இந்த வாரம்... திகில் வாரம் என்று கூறும் அளவுக்கு ஹாரர், த்ரில்லர்
ஜானரில் மூன்று படங்கள் 'கீதாஞ்சலி (மலையாளம்), பீட்சா 2 'தி வில்லா'
(தமிழ்), இன்சீடியஸ் 2 (Insidious 2 - ஆங்கிலம்) மூன்றுமே வெற்றி பெற்ற
முந்தைய படங்களின் இரண்டாம் பாகம்.
கன்னடத்தில் ஆப்தமித்ராவாக, ஹிந்தியில் Bhool Bhulayya ஆக, தமிழில்
'சந்திரமுகி'யாக ரீ- மேக் செய்யப்பட்டது மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால்
நடித்த 'மணிசித்திரதாழ்'. என்றும் மலையாள சினிமாக்களின் பாதை மாற்றிய
படங்களில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் படம் இது. இருபது வருடங்கள்
கழித்து மோகன்லாலை அதே மனோதத்துவ நிபுணர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து
'ப்ரியதர்ஷன்' இயக்கத்தில் 'கீதாஞ்சலி' வெளிவந்துள்ளது. பீட்சா படத்தின்
இரண்டாம் பாகமாக வில்லா, இதை பற்றிய கதை உங்களுக்கு தெரிந்ததே!
இவ்விரண்டு படங்களும் பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்டு, தொடர்ச்சி எனும்
பொருளுக்கான அர்த்தத்தை பொய்ப்பித்து, எதிர்ப்பார்ப்பை டமால் டமால் என
வெடிக்கச் செய்தது. தனிப்பட்ட கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படங்கள் முந்தைய
பாகம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை நீக்கியது.
இவ்வாரம் வெளிவந்துள்ள வரிசைப் படங்களில் உருப்படியாக அமைந்துள்ள ஒரே படம் இன்சீடியஸ் 2.
தமிழ்நாட்டில் கூட கஞ்சூரிங் (Conjuring) பட இயக்குனர் என்று கூறினால்
பலரால் ஜேம்ஸ் வான் (James Wan)-ஐ அறிந்துகொள்ள முடியும். தொடர்ச்சி எனக்
கூறிவிட்டு 'முதற் பாகத்தில் நாயகனின் மனைவியான நாயகி திடீரென இரண்டாம்
பாகத்தில் காணாமல் போய்விட, இரண்டாம் பாகத்தில் திடீர் என அண்ணி, அண்ணன்
கதாப்பாத்திரம் புகுத்தப்படுவதும், நாயகன் பிரமச்சாரியாக மாறி புது நாயகியை
காதலிப்பதும்' இதைப் போன்ற கப்சாக்கள் எல்லாம் இப்படத்தில்
அமையப்படவில்லை.
ஜேம்ஸ் வான் தன் படம் பார்க்க வருவோர் முந்தைய பாகத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலே திரைக்கதையை அமைத்துள்ளார்.
முதல் பாகத்தில் நடந்தவை பற்றிய ஓர் கதைச் சுருக்கம்... ஒரு குடும்பம்
புதிதாக ஒரு வீட்டிற்குள் குடியேறுகிறது. வீட்டிலுள்ள ஏழு வயது சிறுவன்
அடிபட்டுக் கொண்டு கோமாவில் விழுகிறான். சாதாரணமாக அடிபட்டுக்கொள்ளும்
சிறுவன் எப்படி கோமாவில் விழுந்தான் என்று அனைவருக்கும் அதிர்ச்சி.
டாக்டர்களும் காரணம் அறியாமல் விழிக்கின்றனர். இதன்பின் வீட்டில் பல
மர்மங்கள் நடக்கின்றன.
வீட்டில் அமானுஷ்யம் அமைந்துள்ளதை குடும்பத்தார் உணர, கதாநாயகனின் அம்மா
ஒரு எக்ஸார்சிஸ்ட்டை (பேய் ஓட்டுபவர்) கூப்பிடுகிறார். வந்தவள் குழந்தை
கோமாவில் அல்ல அவனை பேய் ஆட்கொண்டுள்ளது, ஒரு வைரஸ் பிற கருவியில் புகுந்து
ஆட்கொள்வது போல் இவன் உடம்பு பல பேய்களால் ஆட் கொள்ளப்படுகிறது என்பதை
கண்டறிகிறாள்.
இது மட்டுமன்றி குழந்தையின் அப்பா, அதாவது ஹீரோ சிறுவயதிலே
பேயால் ஆட்கொள்ளப்பட்ட கதையையும், அதிலிருந்து தான் அவனை மீட்ட கதையையும்
கூறுகிறாள். பயந்த மனிதர்களை மட்டுமே பேய் தனது கருவியாக எடுக்க முடியும்,
கதாநாயகன் தன் சிறுவயதில் பயந்தது பேய்க்கு சாதகமாக அமைகிறது.
ஒரு முறை ஆட்கொண்ட பேய் ஒரு மனிதனை விட்டு விலகாது, ஆனால் மனிதன் பேய்
இருப்பதை உணராமல், அதை ஓர் பொருளாக கருதாமல் வாழ்ந்தால் பேயினால் ஆட்கொள்ள
முடியாது எனக் கூறி ஹீரோவின் சிறுவயது நினைவுகளை அழிக்கிறாள்
எக்ஸார்சிஸ்ட். ஹீரோவின் வாழ்நாள் முழுதும் பேய் துரத்துகிறது ஆனால் அவன்
அதை உணரவில்லை. ஹீரோவை தொடர்ந்து வரும் பேய் அவன் பையன் இருட்டு அறைக்குள்
பயந்து விழும் சமயத்தில் அச்சிறுவனை ஆட்கொள்கிறது.
இக்கதையினையும் நாயகன், நாயகிக்கு எக்ஸார்சிஸ்ட் கூற, குழந்தை கோமாவில்
இல்லை பேய்களால் சிறை செய்யப்பட்டுள்ளது எனும் உண்மையை கூறுகிறாள்.
குழந்தையுடன் பேச வைத்து அவன் ஒலி வரும் திசையில் நாயகனின் ஆன்மாவை
பிரயாணிக்கச் செய்கிறாள். கடைசியில் குழந்தையை பேய்களிடமிருந்து மீட்டு
வரும் நாயகன் ஒரு நொடி பேயை கண்டு அச்சப்படுகிறான் அவ்வளவு தான் வேதாளம்
இவன் மீது தொற்றிக் கொள்கிறது. நாயகன் மீது பேய் புகுந்ததை எக்ஸார்சிஸ்ட்
உணர அவள் நாயகனால் கொள்ளப்படுகிறாள். இது தான் முதல் பாகத்தின் கதை.
கதை விரிவாக கூறப்பட்ட நோக்கம், முதற் பாதியில் வந்த பல காட்சிகளோடு
இரண்டாம் பாதிக்கு தொடர்பு உள்ளது என்பதே. ஏன் கதாநாயகன் வித்தியாசமாக
நடந்து கொள்கிறான், எப்படி அவனுக்கு பேய் பிடித்தது, யார் இந்த
எக்ஸார்சிஸ்ட் இப்படி பல கேள்விகள் எழுந்தால்? அத்தனை கேள்விகளுக்கான விடை
முதற் பாதியில் அமைந்துள்ளது.
பேயால் ஆட்கொள்ளப்பட்ட நாயகனிடமிருந்து அவன் குடும்பம் காப்பாற்றப்படுகிறதா? இல்லையா? என்பதே இரண்டாம் பாகத்தின் கதை.
வேகமாக முன்னோக்கிச் செல்லும் ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்களுக்கு ரோலர்
கோஸ்டருடன் அப்படியே தான் விழுவது போன்ற திகில் பிறக்கும். இன்சீடியஸ் 2
படத்தில் அமைந்த ஒளிப்பதிவும் அப்படித் தான். ஏதோ உருவம் தெரிகிறதே என்று
கண்கள் தூரம் தேடிப் போவது போல் கேமராவும் நகர்கிறது. த்ரில்லர் படங்களின்
ஆசான் ஆல்பிரட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) படத்தில் பிரசித்தி பெற்ற
பேனிங் ஷாட் (Panning shot) பல இடங்களில் இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது.
'பட படவென அடித்துக் கொள்ளும் கதவுகள், அர்த்த ஜாமத்தில் கேட்கின்ற
நாய்களின் குறைச்சல், உறக்கத்தில் விழித்துக் கொள்ளும் மனிதர்கள்
அந்தரத்தில் தொங்கி தன்னைத் தானே அடித்துக் கொள்வது' இதை போன்ற புளித்துப்
போன காட்சிகள் ரிப்பீட் செய்யப்படாமல் இருந்தது ஆறுதல். ஒளிப்பதிவும்,
லைட்டிங்கும் இப்படத்தின் ஆணிவேர். திரைக்கதை விதிகளை பின்பற்றாத லெயிக்
வானல் (Leigh Whannel) திரைக்கதை, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச்
செல்கிறது.
ஜேம்ஸ் வான் முன்பு இயக்கிய டெட் சைலன்ஸ் (Dead Silence) படத்தில்
அமைந்திருந்த பின்னணி, நாடி நரம்புகளை மிரளச் செய்யும். இவர் இயக்கிய
கஞ்சூரிங், சா (Saw) படங்களில் கூட பின்னணி அதிர வைக்கும். இன்சீடியஸ் 2
பொறுத்த வரை ஒலி அமைப்பும், பின்னணியும் கொஞ்சம் சுமார் ரகம்தான்.
பேய் பயம் கொண்டவர்கள் கண்டிப்பாக ஒரு மூன்று நான்கு இடங்களில்
அச்சப்படுவார்கள், பேய்ப் பட தாசர்களை இன்சீடியஸ் 2 கண்டிப்பாக ஈர்க்கும்.
அய்யய்யோ! யாராவது பத்திரமா வீட்டுக்கு கொண்டு சேர்த்துடுங்க! எனக் கூறும்
அளவுக்கு பயம் கிடையாது, ஆனால் கண்டிப்பாக சுவாரசியமான அனுபவம்.
thanx = the hindu
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan
0 comments:
Post a Comment