இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, நதிநீர்ப் பங்கீடு என காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பட்டியலிட்டார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியது:
"2011-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை நீங்கள் நிறைவேற்றினீர்கள். என்னை தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள்.
அதே போல், தற்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி மக்களாட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை எல்லாம் நேரில் சந்தித்து விடுப்பதற்காகவே நான் இங்கு வந்து இருக்கிறேன். இதையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1947-ஆம் ஆண்டு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ, அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. 1947-ஆம் ஆண்டு எந்தத் தியாகத்தை செய்தாவது இந்த நாட்டை சூறையாடிய,
நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்த வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற மன நிலையில் மக்கள் இருந்தார்கள். அதே மன நிலை, இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது உங்கள் மனங்களில் உருவாகியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல; மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு; ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்" என்றார் ஜெயலலிதா.
விரைவில் மின்வெட்டு இல்லாத தமிழகம்
தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபின் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டவர், "மின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால், எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3,300 மெகாவாட் மின்சாரம் நீண்ட கால அடிப்படையில் வாங்கப்படும். இதன் விளைவாக மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். எதிர்கால மின் தேவைக்காக 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க-வையும் மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் விடை.
மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக, மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.
இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு இழைத்த துரோகம் 10
1. இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இது முதல் துரோகம்.
போர்க் குற்றங்கள் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்கவும்; இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனப் படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை நாட்டை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும்; தனி ஈழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2 இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இவற்றின் மீது மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? இல்லையே! இலங்கை அரசுக்கு சாதகமாகத் தானே மத்திய காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது! இது இரண்டாவது துரோகம்.
3 இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு. இது மூன்றாவது துரோகம்.
4 கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது நான்காவது துரோகம்.
5 தமிழகத்திற்குரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஐந்தாவது துரோகம்.
6 சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் மருத்துவப் படிப்பில் பொது நுழைவுத் தேர்வை நுழைக்க நடவடிக்கை எடுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஆறாவது துரோகம்.
7 தமிழகத்திற்குரிய மின்சாரத்தை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்க மறுக்கும் அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது ஏழாவது துரோகம்.
8 ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். அனுமதி வழங்க மறுக்கின்ற அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது எட்டாவது துரோகம்.
9 காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய காங்கிரஸ் அரசு இன்னமும் அமைக்காதது ஒன்பதாவது துரோகம்.
10 மாதா மாதம் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி விலைவாசி உயர வழிவகுத்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இது பத்தாவது துரோகம்.
இப்படி மத்திய காங்கிரஸ் அரசால் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழக அரசுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் அதிகாரங்களை பறித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் உரிமையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு. மாநில காவல் துறையின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தை ஏற்படுத்த முனைந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
திமுகவுக்கு பாடம் புகட்டுக
மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தை குறைக்கக் கூடிய வகையில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்த முனைந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை புகுத்திய அரசு மத்திய காங்கிரஸ்
கூட்டணி அரசு. பண வீக்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வதற்கும்; இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கும் காரணமாக இருந்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.
மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை குறைத்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. விவசாய பயிர்களுக்கான பிரீமியம் தொகையை உயர்த்தி ஏழை எளிய விவசாயிகளின் வயிற்றில் அடித்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. உர விலைகள் உயரக் காரணமாக இருந்த அரசு மத்திய காங்கிரஸ் அரசு.
இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க-வுக்கும் பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு தற்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்துவீர்களா? காங்கிரசுக்கு பாடம் புகட்டுவீர்களா? திமுக-வுக்கு பாடம் புகட்டுவீர்களா?
வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்க நமது பாதுகாப்புத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், நமது ராணுவத்தை, கடற் படையினை, விமானப் படையினை நவீனமயம் ஆக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
கடந்த 52 ஆண்டுகளில் அண்மையில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தான் பாதுகாப்புத் துறைக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் தரைப் படைக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்குவதற்கு என ஒதுக்கப்பட்ட தொகையில் 92 விழுக்காடு தொகை ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கு சென்றுவிடும். மீதமுள்ள வெறும் 8 விழுக்காட்டினை வைத்து தான் புதிய
ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலைக்கு இந்திய ராணுவத்தை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆளாக்கியுள்ளது.
