இளசுகளையும் நட்சத்திரங்களையும் பாதித்த சுயபட (செல்ஃபீ - selfie)
மோகத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவும் ஆளாகியிருக்கிறார். மண்டேலா
நினைவு பிரார்த்தனை கூட்டத்தில் ஒபாமா சுயபட நிகழ்வில் பங்கேற்றது இணைய
உலகில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ஸ்மார்ட்போன் யுகத்தில் எங்கேயும் எப்போதும் புகைப்படங்களை எடுத்து
பகிர்ந்துகொள்ளும் பழக்கம் பிரபலமாகி இருக்கிறது. அது மட்டும் அல்லாமல்
ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளும் புதிய பழக்கமும்
அறிமுகமாகியுள்ளது.
ஸ்மார்ட் போனை அப்படியே முன்னாள் நீட்டி தன்னை தானே சுயமாக புகைப்படம்
எடுத்துக்கொள்ளும் இந்த முறையிலான புகைப்படங்களுக்கு சுயபடங்கள் செல்ஃபீ என
பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சுயபட கலாச்சாரத்தை பிரபலமாக்கியதில் புகைப்பட பகிர்வு சேவையான
இன்ஸ்டாகிராமுக்குக்கு பெரும் பங்கிருக்கிறது. அல்லது இன்ஸ்டாகிராமை
பிரபலாமாக்கியதில் சுயபடங்களுக்கு அதிக பங்கா? என்று பட்டிமன்றமே கூட
நடத்தலாம். மற்றொரு புகைப்பட பகிர்வு சேவையான ஸ்னேப்சாட்டும் இந்த
பெருமைக்கு போட்டிக்கு வரலாம்.
பெரும்பாலும் இளசுகள் மத்தியில்தான் இப்படி தன்னைத்தானே புகைப்படம் எடுத்து
வெளியிட்டுக்கொள்ளும் கிரேஸ் இருக்கிறது. பிரபலங்களும் இதற்கு
விதிவிலக்கல்ல. இணைய நட்சத்திரங்களாகவும் இருக்கும் மைலி சைர்ஸ் மற்றும்
கிம் கர்தாஷியான் போன்றவர்கள் சுயபட மோகத்தை வளர்த்தெடுக்கும்
பெருமைக்குறியவர்கள்.
சுயபட மோகம் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறது என்றால், ஆக்ஸ்போர்டு அகராதி இந்த ஆண்டின் சொல்லாக செல்ஃபீயை தேர்வு செய்திருக்கிறது.
இப்படித் தன்னைத்தானே படமெடுத்துக்கொள்ளும் பழக்கம் ஆரோக்கியமானதா, இதன் உளவியல் தேவை என்ன என்றெல்லாம் விவாதங்கள் தூள் பறக்கின்றன.
சுயபட கலாச்சாரம் தொடர்பான சர்ச்சையில் ஒபாமா போன்ற தேசத் தலைவர்களை
சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க
மாட்டார்கள். ஆனால் அதுதான் நடந்திருக்கிறது.
நெல்சன் மண்டேலா நினைவாக நடைபெற்ற பிராத்தனை கூட்டத்தில் பங்கேற்றபோது
அமெரிக்க அதிபர் ஒபாமா சுயபடம் ஒன்றின் மையமாக இருந்தது விவாதத்திற்கு
உள்ளாகி உள்ளது. இந்தக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சுயபடத்தில்
டென்மார்க் பிரதமர் ஹெல்லே தோரிங் ஸ்கிமிட் கையில் ஸ்மார்ட்போனுடன் நடுவில்
இருக்கிறார். அவருக்கு அருகே ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட்
காமரூன் ஆகியோர் உள்ளனர்.
தலைவர்கள் இப்படி ஸ்மார்ட்போனில் தங்களை பார்த்து கொண்டிருக்கும் காட்சியை
ஏ.எஃப்.பி புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இந்தப்
புகைப்படம் தான் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நினைவு கூட்டத்தில் தலைவர்கள் இப்படி நடந்து கொண்டிருப்பது சரியா என பலரும்
கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இந்தப் புகைப்படத்தை தனியே பார்க்காமல்
சரியான கண்ணோட்டத்தில் நோக்க வேண்டும் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
எப்படியோ ஏற்கெனவே பிரபலமாகி இருக்கும் சுயபட கலாச்சாரத்திற்கு இப்போது இப்படி ஓர் அங்கீகாரம்.
Thanks - The Hindu
0 comments:
Post a Comment