Saturday, February 01, 2014

கோலி சோடா' - திருட்டு சோடாவா? - விஜய் மில்டன் ஆவேச பேட்டி

நான் செய்தது தப்பு என்றால் முகத்திரையை கிழியுங்கள்: விஜய் மில்டன் ஆவேசம்


கோலி சோடா' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இணையத்தில் வேறு ஒருவர் கதையை திருடி விஜய் மில்டன் படமாக எடுத்து விட்டார் என்று தகவல்கள் வெளியானது.



இத்தகவலை மறுத்துள்ள விஜய் மில்டன், இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பது :
"இணையத்தில் 'கோலி சோடா' படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப வருடங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். இவ்வளவு வருட உழைப்பிற்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இந்த படத்திற்கு பலன் கிடைத்தாக நினைத்துக் கொள்கிறேன். என்னிடம் பேசியவர்கள் எல்லாருமே நாங்க ஜெயிச்ச மாதிரியிருக்குனு சொல்றாங்க. அந்த வார்த்தை ரொம்ப சந்தோஷமாக இருக்கு.



கடந்த இரண்டு, மூன்று நாட்களாக இந்தக் கதை அவருடையது, என்னுடையது அப்படினு நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தோட கான்சப்ட் என்னோடது, ஏற்கனவே எடுத்தாச்சு, தலைப்பு என்னோடது இப்படி என்ன எல்லாமோ சொல்றாங்க. எனக்கு கோபமே வரமாட்டேங்குது. தப்பு செஞ்சு இருந்தா கோபம் வரக்கூடாது. எனக்கு தப்பு செய்யலன்னா கோபம் வராது. அதான் விஷயம்.



ஒரு சின்ன வேண்டுகோள் மட்டும் சொல்றேன். நீங்க யாராக இருந்தாலும் சரி, உங்களிடம் ஆதாரம் இருந்தால் அது வெளிப்படுத்துங்க. ஏன்னா அடையாளத்தைப் பத்தி படம் எடுத்துட்டு, அவன் போலி அடையாளத்தோட இருக்கக்கூடாது. இது என்னோட கதை அப்படினு சொல்றவங்களை விட, இது அவரோட கதை அவங்களை ஏமாத்திட்டாரு அப்படினு சொல்றாங்களே அவங்களை நான் மதிக்கிறேன். ஏதோ ஒரு விஷயத்தை உண்மை அப்படினு நம்பி அதை வெளியே கொண்டு வரணும்னு நினைக்கிறாங்க. தயவு செய்து கொண்டு வாங்க. சம்பந்தப்பட்ட ஆளை பேச சொல்லுங்க, ஏன்னா அவங்களுக்கும் மனசாட்சி இருக்கு.


இந்தக் கதையை எழுதி வரிக்கு வரி என்கிட்ட இருக்கு. அதை எவ்வளவு நாளைக்கு முன்னாடி எழுதினேன் அப்படினு ஆதாரமும் இருக்கு. நீங்க உங்களோட ஆதாரத்தை கொடுங்க. என்னால நீருபிக்க முடியும் 'கோலி சோடா' என்னோட கதை அப்படினு.


இந்தக் கதையை வைச்சுட்டு நான் எவ்வளவு தயாரிப்பாளர்களை போய் பார்த்தேன். ஏன் அவங்க பண்ணல. பிச்சை எடுத்த மாதிரி காசு சேர்த்து, வாரம் முழுவதும் வேலைச் செய்து சனி, ஞாயிறு ஷுட்டிங் வந்து அந்தக் காசை வைச்சு ஷுட் பண்ணுவேன். இப்படி ஒன்றரை வருஷம் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கேன்.



ஒருத்தரோட கதையை வைச்சு, இன்னொருத்தர் படம் பண்ணி ஜெயிக்கவே முடியாது. கதை, திரைக்கதை, வசனம் அப்படிங்குறது வேற, இயக்கம் என்பது வேற. ஒரு கதையை திருடி இன்னொருத்தர் எடுக்கவே முடியாது. ஒரு கதையை மாதிரி இன்னொரு கதை வருவது நடக்கத்தான் செய்யும். its part of the game.



உங்களிடம் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் போங்க, போலீஸுக்கு போங்க. எல்லாத்துக்கும் நான் தயாரா இருக்கேன். தயவு செய்து இணையத்தில் என்னோட முதுகிற்கு பின்னால் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.


எளிமையான மனுஷனோட அடையாளத்துல கையை வச்சா என்ன நடக்கும் என்பதை தான் படமா எடுத்திருக்கேன். இன்னொருத்தோட அடையாளத்தை நான் படமா எடுத்தா நான் மனுஷனே கிடையாது. என்னோட அடையாளத்தை யாராவது அழிக்க நினைத்தால் நானும் மனுஷனா இருக்க மாட்டேன். இது நியாயமான ஒரு சினிமாக்காரனுக்கு வரும் கோபம்.


இனிமேல் இதைப் பற்றி நான் எதுவும் பேசப் போறதில்லை. யாராவது நான் செய்தது தப்பு என்றால் என்னோட முகத்திரையை கிழியுங்கள். இந்தப் படத்தில் என்னோடு பணியாற்றியவர்கள் யாராவது வருத்தப்பட்டாலோ, கோபப்பட்டலோ நான் வருத்தப்படுவேன். ரெண்டு நாள் தூங்காம இருப்பேன். உங்களைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. உங்களுக்கும் இந்தப் படத்திற்கு எந்த சம்பந்தமும் கிடையாது." என்று கூறியுள்ளார்.


நன்றி - த தமிழ் இந்து 


0 comments: