படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவரது விருப்பம். அதே போல்
நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் எனக் காத்திருப்பவர்களும் உண்டு.
வெளிநாட்டில் வேலை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்கள் ஏராளம்.
அவர்களுக்கான வரப்பிரசாதமாக அருளுபவர் மயிலாப்ப்பூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்
ஆலயத்தில் உள்ள ஸ்ரீ மயூரவல்லித் தாயார் என்பது ஐதீகம்.
இவரை மனதார வேண்டிக் கொண்டு, சந்நிதியில் இரண்டு மணிகளைக் கட்டி விட்டு,
தாயாருக்குத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம்
ஏற்றி 12 முறை பிராகாரத்தை வலம் வர வேண்டும். இங்கு வெள்ளிக்கிழமைகளில்
மாலையில் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. இந்த அர்ச்சனையைச்
செய்து பிரசாதத்தைப் பெற்று , பிரார்த்தித்துக் கொண்டால் நல்ல இடத்தில்
வேலை கிடைக்கும் என்றும் தொழில் விருத்தியாகும் என்றும் கூறுகிறார்கள்.
இத்திருக் கோயிலில் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தாயாரின்
திருநாமம் ஸ்ரீ மயூரவல்லித் தாயார். மயூரபுரி என்ற மயிலாப்பூர், அருகில்
உள்ள திருவல்லிக்கேணி துளசிவனமாக பிருந்தாரண்ய க்ஷேத்திரமாகவும்
இருந்ததாம். இந்தத் தலத்தில் உள்ள கைரவணி தீர்த்தக் குளத்தில், ஆம்பல்
மலராகத் தோன்றிய மகாலட்சுமித் தாயார், பிறகு முனிவரின் மகளாக அவதரித்து,
பேயாழ்வாருக்கு அருள் புரிந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். மயூரபுரியில்
அவதரித்ததால், ஸ்ரீமயூரவல்லித் தாயார் என்பது திருநாமம்.
இங்கு தாயார் விசேஷமாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இந்தத்
தாயாருக்குத்தான் சிறப்பாக இங்கு வெள்ளிக்கிழமைதோறும் மாலையில்
வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளியன்றும் காலையில்
ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெறுகிறது.
திரேதா யுகத்தில் இத்தலத்தில் உள்ள கைரவணி புஷ்கரணிக் கரையில் ரிஷிகள்
யாகம் நடத்தினர். மது என்ற அசுரன், யாகத்தினை நடத்தவிடாமல் குறுக்கீடுகளைச்
செய்தான். இதனால் ரிஷிகள் யாகத்தைக் காத்து அதனை நிறைவேற்ற உதவும்படி
பெருமாளை வேண்ட, அவர்களுக்குக் காட்சி தந்த பெருமாள் அசுரனை அழிப்பதாக
உறுதியளித்து யாகத்தைத் தொடர்ந்து நடத்தும்படி கூறினார்.
அதன்படி ரிஷிகள் யாகத்தைத் தொடர எப்போதும் போல் அசுரனும் அங்கு வந்தான்.
அப்போது, மகாவிஷ்ணு யாகத்தில் இருந்து தோன்றி, அசுரனை அழித்தார். பின்பு
ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்திலேயே தங்கிவிட்டார். ஆதியில் வந்து
தங்கியதால் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மஹாலட்சுமி தாயாருடன்
இங்கு அருள் பாலிக்கிறார்.
0 comments:
Post a Comment