Sunday, October 06, 2013

மோடி போஸ்டரில் ரஜினி ஏன்? - கமல் காரசாரமான பேட்டி @ த ஹிந்து தமிழ்

திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் ரஜினியின் போஸ்டரை பயன்படுத்தினார்கள். அதற்கு ரஜினி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் ஆவேசமாகக் கூறினார். 
 
 
 
ஃபிக்கி அமைப்பின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் 'ஊடகம் மற்றும் சினிமா குறித்த கருத்தரங்கம்' இந்த ஆண்டு அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இதனை அறிவிப்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை பெங்களூர் வந்திருந்தார். கமலின் நண்பரும்,கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் உடன் இருந்தார். அப்போது கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 



பல்வேறு பிரச்சினைகளை கிளப்பிய 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி விட்டது. நான் எந்த மதத்துக்கும், சாதிக்கும், கட்சிக்கும் எதிரி கிடையாது. அதனால் யாருடைய மனதையும் புண்படுத்தாமல், அனைவரும் ரசிக்கிற‌ வகையில் 'விஸ்வரூபம்-2' உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



என்னுடைய‌ அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், நாயகன் ஆகிய படங்களை புதுப்பித்து புதுபொலிவுடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 'விஸ்வரூபம், தலைவா' விவகாரம் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சிக்கல் வந்த போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என நான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்ள மாட்டேன். அது ஒரு பிள்ளை, தன் தாய் மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடு. 



எனவே அந்த வார்த்தைகளை வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்வது அபத்தம். ஆனால் சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி படத்தை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஒரு போதும் சந்தைக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதில்லை. விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் போல தலைவா படத்துக்கும் ஏற்பட்டது. அதுபற்றிய கேள்விகள் எல்லாம் துரத்துகிறது. அவற்றிற்கு நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? 



அரசியல் என்பது சிறந்த சமூகத்தை கட்டமைக்கும் உன்னதமான கருவி. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை பேய் படங்கள் மட்டும்தான் எடுத்ததில்லை. மற்ற எல்லா வகையான படங்களும் எடுத்திருக்கிறேன். இனிமேலும் பேய் படம் எடுக்க மாட்டேன். அதைத் தானே அரசியலில் சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ராமானுஜரின் தம்பிதான் பெரியார் ரசிகர்களுக்கு எப்படி என்னையும் பிடிக்கும். ரஜினியையும் பிடிக்குமோ, அதே போல எனக்கு காந்தியையும் பிடிக்கும். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போம் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன். 



சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா? நான் அஹிம்சைவாதி. ஆதலால் காந்தியை நேசிக்கிறேன் மோடியை ஆதரிப்பீர்களா? நான் அரசியலுக்கு வர மாட்டேன். என்னுடைய அரசியல் என்பது வாக்களிக்கும் நேரத்தில் ஆள்காட்டி விரலில் மை இடுவதுதான். அந்த மையை என் கை முழுவதும் பூசி கறையாக்கிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. 



திருச்சியில் நடைபெற்ற‌ நரேந்திர மோடியின் கூட்டத்தில் பா.ஜ.க.வினர் ரஜினியின் போஸ்டரை பயன் படுத்தினார்கள். அதற்கு அவர் (ரஜினி) எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல என்னுடைய போஸ்டரை பயன்படுத்த அனு மதிக்க மாட்டேன். ஏனென்றால் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை வாக்கு சாவடியில் மட்டுமே தெரிவிப்பேன் என்று கமல்ஹாசன் கூறினார். 
 
 
நன்றி - த ஹிந்து  தமிழ்

1 comments:

Anonymous said...

நன்றாக தெளிவாகக்கூறியுள்ளார்.