Thursday, August 29, 2013

சாப்பாட்டுக்கடை- கோவை -மூலிகை உணவகம்

சென்னையை போன்று, கோவை மாநகராட்சியிலும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் 1981ல் மூலிகை உணவகம் துவங்கப்பட்டு, மூலிகை தாவரங்கள், தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும், அதேபோன்று, மூலிகை உணவகம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பிரதான அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைத்தால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ரத்தக்கொதிப்பு நோயாளிகள் பயனடைவர்; அலுவலகத்துக்கு வருவோருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மூலிகை உணவகம் துவங்குவதற்காக, மருத்துவர்கள் கொண்ட குழு, சென்னை மாநகராட்சியிலுள்ள மூலிகை உணவகத்தை பார்வையிட்டுள்ளனர். கோவையில் கிடைக்கும் மூலிகை தாவரங்களின் அடிப்படையாக கொண்டு, பல்வேறு வகை இட்லி, அடை, பணியாரம் என, மூலிகை மணக்கும் மதிய சாப்பாடு தயாரிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
"மெனு' என்னென்ன?

பரிந்துரையில்,"மூலிகை உணவகத்தில், கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி, திணை மற்றும் சாமை இட்லி வகைகள் தயாரிக்கலாம். முருங்கைக்கீரை, நவதானியம் மற்றும் முசுமுசுக்கை வகை அடைகளும், குழிப் பணியாரம், கருப்பட்டி பணியாரம் போன்றவையும் சமைக்கலாம். உளுந்து களி, சுக்கு களி, தினை மற்றும் எள் உருண்டை, இயற்கை லட்டு, சைவ ஆம்லெட் வகைகள் தயாரிக்கலாம். மூலிகை டீ, மூலிகை சூப் வகைகளும், மூலிகை பழரசங்களும் தயாரித்து விற்கலாம். மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி சாப்பாடு, ஆவாரம்பூ, முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை சாம்பார் வகைகளும், கொள்ளு, வேப்பம்பூ மற்றும் மணத்தக்காளி ரச வகைகளும், சுண்டை வற்றல், பூண்டு காரக்குழம்பு வகைகளும், இஞ்சி மற்றும் கருவேப்பிலை மோரும், பிரண்டை, கொள்ளு, தூதுவாளை துவையல் வகைகளும் வழங்கலாம்' என கூறப்பட்டுள்ளது.மூலிகை உணவகத்தை லாப நோக்கம் இல்லாமலும், மகளிர் சிக்கன சங்க நாணய உறுப்பினர்களை கொண்டு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை, மாநகராட்சி பொது நிதியில் செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று கவுன்சில் கூட்டம் :

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருந்தாலும், "அம்மா' உணவகத்துக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் உணவகம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளது. சென்னையில் உள்ள மூலிகை உணவகம் சிறப்பாக செயல்படுவதாலும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் உள்ளதாலும், அதேபோன்று கோவையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. நாளை (இன்று) நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டதும், அடுத்தகட்ட பணிகள் துவங்கும்' என்றனர்.


நன்றி- தினமலர்

2 comments:

Senthilvel said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

மூலிகை உணவகங்களை எல்லாப் பக்கமும் திறக்கட்டும்,...