தினமலர் விமர்சனம்
அமெரிக்க வாழ் ஈழத்தமிழரான ஜெய்பாலா, எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உடை வடிவமைப்பு எல்லாம் செய்து தயாரித்தும் இருக்கும் ப(பா)டம் தான் ‘சுவடுகள்’ (எப்படி படம் எடுக்க கூடாது? என்பதற்கான ப(பா)டம்!) பத்தாண்டுகளுக்கு முன் மனிதர், மேற்படி காரியங்களை எல்லாம் செய்து இயக்கி, தயாரித்த ‘சுவடுகள்’ திரைப்படம் வெளிவரும் சுவடுகள் தெரியாமல் பெட்டியில் கிடக்க, அதை அமெரிக்கா சென்று மீண்டும் சம்பாதித்து வந்து ஒரு வழியாக ரிலீஸ் செய்திருக்கிறார் ஜெய்பாலா! அதற்காக வேண்டுமானால் அவரை பாராட்டலாம்! பத்து வருஷத்துக்கு முந்தைய ‘சிலந்தி’ நாயகி மோனிகாவை ரசிக்கலாம் என்பது ஆறுதல்!
மற்றபடி கதை என்று பார்த்தால் சுவடுகள் படத்தில் பெரிதாக எதுவுமில்லை. அப்பா, மோகன் ஷர்மாவின் தொழிலை அவருக்கு பின் ஏற்று நடத்துகிறார் ஜெய்பாலா! அப்பாவுக்கு வில்லனாக இருந்த மார்க்சாமி எனும் நடிகர் ராஜேஷ் இவருக்கும் வில்லனாகிறார். ராஜேஷின் உச்சபட்ச வில்லத்தனத்தால் அம்மா, மனைவி, குழந்தை எல்லோரையும் மறந்து தற்கொலைக்கு முயலுகிறார் ஜெய்பாலா! அங்கு பிரபல திரைக்கதை வசனகர்த்தா கலைஞானத்தின் கீதா உபதேசம் கேட்டு தற்கொலை முடிவிற்கு தற்கொலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார். அவர் திரும்பியவுடன் ஊரே கூடி நின்று மகிழ்ச்சி கும்மியடித்து பாட்டு பாடுகிறது!
இந்தக்கதையை எப்படி, எப்படி எல்லாம் இழு இழு என இழுக்க முடியுமோ? அப்படியெல்லாம் இழுத்து படம் பண்ணியிருக்கிறார் ஜெய்பாலா! இந்த மனுஷருக்கு எம்.ஜி.ஆர்., ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் போல, எம்.ஜி.ஆர். காலத்து எம்.எஸ்.வி.யை இசையமைப்பாளராக்கி, கே.ஆர்.விஜயாவை அம்மாவாக்கி, சிவாஜி மாதிரி நடிக்கும் ராஜேஷை வில்லனாக்கி படம் பார்க்கும் ரசிகர்களை அம்போ - சிவசம்போ என்றாக்கி விடுகிறார்!
இவர் படத்தில் பெரிய பிஸினஸ்மேன் போல் பிஸினஸ் பிஸினஸ் என்கிறார். என்ன பிஸினஸ் செய்கிறார், ஏன் ராஜேஷ் எதிரியாகிறார், வங்கியில் செலுத்திய பணத்திற்கான ரசீது தொலைந்துவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடுமா என்ன! என்பதெல்லாம் படம் பார்க்கும் நமக்கு மட்டுமல்ல, ஜெய்பாலாவுக்கும் புரியாத புதிர் தான் போலும்... அப்பப்பா... தாங்கலடா சாமி! இவர் எம்.ஜி.ஆர்., ஆகும் முடிவை கைவிட்டு நம்பியராக முயன்றால் அடுத்தடுத்து வில்லனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்!
ஆகமொத்தத்தில் ‘சுவடுகள்’ - இப்படி எல்லாம் படம் எடுக்கக்கூடாது என தடம் பதித்திருக்கும் ‘சு’வடு
thanx - dinamalar
0 comments:
Post a Comment