மூலதனச் செலவுக்கான நிதி குறைவாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும்; புதியதாக ஆயுதங்கள் தளவாடங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும் ஆன நிதி ஒதுக்கீடு மிகமிகக் குறைவு. மேலும் நவீனமயம் ஆக்கலுக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் நீண்ட தாமதம் ஏற்படுவதால் அதற்கான மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. ஆயுதங்கள் தளவாடங்கள் மற்றும் நவீன போர்க் கருவிகள் வாங்குவதற்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான நீண்டகால ஒருங்கிணைக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டம் மற்றும் ஐந்தாண்டு கொள்முதல் திட்டம் ஆகியவை வெறும் காகித வடிவிலேயே உள்ளன. இந்தத் திட்டங்களுக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. விமானப் படையை நவீனமயம் ஆக்குவதற்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் நடக்கும் ஊழல்களை களைய ஆயுதங்களை விநியோகிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளை மீட்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும். இது மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் மேற்கொள்வதைவிட அந்த நாட்டின் அரசு மூலமாக ஒப்பந்தம் மேற்கொள்வது ஊழலை ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும். பாதுகாப்புத் துறையில் இவற்றை எல்லாம் செய்யாமல் கடந்த பத்து ஆண்டுகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. முப்படையில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை.
முப்படையை வலுப்படுத்துவோம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் காவல் துறையினருக்கு பல்வேறு படிகள், வீட்டு வசதி, கேண்டீன் வசதி, குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த அளவு சலுகைகளை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் வழங்கவில்லை. நாட்டுப் பற்றுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் காவல் துறையினர் தங்கள் பணிகளை, பொதுமக்களை காக்கும் பணிகளை மேற்கொள்ள இவை வழி வகுத்துள்ளன. இது தவிர நவீன ஆயுதங்கள் தளவாடங்கள் ஆகியவை காவல் துறையினருக்காக வாங்கப்பட்டு காவல் துறை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக காவல் துறை எப்படி விளங்குகிறதோ அதே போன்று மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்திய பாதுகாப்புத் துறை விளங்க தேவையான நடவடிக்கைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்டை நாடுகளிலிருந்து வரும் சவால்களை சமாளிக்கும் வகையில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப் படைக்குத் தேவையான நவீன ஆயுதங்களும், தளவாடங்களும் வாங்கப்படும். மொத்தத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக பாதுகாப்புத் துறை பலப்படுத்தப்படும். இது தவிர தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாக்க ஓர் அக்கறையுள்ள அரசு இருக்கின்றது என்று முப்படையில் பணிபுரிவோர் கூறும் அளவுக்கு, அவர்களுக்கு தேவையான அனைத்துச் சலுகைகளையும் நாங்கள் செய்து தருவோம். இவ்வாறு முப்படையினரை ஊக்கப்படுத்துவது அவர்கள் மேலும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பணிபுரிய வழி வகுக்கும். இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்" என்றார்.
இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட அவர், "எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.
கருணாநிதி மீது சாடல்
இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை ஆகும். கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டிற்கு எதையாவது செய்ததா? 'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள்
நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட கட்சிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும். வழங்குவீர்களா?" என்று கூறி, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
நன்றி - த தமிழ் இந்து
- jayenness from Thiruvarurமத்திய அரசுக்கு எதிராக ஜெ. கூறியவட்ருள் உண்மை இருக்கிறது. இன்த நாட்டை சுரண்டுவதற்கு அந்நிய சக்திகளுக்கு கதவை திறந்துவிட்டது காஙக்ரஸ்தான். பணமுதலைகளுக்காக ஏழைகள் வயிற்றில் அடிப்பதும் காங்கிரஸ்தான். இனி ஒருபோதும் காங்கிரஸ் தலையெடுக்க இடம் கொடுக்கக்கூடாது.
- Tamilan from Chennaiஅது மட்டுமல்ல , முற்றிலும் அழிக்க படவேண்டிய ஒரு கட்சி. சுதந்திர காலத்து காங்கிரஸ் வேறு இப்போது இருக்கும் காங்கிரஸ் வேறு.
