Monday, February 17, 2014

தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை

'தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி

தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.

250 ஏக்கரில்...:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், மாநாட்டு பணிகளை கவனிக்கும் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்காக, 1,100 அடி நீளம், 600 அடி அகலமுடைய பிரமாண்ட பந்தல், 200 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கான்கிரீட் மேடை, கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடிக்கம்பம் போன்றவை அமைக்கப்படுகின்றன. தலைவர்கள் தங்க, குடில்கள் கட்டப்படுகின்றன. தொண்டர்கள் தங்க, திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, 100 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு வாய்ப்பு:

மாநாட்டிற்கு, 10 லட்சம் பேர் வருவர். பிப்., 15ம் தேதி நிர்வாகிகளும், 16ம் தேதி கூட்டணிக் கட்சி தலைவர்களும் பேசுகின்றனர்.லோக்சபா தேர்தலில், இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், கணிசமான தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும். தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, கட்சியில் இருக்கிறாரா என்பதை, கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தேவையில்லை' என, தெரிவித்திருப்பது குறித்து கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.

மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 92வது வயதை குறிக்கும் வகையில், மாநாடு பந்தல் முகப்பில், 92 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த கொடிக்கம்பத்துக்கு, மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது. அதேபோல், திங்கள்கிழமையான நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.


THANX - DINAMALAR 

0 comments: