எச்சரிக்கை ரிப்போர்ட்
இன்டர்நெட்
இருட்டு
இடறும்
இல்லறம்!
ஸ்ரீநி
தன் முன்னால் அமர்ந்திருந்த அந்த 23 வயது பெண்ணை ஆறுதலாகப் பார்த்தார் குடும்ப நீதிமன்ற நீதிபதி. அவள் பெயர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை செய்பவர். கணவரும் மென்பொருள் பொறியாளர். திருமணமாகி எட்டே மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள் கணவன் விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தை அணுகிவிட்டார். விவாகரத்துக்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம்தான் சாந்தியை அதிர வைத்து விட்டது. பாலியல் உறவுக்கு தகுதியில்லாதவராக இருக்கிறார்" என்று மனைவி மீது குற்றம்சாட்டி விவாகரத்து கேட்டிருந்தார் சாந்தியின் கணவர்.
என்னம்மா... நீங்க என்ன சொல்றீங்க...?" என்றார் நீதிபதி.
குனிந்து கொண்டிருந்த சாந்தி நிமிர்ந்தாள். அவள் கன்னங்களில் இறங்கி ஓடியது கண்ணீர். இதுபோல பல காட்சிகளை தன் அனுபவத்தில் பார்த்திருந்த நீதிபதி பொறுமை காத்தார். சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு வந்தாள் சாந்தி. நீதிபதியின் நுட்பமான சில கேள்விகளுக்குப் பின் உண்மை பீறிட்டு வெளிவந்தது. பல குறைகளை வைத்துக் கொண்டிருந்த கணவர், சாந்தி மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டியிருந்தார். வலைத்தளங்களில் வாசம் செய்யும் பாலியல் வக்கிரப் படங்களை தினசரி இரவில் பார்க்கும் அந்தக் கணவர், மனைவியுடன் உறவைத் தவிர்த்து வந்தார். காரணம் பாலியல் வக்கிரப் படங்களுக்கு அவர் அடிமையாகி விட்டதால் காலப்போக்கில் பாலியல் உறவுக்கான தகுதியை உடல்ரீதியாக இழந்து விட்டார் அவர். தன் குறையை மறைப்பதற்காக மனைவி மீது பழி போட்டு, குடும்ப நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். கணவனை தனியாக விசாரித்தபோது பல கேள்விகளுக்கு பதில் சொல்லத் தடுமாறினார். உளவியல் நிபுணரிடம் இருவரையும் அனுப்பினார் நீதிபதி. அவரும் தீவிரமாக விசாரணை செய்து, பாலியல் வக்கிரப் படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து பார்த்ததால் கணவன் உறவுக்கான உடல் தகுதியை இழந்திருக்கிறார்" என்று அறிக்கை கொடுக்க, நீதிபதி, சாந்திக்கு விவாகரத்து கொடுத்து நிவாரணம் அளித்தார்.
விஞ்ஞான வளர்ச்சி என்பது இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. கணினியின் பயன்பாடும் வளர்ச்சியும் மனித குலத்துக்கு பலவிதங்களில் ஆக்க பூர்வமான வழிகளில் பயன்பட, மோசடிகளும் தில்லு முல்லுகளும் ஒரு பக்கத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. வலைத்தளங்கள் மனிதனுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கின்றன. அதே சமயம் அந்த வலைத்தளப் பதிவுகள் சமூக வாழ்க்கையின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றன. வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கும் பாலியல் வக்கிரப் படங்கள் பலரது திருமண வாழ்க்கையை சுனாமியாகச் சுழற்றியடிக்க இறுதியில் விவாகரத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகின்றன. சமுதாயத்தில் மிகவும் மதிக்கத்தக்க நிலையிலுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கூட பாலியல் வக்கிரப் படங்களுக்கு அடிமையாகி, கடைசியில் மண முறிவில் வந்து நிற்கிறார்கள் என்கிறது குடும்ப நீதிமன்ற வட்டாரங்கள்.
இதுபோன்ற விவகாரங்களில் எங்களிடம் வரும் பெண், கணவர் கொடுமைப் படுத்துகிறார் என்று சொல்லித்தான் விவாகரத்து மனுதாக்கல் செய்வார். எங்களிடமும் முழு உண்மையைச் சொல்ல மாட்டார். அதே சமயம் நீதிபதி தனியாக விசாரிக்கும் போது இந்த வக்கிரப் படங்கள் விவகாரம் வெளிவரும்" என்கிறார் வழக்கறிஞர் கஜலட்சுமி. திருமணமாகி, ஒரு மாதத்துக்குள்ளேயே விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகும் பெண்களும் உண்டு. முன்பெல்லாம் விவாகரத்து கேட்கும் பெண்கள், கணவரின் நடத்தை சரியில்லை, குடித்துவிட்டு வந்து அடிக்கிறார், வரதட்சணைக் கொடுமை ஆகியவற்றைக் காரணமாகச் சொல்வார்கள். ஆனால் இப்போது இந்தக் காரணங்களெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு பெரும்பாலும் பாலியல் ரீதியான விஷயங்களே விவாகரத்துக்கான காரணங்களாக இருக்கின்றன. அதுவும் தற்சமயம், வலைத்தள பாலியல் வக்கிரப் படங்கள் தம்பதிகளின் வாழ்க்கையில் பிளவை உண்டாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன" என்கிறார் கஜலட்சுமி.
கணவர் பாலியல் வக்கிரப் படங்களைப் பார்த்து, மிக அதிகமான, மற்றும் இயற்கைக்கு முரணான எதிர்பார்ப்புகளுடன் மனைவியை அணுகும் போது பிரச்னைகள் வெடிக்கின்றன. இந்தச் சூழலில் மரபு சார்ந்த குடும்பச் சூழலிலிருந்து வரும் பெண், கணவரின் விருப்பங்களை நிறைவேற்ற விருப்பமில்லாமல் தடுமாறுகிறார். கணவருக்கும் மனைவிக்கும் உரசல் தொடங்குகிறது. காலப்போக்கில் விவாகரத்தில் போய் முடிகிறது. குடும்ப நீதிபதியாக பல ஆண்டுகள் அனுபவத்தில் பாலியல் வக்கிரப் படங்கள் தொடர்பான விவாகரத்து வழக்குகள் நிறைய பார்த்திருக்கிறேன். மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்ன வென்றால் இப்படி வரும் வழக்குகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே இருப்பதுதான்" என்கிறார் குடும்ப நீதிமன்ற நீதிபதி டி.சி.எஸ். ராஜ் சொக்கலிங்கம்.
கணவர்கள் இந்த பாலியல் வக்கிரப் படங்களைப் பார்த்து இயற்கைக்கு மாறான அதீத எதிர்பார்ப்புகளுடன் மனைவியை அணுகும்போது விருப்பமில்லாத மனைவி, உடல் மற்றும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். கணவன் அரங்கேற்றத் துடிக்கும் இந்த பாலியல் வன்கொடுமை பற்றி வெளியிலும் யாரிடமும் சொல்ல முடியாது. ஒரு பக்கம் ‘எதாக இருந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சுப் போம்மா’ என்று சொல்லும் பெற்றோர்கள். மற்றும் இரவானால் வக்கிரப் படங்களைப் பார்த்து பாலியல் டார்ச்சர் செய்யும் கணவர் என்று மௌனமாக பெண்கள் படும்பாடு சொல்லி மாளாது. இந்த நிலையில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்காத போது அவள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி விவாகரத்து கேட்கிறான் கணவன். குடும்ப பிரச்னைகளில் உளவியல் ரீதியாக அணுகினால்தான் சரியான தீர்வு கிடைக்கும். அந்த வகையில் மனைவியைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்கும்போது கணவனின் முகமூடி கிழிகிறது.
பாலியல் உறவு என்பது தம்பதிகளுக்குள் மன மகிழ்ச்சியைக் கொடுக்கும் அழகான, புனிதமான உறவு. அந்த வகையில் இருதரப்பும் விருப்பத்துடன் ஈடுபடும் எந்தச் செயல்பாடும் ஏற்கத்தக்கதுதான். ஆனால் மனைவி விரும்பாத, மன உளைச்சல் ஏற்படுத்தும் எந்தச் செயல்பாட்டையும் செய்ய கணவன் அவளை வற்புறுத்தக்கூடாது. திருமணத்துக்கு முன் படிக்கும்போதும், வேலை செய்யும் போதும் குடும்பத்தைவிட்டு தனியாக இருந்து பழகிய இளைஞர்களிடம் தான் பாலியல் வக்கிரப் படங்களைப் பார்த்து அதற்கு அடிமையாகும் போக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. குடிக்கு அடிமையாவது போலத் தான் இதுவும். கணவரிடம் இந்தப் போக்கு இருக்கும்போது அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய் சிகிச்சை மேற்கொண்டால், குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வலைத்தளங்களில் பாலியல் வக்கிரப் படங்கள் இருப்பது போலவே, அந்தப் படங்களைப் பார்க்கும் அடிமை மனோபாவத்தை விட்டொழிக்க வழி சொல்லும் படங்களும் இருக்கின்றன. உண்மையிலேயே அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர விரும்பும் கணவர்கள், மருத்துவரிடம் போவதற்கு வெட்கப்பட்டால், தயங்கினால், அதுபோன்ற படங்களைப் பார்த்து தங்களைத் திருத்திக் கொள்ளலாமே? எதிர் காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை நமது சமூகம் குடும்ப வாழ்க்கையில் தவிர்க்க வேண்டுமானால் உயர்நிலைப் பள்ளி அளவிலிருந்து பாலியல் கல்வியைச் சொல்லித் தரவேண்டும்" என்கிறார் நீதிபதி ராஜ் சொக்கலிங்கம்.
இதுபோன்ற வக்கிரப் படங் களைப் பார்க்கும் ஆண்கள், இயல்பான பாலியல் உறவில் நாட்டம் இழந்து விடுவது மட்டுமல்லாமல், நாளடைவில், தங்கள் ஆண்மைத் தன்மையையே இழந்து விடும் அபாயமும் இருக்கிறது" என்று எச்சரிக்கிறார் பாலியல் சிறப்பு மருத்துவரான காமராஜ்.
ஒரு திரைப்படத்தில் பத்துப் பேர்களைத் தாக்கி வீழ்த்தும் கதாநாயகன் போல ஒருவன் ஆக விரும்பினால் யதார்த்த வாழ்வில் அது சாத்தியமாகுமா? அதுபோலத்தான் பாலியல் வக்கிரப் படங்களும். அவை கொடுக்கும் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வது மிகவும் கடினம். இந்த வக்கிரப் படங்கள் குடும்ப உறவில் ஏற்படுத்தும் விரிசல் காரணமாக என்னிடம் கவுன்சிலிங் செய்து கொள்ள நிறைய தம்பதிகள் வருகிறார்கள். ஒருவர் விரும்பாத எந்தச் செயல்பாட்டிலும் அவரை வற்புறுத்தி ஈடுபட வைக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே மனைவியை அந்த வகையில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் கணவர்கள் திருந்த வேண்டும். வக்கிரப்படங்களுக்கு அடிமையான பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். இது முடியாத ஒன்றல்ல. வீடுகளில் கூட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினியை நடு ஹாலில் வைத்துக் கொள்வது நல்லது. மகனுக்கோ அல்லது மகளுக்கோ அவர்களது அறையில் இந்த வசதியைச் செய்து தருவதைத் தவிர்க்க வேண்டும். ஹாலில் வைத்திருந்தால், பாலியல் வலைத்தளங்களைப் பார்க்கும் துணிச்சல் வராது. இதுபோன்ற வக்கிரப் படங்களைப் பார்ப்பவர்கள், நான் முதலில் சொன்ன பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர வேறு பலவற்றையும் சந்திப்பார்கள். இவர்கள் நட்பு வட்டத்தை விட்டு விலகி நிற்பார்கள். தூக்கமின்மை இவர்களைத் தாக்குமே; சமயங்களில் சுய கௌரவமும் பாதிக்கும்" என்கிறார் காமராஜ்.
திருமண வாழ்க்கை என்பது அழகான நந்தவனம் போன்றது. வக்கிர உணர்வுகளுக்கு ஆளாகாமல் அந்த நந்தவனத்தை, பூத்துக் குலுங்கச் செய்யும் பொறுப்பு ஆண்களுக்கு உண்டு.
நன்றி - கல்கி
0 comments:
Post a Comment