- தமிழகத்தில் அனாதையாக விட பட்ட காங்கிரஸ் கட்சி யை நினைத்தால் பாவமாக உள்ளது. உப்பை தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும் என்பது உண்மை. தமிழகத்திற்கு துரோகம் செய்த கதர் கட்சி கரனை மன்னிக்க முடியாது. தேர்தல் காலத்தில் தமிழக கட்சிகளுடுன் கூட்டு வைத்து முதுகு தேடும் காங்கிரஸ் கச்தியுடன் கூட்டு வைத்து பல வருடங்கள் களவாணி தனம் செஞ்சு, நல்ல காசு சம்பாரிச்சு விட்டு, இப்போது காங்கிரஸ் கட்சி கரனை விட முடியாமல், தவிக்கும் திமுக கட்சி காரர்களை வீட்டுக்கு அனுப்பும் நேரமிது. குடும அரசியல் செய்து நல்ல பசை உள்ள துறைகளை பெற்று தன் குடும்பத்தை நல்லா முன்னுக்கு கொண்டு வந்த திமுக கட்சியை எப்போதும் மன்னிக்க முடியாது. இந்த கட்சி காரனுக்கும் தேர்தல் வரும் போது தான் தமிழர்களின் நிலை புரியும். தமிழனை அடிக்க தமிழனை தயார் செய்த கதர் கட்சி காரனின் சுய நலம் தான் பெரிசு. மூணு மாநிலத்தில் அவன் கட்சி இருந்தும் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் தராமல் பிரச்சினை பண்ணி, ரெண்டு மாநிலத்து மக்களையும் ஏமாற்றியவன் இந்த கதர் கட்சி காரன். 2014இல் ரெண்டு கட்சிக்கும் ஆப்பு வைக்க மக்கள் தயார்.Duubukku Dubukku Up Voted
- krishna from Chennaiகதர் என்பது ஒரு வாழ்வாதாரம்,அதை போடுபவன் தப்பு செய்தால் கதர் கட்சி காரன் என்று கதரை பழித்து கூறுவது தவிர்க்கப்படவேண்டும் தம்பி.கதர் யார் வேண்டுமானாலும் போடலாம் அப்போது தான் கடை கோடி ஈளிக்கும் வயறு நிரம்பும்.krishna Up VotedDuubukku Dubukku Down Voted
- சிறப்பான கருத்து. கதர் என்பது வாழ்வு என்றும் அதன் மகிமை, மாண்பு குறித்த உங்கள் கருத்து உண்மை. தவறாக பயன் படுத்தியதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேனே. எய்தவன் இருக்க அம்ம்பை நோவது ஏன் என்பது போல தூய்மையான கதரை இதில் தொடர்பு படுத்தினது தவறு தான்.Duubukku Dubukku Down Voted
- இவருக்கு எழுதி கொடுத்தவர்கள் 11 வது துரோகமாக அறிவிக்கபடாத 16 மணிநேர மின்வெட்டை கொடுத்து தமிழ் நாட்டின் சிறு .,குறுந்தொழில் வளத்தை நசுக்கியவர் யார் என்பதை எழுதி கொடுக்க மறந்து விட்டார் போலும் !சரி மேடம் இப்படி வான் வழியே பறந்து ஹெலிபாட் எல்லாம் அமைத்து நீங்க பிரசாரம் போற பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதி மக்களை மின்வெட்டால் வாட்டி வதைத்து இப்படி சூறாவளி சுற்று பயணம் செய்யறது யார் பணமா எங்க பணமா ?இல்லை உங்க ஆ ..(கட்சி )பணமா ?
- எஅலுதி கொடுத்தவர்கள் பல நல்ல விசயங்களை விட்டு விட்டு காங்கிரஸ் இ திட்டுகிறார்கள்.அம்மா என்ன செய்யபோகிறார் என்று cholla வில்லை..நமக்கு தேவை நாடு வளரனும்.போக்குவரத்துக்கு ஒரு பிரச்னை.அதை தீர்க்க,நிலத்தடி வழி தடம் போடணும் பாரிஸ் போல,நீர்வழி போக்குவரத்து வேண்டும்,சென்னை முதல் பாண்டி,துத்துக்குடி,ரம்வ்ச்வரம் கன்னியாகுமரி படகு போக்குவரத்துக்கு தினமும் நடக்கும் accident களை குரைக்கும்.சுற்றுலா வளரும்.கடலுக்கும் கீழ் அருங்காட்சியம் சிங்கப்பூர் இல் இருப்பது போல வேண்டும்.அதிகடவு அவனஷி நீர் திட்டம் குளத்துக்கு நீர் கொடுக்கும் கிணத்து மின்சாரம் மிச்சமாகும் .இது பற்றி பேசுங்க மேடம் காங்கிரஸ் தானாக செத்து போகும்...இவள கத்தி பேச தேவை இல்லை.சக்தியை சேமியுங்கள்.சோறு போட்டாள் வோட்டு விழும் என்பது சரியல்ல,காமராஜர் சத்துணவு கொண்டுவந்தார் அவரையே தோற்கடித மக்கள் கூட்டம் இது ஜாக்கிரதை மேடம்.
- தமிழ் நாட்டில் அல்ல மொத்த இந்திய மக்களுக்கும் காங்கிரஸ் இழைத்த துரோகம் கொஞ்ச நஞ்சம் இல்லை. திரும்பவும் காங்கிரஸ்சுக்கு வோட்டு போடுவது சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது போன்றது (தேர்தல் மக்கள் வரிப்பணத்தில் நடக்கிறது அது மக்களுடைய சொந்த பணம்). தமிழகத்தை பொறுத்த வரை காங்கிரஸ்சில் தேர்தலில் நிற்பவனும் தமிழின துரோகியே! காங்கிரசுக்கு வோட்டு போடுபவனும் தமிழின துரோகியே!
- 1)காங்கிரச குறை கூரும் இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிபுரிந்த திராவிட கட்சிகளான திமுகவும் , ஆதிமுகாவும் தமிழக மக்களுக்கு தாங்கள் செய்த நற்பணிகளை விளக்கவேண்டும் இவர்கள் ஆட்சி புரிந்த ஐம்பது ஆண்டுகளில் இவர்கள் செய்த ஒரே சாதனை தமிழக மக்களை குடிகரர்கலாக்கியது மட்டுமே .காங்கிரசை ஊழல் கட்சி என்றுகூரும் இவர்கள் என்ன பரிசுத்தமா.1991 முதல் 1995 வரை ஆட்சியில் இருந்த இவர்கள் செய்த ஊழலுக்காக இன்றும நீதிமன்றங்களில் வாய்தா மேல் வாய்தா வாங்கி வாய்தா ராணி என்ற பட்டத்தையும் பெர்ட்டு இறுக்கிறார் .1991 முதல் 1995 வரை இவர் முதல்வராக இருந்த காலகட்டதில் இவர் பெற்ற பெற்ற சம்பளம் வெறும் ஒருரூபாய் மட்டுமே ஆனால் அந்த காலகட்டத்தில் இவருடைய வளர்ப்பு மகனுக்கு இவர் நடத்திவைத்த திருமணத்தின் செலவு மட்டும் 100 கோடி ரூபாயாம் மாதம் ஒரு ரூபாய்சம்பளம் வாங்கிய இவர் எப்படி நூருகொடியில் திருமணம் செய்துவைத்தார் ?காங்கிரசை குறை கூரும் ஈவர்கள் தமிழக மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு உண்டான நீர்நிளைகலான அணைகள் கட்டினார்களா ,Anthonymuthu Up VotedDuubukku Dubukku Down Voted
- VallimalaiYanaivahanam from Bangaloreகெயில் எரிவாயு குழாய் பதிப்பு,கூடன் குளம் அணுஉலை,கள்ளுக்கடை திறப்பு, டாஸ்மாக் ஒழிப்பு, மதுரவாயில் உயர் மட்ட சாலை,steralite ,ஆசிரியர் வேலையில் மற்றும் மருத்துவர் வேலையில் இடஒதுக்கீடு அமல்படுத்தாதது சமசீர் கல்வி திட்ட குளறுபடி,எல்லாம் பேசாதது ஏன் ?
- VallimalaiYanaivahanam from Bangaloreகெயில் எரிவாயு குழாய் விவசாய நிலத்தில் பதிப்பதை ஏன் மறந்து விடுகிறார்? Selective Amnesia .
- Mohan Ramachandran at I am doing my own businessஉங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .ஆனால் பாருங்க தேர்தல் முடிவுக்கு பின் உங்க அப்ரோச் எப்படி மாற போவதுன்னு !
- D>Anandaraj from Mumbaiஅம்ம்மம்மா சும்ம்ம்ம்ம்ம்ம்மா தானா. நான் தான் பிரதமர் ஏன் கூற முடியவில்லையே?
- 2) கண்மாய்கள் , குளங்கள் வெட்டினார்களா , இல்லை தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினையான மின்சார உற்பத்தியைதான் பெருக்கினார்களா? எந்த ஒரு தொலை நோக்குதிட்டத்தையும் தமிழக மக்களுக்காக செய்யாத இவர்கள் அனைதுகுரைகளையும் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசாங்கத்தின் மீதும் காங்கிரசின் மீதும் சுமத்திவிட்டுதப்பிக்க பார்கிறார்கள்.தபொழுது தமிழகத்தில் irrukkum பெரும்பாலான அணைக்கட்டுகள் மற்றும் கண்மாய்கள் அகுலங்கள் அனைத்தும் காங்கிரசு ஆட்சியில் தமிழக முதல்வராக இருந்த காமராசரால் தீட்டப்பட்ட தொலை நோக்கு திட்டங்கள் .தமிழகத்தின் பொற்கால அட்சிஎன்றால் காமராசர் ஆட்சிதான் .அதற்க்கு பிறகு தங்களுடைய வாய்திரமையால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுகா மற்றும் அதனுடைய கிளை கட்சியான ஆதிமுகாவின் தலைவர்கள் தாங்கள் வாழ்க்கையை செம்மை படுத்தி கொண்டார்களே ஒழிய மக்கள் பிரசினையை இது வரையிலும் தீர்க்க முன்வரவே இல்லை என்பதே உண்ணாமை.Duubukku Dubukku Down Voted
- krishna from Chennaiஅம்மாவின் சூறாவழி பிரச்சாரம் ஆரம்பம் ,ஆனால் மக்களும் அம்மா கட்சி காரங்களும் சுணக்கமாக இருபது தெரியுது..மக்களுக்கு ஓஹோ என்று ஈதும் செய்துவிடவில்லை.இலவசம்,ஆடு மாடு ரேஷன் பொருட்கள் கிடைத்தது ஆனால் வாழ்கை சுபிஷமாக இல்லை என்பது நிடஹர்சனம்.நல்ல தண்ணீர் ,விவசாயிக்கு பாசன் நீர் இல்லை,விலைவாசி கட்டுக்குள் இல்லை,விலை பொருளை பாதுகாக்க வசதி இல்லை,பால்,பஸ்,மின்சாரம் விலை ஈகிரியது,மக்களுக்கு புதிய தொழில் இல்லை,பல தொழில் முடக்கம்,இதை எல்லாம் சரி செய்யவே இல்லை,காரணம் நல்ல அமைச்சர்கள் இல்லை.அதே போல் தான் புதிய எம்.பி வேட்பாளர்களும்.இவர்கள் என்ன செய்து விட போகிறார்கள் என்ற மந்த நிலை இருக்கு அம்மா சரி செய்யணும்.சாப்பாடு பூட்ட வோட்டு விழும் என்பது தெரியுது ஆனால் சத்துணவு போட்ட காமராஜரையே தோற்கடித மக்கள் நம் மக்கள் என்பதை மனதில் வைக்கணும் அம்மா
- Inbanathan from Chennaiஐயோ பாவம், இந்தம்மா 20 மணி நேர மின்வெட்டில்லா தமிழகத்துக்கு முதல்வர் போலும்! சந்திக்கு இரண்டு டாஸ்மாக் சாராயக்கடை இல்லாத தமிழ் நாட்டுக்கு முதல்வர் போலும்! இந்தம்மா சொல்வதெல்லாம் சத்தியமாக ஒன்றே ஒன்றுதான். அது, கேழ்வரகில் நெய் வழிகிறது. இந்தம்மாவின் பொற்கால ஆட்சியில்தான் பட்டப்பகலில் வங்கிக் கொள்ளை, உமா மகேஸ்வரி கொலை என சட்டமும் ஒழுங்கும் அனந்த சயனம் கண்டன. காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் இவருடைய ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கினால் நிகழ்ந்த கேடுகளை கலைஞர் நீண்ட பட்டியலிட்டார். இந்தம்மா மறுத்துப் பேசவே இல்லை. ஊழல் வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தப்பின் இந்த மாதிரி பேசினால் ஏற்கலாம். அதுவரை, பானையைப் பார்த்து சட்டி "நீ கருப்பு" என்று சொன்ன கதைதான்.Duubukku Dubukku Down Voted
