Wednesday, November 06, 2013

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் திட்டம்-'சந்தனக்காடு' தொடர் இயக்குனர் வா.கௌதமன்.

பிரபாகரன் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், 'சந்தனக்காடு' தொடர் இயக்குனர் வா.கௌதமன். “இந்த வரலாற்றை படமாக்கும் திட்டம் தோன்றியபோது, கடந்த 10 ஆண்டுகளாக இதுசார்ந்து ஈடுபட்ட களப்பணிகள்தான் நினைவுக்கு வந்தன. அந்த மண்ணில் களத்தில் நின்ற போராளிகள், ஈழத்திற்கு போய்விட்டுத் திரும்பிய நம் கவிஞர்கள், தலைவர்கள், இங்கு முகாம்களில் வசிக்கிற ஈழத் தமிழர்கள் இப்படி எல்லோரையும் நேரில் சந்தித்து நிறைய நிகழ்வுகளை சேகரித்த செய்திகளும், கருத்துகளும், விவாதங்களும் கண்முன் விரிந்தன. அந்த அனுபவங்கள்தான் இப்படி ஒரு படைப்பை எடுக்கும் சூழலை உருவாக்கியது” என்றபடியே பேசத் தொடங்கினார். 



கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போராட்ட நிகழ்வுகளைப் படமாக்க, இந்த 10 ஆண்டு கால அனுபவம் மட்டும் போதும்னு நினைக்கிறீங்களா?


 
“நெடுமாறன் எழுதிய பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம் நூல், ஈழம் தொடர்பான பல தகவல்களை உள்ளடக்கியது. இது கிட்டத்தட்ட 1400 பக்கங்கள் கொண்டது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை, உலக நாடுகளின் வஞ்சத்தை, எதிரிகள் போட்ட திட்டத்தை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய நூல்.இதெல்லாம்தான் என் படைப்பிற்கான கூடுதல் களப்பணி. இன்னமும் இந்த கள ஆய்வு முடியவில்லை. தொடரும்.” 



பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கிறதா?


 
“சந்தனக்காடு தொடரை, கவிஞர் புதுவை ரத்தினத்துரை மூலம் கேள்விப்பட்டு பிரபாகரன், பார்த்திருக்கிறார். சீமான் சந்திக்க சென்றபோது, “ஆட்டோ சங்கர் பண்ணின கௌதமனா அவர்!” என்றும் நலம் விசாரித்திருக்கிறார். இதற்கு பிறகு, சந்தனக்காடு தொடரின் 36 மணி நேர பதிவையும் அவருக்கு அனுப்பினேன். தொடரைப் பார்த்தவர், “வீரப்பன் மேல் என்ன நம்பிக்கை வச்சிருக்கோமோ, அதை அழகா பதிவு செய்திருக்கார். அவரை நம்ம மண்ணுக்கு வரவழைத்து நம் வரலாற்றை எடுக்கணும்”னு சொன்னதாக அறிந்தேன். இதைக் கேள்விப்பட்டபோது, அந்த வார்த்தை என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் மகிழ்ச்சியாக அதை எண்ணினேன். 



அந்த சமயத்தில்தான் அங்கு செல்வதாகக் கடிதம் எழுதினேன். அப்போது மீண்டும் யுத்தம் தொடங்கியிருந்த நேரம். “நீங்கள் எல்லாம் விதை நெல்லைப்போல. இங்கு வந்து ஏதாவது ஒன்று நடந்தால்.... இழப்பு உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. எங்களுக்கும்தான்” என்றார். அதனால் போக முடியவில்லை. 



பிரபாகரன் மீது நிறைய எதிர்மறை வாதங்களும் முன்வைக்கப்படுகிறதே? அதை எப்படி படைப்பில் கொண்டு வருவீர்கள்?

