குடி குடியைக் கெடுக்கும் எனும் மெசேஜை கடவுள்களை சாட்சியாக வைத்துக்கொண்டு காமெடியாக சொல்ல வந்திருக்கும் திரைப்படம்.
பரம்பரரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ராமராஜன் எனும் ஜெய். கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரரான கணேஷ் எனும் விடிவி கணேஷ், பொம்பளை தாதா எமி சொர்ணாக்காவின் வெத்துவேட்டு கணவர், கோபி எனும் சத்யன், ஊரையே வளைத்துப்போடும் எம்.எல்.ஏ.,வின் வாரிசு, கிருஷ்ணா எனும் ராஜ்குமார், நடித்தால் நாயகராக மட்டுமே நடிப்பேன் எனும் பிடிவாதத்தில் வாய்ப்பு தேடி ஊரை சுற்றி வருபவர். இந்த நால்வரும் வயது வித்தியாசம் பாராத நெருங்கிய நண்பர்கள். காரணம், குடி. நின்றால் குடி, உட்கார்ந்தால் குடி... என மொடா குடிகாரர்களாக மாற இருக்கும் நால்வரையும் திருத்த நினைக்கிறார் சிவபெருமான். (கடவுள் தாங்க...!)
லேகிய டாக்டர் ராமராஜன் எனும் ஜெய்க்கு, அவர் விரும்பும் பாடகியுடன் இரண்டு வருட ஒன் சைடு லவ் சக்சஸ் ஆகி இருவருக்கும் திருமண தேதி குறிக்கப்படுகிறது. நண்பர்கள் பேச்சுலர் பார்ட்டி கேட்கின்றனர். ஜெய்க்கு திருமணம் மாதிரி நால்வருக்கும் உள்ளூரில் வெவ்வேறு கமிட்மென்ட்டுகள் ஒரு சில நாட்களில் இருந்தாலும் அதையெல்லாம் வந்து பார்த்து கொள்ளலாம், தண்ணீரில் மிதந்தபடி தண்ணியில் மிதக்கலாம் எனும் பார்ட்டி மூடில், தாய்லாந்து - பாங்காக் பறக்கின்றனர். நால்வருக்கும் பாடம் புகட்ட நினைக்கும் சிவபெருமான், தன் திருவிளையாடலால் அங்கு இவர்களை கடலில் தள்ளி, ஆளில்லா தீவில் கரை ஒதுங்க வைக்கிறார்! அப்புறம்?... அப்புறமென்ன? ஒரு ஆறு மாத காலம் அங்கு உண்ண, உறங்க, உடுத்த தேவையானவை இன்றி அல்லல்படும் நால்வரும் ஊர் திரும்பினரா? உயிரை விட்டனரா? என்பது கிளைமாக்ஸ்!
பாரம்பரிய வைத்தியர்களாக டாக்டர் ராமராஜன் - ஜெய்யும், அவரது அப்பா டாக்டர் சித்ரா லட்சுமணனும் வரும் ஆரம்ப காட்சிகளில் தியேட்டரே சிரிப்பொலியில் அதிர்கிறது. அதுவும், 15 தலைமுறைக்கும் மேலான பாட்டன், பூட்டன் சித்த வைத்திய தாத்தாக்களின் போட்டாக்களை சுவற்றி மாட்டியிருப்பது போன்று போட்டாக்களை காட்டி, சித்ரா லட்சுமணனையும், ஜெய்யையும் அறிமுகம் செய்யும் இடமே செம காமெடி!
இதே போன்று வீட்டுல எலி வெளியில புலி விடிவி கணேஷிற்கு ஊர் தரும் மரியாதைக்கான காரணம், எம்.எல்.ஏ., மகன் சத்யனின் எம்.பி., கனவு, ராஜ்குமாரின் நடித்தால் நாயகர் ஆசை எல்லாம் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகின்றன!
நாயகர் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், ராஜ்குமார், கதாநாயகி நிவேதா தாமஸ், எமி- சொர்ணாக்கா உள்ளிட்ட பூலோக பாத்திரங்கள், நட்சத்திரங்கள் மாதிரியே சிவபெருமானாக வரும் சுப்பு பஞ்சு, பார்வதி தேவியாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட தேவலோக பாத்திரங்களும் நட்சத்திரங்களும் கூட போட்டி போட்டு சிரிப்பை வரவழைப்பது தான் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் பலம், பலவீனம் எனலாம். அதிலும் ஜெய், டி.வி.,யில் எனது நிகழ்ச்சியை பார்த்து விட்டு சொல் என்று வருங்கால மனைவியிடம் சொல்ல, அதை நம்பி நிவேதா தாமசின் மொத்த குடும்பமும் டி.வி., பெட்டியின் முன் அமர்ந்து டாக்டர். ஜெய் வழங்க இருக்கும் அந்தரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியை ஆர்வமுடன் காண காத்திருக்கும் காமெடி ஹைலைட் காமெடி!
ஜெ. ஆனந்தின் ஒளிப்பதிவில் பின்பாதியில் வரும் தாய்லாந்தின் அழகு ஆனந்தம். பிரேமின் இசையில் பாடல்கள் பெரிதாய் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் பிரமிக்க வைத்து விடுகிறார் மனிதர்.
குடியை கெடுக்கும் குடியை ஒழிக்கிறேன் பேர்வழி என முன்பாதி முழுவதும் குடிக்காட்சிகளை காண்பித்திருக்கும் இயக்குநர் கே. சந்துரு, சிவபெருமானின் திருவிளையாடல்களால் நால்வரையும் திருத்த நினைப்பது ஓ.கே.! ஆனால் அதற்கு நவீன திருவிளையாடல் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்! நவீன சரஸ்வதி சபதம் என்பது சற்றே இடிக்கிறது.
இது மாதிரி ஒரு சில லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால் புதியவர் கே. சந்துருவின் எழுத்து இயக்கத்தில், நவீன சரஸ்வதி சபதம் - நல்ல சிரிப்பு சப்தம்!.
நன்றி-தினமலர்
3 comments:
சூப்பர்
Wat happen CB sir why u did not post any review full of dinamalar post?
படம் முழுக்க வலுவில் திணிக்கப்பட்ட நகைச்சுவை -படு போர் .
Post a Comment