- Inbanathan from Chennaiஓட்டுப் பலிபீடத்துக்கு மக்களை மாலை போட்டு இழுத்துச் செல்லும் இவருடைய இந்தமாதிரி தடாலடி வசனங்கள் வெறும் வெத்து வெட்டு. எடுபடாது. தான் புரிந்த ஆட்சியில் 20 மணி நேர மின்வெட்டுக்கு இவரிடம் பதில் இல்லை. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் என இவர் மக்கள் மீது சுமத்திய பொதியை மறந்துவிட்டு கதைக்கிறார். அண்ணா நூற்றாண்டுவிழா நினைவு நூலகத்தை அகற்ற இவர் எடுத்த முனைப்பு ஒன்றே போதும். யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் முடிவெடுக்க. முன்பு ஒருமுறை 13 நாட்களில் மத்தியில் வாஜ்பாயி அரசைக் கவிழ்த்து இவர் காலைவாறி விட்டதை மக்கள் மறந்துவிடுமாறு சொல்லியிருக்கலாமே? என் சொல்லவில்லை? இவர் சொல்லி வாக்களிக்க மக்கள் இனியும் விலையில்லா வெள்ளாடுகள் அல்ல.Duubukku Dubukku Down Voted
- Inbanathan from Chennaiடாஸ்மாக் சாராயக் கடைகளை மூடி, 24 மணி நேரமும் மின்சாரம் தந்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிட்டு, அதன் பின் தூக்கி எறியப்பட வேண்டிய ஆட்சி எது என்று தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். மத்தியில் அமையப்போகும் ஆட்சி எது என்பதில் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களுக்கும் கவலை இல்லை. அது எப்போதுமே கூட்டாட்சிதான். காங்கிரஸ் இல்லாதுபோனால் 5 மாதத்தில் மறு தேர்தல் தான். மத்தியில் நிலையான ஆட்சி என்பது இனி அத்தைக்கு மீசை முளைத்தால்தான் உண்டு. பதவி வெறி பிடித்து ஆட்டினால், அரசியல்வாதிகள் பிளாஸ்க், மப்ளர், கம்பளி, சுக்கு காப்பி சகிதம் சிம்லா, டார்ஜிலிங், குல்லு, மணாலி என்று குளிர்பிரதேசம் போய் ஓய்வெடுப்பதே உத்தமம்.Duubukku Dubukku Down Voted
- Inbanathan from Chennaiஆணவம் அத்துமீறி பீறிட்டு வழியும் இதுபோன்ற அரசியல்வாதிகளின் உரைகள் அவற்றைக் கேட்கும் மக்களை வெஞ்சின சிந்தனைக்குள் வீழ்த்திவிடும். அதன் விளைவினால் வீடுகளில் அற்ப விசயங்களுக்கு ஆவேசப்பட்டு அமைதி கெடும். பள்ளி கல்லூரிகளில் பதற்றம் நிலவும். அமைதி வழிச் சிந்தனையின் ஆணிவேரினை அசைத்துவிடும் ஆர்ப்பாட்டமான பேச்சுக்கு தேர்தல் ஆணையம் எல்லைக்கோடு வகுக்கவேண்டும். அதனால், அரசியல்வாதிகள் சற்று அளந்து பேசுதல் அவசியம். சமுதாய சீர்கேட்டுக்கு இதுபோன்ற அரசியல் காய்மாகார மேடைப் பேச்சுக்கள் எரியும் நெருப்புக்கு இழுது.Duubukku Dubukku Down Voted
- Inbanathan from Chennaiநம் நாட்டில் அரசியல் பாமரர்களுக்காக மட்டுமே நடத்தப் படுகிறது என்பதற்கு இதை விட இன்னொரு சான்று தேவை இல்லை. தேர்தல்களில் போட்டியிடும் எதிரணியினர் நேரில் ஒரே மேடையில் நின்று தத்தம் கருத்தை வெளியிட்டு வாக்கு கேட்க்கும் நாள்தான் கற்றவர் வாழும் நாட்டின் அடையாளம். ஊழல்வாதிகளும், ஊழல் வழக்குகளில் சிக்குண்டு விசாரணைக்காக விமானத்தில் பறந்து விளக்கமளிக்கும் இழிதகமையாளர்களால் ஆட்சிகள் நிலவும் இந்திய நாட்டில் கற்றவர்களால் அளிக்கப்படும் வாக்குகளால் ஆட்சிகள் amaivathaaga எவரேனும் கூறினால் அது பன்றிகள் கூட்டமாக மேலெழுந்து வானத்தில் பறப்பது உண்மை என்று நம்பும் செயலேயாகும்.Duubukku Dubukku Down Voted
- Inbanathan from Chennaiஎல்லா அம்மாவும் எதோ ஒரு குடும்பத்துக்கே சொத்து சேர்க்கிறார்கள். எங்கம்மா மட்டும் என்ன விதிவிலக்கா? தனக்கில்லாவிட்டாலும் தன்னுடைய அக்கா தங்கச்சி அவர்களுடைய அண்ணன் தம்பி பிள்ளைகளுக்கு உதவாதா, என்ன? குடும்பத்துக்கு உதவாதவன் நாட்டுக்கு என்ன கிழித்துவிடப் போகிறான்?Duubukku Dubukku Down Voted
- R.Subramanian from Bangalore1. காங்கிரஸ் கட்சி விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யவில்லை என்று நார்வே நாட்டின் அறிக்கையில் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் பலரும் திரும்ப திரும்ப இதே பொய்களை சொலிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பலரும் மறக்கும் அல்லது மறைக்கும் விஷயம் விடுதலை புலிகளால் இலங்கை தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள். எத்தனை இலங்கை தமிழர்கள் விடுதலை புலிகளிடம் தனி நாடே வேண்டாம்டா சாமி, எங்கள் பிள்ளைகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்றுதான் புலிகளின் காலில் விழுந்து ஆயிரக்கணக்கான பெற்றோர் அழுது கெஞ்சியிருக்கிறார்கள்(பல விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்தவர்களும் இதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்)... தமிழ் உணர்வாளர்களுக்கு என் கேள்வி பிரபாகரனின் மகனுக்காக தமிழ் நாட்டில் இவ்வுளவு ஆர்ப்பாட்டம் செய்திர்களே, என்றாவுது ஒரு நாள் விடுதலை புலிகளால் பிடித்து செல்லப்பட்டு போர்க்களத்தில் பலியிட பட்ட அப்பாவி சிறுவர் சிறுமிகளுக்காக குரல் கொடுத்து இருப்பிர்களா ? என் இந்த கேள்வி ஜெயலலிதா அவர்களுக்கும் சேர்த்தேDuubukku Dubukku Down Voted
- பரவாயில்லையே! வெறும் 10 துரோகம் மட்டும்தானா? மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு, பால், பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம், அண்ணா நூலகம் அகற்றல், சிவாஜி சிலை பெயர்த்தல், வங்கிக் கொள்ளை, வீடு புகுந்து திருட்டு, தென் மாவட்டங்களுக்கு தொழில், வேலைவாய்ப்பில் பட்டை நாமம், வழிப்பறி, உமா மகேசுவரிகள், பொம்மைக்கு பொன்னாடை, பன்னாடை என்று ஒப்பிட்டால், நம்ம காங்கிரஸ் எவ்வளவோ பரவாயில்லை போல் தெரிகிறதே. நம்ம ஒட்டு அதுக்குத்தான். நம் கண்களைத் திறந்த அம்பாளுக்கு நன்றி.Duubukku Dubukku Down Voted
- R.Subramanian from Bangaloreகாவேரி நடுவர் மன்றம் தீர்ப்பு சொன்ன போது இதே ஜெயலலிதா (மற்றும் அனைத்து தமிழக அரசியல் தலைவர்களும்) சொன்ன ஒரு வார்த்தை தீர்ப்பு தமிழகத்ஹிற்கு சாதகமாக இல்லை அதனால் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். அதன் காரணமாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கபடவில்லை. அதே ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக திரும்ப வந்த பிறகு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதன்படி தற்காலிக ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருக்கிறது... காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு துரோகம் செய்தது என்கிறார்களே அது எப்படி, இதில் என்ன துரோகம் இருக்கிறது... இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது தான் வாரியம் அமைக்கப்பட்டது (பல கர்நாடக கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி) அதனால் கர்நாடகாவில் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மிரட்டல் வேறு விடுத்தார்கள், அதை எல்லாம் தாண்டி தானே வாரியம் அமைக்கப்பட்டது ? இதில் எங்கே துரோகம் என்று ஜெயலலிதா அவர்கள் தான் சொல்ல வேண்டும்Duubukku Dubukku Down Voted
- R.Subramanian from Bangaloreஇலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் அழிச்சாட்டியம் செய்தார்கள் ஆனால் இலங்கைக்கு பிரிட்டின் பிரதமர் சென்றார், தமிழ் பகுதிக்கு சென்றார் அப்போது இலங்கை தமிழர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விஷயம் பிரிட்டின் பிரதமருக்கு கிடைத்த பெருமை எல்லாம் இந்திய பிரதமருக்கு கிடைத்து இருக்க வேண்டும் ஆனால் கிடைக்காதர்க்கு காரணம் தமிழக அரசியல் தலைவர்கள். இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று தமிழ் மக்களிடம் பேசி இருந்தால் உண்மை நிலை தெரிந்து இருக்கும் அதற்க்கு ஏற்றார் போல் இந்திய கொள்கைகளை மாறி இருக்கலாமே ? இதை எல்லாம் தடுத்தவர்கள் தமிழக அரசியல் கட்சிகள் தானே .... தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் நிதனாமாக சிந்திக்காமல் விடுதலை புலிகளை போல் நிதானம் இல்லாமல் உணர்ச்சிவயப்பட்டு சிந்திக்கிறார்கள் அதனால் இன்று வரையில் இலங்கை தமிழர் பிரச்சனை தீராமல் இருக்கிறது.Duubukku Dubukku Down Voted
- R.Subramanian from Bangaloreஎன்னை பொருத்தவரையில் தமிழக முதல் அமைச்சர், எதிர் கட்சி தலைவரான விஜயகாந்த் மற்றும் கருணாநிதி போன்றவர்கள் இலங்கை தமிழ் பகுதிக்கு சென்று அங்கே இருக்கும் நிலைமையை நேரில் ஆய்வு செய்து இருக்க வேண்டும், அந்த மக்களிடம் பேசி அவர்களுக்கு ஆறுதல் கொடுத்து இருக்க வேண்டும், ஆனால் அதை செய்யாமல் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலை புலி ஆதரவாளர்களின் பொய்களை நம்பி நம் நாட்டு நலனை நாமே நாசம் செய்துகொள்வது மட்டும் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்கும் மறைமுகமாக தீமையை செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழக அரசியல் கட்சிகள் செய்ய தவறிய விஷயங்களை இலங்கை தமிழ் மக்களுக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள், தொழில் தொடங்க உதவிகள், விவசாயம் செய்ய உதவிகள், வீடு கட்ட உதவிகள், சாலை மற்றும் ரயில் என்று பல விஷயங்கள் இலங்கை தமிழர்களுக்கு செய்து கொண்டு இருக்கிறார்கள், இதில் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது இலங்கை தமிழர்கள் திரும்பவும் சண்டை போட வேண்டும் என்று சொல்லும் தமிழக அரசியல் கட்சிகள் நன்மை செய்கிறதா ???
0 comments:
Post a Comment