Thursday, February 20, 2014

தமிழன் வாக்களிக்கப்போவது யாருக்கு? - ஓ பக்கங்கள் ஞாநி கட்டுரை

மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!

நாடெங்கும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று பா.ஜ.க-வின் கெப்பல்ஸ்கள் அணி 24x7 ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கூவினாலும், தமிழ்நாடு, பா.ஜ.க. அலை ஏதும் வீசாத குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது என்பதுதான் கள உண்மை. தமிழ்நாட்டில் நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் மோடியா ராகுலா கேஜ்ரிவாலா என்ற அடிப்படையிலேயே நடக்கப்போவதில்லை, நடக்க முடியவும் முடியாது என்பதே அசலான உண்மை. 



தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தல்போல தி.மு.க-வா அ.இ.அ.தி.மு.க-வா என்ற அடிப்படையிலேயே போட்டி நடக்கவிருக்கிறது. இருவரும் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். ஆனால், டெல்லி ஆட்சியில் செல்வாக்குடன் இருக்கப்போவது யார் என்பதுதான் தேர்தல் களத்தில் இன்று அவர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை. 



கடந்த ஒரு மாத காலமாக வெவ்வேறு இதழ்களும் ஊடகங்களும் செய்துவரும் கருத்துக் கணிப்புகள், கள நிலவரச் செய்தி அறிக்கைகள், கடந்த காலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், விருப்புவெறுப்பின்றி அலசும் எல்லோருக்கும் ஓர் உண்மை புரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸோ பா.ஜ.க-வோ வேறொரு பெரிய திராவிடக் கட்சியுடன் கூட்டு இல்லாமல் அதிகபட்சம் ஒரு சீட்டுக்கு மேல் ஜெயிக்கவே முடியாது. யாருடன் சேர்ந்தால் தங்களுக்கு ஐந்தாறு சீட்டுகளாவது கிடைக்கும் என்று அலசி ஆராய்வதைத் தவிர காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறு வழி இல்லை. 



அப்படி அலசினால், பா.ஜ.க-வுக்கு இருக்கும் முதல் சிக்கல், அதனுடன் கூட்டுசேர்வதை தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்ற இரு பெரிய திராவிடக் கட்சிகளும் நிறுத்திக்கொண்டு பத்து ஆண்டுகளாகிவிட்டன. இந்த முறையும் அவை யாரும் பா.ஜ.க-வுடன் சேரப்போவதில்லை என்ற நிலையில் பா.ஜ.க-வுக்குக் கூட்டுசேர்ந்துகொள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டால் வேறு திராவிடக் கட்சியே இல்லை. 


கடுகுகளும் மிளகுகளும் 


ஆனால், ம.தி.மு.க., கட்டெறும்பு தேய்ந்து கடுகு ஆன மாதிரி, தி.மு.க., அ.தி.மு.க. இருவருடனும் மாறி மாறிக் கூட்டுவைத்து விலகி, இன்று சிறு திராவிடக் கட்சியாகவே இருக்கிறது. தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் தமிழகத்தில் மாற்று ம.தி.மு.க-தான் என்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளேனும் தனியே போட்டியிட்டு மூன்றாவது அணியை இங்கே உருவாக்க முயற்சித்திருந்தால், ம.தி.மு.க. இவ்வளவு கடுகுக் கட்சியாக இருந்திருக்காது. இப்போது, அதனுடன் பா.ஜ.க. என்ற இன்னொரு அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் இன்னொரு கடுகுக் கட்சி, வேறு வழியின்றி சேர்ந்திருக்கிறது. 



பா.ஜ.க. என்ற கடுகைவிடக் கொஞ்சம் பெரிய மிளகுக் கட்சிதான் தமிழகத்தில் காங்கிரஸ். பா.ஜ.க-வுக்கு மூன்று நான்கு சதவிகிதம் வரை வாக்குவங்கி இருக்குமென்றால், காங்கிரஸுக்கு இருப்பது அதிகபட்சம் 10. இதுவரை காங்கிரஸுக்கு இருந்துவரும் வசதி என்னவென்றால், 20 முதல் 30 சதவீதம் வரை வாக்குவங்கி வைத்திருக்கும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க-வுடன் மாறி மாறிக் கூட்டுசேர்ந்து, பத்துப் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பிவிட அதனால் முடிந்திருக்கிறது. இந்த முறை பா.ஜ.க-வுக்குப் பெரிய திராவிட முதுகு கிடைக்காததுபோல காங்கிரஸுக்கும் பெரிய திராவிட முதுகு மட்டுமல்ல, சவாரி செய்ய சிறிய திராவிட முதுகுகூட இதுவரை கிடைக்கவில்லை. 


