Monday, January 27, 2014

ரம்மி- படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக் - விஜய் சேதுபதி

கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வேகமாகத் தயாராகி வருகிறது ‘ரம்மி’.



“இந்த படத்துக்கு பெரிய கிப்ட் அப்படின்னா கமல் சார் இந்த படத்தோட இசையை வெளியிட்டது தான். படத்தோட டிரெய்லர், பாடல்களை எல்லாம் பாத்துட்டு ஒரு எதார்த்த சினிமா பாத்த ஃபீல் இருக்குனு பாராட்டினார். ரம்மி விளையாடியிருக்கேன். டிக் அடிக்கிறது மக்கள்கிட்ட தான் இருக்கு” என்று உற்சாகமாகப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன். படத்தைப் பற்றி என்ன கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் ரம்மி விளையாட்டில் சீட்டுகளை அழகாக கோர்ப்பது போன்று வார்த்தைகளை கோர்க்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..


‘ரம்மி’ படத்தை ஆரம்பித்த விதத்தைச் சொல்லுங்க?


நான் படிச்ச கல்லூரி புல்லாங்குறிச்சி கிராமத்துல இருந்தது. படிக்கிறப்போ நடந்த நிகழ்வுகள், ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாத்தையும் திரைக்கதையா மாத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். கல்லூரியை முடிச்ச பிறகு இயக்குநர் லிங்குசாமிகிட்ட ‘ஆனந்தம்’ படத்தில் இருந்து ‘பையா’ படம் வரை தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செஞ்சேன். ஒரு நடிகனா ‘பட்டாளம்’ படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். ‘மெளன குரு’, ‘நான் மகான் அல்ல’, ‘தூங்கா நகரம்’ அப்படின்னு 10 படங்கள்ல நடிச்சிருக்கேன். இந்தக் கதையை இயக்கலாம்னு ‘பட்டாளம்’ படம் பண்ணினப்போ முடிவு பண்ணி, படத்தோட வசனகர்த்தா பழனிச்சாமிகிட்ட கதையை சொன்னேன். அவர் நல்லா இருக்குன்னு சொன்னதோட இந்த கதையோட என் பயணம் ஆரம்பிச்சுது. இந்த கதை மூலமா நாம இயக்குநர் ஆகலாம்னு முடிவு பண்ணினேன்.



விஜய் சேதுபதி இந்த படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக்னு சொல்லியிருக்காரே. அப்படி என்ன மேஜிக் காட்டியிருக்கீங்க?



படத்தலைப்புக்கு காரணமே படத்தோட திரைக்கதை தான். ரம்மி விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும். விளையாட உட்காந்தோம்ன்னா எந்திரிக்க மனசே வராது. அதே மாதிரி தான் காதலும். ரம்மிங்கிறது ஆடி ஜெயிக்கணும். காதல்ங்கிறது போராடி ஜெயிக்கணும், ரம்மி விளையாட்டை பாத்தீங்கன்னா ரொம்ப ஜாலியா ஆரம்பிக்கும், நீ இந்த கார்டு போடு, ஏன் அந்த கார்ட்டை போட்ட அப்படினு போகும். அந்த சூடு பறக்குற விளையாட்டு தான் இந்த படத்தோட தலைப்பு.



அடுத்து என்ன வரப்போகுது, அடுத்து யார் எங்கே வரப்போறா அப்படிங்குற நிலைமை படத்துல வரும். அதான் இந்த தலைப்பு வைச்சேன். படத்தோட கதையில திடீர்னு ஜோக்கர் கூட சீரியஸாகும். அதே மாதிரி இந்த படத்துல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கோம். லவ் சம்பந்தப்பட்ட அந்த மெசேஜ் கண்டிப்பா பெரியளவில் பேசப்படும்.



விஜய் சேதுபதி, இனிக்கோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி இப்படி பாத்திரங்கள் தேர்வு எல்லாம் வித்தியாசமா இருக்கே?



விஜய் சேதுபதி இந்த படத்துக்கு கிடைச்சது பெரிய கிப்ட். இமான், யுகபாரதி இரண்டு பேருமே விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கதையிருக்கு, கேட்டு பாருங்கன்னு சொன்னாங்க. கதையை கேட்ட உடனே நான் பண்றேன்னு சொல்லிட்டார். ஷுட்டிங் ஸ்பாட்ல இருந்து டப்பிங் வரைக்கும் கூடவே இருந்தார். அவரை நான் அப்பெல்லாம் விஜய் சேதுபதியா பாக்கல. அவரோட கதாபாத்திரமான ஜோசப்பாதான் பார்த்தேன். இனிகோ பிரபாகர் படத்துல சக்தின்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அவரும் பிரமாதமா பண்ணியிருக்கார்.



ஹீரோயின் கேரக்டருக்கு நீச்சல் தெரியணும், அதே நேரத்துல கண்ணு நல்லா பெருசா இருக்கணும்னு தேடினேன். அந்த கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடினேன். நான் தேடின காம்பினேஷன் ஐஸ்வர்யாவுக்கு இருந்துச்சு. நிச்சயம் இந்த படம் அவங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுக்கும். மார்டன் கேரக்டரா பண்ணிட்டு இருந்த காயத்ரியை இதுல கொஞ்சம் நேட்டிவிட்டியோட நடிக்க வைச்சிருக்கேன். எதையும் மிகைப்படுத்தாம அந்த களத்துல என்ன நடக்கும் அப்படினு கமல் சார் சொன்ன மாதிரி ரொம்ப எதார்த்தமா பதிவு பண்ணியிருக்கேன்.



தயாரிப்பு பணி, நடிகன் எல்லாத்தையும் தாண்டி இயக்குநர் ஆவதற்கு என்ன காரணம்?



நான் இயக்குநரா வர்றதுக்கு, இயக்குநர் லிங்குசாமிகிட்ட பணியாற்றியது தான் காரணம். அவர்கிட்ட அவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம எத நோக்கி போறமோ, அது கண்டிப்பா நம்மள நோக்கி வரும். புதுக்கோட்டைக்கு பஸ் ஏறினோம்ன்னா, பஸ் புதுக்கோட்டை நோக்கி போயிட்டு இருக்கும், புதுக்கோட்டை நம்மள நோக்கி வந்துட்டு இருக்கும். நம்மளோட பாதையில் உறுதியாக இருக்கோமாங்கிறது தான் முக்கியம். இயக்குநர் ஆகணும்னு முடிவு பண்ணி, அதுக்கு என்னை முழுமையாக அர்ப்பணிச்சேன். இதோ என்னோட படம் தயாராகி வெளியாகப் போகுது.


இப்போ இயக்குநர். தொடர்ந்து நடிகரா, இயக்குநரா?


என்னை நம்பி வரும் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் இயக்குற படங்களில் நடிக்க மாட்டேன். மற்றவங்க இயக்கி, நடிக்கிறாங்க. ஆனா, என்னை பொறுத்தவரை இயக்குநர் பொறுப்பு அப்படிங்குறது 100% கவனமா இருக்க வேண்டிய இடம். அதே மாதிரிதான் நடிகன் அப்படிங்குற பொறுப்பும். 1% குறைஞ்சா கூட ஸ்கிரீன்ல தெரிஞ்சுரும். நடிகன், இயக்குநர் அப்படினு ரெண்டு வேலையையும் பண்றது கஷ்டம்.


நன்றி - த ஹிந்து