Sunday, October 27, 2013

டீன் ஏஜ் பெண்களும் , பாலியல் தொந்தரவுகளும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் @ த தமிழ் ஹிந்து

 

நாள்தோறும் சமூக - பொருளாதார பாகுபாடின்றி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதை ஊடகங்கள் வாயிலாக கேள்விப்படுகிறோம். நாம் பாதிக்கப்படாதவரை எந்தச் செய்தியும் 'சம்பவம்' தான். எனினும் குறைந்தபட்சம், சம்பவங்கள் நமக்கு சம்பவிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததில் நிறைய தோன்றியது, பதிவாக போடும் அளவுக்கு. மேலும், சில ஆராய்ச்சிகள் செய்ததில் கிட்டியவைகளையும் சேர்த்து... 


குழந்தைகள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் 


யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

 
* அப்பா - அம்மா இருவரும் வேலைக்கு போகும் வீடுகளில் தனியாக இருக்கும் குழந்தைகள் 


* உறவினர் வீடுகளில் வளரும் குழந்தைகள் 


* குழந்தைத் தொழிலாளர்கள் 


* உடல் ஊனமுற்ற / மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் 


* ஹாஸ்டலில் வளரும் மற்றும் சம்மர் கேம்ப்பில் விடப்படும் குழந்தைகள் 


(இவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், அவ்வளவே. ஆனால், எல்லாக் குழந்தைகளுமே சில பல மனித மிருகங்கள் சூழ் உலகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருப்பதால், யாருக்கும் நடக்கலாம்) 



குற்றவாளிகளை எப்படி இனம் காண்பது?


 
* குழந்தையோடு தனிமையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக் கொள்வார்கள். ("நீங்க போயிட்டு வாங்க... இவளும் என் பொண்ணு போல தான், நான் பார்த்துக்கறேன்...")
* குழந்தை ஆசைப்பட்டு, நீங்கள் வேண்டாம் என்று மறுக்கும் பொருளை வலிய வந்து வாங்கித்தருவார்கள்.
* ஆபத்தான சில விஷயங்களை செய்யச் சொல்லி குழந்தைகளை தூண்டுவார்கள் ("நீ எவ்ளோ தைரியசாலி பார்! உன்னால மொட்டைமாடி சுவர்ல கூட பிடிச்சிக்காம நிக்க முடியுது!") 



எவை பாலியல் சார்ந்த தவறுகள்?

 
கட்டாயப்படுத்தி உறவுவைத்துக் கொள்வது மட்டும் அல்ல... முத்தம் தருவது, பிடித்து அழுத்துவது, பிறப்புறுப்பை காண்பிக்கச் சொல்வது, பார்க்க மற்றும் தொட சொல்வது, சில படங்கள் அல்லது வீடியோக்களை பார்க்க வைப்பது, நிர்வாணமாக்கி படம் எடுப்பது என்று பட்டியல் நீள்கிறது. 



எப்படி காப்பாற்றலாம்?

 
* சின்ன சங்கடம் என்றாலும், அம்மா - அப்பாவிடம் சொல்லி விடும் அளவுக்கு நாம் நம்பிக்கை தருவது. 



* குட் டச், பேட் டச் ( Good Touch / Bad Touch ) பற்றிய புரிதல். 


* குழந்தைகள், சிலரோடு பழக பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை மேலோட்டமாய் கேட்டு உதாசீனப்படுத்தாமல் இருப்பது. 


* குழந்தைகள் போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டால் இனம் காண்பது, காரணம் கேட்டறிவது. 



* எக்காரணம் கொண்டும் அம்மா,அப்பா, பாட்டி தாண்டி யாரும் தொட்டு பேசுவதை அனுமதிக்காமல் இருக்க கற்று தருவது. 


* உரக்க கத்துவதை ஒரு தற்காப்பாக பயன்படுத்தவேண்டியது என்றும் அவசியம் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கவேண்டும். 


* கல்யாணவீடுகள், இன்ன பிற அன்னிய மனிதர்கள் நிறைய புழங்கும் இடத்தில், குழந்தை நம் கண்பார்வையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். 


* குழந்தைகளுக்கு இறுக்கமான மற்றும் அரைகுறை உடைகளை தவிர்க்கலாம். (பத்து வயது தாண்டினாலும், பெற்றோருக்கு அவர்கள் குழந்தை தான். யாவர் பார்வைக்கும் அப்படியே என்று நினைப்பது மடத்தனம்.)



கவனிக்க: 

 
- ஆண் குழந்தைகளும் பாலியல் சார்ந்த வன்முறைக்கு ஆளாகிறார்கள். 


- பெண்களும் பாலியல் சார்ந்த குற்றம் புரிகிறார்கள். 


- பெற்றோருக்கு நன்கு அறிமுகமானவர்களிடம் தான் அதிகமாக குழந்தைகள் மாட்டுகின்றன. 


- பெரும்பாலும் குழந்தையிடம் தவறாக நடக்கிறவர்கள் Habitual Offenders ஆக இருக்கிறார்கள். இவர்கள், தண்டனை பெற்றாலும் சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தவறு செய்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்! 


- பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ மற்றும் மனோதத்துவ உதவி அவசியம். ஏனெனில் வெளியே தெரியாவிட்டாலும், பின்னாளில் தீவிர மனச்சிதைவு ஏற்படலாம். இது எதிர் பாலின வெறுப்பில் தொடங்கி சமூகவிரோத செயல் வரை கொண்டுவிடுகிறது. 



பின்குறிப்பு - எந்த குழந்தையாவது துன்புறுத்தலுக்கு ஆளாவதாய் தோன்றினால், நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண் 1098 


எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளலாம்... பத்து ஒன்பது எட்டு - 1098. 


கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் http://mymarsandvenus.blogspot.in