Saturday, August 17, 2013

தனுஷ் - 25 -வேலையில்லா பட்டதாரி!


தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி!

மரியான் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அவரது 25வது படத்திற்கு வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்துள்ளனர். கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பது உறுதியாகி விட்டது. மேலும், ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருந்த அமலாபால், அப்போது ஏற்பட்ட கால்சீட் பிரச்னையினால் அந்த படத்திலிருந்து விலகினார். 




அதனால் இந்த முறை அப்படி ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டு வெளியேறிவிடக்கூடாது என்று தனுஷ் பட நிறுவனம் கேட்ட தேதியை ஒதுக்கி கொடுத்திருக்கும் அமலாபால், இந்த படத்தில் சென்னை பெண்ணாக நடிக்கிறாராம். அதிலும் இதுவரை அவர் எந்த படங்களிலும் நடிக்காத ஆர்ப்பாட்டமான வேடமாம். அதனால், தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றுவது, தியேட்டர்களில் படம் பார்க்கும்போது விசில் அடித்து ரகளை செய்வது என்றெல்லாம் கலகலக்கப்போகிறாராம் அமலாபால்.

அதுமட்டுமின்றி, தலைவாவை விட பல மடங்கு கவர்ச்சி களத்திலும் குதிக்கிறாராம். இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே கூடுதல் கவர்ச்சி சேவை புரிந்து வந்த அமலா, இனி தமிழிலும் அதே அளவு கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கிறாராம். அதற்கு இந்த வேலையில்லா பட்டதாரிதான் அடித்தளம் போடுகிறதாம்.

தனுஷ் : 25 - ஸ்பெஷல் ஸ்டோரி!!

பல படங்களின் தொடர்தோல்விகளால் துவண்டிருந்தார் கஸ்தூரி ராஜா. அப்போது அவர் துள்ளுவதோ இளமை என்ற ஒரு படத்தை தயாரித்து, இயக்க ஆரம்பித்தார். அந்தப் படம் வெற்றிபெற்றால் சென்னையில் வாழ்வது இல்லையேல் மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்குச் சென்று விடுவது என்கிற முடிவில் இருந்தார். படத்துக்கு ஹீரோ என்று தனியாக ஆள் போட்டால் அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று தயங்கி தன் மகன் வெங்கடேஷ் பிரபுவுக்கு தனுஷ் என்று பெயர் சூட்டி நடிக்க வைத்தார்.


துள்ளுவதோ இளமை அவரது வழக்கமான பாணியிலான கிளாமர் கதைதான். படத்தை அப்பா இயக்குவது சரியில்லை என்று கருதிய அவரது மூத்த மகன் செல்வராகவன், "அப்பா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்றேன்"னு சொல்லி அவரை தயாரிப்பாளராக்கிவிட்டு இவர் டைரக்ட் செய்தார். ஆனால் படத்தின் பெயரில் கஸ்தூரி ராஜா தான் டைரக்டர் என்று வந்தது.

படம் வெளிவந்த பிறகு கடுமையான விமர்சனத்தை சந்தித்தாலும் வசூலைக் கொட்டிக் கொடுத்தது. கஸ்தூரிராஜா குடும்பம் சென்னையிலேயே செட்டிலானது. அப்போதும்கூட செல்வராகவன் நல்ல இயக்குனராக அறியப்பட்டாரே தவிர தனுஷ் நல்ல நடிகராக அறியப்படவில்லை. தம்பிக்காக அண்ணன் அடுத்து இயக்கிய படம் காதல் கொண்டேன். தனுஷின் நடிப்பு திறமையை முழுமையாக வெளிக் கொண்டு வந்தார். அனைவராலும் தனுஷ் பாராட்டப்பட்டார்.





தனுஷின் அபாரமான நடிப்பு திறமை, பக்கத்துவீட்டு பையன் போன்ற தோற்றம். அவரை அடுத்தடுத்து ஜெயிக்க வைத்தது. படு சுமாரான இளைஞர்களுக்கு தனுஷ் ரோல் மாடல் ஆனார். "எங்களையெல்லாம் பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" என்ற வசனம் தமிழ்நாட்டில் பெருவாரியான இளைஞர்களுக்கு டானிக்காக அமைந்தது. "நாங்கல்லாம் -சுனாமியிலேயே சும்மிங்க போடுறவங்க" என்ற டயலாக் அவர்களுக்கு துணிச்சலைக் கொடுத்தது.

திருடா திருடியின் மன்மதராசா ஒரு வருடம் தமிழ்நாட்டையே ஆடவைத்தது. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் அவரின் நடிப்புக்கு அடுத்த அத்தாட்சியாக அமைந்தது.

தனுஷின் வேகமான வளர்ச்சி சுள்ளான் படத்தில் அவரை ஆக்ஷன் ஹீரோவாக்கியது. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. படம் தோல்வி அடைந்தது. மீண்டும் தன் பழைய பாணிக்கே இறங்கி வந்து நடித்த தேவதையை கண்டேன் ஹிட்டானது. அன்று முதல் அடுத்த வீட்டு பையன் இமேஜ்தான் தனக்கு செட் ஆகும் என்று முடிவெடுத்தார். இன்று வரை அதே பாணியைத்தான் கடைபிடித்து வருகிறார். இடையில் புதுப்பேட்டையில் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அதிலும் தோல்வியை சந்தித்தார்.




பொல்லாதவன் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. தன் இயல்பு மீறாத ஆக்ஷனை முயற்சி செய்தார். அது செட்டானது. யாரடி நீ மோகினி, படிக்காதவன், திருவிளையாடல் ஆரம்பம் போன்றவை அவருக்கு வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்தது.

வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவதாக நடித்த ஆடுகளம் அவரை தேசிய விருது வரை அழைத்துச் சென்று அகில இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்தியது. மேலும் கொலவெறி அவரை உலக புகழ் ஆக்கியது. அதன் தொடர்ச்சியா இந்திப் படத்தின் வாய்ப்பு வந்தது. ராஞ்சனா மூலம் பாலிவுட் நடிகரானார்.

தனுஷ் கேரியரில் சீடன், வேங்கை, குட்டி, பரட்டை என்கிற அழகு சுந்தரம் போன்ற தோல்விகளும் உண்டு. அவற்றில் இருந்து தனுஷ் பாடம் படித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். மரியான் படம் அவரது நடிப்புக்கு இன்னுமொரு மகுடமாக அமைந்தது. இந்த ஆண்டின் தேசிய விருது பட்டியலுக்குள் தனுசை மரியான் அழைத்துச் சென்றுள்ளது.





சூப்பர் ஸ்டாரின் மருமகன் ஆனார். இரண்டு குழந்தைக்கு தந்தையானார். எதிர்நீச்சல் மூலம் தயாரிப்பாளர் ஆனார். மலையாளப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு அந்த மநில மக்களையும் கவர்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டினார்.

2002-ம் ஆண்டு தன் சினிமா பயணத்தை துவங்கிய தனுஷ், பத்து ஆண்டுகளை கடந்தும் தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நன்றி - தினமலர் 


0 comments: