Tuesday, November 05, 2013

டிவிட்டருக்கு வர விரும்பும் பெண்கள் கவனத்தில் கொள்ளக்கொடிய சில விஷயங்கள்

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலரும் கூட தமிழில் பெரிதாக ஆர்வம் காட்டாத இவ்வேளையில் வலைப்பூ,முகநூல் டிவிட்டர் பயனீட்டாளர்கள் தமிழில் ஆர்வத்துடன் எழுதி வருகிறார்கள். 


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழில் எழுதவும் வாசிக்கவும் உரையாடவும் இந்த சமூக ஊடங்கங்களை பயன்படுத்துகிறார்கள்.இந்த சமூக ஊடகங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தமிழை ஒருபுறம் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.தமிழ் என்ற ஒற்றை சொல்லில் நாடு தாண்டி மக்கள் இணைந்து நிற்க முடிகிறது இங்கு.இளைஞர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் டாக்டர்கள் நடிகர் நடிகைகள் எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை துடிப்புடன் 


சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



சமூக ஊடகம்:





முகநூல் ,வலைப்பூ போன்றதொரு சமூக ஊடகம் தான் டிவிட்டர். சொல்ல வேண்டிய கருத்தினை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே சுருக்கமாக பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சுவாரஸ்யமான சமூக ஊடகம் தான் இது.வலைப்பூ மற்றும் முகநூல் போல பக்கம் பக்கமாக எழுத வேண்டிய, வாசிக்க வேண்டிய அவசியம் இதில் இருப்பதில்லை.குறளைப் போல இரண்டடியில் நாம் கூற விரும்பும் கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து கொள்ள முடியும்.டிவிட்டரில் கருத்துக்களை எழுத பெரிய இலக்கிய அறிவோ அரசியல் அறிவோ எழுத்து நடையோ வேண்டியதில்லை.பிடித்த எந்த ஒரு விஷயத்தையும் சுருங்க பகிர்ந்து கொள்ள முடியும்.



குறுகிய மனப்பான்மை:





டிவிட்டரில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேல் தமிழ் டிவிட்டர்கள் இருக்கிறார்கள்.அதாவது தமிழில் மட்டுமே அதிகம் எழுதுபவர்கள். தமிழ் டிவிட்டர் உலகில் ஆயிரம் ஆண்களுக்கு ஒரு பெண் தொடர்ந்து எழுதுவதே குதிரைக்கொம்பாக உள்ளது.பெரும்பாலான தமிழ் பெண்களும் ஆங்கிலத்தில் எழுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலும் இணையம் வரும் பெண்கள் சற்று வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள் எனபதும் ஒரு காரணம் இவர்கள் ஆங்கிலத்தில் எழுத. மேலும் பெரும்பாலான தமிழ் டிவிட்டர்கள் மத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மையும் பெண்கள் தமிழ் டிவிட்டருக்கு வருவதை தடுக்கின்றது. பெண் இதைத்தான் செய்யவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை சமூகத்தில் உலவுவது போல் இங்கும் இருக்கிறது..குறிப்பிட்ட சிலர் செய்யும் விஷயங்களால் ஒட்டு மொத்த சமூக ஊடகங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.




ட்விட்டர் உதவி:





முகநூல் கணக்கை வைத்துக்கொள்வதையோ டிவிட்டர் கணக்கை வைத்துக்கொள்வதையோ பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டிலோ, உறவினர்கள் மத்தியிலோ வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை காரணம் இங்கு பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தான்.ட்விட்டர் என்றில்லை எல்லா விதமான சமூக ஊடகங்களிலும் இதே நிலை தான் காரணம் பாதுகாப்பின்மை மற்றும் பல்வேறு எதிர்ப்புகள். இவற்றையும் மீறி பல பெண்கள் கவிதை,தத்துவம் ,அழகு குறிப்புகள்,சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்ப்பு,சினிமா, அரசியல்,புகைப்படங்கள் என பகிர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு பொழுது போக்கு ஊடகம் டிவிட்டர். தொலைக்காட்சிகளை பார்த்து தெரிந்துக்கொள்வதை விட அன்றாட செய்திகள் இங்கு உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது.அறிவு சார்ந்த பல விஷயங்களை கற்க டிவிட்டர் மிகவும் உதவுகிறது.



கவனத்தில் கொள்ள வேண்டியவை:






டிவிட்டருக்கு வர விரும்பும் பெண்கள் கவனத்தில் கொள்ளக்கொடிய சில விஷயங்கள் :


*மன தைரியம் மிக மிக முக்கியம். கட்டற்ற சுதந்திரம் இருப்பதன் பேரில் எவ்விதமான தாக்குதல்களையும், எல்லைதாண்டிய சீண்டல்களையும் சந்திக்க நேரிடும். இங்கும் எங்கும்


பாதுகாப்பு பற்றிய சஞ்சலம் இருக்கும் பட்சத்தில் புனைப்பெயரில், சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தாமலும் எழுதலாம். ஏனெனில் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இங்கு பிரதானம்.


*இங்கு நாமும் பலரையும் தொடரலாம் நம்மையும் பிறர் தொடருவார்கள்.அக்கவுண்ட்டை பூட்டிக் கொண்டால் உங்கள் அனுமதியுடன் மட்டுமே உங்களை ஒருவர் தொடரவோ, உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யவோ இயலும்.நீங்க தொடர்பவர்களை தேர்வு செய்தல் தான் பல பிரச்சனைகளை குறைக்கும். பெண்கள் பெண்களை அதிகம் தொடர்ந்துக்கொள்ளலாம். பிரபலம் அல்லாத அல்லது தங்களுக்கு நேரிடையாக தெரியாத ஆண்களை தொடரும் முன் ஆலோசித்து தொடருதல் நலம்.


*சொந்த புகைப்படங்களை பகிருதல் அவ்வளவு நல்லதில்லை.ஏனெனில் பிறர் உங்கள் அனுமதி இல்லாமல் அவற்றை உபயோகித்துக்கொள்ளவோ சேமித்து வைத்துக்கொள்ளவோ முடியும். ஆனாலும் தைரியமான பல பெண்கள் சொந்த படங்களை வைக்கிறார்கள் உலகளவிலேயே. எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தன்நம்பிக்கையுடைய பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களுக்கு பயப்படுவதில்லை.


*எழுதும் தலைப்புகள் தேர்ந்தெடுப்பதிலும் சிறிது கவனம் செலுத்தலாம்.சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பகிராமல் தவிர்க்கலாம்.மற்றபடி சக கீச்சர்களுக்கு பயந்துக்கொண்டு எழுதாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.


*யாரோடும் நட்பாகாமல் இருக்கும் வரை மட்டுமே டிவிட்டரில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கிடைக்கும்.இங்கே பிறர் நண்பர்களானால் அதை எழுதாதே இதை எழுதாதே என அறிவுரைகள் சரமாரியாக குவியும்.


*தொடர்ந்து ஒருவர் உங்களுக்கு மென்ஷனில் தொல்லை கொடுத்தால் இருக்கவே இருக்கிறது block & report spam options.பிடிக்கவில்லையெனில் block செய்துவிட்டு எப்போதும் போல் உங்கள் வேலையை பார்க்கலாம்.நீங்கள் block செய்த நபர் உங்களுக்ககு mentionனிட்டாலும் உங்கள் mention tabல் அவை தெரியாது.


*அலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க விசயங்களை யாருடனும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.


*சமூகத்தில் பிரபலமாக இருக்கும் பெண் எழுத்தாளர்கள் கூட இணைய ஆண்களால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.இருப்பினும் அவர்கள் தைரியத்துடன் இவற்றை எதிர் கொண்டு கடந்துச் செல்கிறார்கள். 


*எல்லை மீறிய சீண்டல்களுக்கு cyber crime -ஐ நாடலாம்.அரசு இயந்திரங்கள் முழு மூச்சுடன் இந்த சைபர் க்ரைம்களை விசாரிக்க துவங்கினாலொழிய தவறு செய்ய ஆண்கள் யோசிக்கப்போவதில்லை. சட்டம் பெரிதாக தலையிட்டு விட முடியாது என்ற நம்பிக்கையிலேயே பல ஆண்கள் பல்வேறு விதமாக பெண்களுக்கு தொல்லைகளைக் கொடுத்து வருகிறார்கள்.எனவே அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க துவங்க வேண்டும்.


*வீடு முதற்கொண்டு எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாதுகாப்பு என்ற பெயரிலோ, சமூக நிற்பந்தத்திற்காகவோ தங்களை ஒரு வட்டத்திற்குள் முடக்கிக் கொள்வது எந்த முன்னேற்றத்தையும் அளிக்காது. பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் பெண்களை சீண்டும் வக்கிர எண்ணங்கள் கொண்ட அதே சிலரை இங்கும் எதிர்க்கொள்ள வேண்டிய நிலை இருக்கவே செய்கிறது.எல்லாவற்றிற்கும் பயந்துக் கொண்டிருந்தால் எங்கும் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஆகவே பிடித்தவற்றை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் செய்வதே முன்னேற்றத்திற்கு சிறந்த வழி.இந்த சமூகம் ஆண் பெண் இருபாலருக்கும் சமம் என்பதை பெண்கள் கிட்டத்தட்ட மறந்தே பல காலமாகிவிட்டது.மாற்றங்களை நமக்குள்ளிருந்து துவங்காமல் வெளியில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்ப்பது வீண்.


thanx - dinamalar



சோனியா அருண்குமார்

0 comments: