஃபோன் செய்துவிட்டு அடுத்த முறைக்கான
நாளை ஆலோசிப்பார்கள். நீண்ட பெரு மூச்சை உதிர்த்தபடி கடந்துபோன
நிமிடங்களை  மனத்திரையில் ஓடவிட்டு மின்சார விசிறியின் கீழ், குளிரில்
மெல்ல உறங்கிப்போகவே விரும்புவார்கள். ஆக்னஸும் இது போன்ற ஒரு
நிமிடத்திற்காகவே காத்திருக்கிறாள். ஆனாலும், அவளது மனத்தில் இதுவரை
தோன்றாத, காதலின் வர்ணம் தோய்ந்த கை வளைகள் விழுந்துகொண்டிருந்தன.

அலெக்ஸாண்டர் பாரிலிருந்து இறங்கிவந்து ஒரு ஆட்டோ வைக் கை காட்டினான். கை
காட்டிய எல்லா ஆட்டோ க்களும் அவனைப் புறக்கணித்துச் சென்றன. இது ஒரு
துர்ச்சகுனமாக அவன் மனத்துக்குத் தோன்றியதென்றாலும், நகர் சார்ந்த
வாழ்க்கை முறைக்குள் சகுனங்களுக்கு முக்கியத்துவமில்லை என்ற எண்ணத்தை
அவன் மனத்தில் இருத்தி அடுத்து வரும் ஆட்டோ வுக்காகக் காத்து நின்றான்.
திடீர் வேலை நிறுத்தம்போல் ஆட்டோ க்களெல்லாம் நகரைவிட்டுக்
காணாமல்போய்விட்டனவோ என்று நீண்ட நேரக் காத்திருப்பிற்குப் பிறகு
அலெக்ஸாண்டருக்குத் தோன்றியது. ஒரு விபச்சார ஆடவனின் வாழ்க்கையில்
காலத்திற்கிருக்கும் முக்கியத்துவம் வேறெதற்குமில்லை என்ற புரிதல்
அலெக்ஸாண்டருக்கு இருந்ததால் அவன் அவசரமாக மொபைல் ஃபோனில் ஒரு டாக்சியை
வரவழைப்பதற்காக விரலமர்த்தினான். பூமியிலிறங்கிய வானதேவதை போல் ஒரு
வெள்ளை நிற அம்பாசிடர் அலெக்ஸாண்டரின் முன்வந்து நின்றது.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் அலெக்ஸாண்டர், ஆக்னஸின் கணவரிடம்
பாவமன்னிப்புப் பெற்றுக்கொள்வான். உங்களது செயல்களுக்கான பரிகாரமாகவும்
பாவங்களுக்கான விடுதலையாகவும் இதைப் பெற்றுக்கொள்வீர்களாக! ஃபாதர் மாத்யூ
மாதைக்கலின்
பெண்தன்மையுடனான சலனங்களைப் பார்க்கும்போது அலெக்ஸாண்டருக்குள் நாலுகால்
மிருகம் ஒன்று சுரண்டும். அது, பெண்கள்மீதான அடங்காத தாகமென்பதை
அலெக்ஸாண்டர் அறிவான். அப்போதெல்லாம் அவன் ஆக்னஸை மனதில்
நினைத்துக்கொள்வான். ஃபாதர் மாத்யூவின் கொஞ்சுவது போன்ற பாவமன்னிப்புப்
பிரசங்கத்திலிருந்து ஒரு நிமிடத்தை அலெக்ஸாண்டர், ஆக்னஸின் மிருதுவான
உடலைத்தேடும் ஒரு பாதையை ஏற்படுத்திக்கொள்ள உபயோகிப்பான்.

மழை, மெல்லிய ஒரு ஆடைபோல் மூடிப் பெய்துகொண்டிருந்தது. அலெக்ஸாண்டர்,
ஓட்டுனரிடம் ‘வேகமாக வேகமாக’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஓட்டுனர்,
பக்கவாட்டு ஜன்னல்களை உயர்த்துவதற்காக வேகத்தை மட்டுப்படுத்தினார்.
அப்போது அவனது ‘வேகமாக’ச் சத்தம் ஓங்கி உயர்ந்தது. ஒரு நிமிடம்
ஓட்டுனரின் கால்களைப் பதறச் செய்து காரின் வேகம் அதிகரித்தது. ஏதாவதொரு
நோக்கத்துடன் விபச்சார ஆணின் மனம் சமரசப்பட்டிருந்து, அதைச் செய்து
முடிக்கும் போது அவன் உத்வேகம் நிறைந்த ஒரு அவஸ்தையுடனிருப்பான். அதை
நிறைவேற்றி முடிக்கும்வரை அவன் மனப்பிறழ்வின் நூல் பாலத்தினூடே
அனாயாசமாகச் சஞ்சரித்துக்கொண்டிருப்பான். அதீதச் சிரத்தைகொண்ட மனம்
மட்டுமே பிறழ்வுபடுகிறதென்று அலெக்ஸாண்டருக்குப் பல தடவை தோன்றியதுண்டு.
காற்றைக் கிழிக்கும் வேகத்துடன் கார் சென்றுகொண்டிருந்தபோது,
அலெக்ஸாண்டருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆக்னஸின் தொலைபேசி இனிமையான ராகம் இசைத்தது. கரைகடந்த ஆவேசத் துடிப்புடன்
அவள் தொலைபேசியைக் காதில் வைத்தாள். அலெக்ஸாண்டர்தான். இன்னும் ஓரிரு
நிமிடத்தில் அவன் வந்து சேர்ந்துவிடுவான். வீட்டிலுள்ள எல்லா
விளக்குகளையும் அணைத்துவிடுவதற்கான சைகைதான் இந்தத் தொலைபேசி அழைப்பு.
வீட்டினுள்ளும் வெளியிலும் உள்ள எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு
ஆக்னஸ், மெல்ல, வீட்டின் சுவரோரமாக ஒட்டியபடி நடந்து கேட்டினருகில் வந்து
அதன் பூட்டைத் திறந்து வைத்தாள். ராஜேஷ் அலெக்ஸாண்டருக்கு ஆக்னஸின்
வீட்டினுள் பிரவேசிப்பது  எளிதாகிவிட்டது. தலைவாசலின் கதவைத் தாளிடாமல்
அதன் மறைவில் படபடக்கும் நெஞ்சுடன் ஆக்னஸ் நிற்பாள். ஒரு ஊசி விழும்
ஓசையைக்கூட அவளால் அப்போது தெளிவாகக் கேட்க முடியும். ராஜேஷ், கேட்டின்
பிடியைத் தள்ளித் திறப்பதை ஆக்னஸ் புரிந்துகொண்டாள். திறந்த கேட்டின்
சிறு விரிசலினூடே அவன் உள்ளே நுழைந்தான். பிறகு, சுற்றிலும் கண்ணை
ஓடவிட்டு விட்டு மெதுவாக, சத்தமெழுப்பாமல் கேட்டைச் சாத்தினான். லெட்டர்
பாக்சில் வைத்திருந்த சாவியை எடுத்து ஓசையெழாமல் கேட்டைப் பூட்டினான்.
சுவாசத்தை நிதானமாக ஒரு தடவை ஆழ்ந்திழுத்துவிட்டுச் சூழலை
உள்வாங்கிக்கொண்டான். காற்றுகூட இல்லை. ஆகாயத்தின் மேகத் தாரைகள் அப்போது
நிலவை மூடின. இயற்கை, இருட்டைப் போர்த்திக்கொண்டது. தரையில் கிடக்கும்
புழுதி மண்ணையும் வேதனைப்படுத்தாமல் ராஜேஷ் அலெக்ஸாண்டர் ஆக்னஸின்
வாசலைப் பார்த்து நடந்தான். முற்றத்தில் பூந்தொட்டிகளில் இரவுப்
பூக்களைச் சுற்றி மின்மினிப் பூச்சிகளும் இருட்டுப் பூச்சிகளும்
வட்டமிட்டுப் பறந்தன.

வாசல், ஒரு பூ மொட்டவிழ்ந்து விழுந்ததுபோல் விரிந்தது. இருட்டிலும்
ஆக்னஸின் பளபளக்கும் கண்களில் அலெக்ஸாண்டர் பிரதிபலித்தான். திறந்துகொண்ட
வாசல் கதவின் சிறு பிளவினூடே ஒரு கணம் விழுந்த இடைவெளிச்சத்தை மறைத்தபடி
ஆக்னஸ் அலெக்ஸாண்டரை அதீத ஆவேசத்துடன் அள்ளிப்பிடித்து ஆலிங்கனம்
செய்தாள். அவனது நெற்றியும் கண்களும் உதடுகளும் கன்னங்களும் நோகுமளவுக்கு
அழுத்தமாக உதடுகளைப் பதித்தாள். அவளது பற்களும் நாக்கும் அவனுடைய
ரத்தத்தின் உப்புச் சுவையை உணர்ந்தன.

குளியலறையிலிருந்து வெளியே வரும்போது ஆக்னஸின் உடல் முழுவதும்
வேதனையிருந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த
ஒரு பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த வலியை அவள் மறந்தாள். ஈரத்
தலைமுடியில் டவலைக் கட்டி மற்றொரு டவலால் உடலைச் சுற்றியிருந்த அவள்,
கட்டிலில் அலட்சியமாகப் படுத்திருக்கும் ராஜேஷைப் பார்த்தாள். அவனது
மனத்திலிருக்கும் அக்னி அப்போதும் தணிந்திருக்கவில்லை என்பதை அவனது
கண்களிலிருந்து அவள் புரிந்துகொண்டாள். நீண்ட அங்கி போன்ற கசங்கிய ஒரு
ஆடைக்குள் புகுந்த ஆக்னஸ் ராஜேஷுக்குக் கொடுப்பதற்காக ஜூஸ் எடுத்தாள்.
மாதுளை நீரின் ஒவ்வொரு துணுக்கையும் ரசித்து, விருப்பமான வோட்கா
குடிப்பதுபோல் ராஜேஷ் ஜூஸை அருந்தினான்.

- எவ்வளவு காலமாகிறது, இதுபோல் ஒரு நாள் வந்து கிடைத்து . . .

- நான் தினமும் நினைப்பேன் . . .

- நமது மனங்களை மேலே உள்ளவர்தான் அறிவார். இனிமேலும் அவர் இதுபோல் ஒரு
நாளைத் தராமலிருக்க மாட்டார் . . .

- என் வாழ்க்கையில் இதுவரை நான் ஒரேயொரு பெண்ணைத்தான்
விரும்பியிருக்கிறேன். அது நீ மட்டுந்தான். எனது உடலையும் மனத்தையும்
நான் பகிர்ந்துகொண்டதும் உன்னிடம் மட்டும்தான். . .

ஆக்னஸ் படுக்கையில் ராஜேஷை ஒட்டியபடி அமர்ந்துகொண்டாள். அவனது கண்களில்
அன்பின் தெளிந்த நீர்த் தடாகம். மெல்ல அவனது வெறும் மார்பில் ஆக்னஸ்
தலைசாய்த்தாள்.

ஒவ்வொரு காமுகனும் தன் வைப்பாட்டியிடம் இதைத்தான் சொல்வான். வாழ்க்கையில்
யாரிடமிருந்தும் இதுவரை அன்பைப் பெற்றிருக்கவில்லையென்றும் மற்றவர்கள்
காரணமே இல்லாமல் தன்மீது வெறுப்பைக் காட்டுவதும் கோபப்படுவதுமான துயரமான
ஒரு வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது
, அன்பையும் பரிவையும்
எதிர்பார்ப்பின் வற்றாத நீரூற்றாகத் தருபவள் நீ மட்டுந்தான் என்றும்
சொல்வது அந்த நிமிடங்களுக்கான முக்கிய விஷயங்கள் என்பதை விபச்சார ஆண்
அறிவான். ஒருபோதுமே அவன் தன் மனத்திலிருப்பதை
வெளிப்படுத்திக்கொள்ளவேமாட்டான்.

அனாதைப் பிணம்போல் டிரெஸ்ஸிங் டேபிளின் மீது கிடந்த ராஜேஷ்
அலெக்ஸாண்டரின் மொபைல் திடீரென உயிர் பெற்றது. அப்போது அது வைப்ரேட்டர்
மோடில் இருந்தது. அதன் துடிப்பு ராஜேஷ் அலெக்ஸாண்டரை ஒரு கணம்
திடுக்கிடவைத்தது. ஆக்னஸை மார்பிலிருந்து வேகமாக அகற்றிவிட்டு அவன் ஃபோனை
எடுத்தான். மொபைலின் ஸ்கிரீன் லைட் எரிந்தணைந்து நிச்சலனமானது. அன்றிரவு
விதிக்கப்பட்ட மற்றொரு நிர்வாணத்தை நோக்கி அவனது மனம் பறந்து சென்றது.
ஆக்னஸைக் கவனிக்காமல் அவன் கழற்றிவைத்த உடுப்புகளை எடுத்து அணியத்
தொடங்கியபோது, கீழே அழைப்பு மணி ஒலித்தது.

அடைத்துப் பூட்டிய கேட்டையும் திறந்துவிட்டு வாசல் கதவின் பக்கத்தில்
வந்து நின்று அழைப்பது யாராக இருக்குமென்று ஆக்னஸ் பதற்றத்துடன்
நினைத்துக்கொண்டாள். இதை அவள் கேட்கவும் செய்தாள். வந்திருப்பவர், ஃபாதர்
மாத்யூ மாதைக்கலாகவே இருக்க வேண்டும். ராஜேஷ் அலெக்ஸாண்டர்
உறுதிசெய்துகொண்டான். எதிர்பாராத ஒரு காட்சியின் கதாபாத்திரமாக மாற
விரும்பாத ராஜேஷ் அலெக்ஸாண்டர் எல்லாத் தெய்வங்களையும் அழைத்து
வேண்டிக்கொண்டான். விபச்சாரர்களுக்கெனத் தனியொரு தெய்வம் இல்லாததைக்
குறித்த கோபத்துடன் அவன் இருட்டின் மறைவிற்குள், பின் வாசலைத் திறந்து
பக்கத்திலிருந்த மதிலைப் பற்றிப் பிடித்து இரவின் நிழலாகத் தன்னுடலைப்
பாதுகாப்பாக ஒளித்துவைத்துவிட முயன்றான். இனி நடக்கவிருக்கும்
சம்பவங்களுக்கு மற்றொரு சாட்சியின் தேவைகள் எதுவுமில்லை என்பதை அவன்
புரிந்துகொண்டிருந்தான். இல்லையெனும் பட்சத்தில் அவனொரு விபச்சாரனே
அல்லவே.


thanx - sirukadhaikaL

0 comments: