நீங்கள் கைகோத்திருப்பது நாட்டுக்காகவா அம்பானிக்காகவா?- அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை
டிசம்பர் 28-ல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக
வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய
வாக்குறுதிகளிலேயே மிகவும் முக்கியமானது. ‘சட்டமன்றத்தில் ஜன் லோக்பால்
மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம்’ என்று இந்த காங்கிரஸ்காரர்கள்
எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால், இன்று
சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரஸும்
பா.ஜ.க-வும் கைகோத்துக்கொண்டன.
எதற்காகக் கைகோத்திருக்கிறீர்கள்?
இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால், இன்று அவர்கள்
கைகோத்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவில் இருந்துகொண்டு அவர்கள்
நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். கடந்த இரு நாட்களில் அவர்களது
நிஜமுகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதா
முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக் கூடாது என்பதற்காக, அதை
உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோத்துக்கொண்டார்கள்.
நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது
எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான்
முகேஷ் அம்பானி என்பவர். காங்கிரஸ் கட்சி என்னுடைய கடை என்று முகேஷ்
அம்பானி கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கடையிலிருந்து
அவர் வேண்டியதை வாங்கிக்கொள்வாராம். 10 ஆண்டுகளாக ஐ.மு.கூ. அரசை முகேஷ்
அம்பானிதான் இயக்கிக்கொண்டிருந்தார். கடந்த ஓராண்டு காலமாக முகேஷ் அம்பானி
மோடிஜியையும் ஆதரித்துவருகிறார்.
மோடிஜிக்குப் பின்னால் முகேஷ்ஜி
எங்கேயிருந்து மோடிஜிக்கு இவ்வளவு பணம் வருகிறது? ஹெலிகாப்டர்களில் அவர்
ஊர் சுற்றுகிறார், பெரிய பெரிய பேரணிகளை நடத்துகிறார். எங்கேயிருந்து
இதெற்கெல்லாம் பணம் வருகிறது? இவற்றுக்குப் பின்னால் முகேஷ் அம்பானி
இருக்கிறார்.
நண்பர்களே, நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராகக் குரலை உயர்த்திய அடுத்த
நொடியே காங்கிரஸும் பா.ஜ.க-வும் சேர்ந்துகொண்டன. ஜன் லோக்பால் மசோதாவை
முன்வைக்க அவர்கள் விடவில்லை.
கேஜ்ரிவால் ஏதோ ஒரு குட்டி லஞ்ச ஒழிப்பு அலுவலர்தானே என அவர்கள்
நினைத்துவிட்டார்கள். இந்த அளவுக்குக் குடைச்சல் கொடுக்கிறானே என்று
எரிச்சலடைந்துவிட்டார்கள். ஜன் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால், இந்த
ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்.
அதனால்தான் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை நிறைவேற விடாமல்
ஒழித்தன.
இப்போது நாங்கள் முகேஷ் அம்பானியையும் வீரப்ப மொய்லியையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.
அநேகமாக நாளை ஷரத் பவாரை அம்பலமேற்றியிருப்போம். அடுத்து, அநேகமாக கமல்நாத்
முறையாக இருந்திருக்கும். எப்படியோ, அவர்கள் ஒவ்வொருவராக
மாட்டியிருப்பார்கள்.
நான் சாதாரண மனிதன்
நான் ஒரு சாதாரண மனிதன். நான் ஒன்றும் அவதார புருஷன் இல்லை. நான் உங்களில்
ஒருவன். அதிகாரத்துக்காகவோ இந்த நாற்காலிக்காகவோ இங்கே வரவில்லை.
அதனால்தான் எங்கள் அரசாங்கம் இப்போது பதவி விலகுகிறது.
ஜன் லோக்பால் மசோதாவுக்காக நூறு முதல்வர் பதவிகள்கூடப் பறிபோகலாம்.
தவறில்லை. நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த நாட்டுக்காக நாங்கள்
உயிர்கொடுக்க வேண்டும் என்றால், நான் அதிர்ஷ்டக்காரன் என்றே
கருதிக்கொள்வேன்.
இப்போதுதான் எங்கள் அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது. எங்கள் அரசாங்கம் பதவி
விலகுவது என முடிவுசெய்யப்பட்டது. இதோ என் பதவி விலகல் கடிதம். நான்
இப்போது துணைநிலை ஆளுநரை பார்க்கப்போகிறேன். சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு,
மறுதேர்தல் நடத்த வேண்டும் என எங்கள் அமைச்சரவை பரிந்துரைத்திருக்கிறது.
எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்.
டிசம்பர் 28-ல் நாங்கள் அரசு அமைத்தது முதல் இன்றுவரை, எங்கள் அமைச்சர்கள்
ஒரு இரவுகூட சரியாகத் தூங்கியதில்லை. இரவு பகலாக அவர்கள்
வேலைபார்த்தார்கள். எங்கள் முயற்சியைத் தொடர நாங்கள் எதையும்
விட்டுவைக்கவில்லை. மின் கட்டணம், நீர்க் கட்டணம் குறைத்தோம். மின்
நிறுவனங்களைத் தணிக்கை செய்ய உத்தரவிட்டோம். ஊழலைக் குறைத்திருக்கிறோம்.
முழு நேர்மையுடனும் நல்ல நோக்கங்களுடனும் நாங்கள் வேலைசெய்தோம். நாங்கள்
தவறுகளைச் செய்திருக்கலாம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களால் முடிந்ததைச்
செய்தோம். உங்களால் ஆட்சிசெய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வளவு ஆண்டுகளாக மின் நிறுவனங்களை அவர்களால் தணிக்கை செய்ய முடியவில்லை.
நாங்கள் ஐந்தே நாட்களில் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்களால் ஊழலைக் குறைக்க
முடியவில்லை. நாங்கள் 49 நாட்களில் செய்தோம். ஷீலா தீட்சித்தும் முகேஷ்
அம்பானியும் செய்த ஊழலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு
செய்தோம். உடனே அவர்கள் சொல்கிறார்கள்: ஆட்சி செய்யுங்கள், இதையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள் என்று!
ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுதானய்யா உண்மையில் ஆட்சிசெய்வதென்பது.
எனக்குச் சிலசமயம் என்ன தோன்றுகிறதென்றால், இந்த காங்கிரஸ்காரர்களுக்கும்
பா.ஜ.க-காரர்களுக்கும் ஒரு சில கோடிகளை விட்டெறிந்துவிட்டிருந்தோம்
என்றால், இது நல்ல காரியம் என்று அவர்கள் சொல்வார்கள்.
மிளகுத் தூள் ஜனநாயகம்
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நடந்ததைப் பார்க்கும்போது, என் மனம் வருத்தமடைகிறது. நாடாளு
மன்றத்தில் அவர்கள் மிளகுத் தூள் தூவியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் என்
மைக்கை உடைத்திருக்கிறார்கள். என் ஆவணங்களைக்
கிழித்துப்போட்டிருக்கிறார்கள். ஓர் அமைச்சரிடம் வளையல்களைக்
கொடுத்திருக்கிறார்கள். வளையல் கொடுப்பதென்றால் என்ன அர்த்தம்? பா.ஜ.க.
பெண்களை மதிக்கிறதா இல்லையா?
நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்கிறார்கள். சட்டமன்றமும்
கோயில்தானாம், மசூதிதானாம். நான்கேட்கிறேன்: கோயில்களில் விக்கிரகங்களை
உடைத்தெறிவீர்களா? மசூதியில் குரானைக் கிழித்தெறிவீர்களா? தேவாலயத்தில்
விவிலியத்தைக் கிழித்தெறிவீர்களா? இயேசுபிரானின் சிலைகளை உடைப்பீர்களா?
வெட்கப்படுகிறேன். இந்த ஆட்கள் சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்திவிட்டார்கள்.
அரசியல் சாசனத்துக்கு விரோதம் எது?
நாங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாகச் செய்துவிட்டோமாம். எஃப்.ஐ.ஆர்.
போட்டது அரசியல் சாசன விரோதமாம். ஊழலுக்கு முடிவுகட்டுவதற்காக எஃப்.ஐ.ஆர்.
போட்டால் அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள், ஜன் லோக்பால் மசோதாவை
முன்மொழிய வேண்டும் என்றால், அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள்.
சட்டமன்றத்தில் சட்டங்களை முன்மொழிவதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும்
என்கிறார்கள். அவர்கள் புளுகுகிறார்கள் நண்பர்களே, நான் அரசியல் சாசனத்தைப்
படித்திருக்கிறேன். மத்திய அரசின் அனுமதி வேண்டும் என அது எந்த இடத்திலும்
சொல்லவில்லை.
தங்களை காலனிய ஆட்சியாளர்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. தன்னை
வைஸ்ராய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் துணைநிலை ஆளுநர். இந்தச்
சட்டமன்றமே ஒன்றுமில்லை என நினைக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து
நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அவர்களைக் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டுமாம், அப்படிக் கற்பனை
செய்துகொண்டிருக்கிறார்கள்.
நான் அரசியல் சாசனத்தைத்தான் பின்பற்றுவேன். அரசியல் சாசனத்துக்காக நான்
என் உயிரையே கொடுப்பேன். ஜன் லோக்பால் மசோதா முழுக்க முழுக்க அரசியல்
சாசனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால், ஊழலைத்
தொடர்ந்து நடத்திட அவர்கள் விரும்புகிறார்கள்.
நண்பர்களே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள்;
பறித்துக்கொண்டார்கள். இதையெல்லாம் அரசியல் சாசனரீதியிலானது என அவர்கள்
நினைக்கிறார்கள். நாம் நாட்டுக்காகப் போராடுகிறோம். இதை அரசியல்
சாசனத்துக்கு விரோதமானது என்கிறார்கள்.
இந்த நாட்டின் மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த நாட்டின் மக்கள் எப்போதுமே அமைதி காக்க மாட்டார்கள்.
நான் நேரே இப்போது துணைநிலை ஆளுநரிடம் செல்கிறேன்.
கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்குக் கருணைகாட்டுங்கள்,
வழிநடத்துங்கள் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களைத்
தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என
வேண்டிக்கொள்கிறேன்.
thanx - the hindu
1 comments:
Bravo....
Post a Comment