Thursday, October 10, 2013

இந்தியா முழுக்க மோடி அலை வீசுகிறதா? - பொது மக்கள் கருத்து , தமிழ் அருவி மணியன் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.


தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...



இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.


மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?

காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு 


தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...

இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?

நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?

"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி  
செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...

"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?

அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?

தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார். 


மக்கள் கருத்து 



1 தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே. ஆகவே பிஜேபி, தேமிதிக்க, மதிமுக இணைந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் சேர்வதை தடுத்து விடலாம். பிஜேபி- தேமுதிக- மதிமுக கூட்டணி சுமார் 20% வாக்க்குகளை பெரும். நாகர்கோயில் தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெரும். தேமுதிக மதிமுக பூஜ்யம்தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக திமுக படுதோல்வியை அடையும். காங்கிரஸ் புதுசெர்ரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும். திமுக காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சி கூட்டணி சுமார் 32% சத வாகுகளை பெரும். ஆகவே மும்முனை போட்டி என்று வந்தால் அண்ணா திமுக கூட்டணி தமிழ்நாட்டில் சுமார் 44% வோட்டுகளை பெற்று 38 எம்பி தொகுதிகளை கைப்பற்றும். 



2 வரும் தேர்தலில் மக்கள் திரும்பவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், எந்த ஆண்டவனாலும் இந்தியாவை காப்பாத்த முடியாது......மணியன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு அபாக்கிய சூழ்நிலை வரக் கூடாது என்று பாடுபடுகிறார்... 




3 பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மணியன் மீது எவ்வளவு கண்டனங்கள், பாய்ச்சல்கள். அப்பப்பா. இதுகாறும் பொது வாழ்வில் நேர்மையாளராக இருந்துள்ளார், ஊர் சொத்தை கொள்ளை அடிக்கவில்லை. ஆனால், அது எல்லாம் மறந்து விட்டது. பா.ஜ.க.வை தொட்டவுடன் அவர் பாவியாகி விட்டார். ஊரை அடித்து உலையில் போட்டு, பா.ஜ.க.வை திட்டியிருந்தால் மணியன் நல்லவர். அப்படிதானே. இப்போது புரிகிறது. தவறு அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம்தான் இருக்கு....



வேண்டாம் வேண்டாம்னு கத்தியும் வலிய வலிய போயி பேசி பாகிஸ்தான் நம்மை கிராமத்து பெண் போல் அழுகிறார்கள் என்று அசிங்க படுத்தியும்,, அப்படி சொல்லவே இல்லை என்று கயிறு திரித்தார்கள். அப்படி சொன்னதை, பாகிஸ்தான் மெடிஆகலும் பத்திரிகைகளும் ஆதாரத்துடன் போட்டுவிட அதெல்லாம் சும்மனாச்சுக்கு என்றார்கள். எல்லாம் மத சார்பின்மை படுத்தும் பாடு. இதில் கவுரவம் பாக்கணுமாம். மண்ணு மோகன் வெச்சிருக்கார். கேளுங்க. ஒரு ரூபாய்க்கு மூணு கிலோ கவுரவம். 


 5 எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். இலங்கை தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் அப்படி யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள். 


6  காந்தி , காமராஜ் ஆகியோரின் கொள்கைக்கு எதிரான ஆர் எஸ் எஸ் சின் செல்ல பிள்ளை மோடியை இவர் ஆதரிப்பது , படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.... மன்மோகன் சிங் ஆட்சியால் 1990 க்கு பிறகு இந்தியாவின் மதிப்பு ஆயிரம் மடங்கு வுயர்ந்துள்ளது என்பதை இவர் காந்தி கண்ணாடி போட்டு பார்த்தல் தான் தெரியும்.... இருட்டில் எரியும் மின்விளக்கு கண் கூசுகிறது என்று கூலிங் கிளாஸ் போடுபவருக்கு அது தெரியாது.... ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பொது அதுவும் அப்படித்தான் ..


.. நேற்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை , மூன்றில் ஒரு குழந்தை குஜராத்தில் எடை குறைவான பிள்ளை , குறைந்த அளவு உணவு கூட இல்லாத குழந்தை என்று வந்துள்ளது , அதை மோடி அமைச்சரும் ஒத்து கொண்டுள்ளார்....மற்றொன்று குஜராத் பாகிஸ்தான் எல்லையில் மாநில அரசின் கண்காணிப்பு திருப்தி கரமாக இல்லை என்று....கக்கூஸ் கட்டுவேன் என்று சொல்லும் மோடி அதை உபயோக்கிக்க முதலில் உணவு வேண்டும் என்று எண்ண தோன்றவில்லை ... அதை காங்கிரஸ் உணவு பாது காப்பு சட்டம் மூலம் அளிக்க விளைகிறது.... காந்தி யின் பெயரில் அரசியலில் கள்ள கணக்கு போட வேண்டாம்.... 


7 1990 க்குப் பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதென்னவோ உண்மை மாதிரி தெரிந்தாலும் அது ஒரு மாயைத் தோற்றம்தான். இந்தியாவில் இருந்த அனைத்து விவசாய நிலங்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இப்படியே போனால் சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். சுயசார்பு நிலையிலிருந்த இந்தியாவை வெளி நாட்டிடம் கையேந்த வைத்ததைத் தவிர மன்மோகன் அரசு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. சும்மா வெறுமனே குஜராத்தில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பெரிதாக்காமல் மற்ற மாநிலங்களின் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை காட்டினால் நல்லது. ஊழல், ஊழலைத் தவிர வேறொன்றுமில்லை என்கிற நிலையில் இருக்கிற மத்திய அரசு....



நன்றி = தினமலர்



1 comments:

Seeni said...

ithu verayaa...!?
congres mosamaana katchi!
bjp kolaikaara katchi!