எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக
எல்லா சமரசங்களையும் செய்யத் தயாராக இருக்கும் கட்சிகளையே பார்த்துவரும்
இந்தியர்களுக்கு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்ற
காரணத்துக்காக ஒரு கட்சி ஆட்சியைத் துறப்பது வித்தியாசமான காட்சிதான்.
தங்களது ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல்
காங்கிரஸும் பா.ஜ.க-வும் தடுத்ததை அடுத்து, ராஜினாமா செய்ததுடன்
சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு, தேர்தல் நடத்தத் துணைநிலை ஆளுநரிடம்
அர்விந்த் கேஜ்ரிவால் பரிந்துரைத்துள்ளார். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு
அரசு நிர்வாகத்தை நடத்துவதில் அனுபவமும் இல்லை விருப்பமும் இல்லை. ஏதோவொரு
காரணத்தைக் காட்டி ஆட்சியைத் துறக்கவே அந்தக் கட்சி தொடக்கத்திலிருந்தே
முயன்றுவருகிறது. கொள்கைக்காக ஆட்சியைத் தியாகம் செய்த கட்சி என்ற
பெயருடன், வருகின்ற மக்களவைத் தேர்தலைச் சந்தித்து அதிக இடங்களைப்
பிடிப்பதற்கான அரசியல் தந்திரமே இந்த ஆட்சித் துறப்பு நாடகம் என்றெல்லாம்
ஆ.ஆ.க-வை பா.ஜ.க-வும் அதன் ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சனம்
செய்திருக்கின்றனர்.
ஆனால், ஊழல் ஒழிப்பையும் அதற்கு அடிப்படையாக ஜன் லோக்பால் மசோதாவை
நிறைவேற்றுவதையும் தங்கள் முக்கியக் கொள்கைகளாக கருதும் கட்சிக்கு, அதைச்
செய்ய முடியாமல் போகிறபோது ஆட்சியைத் துறந்து மீண்டும் தேர்தலைச்
சந்திப்பதைத் தவிர்த்து வேறு வழி எதுவும் கிடையாது.
அம்பானி அஸ்திரம்
ராஜினாமா செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கம்யூனிஸ்ட்
கட்சிகளைத் தவிர்த்து, இந்திய அரசியல் கட்சிகள் எதுவும் செய்யத் துணியாத
ஒரு செயலை ஆ.ஆ.க. அரசு செய்தது. கிருஷ்ணா - கோதாவரி படுகை இயற்கை எரிவாயு
விலை நிர்ணய விவகாரத்தில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பெரும் ஊழல் தொடர்பாக,
ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியத் துறை அமைச்சர்
வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா
உள்ளிட்ட பலர்மீது டெல்லி அரசு வழக்குத் தொடுத்துள்ளது. இதுவும் மக்களவைத்
தேர்தலை மனதில் கொண்டு ஆ.ஆ.க. நடத்தும் வாக்கு வேட்டைக்கான தந்திரமே என்று
காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஒருமித்த குரலில் கூறுகின்றன. ஆனால், இந்தக்
குற்றச்சாட்டைக் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே சி.பி.ஐ. மற்றும்
சி.பி.எம். கட்சிகள் தொடர்ந்து கூறிவரு கின்றன. நாடாளுமன்றத்திலும் அந்தக்
கட்சிகள் அதற்காகக் குரலெழுப்பியுள்ளன. மேலும், முன்னாள் அமைச்சரவை
செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியன், ஆற்றல் துறையின் முன்னாள் செயலாளர்
இ.எ.எஸ். சர்மா, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால்
உள்ளிட்டோர் கூட்டாக கேஜ்ரிவாலுக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையிலேயே
முதல் தகவல் அறிக்கையை டெல்லி ஊழல் ஒழிப்புத் துறை பதிவுசெய்தது என்பதையும்
பார்க்கிறபோது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் குற்றச்சாட்டில் உண்மை
இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், புகார் அளித்தவர்கள் சந்தேகத் துக்கு
அப்பாற்பட்ட நேர்மையாளர்கள், ஆ.ஆ.க-வுடன் தொடர்பில்லாதவர்கள்
என்பனவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின்
குற்றச்சாட்டு அபத்தமானதாகத் தெரிகிறது.
காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் என்ன வித்தியாசம்?
“அடிப்படையில், அமெரிக்காவில் ஒரேயொரு கட்சிதான் இருக்கிறது. அது வர்த்தகக்
கட்சி. அதில் ஜனநாயகவாதிகள் மற்றும் குடியரசுவாதிகள் என்று இரு அணிகள்
இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று கொஞ்சம் வேறுபட்டவை. ஆனால், ஒத்த
கொள்கைகளைக் கொஞ்சம் வித்தியாசங்களுடன் நிறைவேற்று கிறவை” என்றார்
மொழியியல் மேதையும் அரசியல் விமர்சகருமான நோம் சோம்ஸ்கி. அமெரிக்காவுக்குப்
பதில் இந்தியா, ஜனநாயகவாதிகளுக்குப் பதில் காங்கிரஸ்காரர்கள்,
குடியரசுவாதி களுக்குப் பதில் பா.ஜ.க-வினர் என்று பொருத்திக்கொண்டால்,
சோம்ஸ்கியின் கூற்று இந்திய அரசியலுக்கு முழுமையாகப் பொருந்துவதைப்
பார்க்கலாம்.
இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் சரி, இந்தியாவிலுள்ள அனைத்து
மாநிலக் கட்சிகளும் சரி, பெரும் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான
கட்சிகளாகவே இருக்கின்றன என்பதையே எரிவாயு விலை நிர்ணய விவகாரம்
காட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்
முதல்முறையாக மக்கள் நலன்களுக்கு எதிரான பெரு நிறுவனங்களின் கொள்ளைகளைக்
கேள்விக்குட்படுத்திய, துணிவுடன் எதிர்த்த ஒரேயொரு கட்சி ஆ.ஆ.க. மட்டுமே.
எரிவாயு விலை நிர்ணய முறைகேடு தொடர்பாகத் தொடர்ந்து கனத்த மௌனம்
சாதித்துவந்த ஊடகங்கள் (‘தி இந்து’ மற்றும் ‘அவுட்லுக்’ போன்ற ஓரிரு
விதிவிலக்குகள் தவிர்த்து) ஆ.ஆ.க. வழக்குப் பதிவுசெய்த பிறகு, இதைப் பற்றி
விவாதித்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருப்பதே ஒரு வெற்றிதான்.
நடுத்தர மக்கள் ஆதரவு?
ஓர் எதிர்ப்பியக்கமாக மட்டுமே இருக்கத் தகுதியானது ஆ.ஆ.க., இப்போது தான்
அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலை யில், அது எடுத்துள்ள
ராஜினாமா முடிவின் விளைவாக டெல்லி மக்களின், குறிப்பாக அதன் முக்கிய
ஆதரவுத் தளமான படித்த, நடுத்தர வர்க்கத்தின் ஆதரவை அது இழக்க
வேண்டியிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஊழல்
விவகாரத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள்மீது கோபமிருக்கும் அளவுக்கு
பெருநிறுவனங்கள்மீது மக்களுக்குக் கோபமிருப்பதாகச் சொல்ல முடியாது.
பெருநிறுவனங்களின் ஊழல்கள் அதிகம் பொதுமக்களின் பார்வைக்கு வராதிருப்பதே
இதற்குக் காரணம். மேலும், சாதாரண நிலையிலிருந்து 10 அல்லது 20 ஆண்டுகளில்
பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்களாகச் சிலர் உயர்வதைப் பெரும் சாதனையாகப்
பார்க்கும் போக்கு மக்களிடம் இருக்கிறது. இதன் காரணமாகவே திருபாய் அம்பானி
போன்றவர்கள் பெரும் நாயகர்களாக, தேசப் பொருளாதாரத்தையே நிமிர்த்தும் வல்லமை
படைத்த, போற்றுதலுக்குரிய வர்களாக படித்த நடுத்தர மக்களால்
பார்க்கப்படுகின்றனர்.
ஆக, இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது ஆ.ஆ.க. தொடுத்திருக்கும் வழக்கு,
நடுத்தர மக்களுக்குப் பெரும் எரிச்சலைத் தரும் என்று இந்த விமர்சகர்கள்
கருதுகின்றனர். மேலும், எரிவாயு விலை நிர்ணய விவகாரம் மிகவும் சிக்கலானது,
சர்வதேசப் பொருளாதாரத்துடன் தொடர்புடையது என்பதால், இதை ஓர் ஊழல்
விவகாரமாகப் பார்ப்பதே தவறு என்பது பெருநிறுவனப் பொருளாதார நிபுணர்களின்
கருத்து.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே இந்த
விவகாரம்பற்றிப் பேசிவந்திருப்பதுடன், ஊழல் விஷயத்தில் பா.ஜ.க-வுக்கும்
காங்கிரஸுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லியே தனது டெல்லி
தேர்தல் பிரச்சாரத்தை ஆ.ஆ.க. மேற்கொண்டது. ஆ.ஆ.க. பிரச்சாரத்தின் விளைவாக
டெல்லி நடுத்தர மக்களிடையே பெருநிறுவனங்கள் பற்றிய மதிப்பீட்டில் மாற்றம்
ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.
தனது இரண்டு முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான மாதத்துக்கு 20,000 லிட்டர்
தண்ணீர் இலவசம், குறிப்பிட்ட அளவு வரை மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு
ஆகியவற்றை நிறைவேற்றியது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆ.ஆ.க. மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, ஆட்சியை ராஜினாமா செய்து
தேர்தலுக்கு வழிகோலியிருப்பதன் மூலம், அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில்
மட்டுமல்ல, டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் ஆ.ஆ.க. பெரும் இழப்பைச்
சந்திக்கும் என்ற ஆரூடம் பொய்ப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று
தோன்றுகிறது.
ராஜினாமா நாடகம்?
ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் கேஜ்ரிவால் போட்டியிடுவார் எனில், அது
ஆ.ஆ.க-வுக்கு டெல்லியில் கணிசமான இழப்பை ஏற்படுத்தக்கூடும். கேஜ்ரிவால்
நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் பட்சத்தில் தனது பிரதமர் கனவால்தான்
இப்போதைய ராஜினாமா நாடகத்தையே அவர் நடத்தியிருக்கிறார் என்று இப்போது
சிலரால் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்ததாகிவிடும்.
இவ்வாறாக, தினமும் கண்டங்களை எதிர்நோக்கியிருந்த ஆ.ஆ.க. ஆட்சியின் ஆயுசு 49
நாட்களில் முடிவுக்கு வந்திருக் கிறது. எத்தகைய புத்துயிர்ப்பை அது
பெறப்போகிறது என்பதைப் பார்க்க அடுத்த சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com
மக்கள் கருத்து
- Sri from Amsterdamஇது ஒரு தேர்தல் நாடகம்.a day ago · (7) · (18) · reply (2)
Veenaiponavan Nallavan from Hyderabad
பிழைப்பதற்கு கெஹ்ஜ்ரிவால் நாடகம் நடத்த வேண்டிய அவசியமில்லை. அவர் தன் (Sr.Engineer (ாட்டா steel), IRS) வேலைகளை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் போதுமானது. இப்படி ஒவொரு சாமானிய மனிதனுக்காகவும் தெருவில் இறங்கி போராடுவதற்கு நாடகம் என பெயர் சூட்டி அலட்சியபடுத்த வேண்டாம் ஆம்ச்டெர்டமிலிருந்துகொண்டு ...a day ago · (26) · (1) · reply (0)
Arjunan Pandian from Chennai
அவர் பதவியை துறந்தது அவர் ,மற்றும் கட்சின் இயலாமை.வெறும் வை வீச்சில் மீடியாவின் துணையோடு வந்தவர்,தன்னுடைய தகுதியியை உணர வில்லை.ஆளுமைதிறனற்ற,மக்களை (வசதி யற்ற வறியவர் களுக்கனகலுக்கான )கட்சி இல்லை என்பதை தெளிவா படுத்த ஒரு தேர்தலை பயன் படுத்திய 24 ம் புலிகேசிa day ago · (1) · (3) · reply (0)yoyo yoyo Down Voted Arjunan Pandian's commentShamsudeen
எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக எல்லா சமரசங்களையும் செய்யத் தயாராக இருக்கும் கட்சிகளையே பார்த்துவரும் இந்தியர்களுக்கு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்ற காரணத்துக்காக ஒரு கட்சி ஆட்சியைத் துறப்பது வித்தியாசமான காட்சிதான்a day ago · (2) · (0) · reply (0)yoyo yoyo Up Voted Shamsudeen 's commentselvakumar Raman Scientist (Agricultral Research Service) at Indian council of agricultural research
தலை NIMIRA VIKKUM KATTURAIநன்றி - த இந்து
0 comments:
Post a Comment