புதுச்சேரி : சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம்
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதி
ஜெயேந்திரர், இளைய மடாதிபதி வியேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை
செய்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி
உள்ளது.
வழக்கு விபரம் :
தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலைத்தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் முறையாக தீர்ப்பு கிடைக்காது என கருதப்பட்டதால் இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.
புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில், சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு சம்பந்தமாக சேர்க்கப்பட்ட 187 சாட்சிகளிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் "பல்டி' அடித்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன்(40) என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது வன்முறைக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை, நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். தொடர்ந்து, கிருஷ்ணராஜா, ராமசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். நான்காவதாக, நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வந்தார். கோர்ட் புறக்கணிப்பு, சாட்சிகள் ஆஜாராகாமல் இழுத்தடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்த இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நவம்பர் 27ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி முருகன் தெரிவித்திருந்தார்.
கோர்ட் தீர்ப்பு :
வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 23 பேரில் தில் பாண்டியன் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் ஆகிய இரண்டு பேர் தவிர மற்ற 21 பேரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்ரூவராக மாறிய ரவி சுப்ரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வழக்கில் போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததாலும், அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் வழங்கப்படாததால் சந்தேகத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அளித்து குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு திருப்திதரவில்லை :
கொலையான சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறுகையில், 'இந்த தீர்ப்பு திருப்திதரவில்லை. என் தந்தை தானாக கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பலாம். ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. குடும்பத்தினருடன் பேசி, அது குறித்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.
மேல்முறையீடு :
சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்திரப்பதாக அரசு தரப்பு வழக்கிறஞர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசுடன் ஆலோசனை செய்த பிறகு மேல்முறையீடு செய்யப்படும் எனவும், சங்கரராமன் குடும்பத்தாரின் பிறழ் சாட்சியமே குற்றவாளிகள் 23 பேரின் விடுதலைக்கு காரணம் எனவும் தேவதாஸ் கூறி உள்ளார்.
நன்றி : தினமலர்
0 comments:
Post a Comment