அ.தி.மு.க-வுக்கே லாபம் 

 
ஆனால், காங்கிரஸ் இந்த முறையும் தப்பித்துக்கொள்ள வசதியாக, பாக்கி இருக்கும் ஒரே அரசியல் சூழல், தி.மு.க-வுக்கு டெல்லியில் அடுத்த ஆட்சியிலும் செல்வாக்கும் பிடிமானமும் தேவை என்ற நிலைதான். இப்போதுள்ள களநிலவர மதிப்பீடுகளின்படி காங்கிரஸ் தனியாகவோ தே.மு.தி.க-வுடன் சேர்ந்தோ நின்றாலும், தி.மு.க. சில சிறு கட்சிகளுடனும், பா.ஜ.க. - ம.தி.மு.க. - பா.ம.க. என்று கூட்டுசேர்ந்தும் போட்டியிட்டாலும், அந்தப் பலமுனைப் போட்டியில் அ.தி.மு.க-வுக்கே அதிக லாபம். அ.தி.மு.க-வுக்கு பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை. மொத்தம் 40 இடங்களில் அ.தி.மு.க. அணி 30 முதல் 35 வரை இடங்களை அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 



அப்படி நடந்தால், தி.மு.க-வுக்கு இரட்டை இழப்பாகிவிடும். தங்களுக்கு டெல்லி அரசியலில் எந்தச் செல்வாக்கும் இல்லாமல் போவது மட்டுமல்ல, தங்களின் எதிரிக் கட்சியான அ.தி.மு.க. டெல்லி ஆட்சியில் பங்கேற்கும் நிலையையும் சந்திக்க வேண்டிவரும். ஜெயலலிதா வசம் 30-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களானால், அவர் மூன்றாவது அணி ஆட்சி அமைத்தாலும் செல்வாக்கோடு இருப்பார். பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும் அவர் தயவு தேவைப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் குறைவானாலும், அது வெளியிலிருந்து ஆதரிக்கக்கூடிய மூன்றாவது அணி ஆட்சியில் அ.தி.மு.க. இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவது தி.மு.க-வுக்குப் பெரும் சிக்கலாகும். 



ஆனால், தி.மு.க., காங்கிரஸுடனும் விஜயகாந்தின் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்தால், களமதிப்பீடுகளின்படி மொத்தம் 40 இடங்களில் அந்த அணி சரிபாதி இடங்கள் வரை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதன்படி ஜெயலலிதாவின் அணிக்கு 20 முதல் 25 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அப்போது, டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு ஓங்கி, தங்கள் தரப்பு முற்றிலும் பலவீனமாகிவிடாமல் காப்பாற்றும் வசதி தி.மு.க-வுக்குக் கிடைக்கும். இதுதான் கள யதார்த்தம். 


தயக்கத்தின் காரணம் 

 
எனினும், இத்தனை நாள் ஒன்றாக இருந்த தி.மு.க-வும் காங்கிரஸும் இப்போது கூட்டணி அமைக்கத் தயங்கிக்கொண்டிருப்பதன் காரணம் என்ன? கட்சியில் அடுத்த தலைவராக அடையாளம் காட்டப்பட்டுவிட்ட ஸ்டாலின்தான், இந்தத் தயக்கத்தின் பிரதான காரணம் என்று தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 



ஸ்டாலினின் தயக்கத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை விட, தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்சினையே காரணம் என்று கருதலாம். தி.மு.க-வின் சார்பில் டெல்லிக்கு எம்.பி-க்களாக அனுப்பப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்ட அழகிரி, தயாநிதி, அமைச்சர் வாய்ப்பை நூலிழையில் இழந்த கனிமொழி எல்லோருமே கலைஞர் குடும்பத்தினர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் முக்கியக் குற்றவாளிகளாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இன்று கட்சியை முழுக்கவும் தன்வசம் கொண்டுவந்துவிட்ட ஸ்டாலினுக்கு, டெல்லி அரசியல்தான் தி.மு.க-வின் சரிவுகளுக்குக் காரணம் என்றும், அந்தச் சரிவுகளில் முக்கியப் பங்காளிகளாக இருப்போர் எல்லாருமே குடும்ப அரசியலிலும் தனக்கு எதிரிகள் என்றும் தோன்றுவதில் வியப்பில்லை


. எனவே, டெல்லி அரசியலை ஓரங்கட்டிவிட்டு, மாநில அளவில் மட்டுமே தி.மு.க. கவனத்தைக் குவித்து அடுத்த மூன்றாண்டுகளும் வேலை செய்தால், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வலிமை பெற முடியும் என்று அவர் கணக்கிட்டிருக்கலாம். டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இந்த மூன்று ஆண்டுகள் செல்வாக்கு இல்லாமல் போனால் குடிமுழுகிவிடப்போவதில்லை. வழக்குகளில் சிக்கியிருக்கும் கனிமொழி, தயாநிதி போன்றோருக்குத்தான் அந்தக் கவலை இருக்க வேண்டும், கட்சிக்கு இதில் இனி பாதிப்பு வராது என்பது இந்தக் கணக்கின் தொடர்ச்சி. 



ஆனால், நடைமுறையில் டெல்லி ஆட்சியில் தி.மு.க-வுக்கு இதுவரை இருந்துவரும் செல்வாக்கை, பிடியை அது இந்த முறை இழந்தால், அந்தப் பிடி ஜெயலலிதாவிடம் போய்விட்டால், ஸ்டாலின் நினைப்பதைவிடப் பல மடங்கு கூடுதலான பாதிப்புகளையே தி.மு.க. அடைய நேரிடும். இந்த உண்மை ஸ்டாலினுக்குப் புரியாவிட்டாலும் கலைஞருக்குப் புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காங்கிரஸ் காத்திருக்கிறது. தங்களுடன் தி.மு.க-வைக் கூட்டணி சேரவைக்க விஜயகாந்த் என்ற துருப்புச் சீட்டை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. 



டெல்லிக்குப் போவாரா ஸ்டாலின்? 


 
தி.மு.க-வுக்குள் இந்த நெளிவுசுளிவுகளைப் புரிந்துவைத்திருக்கும் அனுபவசாலிகள், ஸ்டாலினின் உட்கட்சி குடும்ப அரசியலா, வெளியே எதிரிக் கட்சியைச் சமாளிக்கும் பொது அரசியலா என்ற ஹாம்லெட் கலக்கத்துக்குத் தீர்வாகச் சில யோசனைகளைப் பேசிவருகிறார்கள். டெல்லி அரசியல் தி.மு.க-வைச் சரிவுக்குத் தள்ளியது என்றால், அதிலிருந்து ஸ்டாலின் ஒதுங்குவதற்குப் பதிலாகத் தானே இறங்க வேண்டும் என்பது அந்தத் தீர்வு. காங்கிரஸுடனும் தே.மு.தி.க-வுடனும் கூட்டணி அமைத்துவிட்டு, ஸ்டாலின் தானே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு டெல்லிக்குச் சென்றால்தான், டெல்லியில் ஜெயலலிதா அமைக்கும் வியூகத்தையும் நேரடியாகச் சந்திக்க முடியும்; குடும்ப உறுப்பினர்களின் வசம் டெல்லி தி.மு.க. இல்லாமல் அதையும் தன் பிடிக்குள் வைத்திருக்க முடியும் என்பது இந்தப் பார்வை. எப்படியும் தமிழகச் சட்டப்பேரவையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு வெளிநடப்புகள் செய்வதைத் தவிர செய்ய வேறு அரசியல் பணிகள் இல்லை! ஒருவேளை, மத்தியில் தி.மு.க. ஆதரவுடன், மூன்றாம் அணியோ காங்கிரஸோ ஆட்சி அமைத்தால், அதில் ஸ்டாலின் அமைச்சராகவும் ஆகிவிடலாம். மத்திய அமைச்சராக அழகிரி செய்த சாதனையிலிருந்து மாறுபட்டு, ஸ்டாலின் சாதித்துக்காட்டினால், அடுத்த அரசியல் பாய்ச்சலுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது இந்தக் கணக்கு. இப்படிப்பட்ட கணக்குகளை நம்பியே காங்கிரஸ் காத்திருக்கிறது. 



ஆனால், இப்போதைக்குக் களத்தில் தன் கைதான் ஓங்கியிருக்கிறது என்று மிகுந்த நம்பிக்கையுடன் ஜெயலலிதா இருக்கிறார். அவர் கை ஓங்கினால், டெல்லியில் தேவைப்பட்டால், தேர்தலுக்குப் பின் காங்கிரஸைவிட தங்களுக்கே அவர் சாதகமாக இருப்பார் என்ற கணக்கில் பா.ஜ.க-வும் நம்பிக்கையுடன் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மக்களவைத் தேர்தல் என்பது மோடி x ராகுல் தேர்தல் அல்ல. தி.மு.க x அ.தி.மு.க. முடிவு செய்யும் தேர்தல்தான். 



ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: [email protected]
 
 
 
நன்றி - த இந்து 
 
  • niyamath from Calcutta
    மத்தியில் தி.மு.க. ஆதரவுடன், மூன்றாம் அணியோ காங்கிரஸோ ஆட்சி அமைத்தால், அதில் ஸ்டாலின் அமைச்சராகவும் ஆகிவிடலாம். மத்திய அமைச்சராக அழகிரி செய்த சாதனையிலிருந்து மாறுபட்டு, ஸ்டாலின் சாதித்துக்காட்டினால், அடுத்த அரசியல் பாய்ச்சலுக்கு அது பேருதவியாக இருக்கும்-100% உண்மை.அதனால் காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் அவர்கள் அச்செப்ட் செய்துகொள்ளவேண்டும்.ஜெயலலிதாவின் கனவை கலைக்க இதுமட்டுமே சிறந்த வழி.
    2 days ago ·   (22) ·   (10) ·  reply (0)
    Saju  · jayenness   Down Voted niyamath 's comment
  • R.Subramanian from Kolkata
    ஞானி அவர்களின் கணிப்பு மிக சரியான ஒன்று...
    2 days ago ·   (10) ·   (27) ·  reply (0)
    V   Up Voted R.Subramanian 's comment
    Saju  · Mohan Ramachandran · saravanan  · Srinivasan   Down Voted R.Subramanian 's comment
  • Mubarak Ali Management at PMC SDN BHDfrom Ipoh
    எல்லா வற்றையும் அலசிய ஞானி முக்கியமான ஒன்றை எழுத மறந்து விட்டார். அரசியல் கட்சிகள் என்ன கணக்குப் போட்டாலும் மக்கள் மனநிலை என்ன வென்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் தவறி விடுகிறார்கள். தமிழக சட்ட மன்றத் தேர்தல் என்றால் அதற்கு ஒரு மாதிரியாகவும், அதுவே பாராளுமன்றத் தேர்தலாக இருந்தால் அதற்கு வேறு மாதிரியாக வாக்களிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்களாகவே தமிழக மக்களின் கடந்த கால தேர்தல் வரலாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது. தனித்து நின்றால் தேமுதிக வும் சரி, பாமகவும் சரி ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது. தவிர பிரிக்கப் படும் ஓட்டுக்கள் திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்றுக்கு சாதகமாக அவர்களின் தேசியக் கட்சிகளின் கூட்டணியைப் பொறுத்து ஆதரவு ஓட்டுக்களாக மாறி விடும். அதிமுக தனித்து நிற்பது தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வது மட்டுமல்ல,அது மறைமுகமாக மோடியை ஆதரிக்கும் அணி என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். திமுக-காங்கிரஸ்-தேமுதிக இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே சில சீட்டுக்களாவது கிடைக்கும். இல்லையேல் பிரிக்கப் படும் ஓட்டுக்களால் இலாபம் அடையப் போவது தமிழகத்தில் கடுகை விடச் சிறிய பாஜக தான்.
    2 days ago ·   (11) ·   (3) ·  reply (0)
  • ஜெய்.ரமணா from Chennai
    இந்த இரண்டு ஊழல் வாதிகளுக்கு மாற்றே தமிழ் நாட்டில் கிடையாதா ?
    2 days ago ·   (6) ·   (3) ·  reply (0)
    Raj   Down Voted ஜெய்.ரமணா 's comment
  • கொள்ளுமேடுசிராஜ் from Jeddah
    அழகான, அருமையான கட்டுரை! தமிழகத்தின் அரசியல் நிலவரம் அற்புதமாக அலசப்பட்டுள்ளது. பிரதமராக முயல்வீரா என்ற கேள்விக்கு என்"பவர்“ நானறிவேன் என்றார் கலைஞர். ஸ்டாலினின் தமிழகம் என்ற முடிவே சரியானது! தேசியக்கட்சிகளான காங்கிரஸ் பா.ஜ.க தமிழகத்தில் தனித்து மிக அதிகபட்சமாக ஒருதொகுதி கிடைக்கும் என்ற வார்த்தை 100 க்கு 100 உண்மையான வரி. தி.மு.க..... அ.தி.மு.க இரண்டு கட்சிகளே தமிழத்தின் பிரதான கட்சிகள். கருப்புத்துண்டு காவித்துண்டுக்கு ஆசைப்பட்டுவிட்டள்து! யாருமில்லாத ஊரில் கடைவைத்தவரின் நிலைதான் வை.கோ பா.ஜ.க கூட்டு. கட்டுரையாளர் ஞானி அவர்களின் கணிப்பு மிகத்துல்லியமானது. மேமாத தேர்தல் முடிவை இன்றே சொல்லிவிட்டார் என்றால் அதுமிகையல்ல!
    2 days ago ·   (4) ·   (5) ·  reply (0)
    V   Up Voted கொள்ளுமேடுசிராஜ் 's comment
    Saju   Down Voted கொள்ளுமேடுசிராஜ் 's comment
  • annamalai from Vellore
    வரப்போகும் தேர்தல் தமிழ்நாட்டுக்க��� மட்டும் நடக்கப் போகிறதா அல்லது இந்திய முழுக்க நடக்கப் போகிறதா? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்த (பெரிய) ஞானி தமிழ் நாட்டை விட்டு தாண்டவே மாட்டாரா? இந்தியாவில் மோடி அலை வீசிகிறது என்று பலரும் சொல்கிறார்கள். தமிழ் நாட்டில் அது இல்லை என்று இவர் கூறுகிறார். அப்படிதான் இருக்கட்டுமே! அலை கூட கடல் நடுவில் மிகப் பெரியதாக இருக்கும். அதுவே கடல்கரையில் சிறியதாக இருக்கும் அதுபோல தமிழ்நாட்டில் சிறியதாக இருக்கிறது. வைகோ கட்சியும் பிஜேபி யும் கடுகு கட்சிகளாம்! இந்த ஞானி தனது ஞான திருஷ்டியில் கண்டு பிடித்து சொல்லிவிட்டார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது கண்ணா! ஊழல் ஆட்சி நடத்திய காங்கிரஸ் உடன் திமுக சேர வேண்டும் என்று கூறுகிறார் ஞானி.நீ ஒரு கம்பராமாயண கூனி. நீ நினைப்பது ஆகாது போணி
    2 days ago ·   (27) ·   (16) ·  reply (0)
    Saju  · mohan   Up Voted annamalai 's comment
    raajaa  · Anthonymuthu  · PON Ponnaih  Down Voted annamalai 's comment
  • Raj
    எப்போவுமே பார்லிமென்ட் (or) அசெம்பிலி தேர்தல் தமிழ்நாடை பொறுத்தவரை கழக போட்டிதான். ாங்கிரஸ் பாஜக மற்ற கட்சிகள் எல்லாம் திமுக அதிமுக வுடன் கூட்டு சேர்ந்துதான் ஆகா வேண்டும். இப்பொழுது பாஜக மாய அலை வீசுவது நிச்சயமாக வோட்டு சதவிகிதம் மாற்றம் கொடுக்குமே தவிர ஆட்சியெல்லாம் பிடிக்க முடியாது. ஞானி சொல்வதில் அர்த்தம் உள்ளது . அதிமுக வுக்கு இன்னும் எதிர்ப்பு வோட்டு விழ வாய்ப்பு இல்லை என்று நான் நம்புகிறேன். அதே போல் திமுகவுக்கும் ஆதரவு பெருக வில்லை. சொல்லபோனால் திமுக நிலைமை சென்ற தேர்தல் மாதிரி எதிர்ப்பு நிலை. தேமுதிக பாமக காங்கிரஸ் - திமுக (or) அதிமுக வுடன் கூட்டு இல்லை என்றால் ஒரு சீட்டு ஜெய்பது நிச்சயம் கடினம்தான்.
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • A.Sahabudeen from Dubai
    எது எப்படியோ, தி.மு.க., அ.தி.மு.க. தனித்து நிற்ப்பதனால் லாபம் அடையப்போவது ஜெயலலிதா தான்.
    2 days ago ·   (2) ·   (0) ·  reply (1)
    • Raja from Bangalore
      இப்படியே எல்லாரும் நினைதுகொண்டிருங்கல் தி.மு.க வெற்றிபெறும் பொறுத்திருந்து பாருங்கள்.கருதுகனிபுகல் எல்லாம் பொய் என்று தெரியவரும் காலம் வெகு தொலைவில் இல்லை
      2 days ago ·   (3) ·   (2) ·  reply (0)
      thamarai Selvan  Up Voted Raja 's comment
  • Prem Kumar at Xavier Institute of Management and Entrepreneurshipfrom Bangalore
    அண்ணா தி மு.க. போன்ற பலமிக்க கட்சிகள் ஏதும் முக்கியத்துவம் தராத தற்போதைய நிலையில், மூன்றாவது அணி அமையக்கூடிய வாய்ப்பே குறைவாகதான் தெரிகிறது. பாராளுமன்றத்திற்கு செல்ல தங்களுக்கு வகை செய்து கொள்ளும் எண்ணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் தான் 3வது அணியை பற்றி பேசிவருகிறார்கள் . மாநிலத்தில் செல்வாக்கை ஏற்கனவே இழந்து விட்ட மாயாவதியும் - முலாயமும், ,எந்த இடை தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத நிதிஷ் குமாரும், மோடி அலையில் அடித்து செல்லபோவது உண்மை. டெல்லியில் கோமாளித்தனமான ஆட்சி நடத்தி விலகிய கெஜரிவாலை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.என்பதை நன்கு உணர்ந்தும் அவரை - நிதிஷ் தங்கள் அணிக்கு அழைத்தது மிக பெரிய ஜோக். பட்னயாக் மற்றும் மம்தா ஏற்கனவே பிரதமர் பதவிக்காக மாநிலத்தை விட்டு போகபோவதில்லை என கூறி விட்டார்கள். (கம்யூனிஸ்ட் உள்ள மூற்றவது அணியில் மம்தா வர வாய்ப்பே இல்லை) அப்படியும் இந்த 3வது அணி, உருவாகும் பட்சத்தில், இது ஒரு சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆதரவு ஓட்டுக்களை பிரிக்க மட்டுமே பயன்படும் . அது பா.ஜ. க.விற்கு சாதகமாகவே அமையும் .
    2 days ago ·   (2) ·   (4) ·  reply (0)
  • BABUBAGATH
    மிகைப்படுத்தபட்ட கற்பனைவளமாக இக்கட்டுரை உள்ளது.அறிவான மக்கள்கூட்டம் தூங்கும் வரை இது போன்ற கட்டுரைகளுக்கு முடிவிருக்காது.
    2 days ago ·   (9) ·   (3) ·  reply (1)
    Saju   Up Voted BABUBAGATH 's comment
    • Marimuthu
      Exactly said. This manuscript is lacking the people's thought about the nation's welfare. Moreover it is one of the distracting advertisement for political parties and it ll not beneficial for our growth rate. Keep thinking for our national welfare without distracting the people's mind. JAIHIND.
      2 days ago ·   (5) ·   (1) ·  reply (0)
      BABUBAGATH   Up Voted Marimuthu 's comment
  • Ramanan from Chennai
    There is no doubt that Jayalalitha is competent enough to run any organisation than all others. Further congress should be washed away at any cost in the ensuing lok sabha elections
    2 days ago ·   (1) ·   (1) ·  reply (0)
  • Saju
    Many days iam seeing Mr. Gnani in TV channel discussions, other programs etc., and I understood that he hates BJP like anything. He is using some harsh words only to BJP, not to any other parties. His way of presentation is brilliantly targeting BJP alone i.e. in such a way that he will criticize all parties and for BJP alone he will use some harsh/sneaky words such as (பா.ஜ.க-வின் கெப்பல்ஸ்கள் அணி 24x7 ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் கூவினாலும்…. தமிழ்நாடு, பா.ஜ.க. அலை ஏதும் வீசாத குட்டையாகத் தேங்கிக் கிடக்கிறது,… பா.ஜ.க. என்ற இன்னொரு அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் இன்னொரு கடுகுக் கட்சி, etc. etc).
    2 days ago ·   (5) ·   (0) ·  reply (0)
    saravanan   Up Voted Saju 's comment
  • Saju
    At present situation Gnani doesn’t like Modi’s repetition in Tamilnadu. The only reason of this article is just make the people of Tamilnadu to forget Modi and concentrate in state politics and also trying to create alliance between Congress, DMK and MDMK to indirectly defeat Modi. I am requesting to all newspapers and TV channels please don’t give chance to Gnani to sit in a natural place for any discussion or any article.
    2 days ago ·   (4) ·   (1) ·  reply (0)
  • parama Ram
    பாரளுமன்ற தேர்தல் என்பது மாநில தேர்தலில் இருந்து வேறுபட்டது. இதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை விடுத்து ஏன் தேசீய கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டியவர் இப்படி கட்டுரை எழுதுவார் என்று எதிர் பார்க்க வில்லை
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • மணி from Essen
    இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும்.அரசியல் கட்சிக்களுக்கிடையே கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் ஆனால் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று போட்டியிட வேண்டும்.அந்தந்த கட்சிகள் பெறும் வாக்குகள் விழுக்காட்டின் அடிப்படையில் இருக்கைகள் நிர்ணிக்கப்படவேண்டும்.இது பலவித வழியில் அனைவருக்கும் நலன்பயக்கும்.அவரவர் கட்சியின் தனிசெல்வாக்கினை இது காட்டும்.இப்பொழுதுள்ளதமிழகக் கூட்டணியை எடுத்துக்கொண்டால் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.இடையில் கூட்டணி கட்சிகள் பிரிந்துபோனால் உள்ளப்படி ஆட்சியிலிருந்து விலகவேண்டும்.விலகிப்போன கட்சிகளும் தங்கள் பதவிகளை இழக்கவேண்டும். காரணம் யாரும் தனிவாக்குகள் பெறாமல் அந்தந்த கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளினால் பதவிகள் பெற்றுள்ளனர்.எனவே மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் அனைவரும் தங்கள் பதவிகளை இழக்கவேண்டும்.கட்சிகள் தனித்து நின்று வாக்கப்பெற்றிருந்நதால் பதவிகள் இழக்கவேண்டிதில்லை.மாறாக மாற்று கூட்டணி உருவாகலாம்.இதை சிந்திப்பார்களா?
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vaduvooraan from Chennai
    தமிழகத்தைப் பொறுத்த வரை 1967க்குப் பிறகு அனைத்து தேசியக்கட்சிகளும் மாநிலக் கட்சிகளின் தயவில்தான் இயங்கி வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவாக்கிய இந்திரா ராஜீவ் மரணத்திற்குப் பிறகு நடந்த தேர்தலின் போது கூட இதுதான் நிலைமை. இதை எதோ பெரிய ஆய்வு செய்து கண்டு பிடித்தது போல ஞானி தந்திருக்கிறார். தமிழ் நாட்டில் பாஜக சிறிய கட்சி; எனவே அவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.அதனால் மோடிக்கு அது பின்னடைவு என்பதை சொல்லி ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதுதான் ஞானியின் நோக்கம். அதை வெளியிட தமிழ் இந்துவுக்கு அந்த ஒரு காரணம் போதுமே?
    2 days ago ·   (2) ·   (2) ·  reply (0)
  • Bala from Chennai
    ஞாயிறு வந்தால் ஞானி கட்டுரை வந்தாக வேண்டும். தவிர தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் மோடிக்கு பயன் தராது.அனிவரும் அறிந்த இதை சொல்ல ஒரு கட்டுரை! இந்தியாவின் மற்ற பகுதிகளில் கள நிலவரம் ஞானி போன்றவர்களுக்கு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது!
    2 days ago ·   (4) ·   (1) ·  reply (0)
  • puthin
    மறுபடியும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தால் மரண அடி நிச்சயம்
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • ramani
    எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்ன காமராஜரும் திராவிட இயக்கம் தீய சக்திகள் என்று சொன்ன ராஜாஜியும் சந்தர்பவசத்தால் வளர்த்துவிட்ட கட்சிகள்தான் தீ மு க மற்றும் அ தீ மு க வும் தற்போது ஊட்டி வளர்ப்பது சோவும் காங்கிரஸ் ம் அதன் தலைவர்களும்தான்
    2 days ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Rajagopalan from Chennai
    ஞானி கூறுவது தவறு நான் யாரை கேட்டாலும் மோடி என்கிறார்கள் .எப்படி அவர் கூறுகிறார் என்று தெரியவில்லை ..
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Mohan Ramachandran at I am doing my own business
    தி மு க விற்கு வக்காலத்து வாங்கும் கருத்து.தி மு க அத்தியாயம் தமிழ் நாட்டில் அழியும் நிலையின் ஆரம்பம் இந்த தேர்தல் ..இந்த தேர்தல் காங்கிரஸ் vs மோடி .தமிழ் நாட்டில் அ தி மு க தான் .அதற்க்கு வலுவான எதிர்ப்பு பி ஜே பி கூட்டணிக்குதான் அ தி மு க அதிக தொகுதிகளில் வெல்லும். .ஞாநி சொல்வது தி மு க பக்கம் மக்களை திசை திருப்பும் முயற்சி .தேர்தல் வருவதேற்க்கு முன்பே தி மு க தோற்று விட்டது .தமிழ் நாட்டில் ஒரு சகாப்தம் முடிந்து போவதற்கு அறிகுறி .நான் வைகோ ஆதரவாளன் .தமிழ் நாட்டில் பி ஜே பி ஒரு சக்தியே இல்லை .ஆனால் மோடி ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் .அதை மறக்க முடியாது .தேர்தல் முடிவில் தெரிய வரும் .
    2 days ago ·   (3) ·   (1) ·  reply (1)
    • R.Subramanian
      பிஜேபி கூட்டணி தான் அதிமுகவிற்கு மாற்றா ???? ஹா ஹா ஹா நல்ல ஜோக், பிஜேபி மதிமுக போன்ற கட்சிகள் எல்லாம் தமிழக மக்களிடம் செல்வாக்கு இல்லாத கடுகிலும் சிறிய கட்சிகள், அவர்கள் எப்படி அதிமுகவிற்கு மாற்றாக வர முடியும்... தமிழகத்தை பொருத்தவரையில் அதிமுக vs திமுக தான் மற்றவர்கள் எல்லாம் இந்த இரண்டு கட்சிகளின் தயவில் தான் இருந்தாக வேண்டும், வேறு வழி இல்லை.
      a day ago ·   (0) ·   (0) ·  reply (1)
      • Mohan Ramachandran at I am doing my own businessfrom Chennai
        வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் Vs பி ஜே பி தான் .இதில் தி மு க ,அ தி மு க ஒரு அங்கம் தான் .அந்த கருத்தில் கூறப்பட்டது .அ தி மு க விற்கு மாற்று என்று கூற விலை .எப்படி இருப்பினும் இந்த கட்சிகள் மையத்தில் பெரும்பான்மையில் இடம் பிடிக்கும் கட்சிகளை சார்ந்தே இருக்கும் .அது தற்பொழுது பி ஜே பி தான் .அப்படி வந்தால் மத சார்பின்மை ,மன்னங்கட்டியாகும்.ஒன்று மட்டும் உறுதி காங்கிரஸ் கரை ஏறாது .
        a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • dharuman
    If காங்கிரஸ்,தி.மு க அண்ட் தே.மு தி க ஒன்று சேர்ந்தால் 30கு கே குறையாத இடங்களை அவர்களால் கட்டாயம் வெல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை.
    2 days ago ·   (0) ·   (2) ·  reply (0)
    அஜய் திலீபன்  Down Voted dharuman 's comment
  • RathinaKumar KN from New Delhi
    திரு.ஞாநி மக்கள் சொல்லும் கருத்துக்களை மறைத்து அவரது கருத்தை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பது போல் செயல் படுகிறார். தமிழகத்தில் மோடி அலை வீசுவது உண்மை. அதற்க்கு DMK அல்லது ADMK உதவியுடன் தான் இங்கு வெற்றி பெறமுடியும் என்று சொல்கிறார் . BJP மற்ற மாநிலங்களில் யாருடைய உதவியுடன் வெற்றி பெற்றது. மக்கள் நினைத்தால் ADMK DMK மீறி BJP கூட்டணிக்கு வெற்றி அளிப்பார்கள்.
    2 days ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • Muthu from Kumar
    தி இந்து என்றுமே நடுநிலை தான். வாழ்த்துக்கள்
    2 days ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • Mak from Dubai
    இது ஞானி அவர்களின் விமர்சன கட்டுரையா இல்லை அ தி மு க ஆதரவு கட்டுரையா?...நான் முன்னமே குறிப்பிட்டது போல அ தி மு க ஆதரவு தி மு க எத்ரிப்பு மனநிலை உள்ளவர்களுக்கு களம் அமைத்து கொடுக்கும் வேலையை இந்து செய்கிறது....எந்த ஊடகத்தை எடுத்தாலும் சரி இதே நிலைமை தான்..நடுநிலை என்பது சுத்தமாக இல்லை.ஞானி அவர்களின் இந்த கட்டுரை அவருக்கு போதிய அரசியல் அறிவு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது, காங்கிரசுடன் தி மு க கூட்டணி சேர்ந்தால் அது அந்த இரண்டு கட்சியையும் அகல பாதாளத்தில் தள்ளி விடும் என்பதே உண்மை. ஸ்டாலின் அரசியல் தமிழகத்தை சார்ந்தது...அவர் எப்படி மத்திய அமைச்சர் ஆவார்??..அவர் தி மு க வின் முதல்வர் வேட்பாளர் என்பது கூட தெரியாத "ஞானி யாக இருக்கிறார்". விஜயகாந்த் தி மு காவுடன் சேர்ந்தால் அந்த இரண்டு கட்சிக்கும் பலன் உண்டு..தி மு க தனித்து களம் காண்பதுதான் இப்போதைக்கு சிறப்பு. மக்கள் அ தி மு கா வின் இருண்ட ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் போது இவர் அ தி மு காவிற்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை என்கிறார். அ தி மு க 10 தொகுதிகள் செயிப்பது என்பதே நடவாத காரியம்...பொறுத்திருந்து பாருங்கள்.
    a day ago ·   (1) ·   (2) ·  reply (0)
    அஜய் திலீபன்  Down Voted Mak 's comment
  • g.r.rajagopal from Kumar
    இந்த கருத்து வருகின்ற தேர்தலில் தவிடுபொடியாகும்
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
    Mohan Ramachandran  Up Voted g.r.rajagopal 's comment
  • Gouthaman Gouthaman
    உண்மையை சொன்னதற்கு நன்றி ஞாநி.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Krishna Murthy
    திமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி இணைத்தாலும்,அதிமுக 20 முதல் 25 இடங்களில் வெற்றி பெரும் என்பது நம்பும்படியாக இல்லை. திமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைந்தால் அதிமுக ஒரு இடத்தில் வெல்வதே கடினம். இது தான் உண்மை.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • avudaiappan
    மோடி அலை இல்லைஎன்று முட்டாள் கூட கூறமாட்டான் கண்ணுக்கு தெரியாது டெல்ஹியில் யார் ஆச்சி என்பது தமிழ்மக்கள் முடிவு செய்வார்கள் பாவம் இவர்
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • kailawsh from Tuticorin
    சென்ற சட்ட மன்ற தேர்தலில் அ தி மு க வெற்றிக்கு எப்பொழுதும் உள்ள அதன் ஆதரவு ஓட்டுக்களுடன் தி மு க வின் ஊழலுக்கு எதிரான ஓட்டுக்களையும் அது பெற்றதுதான்.அப்பொழுது அந்த எதிர்மறை ஓட்டுக்களை தன வசப்படுத்த வேறு யாரும் களத்தில் இல்லை....இப்பொழுது அப்படி ஒருவர் வந்து விட்டதும், அதனால் தமிழக பா ஜ க இம்முறை அடையும் எந்த லாபமும் அ தி மு க வின் இழப்பு என்பதும், தெரியாமல் போனதினால் ஞானிக்கு பெயர் பொருத்தம் இல்லையோ?
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0)
    வேந்தன்   Up Voted kailawsh 's comment
  • சென்னையில் கோயம்பேடு – அசோக் நகர் இடையே 5.5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்தது.
    53 comments
  • மோடி x ராகுல் இல்லை, அ.தி.மு.க. x திமு.க-தான்!
    தமிழ்நாட்டில் இந்தத் தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தல்போல தி.மு.க-வா அ.இ.அ.தி.மு.க-வா என்ற அடிப்படையிலேயே போட்டி நடக்கவிருக்கிறது.