Monday, June 24, 2013

ஃபுக்ரே(தினமலர் விமர்சனம்)



தில் சாத்தா ஹை,  டான் (ஷாருக்கான்), டான் 2, லக்ஷ்யா முதலிய பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஃபரான் அஃக்தர். ராக் ஆன், கார்த்திக் காலிங் கார்த்திக், ஜிந்தகி நா மிலேகி துபாரா முதலிய படங்கள் மூலம் நல்ல நடிகர் என்ற முத்திரை பதித்த இவர், பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை திரைத்துறையில் எடுத்துள்ளார். ஃபரான் அஃக்தர் தயாரிப்பில் வெளிவரும் காரணத்தால் பாலிவுட்டில் ஃபுக்ரே திரைப்படம் கொஞ்சம் எதிர்பார்க்கப்பட்டது.

ஹன்னி (புல்கிட் சாம்ராட்), சூச்சா (வரூன்) இருவரும் படிப்பில் ஞானசூன்யங்கள், ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள். இருவருடைய ஆசையும் ஒரு பெரிய கல்லூரியில் சேர வேண்டும், காரணம் அங்குள்ள மாடர்ன் கேர்ள்சை மடக்க வேண்டுமென்ற இலட்சியம்.  அடிக்கடி எதையாவது தொலைத்துக் கொண்டே இருக்கும் லாலி. தன் காதலியும் கல்லூரிக்குச் சென்று தன்னை கண்டுகொள்ளாமல் போக, எப்படியாவது தானும் காலேஜில் சேர வேண்டுமென்ற இலட்சியம் லாலிக்கு. ஹன்னி, சூச்சாவுடன் லாலியும் இணைகிறான். இவர் இருவர்களின் ஆசான் தில்லு முல்லு செய்பவர்களின் முழு பயோ டேடாவை அறிந்த பண்டிட் (பன்கட் திரிபாதி).



காலேஜில் லெக்சுரராக இருக்கும் விஷாகாவிடம் லாலி ட்யூஷனுக்கு செல்கிறான். இசை தான் தன் வாழ்வின் இலட்சியம், இசைக்குப் பின் தான் காதல் என்று அலி பாசல் கூற, விஷாகா அலி மீதுள்ள காதலைத் துறக்கிறார். அலியின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இவருக்கு நிறைய காசு தேவைப்படுகிறது.  ஹன்னி, சூச்சா, லாலி ஆகிய இம்மூவர் கல்லூரியில் சேர்வதற்கும் நிறைய காசு தேவைப்பட , ஹன்னி கூறும் வழியில் லாட்டரியில் சூது செய்து குறுக்கு வழியில் பணம் சேர்க்க இந்நால்வரும் திட்டம் போடுகின்றனர்.  இவர்களின் சூதில் பார்ட்னராக ஐம்பது சதவீதம் பணம் தருவதாகக் கூறி தாசிகளின் பாஸ்ஸாக வரும் ரிச்சா சத்தாவை நாடுகின்றனர்.  இவர்களின் திட்டம் புஸ்வாணமாகி வெடிக்க, இந்நால்வரும் ரிச்சாவிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். கடைசியில் ரிச்சாவிற்கு மிளகாய் தூவி ஹன்னி, லாலி சூச்சா இம்மூன்று மிடில் கிளாஸ் பசங்களும் பந்தாவான கல்லூரியில் சேர்வது தான் மீதிக் கதை.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று ஈர்க்கும் விஷாகா சிங், மறுபுறம் நம்ம எதிர் நீச்சல் ப்ரியா ஆனந்த். ஒன்றிற்கு இரண்டு லட்டு நாயகிகள் இருந்தும் போலிபஞ்சாபியாக வரும் ரிச்சாவிற்குத் தான் அதிக முக்கியத்துவம்.



ராம் சம்பத்தின் இசையில் பாடல்கள் யாவும் இனிமை. பின்னணியும் திரைக்கதையிலிருந்து நழுவாது அமைந்திருந்த விதம் சிறப்பிற்குரியது.

சூச்சா என்ற தன் கதாபாத்திரத்தின் நகைச்சுவை பெயரிற்கேற்றார் போல் வரூண் செய்யும் காமெடி வெள்ளந்தித்தனம் நிறைந்த விடலைத்தனம்.  லாலியாக மன்ஜித் சிங்கும் , ஹன்னியாக புல்கிட் ஷர்மாவும் தங்கள் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார்கள்.

விபுல் விகி, ரிக்தீப் சிங் லம்பாவின் திரைக்கதை கொஞ்சம் சுமார் ரகம் தான். கதைக்களத்தை விட கதாபாத்திரங்களின் நடிப்பு தான் பெரிதாக ஈர்த்துள்ளது.

மொத்தத்தில்: இந்த இளமைப் பட்டாளத்தின் அழகான நடிப்பு படத்தை தொய்வுத் தருணங்களின்றி நகர்த்திச் செல்கிறது. கதாபாத்திரங்களின் கண்கவர் நடிப்பிற்காகவும், ராம் சம்பத்தின் உயிரோட்டம் நிறைந்த இசைக்காகவும் ஃபுக்ரேவை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.



 நன்றி - தினமலர்

0 comments: