Thursday, November 07, 2013

ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்

தமிழர்களின் இதயம் கவர்ந்த ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்தமிழர்களின் இதயம் கவர்ந்த ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்

கனவில் கூட இப்படி ஒரு சம்பவம் எந்த பெண்ணுக்கும் ஏற்பட கூடாது.....
சேனல்–4 வெளியிட்ட அந்த காட்சியை பார்த்ததும் உலகம் முழுவதிலும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இப்படித்தான் நினைத்து இருப்பார்கள்.
இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இசைப் பிரியாவை ராணுவ உடையில் இருந்த மனித மிருகங்கள் சிதைத்து உயிரை பறித்த அந்த கொடூர காட்சி தான் இன்று உலகத்தையே உலுக்கி இருக்கிறது.
27 வயதே நிரம்பிய இளங்குயில். தேனொழுகும் தனது தமிழ் பேச்சால் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியேறியவர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தர்மராஜா – வேதரஞ்சனி தம்பதியரின் 4–வது மகளாக பிறந்தவர். அவருக்கு பெற்றோர் ஷோபனா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
பிறக்கும் போதே இதயத்தில் சிறு ஓட்டையுடன் பிறந்ததால் இசைப்பிரியாவின் எதிர் காலம் எப்படி இருக்குமோ? என்று பெற்றோர்கள் கலங்கினார்கள். ஆனால் மருத்துவர்கள், இது சாதாரண குறைபாடுதான். எதிர் காலத்தில் எந்த பிரச்சினையும் வராது என்று நம்பிக்கை ஊட்டினார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து தமிழில் புலமை பெற்றார். 1995–ல் சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது வன்னிக்கு குடிபெயர்ந்ததமிழ் குடும்பங்களில் ஷோபனாவின் குடும்பமும் ஒன்று. வன்னியில் தனது மேல் படிப்பை தொடர்ந்தார் ஷோபனா.
அப்போது தமிழர்களின் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் பிரச்சார வகுப்புகளுக்கு ஷோபனா செல்ல தொடங்கினார். புலிகளின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஷோபனா 1999–ல் விடு தலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.
அரவியாய் கொட்டிய தமிழும், பார்த்தவர் மனதில் ஒட்டிக் கொள்ளும் அவரது குழந்தை முகமும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலரையும் ஈர்த்தது. எனவே அவரை இசை அருவி என்று அழைக்க தொடங்கினார்கள்.
அவரது தமிழ் புலமையை அறிந்த பிரபாகரன் விடுதலைப்புலிகளின் ஊடகத் துறையில் பணியமர்த்த உத்தரவிட்டார்.
புலிகளின் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பிய நிதர்சனம் பகுதியின் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார். தமிழீழம் தொடர்பான சில குறும் படங்களிலும் நடித்தார். அவரின் இனிய குரலும், தெளிவான உச்சரிப்பும், காட்சிகளில் வெளிப்படுத்திய முக பாவனைகளும் எல்லோரையும் ஈர்த்தது. அப்போது தான் ஷோபனாவாக பிறந்து, இசைஅருவி என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் இசைப்பிரியா என்று அழைக்கப்பட்டார். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகி விட்டது.
தனது 25–வது வயதில் 2007–ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகளில் ஒருவரான ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டார். மறு ஆண்டே இசைப்பிரியாவுக்கு ஒரு குட்டி இசைப்பிரியா பிறந்தார். அந்த குழந்தைக்கு அகல்யா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். இசைப் பிரியாவும், ஸ்ரீராமும் மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்த அவர்கள் இல்லற வாழ்வில் 2009–ம் ஆண்டு பேரிடி விழுந்தது. சிங்கள ராணுவத்துடன் நடந்த போரில் கணவரையும், குழந்தையையும் பறிகொடுத்து துடித்து போனார்.
அடுத்தடுத்து உக்கிரமாக நடந்த போரில் மரணமா? அல்லது சுதந்திர தமிழீழத்தில் சுகமாக வாழ்வோமா? என்று ஒவ்வொருவரும் பதட்டத்துடன் வாழ்ந்தனர். இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பான பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் அடைந்தனர். அவர்களோடு இசைப் பிரியாவின் பெற்றோரும் தஞ்சம் புகுந்தனர்.
மகளை காணாமல் தர்மராஜாவும், வேதரஞ்சனியும் பதறி கொண்டிருந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கி கொண்டாள் இசைப்பிரியா என்ற தகவலை அறிந்து அதிர்ந்து போனார்கள்.
கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட தமிழர்களில் இசைப்பிரியாவும் கொல்லப்பட்டு விட்டார். அவரது உடல் அலங்கோலமாக கிடந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக 2010–ல் சேனல்–4 இசைப் பிரியாவின் உடலை காட்டியது.
அப்போது அதை மறுத்த இலங்கை அரசு, போரில் இசைப்பிரியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முழு பொய்யை உலக நாடுகளை நம்ப வைத்தது.
ஆனால் சிங்கள வெறி பிடித்த ராணுவ மிருகங்களிடம் பிடிபட்ட இசைப் பிரியா சிதைக்கப்பட்ட காட்சியை சேனல்–4 இப் போது வெளியிட்டு தோலுரித்துள்ளது.
சகதி காட்டில் மேலாடை இல்லாமல் இசைப்பிரியா அமர்ந்திருக்க 5 சிங்கள ராணுவ வீரர்கள் அவரது கையை பிடித்து இழுக்கிறார்கள். துணி வேண்டும் என்று கெஞ்சிய இசைப் பிரியாவுக்கு ஒருவன் வெள்ளை துணியை கொடுத்து இழுத்து வருகிறார்கள்.
என்னை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கதறிய இசைப்பிரியாவின் குரலை கேட்டு எக்காள சிரிப்புடன் ராணுவத்தினர் இழுத்து செல்கிறார்கள்.
அப்போது ஒருவன் ‘இவள் பிரபாகரனின் மகள்’ என்று கூறுகிறான். ‘அய்யோ, நான் அவர் இல்லை’ என்று கூறுகிறாள் இசைப்பிரியா. அடுத்து இசைப்பிரியா கொல்லப்பட்டு ஆடையின்றி வெள்ளை துணி உடலில் போடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கிறார்.
இந்த காட்சிகள்தான் உலகையே உலுக்கி உள்ளது. இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் வெளியாகி இருக்கிறது. ஆனால் பல அப்பாவி இசைப்பிரியாக்கள் சிங்கள வெறி பிடித்த ராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளனர்.
தவறுதலாக கொடுக்கப்பட்ட தண்டனைக்கே கற்புக்கரசி கண்ணகியின் கோபத்தால் மதுரை அழிந்தது.
திட்டமிட்டு கற்பை சூறையாடி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பறித்த இலங்கைக்கு என்ன தண்டனை....?
காலம்தான் பதில் சொல்லும்.


thanx - malaimalar

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

கொடுமையான நிகழ்வு! காலம் பதில் சொல்லும்!

'பரிவை' சே.குமார் said...

காலம்தான் பதில் சொல்லும்.