பீட்சா படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து சித்தார்த்தை நாயகனாகக்கொண்டு ஜிகர்தண்டாவை இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அப்போது படத்தில் நடித்த சித்தார்த், லட்சுமிமேனன், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன், சிம்ஹா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சித்தார்த் பேசுகையில், பாய்ஸ் படத்தில் அறிமுகமான நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து விட்டேன். ஆனபோதும் என் மீது பதிந்துள்ள ப்ளே பாய் இமேஜை இதுவரை என்னால் மாற்றமுடியவில்லை. அதனால்தான் இனியும் அந்த இமேஜை தொடர விடக்கூடாது என்று அதற்கேற்ற கதைகளை தேடி வந்தேன்.
அப்போதுதான் பீட்சா படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டதால், எனது டுவிட்டரில் அதுபற்றி விமர்சனம் எழுதியிருந்தேன். அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜூடன் நட்பு கிடைத்தது. அதையடுத்து அவர் என்னிடம் சொன்ன கதை தான் ஜிகர்தண்டா. ஏற்கனவே நான் ஆரம்பத்தில் நடித்த 15 படங்களில் 12 படங்களில் புதியவர்கள்தான் இயக்குனர்கள். நான் அவர்களுக்கு கால்சீட் கொடுத்ததின் காரணம். புதியவர்கள் முதல் படத்தில் தங்களது மொத்த திறமையையும் வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பார்கள். அதனால்தான் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்.
மேலும், அவருக்கு முதல் படம் பீட்சாவாக இருந்தபோதும், அவர் முதலில் இயக்குவதற்காக இந்த ஜிகர்தண்டா கதையைத்தான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். பட்ஜெட் அதிகம் தேவைப்பட்டதால் இரண்டாவதாக பண்ணயிருந்த பீட்சாவை முதலில் டைரக்டர் செய்திருக்கிறார். ஆக, கார்த்திக் சுப்பராஜ் முதலில் இயக்கயிருந்த ஜிகர்தண்டாவில்தான் இப்போது நான் நடித்திருக்கிறேன்.ஆக, அவரது முதல்பட ஹீரோ நான்தான்.
இப்படி சொன்ன சித்தார்த், முதலில் கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டபோது நொந்து விட்டேன். அந்த அளவுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவே இல்லை. அதன்பிறகு, ஜிகர்தண்டாவின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்தபோதுதான் அற்புதமான கதை என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவுக்கு ரொம்ப கேவலமாக கதை சொன்னார் கார்த்திக் சுப்புராஜ். அதனால் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ஹீரோக்கள் அவரிடம் கதை சொல்லுங்கள் என்று கேட்காமல், ஸ்கிரிப்டை கொடுங்கள் என்று வாங்கிப் படிப்பதுதான் சரி என்று தெரிவித்த சித்தார்த், இந்த ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு என் மீது அழுத்தமாக பதிந்திருக்கும் ப்ளேபாய் இமேஜ் முற்றிலுமாக மறைந்து விடும் என்றும் அடித்து சொல்கிறார்.
thanx - dinamalar
0 comments:
Post a Comment