 
“எதிர்மறை கருத்துகளுக்கு பதில் சொல்லும் வேலைகளை எல்லாம் என்னுடைய இந்தப் படைப்பு உக்கிரமாகச் சொல்லும். நடந்த சம்பவங்களை இந்த படைப்பில் நடுநிலையாக துளியும் சொல்ல மாட்டேன். எந்த ஒரு விஷயத்திலும் உண்மை இல்லையேல் பொய் பக்கம்தான் சாய வேண்டும். உண்மை பக்கம்தான் நான் இருக்கப் போகிறேன். சமரசம் என்கிற பெயருக்கு இந்தப் படைப்பில் இடமில்லை! 



தணிக்கைத்துறையை எப்படி எதிர்கொள்வீங்க ?


 
“இதே தணிக்கைத் துறை சட்டம், இதே தணிக்கை சமீபத்துல வந்த ‘மெட்ராஸ் கஃபே’ படத்தையும் விட்டுச்சே. அதே படத்துலதான் பிரபாகரனையும் சித்தரிச்சிருந்தாங்க. எல்லாத்துக்கும்மேல தமிழர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. பெரும் நம்பிக்கை உண்டு!” 


படத்தில் பிரபாகரனின் குடும்பம் பற்றி?


 
“கதையில் அவரது குடும்ப வாழ்க்கையை அழகாக கோக்கப்போகிறோம். மதிவதனியின் காதல். அந்த அற்புதமான குடும்பத்தை, அந்த வாழ்க்கையை தோளோடு தோள் நின்று பகிர்ந்துகொண்ட பெண் அவர். அந்த நிகழ்வில் இந்த உலகம் இன்னும் முழுமையாக அறிந்திராத விஷயங்கள் நிறைய இருக்கு. அதை கண்டிப்பாக, படைப்பில் இணைப்போம். 



பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று நீங்கள் சொல்லும் இந்த திரைப் படைப்பு எங்கு தொடங்கி, எதில் முடியும்?


 
“பிரபாகரன் பார்வதி அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போது தொடங்குறேன். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் தன் மக்களோட மக்களாக நின்று எப்படி எதிர்கொண்டார். அறத்தோடு நின்று சண்டை போட்ட அந்த வியூகத்தின் முடிவாக, அவர் எடுத்த முடிவு என்ன என்பது வரைக்கும் இந்த படைப்பு சொல்லும்!” 



பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?

 
“பிரபாகரன் மீது உணர்வும், தனி கம்பீரமும் கொண்ட ஒரு தமிழனைத்தான் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் திட்டம். அதற்கான தேர்வு வேலைகளில்தான் இப்போது இருக்கிறோம்.” 



தலைமுறை நாவலை மகிழ்ச்சி என்ற பெயரில் படமாக எடுத்தபோது, அந்த படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த படைப்பில் அதை தவிர்க்க, எந்த வகையில் முயன்றுள்ளீர்கள்?


 
“ஒவ்வொரு படைப்பை கையாளும்போதும் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். விமர்சனத்தை எதிர்கொள்ளும் படைப்புதான் நல்ல படைப்பாக இருக்கும்னு நினைக்கிறேன். அதுதான் ஒரு படைப்பாளியோடவேலை. இந்த படைப்பை எடுக்கும்போது முந்தையை விமர்சனங்களை எல்லாம் வைத்து கவனமாக செய்ய முயற்சிப்பேன். நிச்சயம் சரியான படைப்பா இது அமையும்.” 


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

 
அவர் இருக்கிறாரா? இல்லையா என்பதை இந்த படைப்பு உண்மையான இடத்தில் நின்று சொல்லும். அதை உக்கிரமாகவே சொல்லும். இப்படி இன்னும் இந்த உலகம் எதிர்பார்க்கிற எத்தனையோ, மர்மமான கேள்விகளுக்கு இந்தபடம் விளக்கமும் தரும், சாட்சியாகவும் இருக்கும். 


thanx - the tamil hindu


0 comments: